சுடோகு

5:45 பிப இல் ஒக்ரோபர் 3, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: ,

பெரும்பாலான நாளேடுகள் இப்போதெல்லாம் சுடோகு இல்லமல் வருவதில்லை. இந்தப் பதிவில் நான் சுடோகுவின் வரலாற்றைப் பற்றி சொல்லப் போவதில்லை. சுடோகு என்னை எப்படியெல்லாம் படுத்தியது என்பதைப் பற்றித் தான் சொல்லப் போகிறேன்.

சுடோகு தமிழ்நாட்டுக்கு அறிமுகமான போது நான் அதைப் பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. வழக்கம் போல தினகரன், ஆனந்த விகடன், குமுதம் என்று படித்தபடி நாளைக் கடத்திக் கொண்டிருந்தேன். “வந்தாச்சு வந்தாச்சு டெக்கன் கிரானிக்கிள் வந்தாச்சு” என்ற தமிழ் விளம்பரத்தோடு ஒன்னரை ரூபாய்க்கு டெக்கான் கிரானிகிள் என்ற ஆங்கில நாளேடு அப்போது தான் தமிழ்நாட்டுக்கு அறிமுகமாகியிருந்தது.

எத்தனை நாளைக்குத் தான் தினகரனைப் படித்து நாசமாகப் போவது, அறிவை வளர்த்துக் கொள்வோமே என்று டெக்கான் கிரானிகிளை வாங்கத் தொடங்கினேன். (“டேய் பண்ணாடை, வெலை கம்மின்னு தானேடா வாங்க ஆரம்பிச்சேன்னு” கேக்கப்படாது)ஆரம்ப நாட்களில் மூன்றாம் பக்கத்திலும் நான்காம் பக்கத்திலும் வந்துகொண்டிருந்த சுடோகுவை நான் கவனிக்கவில்லை. அப்போது ஒரு நாள் ஆனந்த விகடனில் ஹாய் மதனா, கற்றதும் பெற்றதுமா தெரியவில்லை. ஏதோ ஒன்றில் சுடோகுவைப் பற்றி விவரித்திருந்தனர்.

சரி, அப்படி என்னதான் இருக்கிறது என்று டெ.கி.யின் மூன்றாம் பக்கத்திற்குத் தாவினேன். முதல் நாள் நாலைந்து கட்டங்களுக்கான எண்களைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஏறக் குறைய ஒரு வாரமாயிற்று அந்த முதல் சுடோகுவை முடிக்க. ஒரே பேப்பருடன் ஒரு வாரம் போராடியதால் அடுத்தடுத்த நாட்களுக்கான பேப்பர்கள் பிரிக்கப்படாமலேயே கிடந்தது. தொடர்ந்து முயற்சித்ததில் அரைமணி நேரத்தில் முடிக்கும் அளவுக்குத் தேறினேன்.

ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் மட்டுமே இருந்த என்னுடைய சுடோகு பழக்கம், நாளாக நாளாக நாளாக ஆறு அலல்து ஏழு சுடோகுகளைத் தேடி அலைய ஆரம்பித்தது. பத்து இருபது சுடோகுகளை அலுவலகத்தில் பிரிண்ட் எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்புவேன். சுடோகு மயக்கத்தில் சில சமயம் இறங்க வேண்டிய நிறுத்தத்தை விட்டுவிட்டு டெர்மினசில் இறங்கி இரண்டு ஸ்டாப்புகள் நடந்து வீட்டுக்கு வந்ததும் உண்டு.

நைட் ஷிப்ட் என்றால் காலை 9:30 மணிக்குத் தூங்கி மதியம் 3:30 மணிக்கு எழுவது என்னுடைய வழக்கம். ஆனால் புதிய நண்பன் சுடோகுவால் 9:30 நகர்ந்து நகர்ந்து 12:30 வரை வந்தது. அந்த நாட்களில் என்னை எங்கே பார்த்தாலும் கையில் டெ.கி.யுடன் பார்க்கலாம். கொடுமை என்னவென்றால் டெ.கி. இல்லமல் நான் பாத்ரூமுக்குக் கூட போனதில்லை அப்போதெல்லாம்.

12பி பேருந்து எவ்வளவு கூட்டத்தோடு வரும் என்று சென்னைவாசிகள் அனைவருக்கும் தெரியும். அந்த 12பியில் உட்கார்ந்து வந்தாலும் நின்றபடியே வந்தாலும் அப்போதும் கையில் சுடோகு இருக்கும். டிரக் அடிக்‌ஷன் போல அப்போது என்னை சுடோகு அடிக்‌ஷன் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. எப்படியாவது இதிலிருந்து வெளியே வந்துவிட வேண்டும் என்று மட்டும் அவ்வப்போது புத்திக்கு உரைக்கும். ஆனாலும் இரண்டொரு நிமிடங்களில் அந்த சிந்தனை தானாகவே செத்துப் போகும். எடுத்து அடக்கம் செய்துவிட்டு மீண்டும் ஒரு சுடோகுவுடன் உட்கார்ந்துவிடுவேன்.

இப்படி இருந்த வேளையில் திடீரென ஒருநாள் கலாநிதி மாறன் என்ற மாமேதை தினகரன் நாளேட்டை ஒரு ரூபாய்க்கு விற்கத் தொடங்கினார். அஹோ, நமது தாய் மொழியை மறந்து இத்தனை நாளும் ஆங்கில மோகத்தில் மூழ்கிக்கிடந்தோமே என்று வெட்கப்பட்டு மறுநாள் முதல் தினகரனுக்குத் தாவினேன். ஒருவழியாக எனது சுடோகு அடிக்‌ஷனுக்கும் மங்களம் பாடியாயிற்று.

இப்போதெல்லாம் கண்ணெதிரிலேயே சுடோகு இருந்தாலும் கண்டுகொள்வதில்லை. மீண்டு வந்துட்டோம்ல…

5 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. NAMBITTOM

  2. NAAN SONNATHU – //இப்போதெல்லாம் கண்ணெதிரிலேயே சுடோகு இருந்தாலும் கண்டுகொள்வதில்லை. மீண்டு வந்துட்டோம்ல…//

  3. வாருமையா, காரைக்குடியாரே. உங்கள நேர்ல பாக்கனும்னு ஆசையா இருந்தாலும் ஊர்ப்பாசத்துல என்னை ஏதாவது பண்ணிடுவீங்களோன்னு பயமா இருக்கு.

  4. கலயாணம் காட்சி ஆகிடுச்சு… திறுந்தி வாழுற வழியப் பாருங்க 😛

  5. நான் கூட ஒரு வருஷம் மொபைல்ல சுடோகு மென்பொருளை நிறுவிக்கிட்டு 24×7 கணக்கு போட்டுக்கொண்டே இருப்பேன். இப்போது சுடோகு மோகம் விட்டுவிட்டது. இப்போதெல்லாம் காக்குரோ (Kakuro) பிடித்து ஆட்டுகிறது!!! என்னத்த செய்ய!


பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.