அய்யா காம்ரேடுகளே – I

10:15 முப இல் ஏப்ரல் 5, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 8 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

அய்யா தோழர்களே,

உண்மையில் நீங்களெல்லாம் சித்தாந்தவாதிகளா சந்தர்ப்பவாதிகளா என்று விளங்கிக்கொள்ள இயலவில்லை. அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தால் அது வல்லாதிக்கம், சர்வாதிகாரம். ஆனால் சீனா திபெத்தை ஆக்கிரமித்தால் அது சீனாவின் உள் நாட்டுப் பிரச்சினை.

திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியா இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்ல வேண்டாம். கம்யூனிஸ்டுகளே முடிந்தால் ஒன்றே ஒன்றை தெளிவுபடுத்துங்கள். இந்தியாவில் சிறுபான்மையினர் நலன், மத சுதந்திரம், மத சார்பின்மை பற்றியெல்லாம் வாய் காது வரை கிழிய பேசுகிறீர்கள், (கவனிக்கவும், நான் மத சார்பின்மை, வழிபாட்டு சுதந்திரம், மற்றும் சிறுபான்மயினர் நலன் ஆகியவற்றிற்க்கு எதிரானவன் அல்ல) திபெதியர்களின் மத சுதந்திரத்தை, வழிபாட்டு உரிமையை நசுக்கும் சீனாவைக் கண்டிக்க வேன்டும் என்று தோன்றவில்லையா உங்ளுக்கு?

கண்ட கண்ட விஷயங்களுக்கெல்லாம் போலிட் பியூரோவைக் கூட்டி கருத்து கூறுகிறவர்கள், இதற்க்கு மட்டும் ஏன் உடம்பின் ஒன்பது துளைகளையும் மூடிக்கொண்டு மௌனம் சாதிக்கிறார்களோ, தெரியவில்லை.

சீனப்பாசம் காம்ரேடுகளின் கண்ணை மறைக்கிறது. அந்த சீனப்பாசம்தான் “இது சீனாவின் உள் நாட்டுப் பிரச்சினை. இதில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது” என்று முந்திக்கொண்டு காம்ரேடுகளைக் குரல் கொடுக்க வைத்திருக்கிறது. ஆட்சி சுகத்தை இழக்க விரும்பாத காங்கிரசும் சுருதி தப்பாமல் தாளம் போடுகிறது. இன்றைக்கு திபெத்தை நோக்கி இந்த வார்த்தைகளை சொன்னவர்கள், நாளை ஈழத்தில் போராடிக்கொண்டிருக்கும் நம் தமிழ் மக்களுக்கும் இதே வார்த்தையை சொல்ல மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

சீனாவின் பிரதமர் தொலைபேசியில் அழைக்கிறார், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் பேசவில்லை, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்த ரப்பர்ஸ்டாம்ப்பும் (குடியரசுத்தலைவி) பேசவில்லை. வேறு யார் பேசினார் தெரியுமா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியில் கூலிக்கு மாரடித்துக் கொண்டிருக்கும் நாராயனன். இலங்கையில் தமிழர்கள் நடத்தி வருகிற போராட்டத்தைப் மத்திய அரசிடம் திரித்துக் கூறிய அதே நாராயனன். சீனப் பிரதமரிடம் தன்னிச்சையாக உறுதியளிக்கிறார் “திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது தான் இந்திய அரசின் நிலைப்பாடு. சீனாவை எதிர்த்து இந்தியாவில் எந்த போராட்டமும் நடப்பதை இந்திய அரசு அனுமதிக்காது” என்று. யார் இந்த நாரயனன், தேசிய பாதுகாப்புச் செயலாளரா, இல்லை இந்திய பிரதமரா?

போராட்டங்களையே மூலதனமாகக் கொண்டு வளர்ந்த கம்யூனிஸ்டுகளே, சொந்த நாட்டில் வாழ முடியாமல் இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் திபெத்தியர்களுக்கு, சுதந்திரம் கேட்டு போராடும் உரிமையைக் கூட மறுக்கப் பார்க்கிறது இந்திய அரசு. இப்போதும் வாயை மூடிக்கொண்டிருந்தால், கழிப்பறைக் காகிதங்களைப் போல் நீங்களும் குப்பைத் தொட்டிக்குத் தான் போவீர்கள்.

பன்னாட்டு விவகாரத்தை விடுங்கள், நம் நாட்டுக்கு வருவோம். உங்கள் பொதுவுடைமையின் நிஜ வாசம் தான் முல்லைப் பெரியாற்றிலும், நந்திகிராமிலும், சேலம் ரயில்வே கோட்டத்திலும் ஏற்கெனவே நாறத் தொடங்கிவிட்டதே. இந்த நாற்றத்தை மறைப்பதற்குக் கூட சீனாவிலிருந்து சென்ட்டு வாங்க உத்தேசித்திருக்கிறீர்களா?

அய்யா, இன்றைக்கு அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை (நம் நாடு அந்த சாக்கடையில் விழுந்து விடக் கூடாது என்பது தான் என் விருப்பமும்) ஏற்கக் கூடாது என்று குதியோ குதியென்று குதிப்பவர்கள் ரஷ்ய அணு உலைகளைப் பற்றி வாயே திறக்கக் காணோமே. அமெரிக்க அணு உலை வெடித்தால் மட்டும் தான் பாதிப்பா? ரஷ்ய அணு உலை வெடித்தால் பூமாரி பொழிந்துவிடுமா? உங்களுக்கெல்லாம் அமெரிக்க சாக்கடை மட்டும் தான் நாறும், ரஷ்ய சாக்கடை மணக்கும்.

இதோ, ஓரு உதாரணம், தமிழக கம்யூனிஸ்டுகளின் பொதுவுடைமைப் பற்றுக்கு. சில ஆண்டுகளுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் வெண்மணி நினைவிடத்திற்கு, சாதீய கொடுமைகளால் உயிர்விட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த போது, இந்த இடம் ஒரு கம்யூனிஸ்டுக்கு சொந்தமானது. நீங்கள் இந்த இடத்துக்கு வருவதை அனுமதிக்க முடியாது என்று அனுமதி மறுத்தீர்களே, உங்களுக்கும் முதலாளி வர்கத்துக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

இப்போது சொல்ல இருப்பது, மேலே சொன்ன தமிழக கம்யூனிஸ்டுகளின் தேசியத் தலைமையைப் பற்றி. முன்பு ஒருமுறை இந்திய அதிகாரிகள் பணி நிமித்தமாக சீனா செல்ல வேண்டியிருந்த போது மற்ற மாநில அதிகாரிகளுக்கு விசா வழங்கிய சீன அரசு அருனாசல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரிக்கு மட்டும் விசா வழங்கவில்லை. இதற்க்கு சீன அரசு “எங்கள் நாட்டின் ஒரு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு விசா தேவையில்லை” என்று விஷக் கொடுக்கை நீட்டியது. அப்போது எங்கே போனீர்கள் காம்ரேடுகளே.

சிங்கூர், நந்திகிராம், சேலம் ரயில்வே கோட்டம், முல்லைப் பெரியாறு விவகாரம் ஆகியவற்றில் காம்ரேடுகள் பொதுமான அளவு கிழித்துத் தோரனம் கட்டப்பட்டு விட்டதால் அதைப் பற்றி அதிகம் எழுதவில்லை. மக்கள் அறியாமல் போன கம்யூனிஸ்ட்டுகளின் இரண்டாவது முகத்துக்கு உதாரணங்கள் தான் மேலே சொன்னவை.

காம்ரேடுகளே, நீங்களேல்லாம் கொள்கைத் தெளிவு உள்ளவர்கள் என்றால் வாபஸ் வாங்கிவிடுவோம், வாபஸ் வாங்கிவிடுவோம் என்று சொல்லிக் கொண்டே இருக்காமல் உண்மையிலேயே வாபஸ் வாங்கிக் காட்டுங்கள். மக்களுக்கு அறிவிருந்தால் வருகிற தேர்தலில் பா.ஜ.க. வை வரவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். உங்கள் பதவி ஆசைக்கு முட்டுக் கொடுக்க பா.ஜ.க. வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்.

Advertisements

8 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post.

 1. திபெத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து எழுத்தாளர் பாலகுமாரன், குமுதம் (9-4-2008 தேதியிட்டது) கேள்வி பதில்களில்:

  கேள்வி: சீனா, திபெத்தை அடித்து நொறுக்குகிறதே? (பி.எல். பரமசிவம், மதுரை)

  பதில்: சீனா, கம்யூனிசம் என்ற பெயரில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட ஒரு தேசம். திபெத் அதற்கு அண்டையில் இருக்கிறது. நாட்டை கபளீகரம் செய்வது என்பதை சீனா காலம் காலமாக செய்து வருகிறது. இதைப் பெரும்பான்மையான உலக நாடுகள் கண்டுகொள்வதிலை. திபெத்திய நாகரிகம் மிகத் தொன்மையானது. மிக சூட்சுமமானது. சீனா ஒரு தேசத்தை அபகரிக்கவில்லை, ஒரு நாகரீகத்தை நசுக்குகிறது. சீனாவின் சர்வாதிகாரப் போக்கை மறைப்பதற்காக ஒலிம்பிக் என்ற உலக நாடுகளை வரவேற்கும் போர்வையை போர்த்திக் கொண்டுள்ளது. இது கண்டிப்பாக கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். சீனர்கள் கடுமையான உழைப்பாளிகல். சுறுசுறுப்பானவர்கள். சீனச்சுவர் என்பது பல லட்சம் தொழிலாளர்கள் ஒன்று கூடி ஒரு அரசனுக்காக எழுப்பிய விஷயம். சீனா நடத்தும் ஒலிம்பிக்கில் சிக்கல்கள் எழ வாய்ப்பிருக்கிறது. வெகு நிச்சயம் சீனா திபெத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் அந்த ஒலிம்பிக் ஒரு அரக்கன் விருந்து கொடுத்த கதையாகப் போய்விடும்.

 2. எல்லாம் தெரிந்த கோபால் சுவாமி, சிங்கூர், நந்திகிராம் பிரச்சனையை என்னவென்பது தெரியாமல் உளறுகிறீர்கள். அங்கே
  நிலம் கையாக படுத்தும் போது காங்கிரஸ், பி.ஜே.பி., திரிணமுள் காங்கிரஸ்,என அனைத்து ஒட்டு பொறுக்கி கட்சிகளும்
  ஓர் அணியில் சேர்ந்து cpi(m)வீழ்த்தவேண்டும் என்று நினைப்பது ஏன்? என்று உங்கள் மூலைக்கு விளங்கவில்லையா?
  அடுத்து வெண்மணியை பற்றி எழுதி இருகிறீகள். ஒரு நல்ல நூலகத்திற்கு சென்று வெண்மணியை பற்றி
  யார் எழுதிய புத்தகமாக இருந்தாலும் முதலில் படியுங்கள். வெண்மணியில் நடந்த போராட்டம் வெறும்
  கூலி உயர்வு போராட்டம். அதுவும் ஒரு படி நெல்லுக்குக்காக நடத்தப்பட்டது. போராட்டத்தில் முதலாளிகள்
  பக்கம் ஒரு பறையனும் இருந்தான். அவனிடமும் பல ஏக்கர் நிலம் இருந்தது. இதில் எந்த சாத்தியை எதிர்த்து
  போராட்டம் நடைபெற்றது என்று விளக்கினால் நல்ல இருக்கும்.திருமாவளவனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் ஏன் என்று புரியவில்லை. இந்த திருமாவளவனும், ராமதாஸ்சும் எரையூர்ரில் தலித் கிருஸ்துவர்களுக்கும்,வன்னிய கிருஸ்துவர்களுக்கும் நடந்த மோதலின் போது இவர்கள் எங்கே போனார்கள்?ஆட்சியை கவிழுத்து விடுங்கள் என்று ஆலோசனை சொல்கிறீர்கள். ஏன் குஜராத்தில் மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு
  வந்தது என்பதை கூறினாள் நன்றாக இருக்கும். இல்லை அங்கு உள்ள மக்களுக்கு உண்ணமும் புத்தி வரவில்லையா? அங்கு மற்ற ஒட்டு கட்சிகள் ஏன் உடம்பின் ஒன்பது துளைகளையும் மூடிக்கொண்டு மௌனம் சாதிக்கிறார்களோ, தெரியவில்லை?
  அமெரிக்கா விடம் 3 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து அணு மின் உலை வாங்கு வதற்கும் இலவசமாக
  ரஷ்யாவிடம் இருந்து அணு மின் உலை வாங்குவதற்கும் வித்தியாசம் தெரிய0தா மடையான நீ?காமேரெட் டு க ள் எல்லாம் தெளிவாக தான் இருக்கிறார்கள். உன்னை போல அரை குரையினால் தான் இந்திய
  நாட்டுக்கு ஆபத்து.

 3. நண்பர் ஷக்தி அவர்களே, பெயரிலியாக (அனானியாக) மறுமொழி இடாமல் இருந்தமைக்கு நன்றி.

  ஒருவர் தன்னிடம் கேட்ட கேள்விக்கு இன்னொரு கேள்வியை பதிலாகத் தந்தால், அவரிடம் உண்மையில் பதில் இல்லை என்பது தான் பொருள். எது எப்படி இருப்பினும் இப்போது உங்கள் மறுமொழிக்கு வரிக்கு வரி பதில் சொல்கிறேன்.

  மார்க்சிஸ்டுகளுக்கு எதிராக ஓட்டுப் பொறுக்கிகள் மட்டுமே அங்கே இருந்ததாகக் கூறுகிறீர்கள். மேதா பட்கர் மேற்கு வங்கத்தின் எந்தத் தொகுதியில் நின்று ஓட்டுப் பொறுக்கினார்?

  //காங்கிரஸ், பி.ஜே.பி., திரிணமுல் காங்கிரஸ், என அனைத்து ஓட்டு பொறுக்கி கட்சிகளும் ஓர் அணியில் சேர்ந்து cpi(m) வீழ்த்த வேண்டும் என்று நினைப்பது ஏன்?//

  ஒரு ஓட்டுப் பொறுக்கி, இன்னொரு ஓட்டுப் பொறுக்கி தன்னை விட அதிகமாக பொறுக்குவதை விரும்ப மாட்டான். அது தான் காரணம்.

  //வெண்மணியில் நடந்த போராட்டம் வெறும் கூலி உயர்வு போராட்டம்//

  வெண்மணிப் போராட்டத்தை நீங்கள் வர்கப் போராட்டம் என்று சொல்கிறீர்கள். நான் வருணப் போராட்டம் என்று சொல்லுகிறேன். பறையன் கூலி உயர்வு கேட்டதைப் பொறுக்கமுடியாமல் தானே கொளுத்தினார்கள். நீங்கள் சொல்லுகிற முதலாளிகள் அவர்கள் வீட்டில் திவசம் செய்த பிராமணன் ஒரு மரக்கால் நெல் அதிகம் கேட்டால் அதற்காக அவனுடைய அக்ரகாரத்தைக் கொளுத்தி இருப்பார்களா?

  //முதலாளிகள் பக்கம் ஒரு பறையனும் இருந்தான். அவனிடமும் பல ஏக்கர் நிலம் இருந்தது//

  ஆமாம் காலை நக்குகிற நாய்களுக்கு அள்ளித்தருவது தான் முதலாளி வர்க்கம். மரத்தை வெட்டுகிற கோடாலிகளுக்கு அந்த மரக்கிளையைக் கொண்டே தான் காம்பு தயாரிப்பார்கள். அப்படி விலை போன ஒரு கோடாலிக் காம்பு தான் நீங்கள் சுட்டிக் காட்டியது.

  தாழ்ந்த ஜாதி என்று சொல்வது கூட அவர்களைப் புண்படுத்தும் என்பதால் தான் தாழ்த்தப்பட்ட ஜாதி கூறுகிறோம். நீங்களோ //பறையன்// என்று நேரடியாகவே குறிப்பிட்டுவிட்டீர்கள். நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ள இந்த ஒரு வார்த்தையே போதுமானதாக இருக்கிறது.

  எரையூர் சம்பவத்தின் போது திருமாவளவனும் ராமதாசும் என்ன செய்தார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். வெண்மணி நினைவிடம் ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு சொந்தம் என்று கூறி திருமாவளவனை அனுமதிக்க மறுத்த செயல் எந்த வகையில் பொதுவுடைமையாகும் என்று தான் கேட்டிருந்தேன். அதற்கும் பதிலில்லை.

  //ஏன் குஜராத்தில் மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தது என்பதை கூறினால் நன்றாக இருக்கும். இல்லை அங்கு உள்ள மக்களுக்கு இன்னமும் புத்தி வரவில்லையா? அங்கு மற்ற ஓட்டு கட்சிகள் ஏன் உடம்பின் ஒன்பது துளைகளையும் மூடிக்கொண்டு மௌனம் சாதிக்கிறார்களோ, தெரியவில்லை?//

  இஸ்லாமியன் குண்டு வைத்துவிடுவான், கலவரம் செய்யப் போகிறான் என்று மிரட்டி மிரட்டித் தானே ஓட்டுப் பொறுக்கினான் மோடி. தெகல்கா இணையதளம் வெளியிட்ட வலுவான ஆதாரங்கள் இருந்தும் உங்களால் ஏன் அவனை கீழிறக்க முடியவில்லை? மக்கள் முட்டாளாகத் தான் இருக்கிறார்கள் குஜராத்தில். அவர்களின் கண்களைக் கம்யூனிஸ்ட்டுகளாவது திறந்திருக்கலாமே? இந்தக் கேள்விகளைக் காங்கிரசை பார்த்து கேட்டாயா? என்று நீங்கள் கேட்கலாம். இப்போது மட்டும் நீங்கள் காங்கிரசை துணைக்கு அழைத்தால் நீங்கள் பச்சை சந்தர்ப்பவாதிகள் என்று தான் நம்ப வேண்டியிருக்கும். இனிமேலும் கேள்வியைக் கேள்வி கேட்டு மடக்குகிற வேலை வேண்டாம்.

  //அமெரிக்கா விடம் 3 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து அணு மின் உலை வாங்கு வதற்கும் இலவசமாக ரஷ்யாவிடம் இருந்து அணு மின் உலை வாங்குவதற்கும் வித்தியாசம் தெரியாதா மடையனா நீ?//

  நீங்கள் விலையைப் பற்றிப் பேசுகிறீர்கள், நான் விளைவைப் பற்றி யோசிக்கிறேன். இரண்டுமே எரிகிற கொள்ளி. நீங்கள் அமெரிக்கக் கொள்ளியில் சொறியாதே, இரஷ்ய கொள்ளியில் சொறி என்கிறீர்கள். “நம் நாடு அந்த சாக்கடையில் விழுந்துவிடக் கூடாது என்பது தான் என் விருப்பமும்” என்று நான் எழுதியிருந்ததை நீங்கள் படிக்கவில்லையா.

  எனது பதிவில் முதன்மையான இடத்தைப் பிடித்திருந்தது திபெத் பிரச்சினையில் கம்யூனிஸ்ட்டுகள் நடந்துகொண்ட விதம். அதற்கும் ஒரு பதிலும் வரவில்லை.

  நீங்கள் என்னை ஒருமையில் அழைத்ததைக் குறித்தும், மடையன், அரைகுறை என்று வசைபாடியதையும் நான் பெரிதாகக் கருதவில்லை. ஒரு வேளை நீங்கள் என்னை விடவும் மூத்தவராகக் கூட இருக்கலாம். அதனால் முடிந்த வரையில் நாகரிகமாகவே பதிலளித்திருக்கிறேன்.

  நான் கருத்தைக் கருத்தால் எதிர்க்க வேண்டும் என்று முழுமையாக நம்புவதால் உங்கள் மறுமொழியை தணிக்கை செய்யாமல் பதிப்பிக்கிறேன் (சில எழுத்துப் பிழைகளைத் திருத்தியதைத் தவிர). அவ்வாறான நம்பிக்கை உங்களுக்கும் இருக்குமானால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.

  நீங்கள் எனக்கு எழுதிய மறுமொழியை பதிவாகவும் பதிப்பித்திருப்பதால் தான் இதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. உங்களது வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது மட்டும் தான் தெரியவரும். நான் என்ன சொன்னேன் என்று அவர்களுக்குத் தெரிய வேண்டுமானால் எனது பதிவுக்கு இணைப்பு தந்திருக்க வேண்டும். அப்படி செய்வது எனக்கு விளம்பரம் அளிப்பது போலாகும் என்று கருதினால் தங்கள் பதிவையாவது நீக்க வேண்டும். இரண்டில் ஒன்றைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

  நன்றியுடன்

  விஜய்கோபால்சாமி

  பின் குறிப்பு: என் பெயர் விஜய். கோபால்சாமி என் தந்தை. எல்லா பதிவுகளுக்கும், மறுமொழிகளுக்கும் என் பெயரை முழுமையாக பயண்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 4. உங்கள் முன் நான் வைத்த அத்தனை கேள்விகளிலும் பதில் உள்ளே ஒளிந்து இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லை. அதனால் உங்களுக்கு நேரடியாக பதில் அளிக்கிறேன். திபெத் பிரச்சனையில் சீனா பலமுறை பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதும் தலாய்லாமா அமெரிக்கா என்னும் குள்ள நரியை நாட்டாமைக்கு அழைக்கிறார். மேலும், இதை எளிமையாக விளக்குவதற்கு இந்தியாவில் உள்ள பிரச்சனைகளை எடுத்து கொள்ளுவோம். காஷ்மீரில் பல்வேறு இன குழுக்கள் பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என்று கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இந்தியா ராணுவத்தை எதிர்த்து போரிடுகிறார்கள். இதன்மூலம் பல அப்பாவி மனிதர்கள் கொல்லப் படுகிறார்கள். மணிப்பூர் மக்கள் தனி நாடு கேட்டு போராடுகிறார்கள். அஸ்ஸமிலும் இதே நிலமை இவர்கள் வைக்கும் கோரிக்கைகளை இந்திய அரசு பரிசிலித்து தனி நாடக பிரித்து கொடுத்து விடலாமா? இது இந்திய நாட்டு பிரச்சனையா? இல்லை, சர்வதேச பிரச்சனையா? தனி நாடு கேட்டு போராடும் மக்கள் அமெரிக்காவை துணைக்கு அழைப்பதை நீங்கள் ஆதரிப்பீர்களா? இல்லை, அவர்கள் கோரிக்கையை ஏற்று தனி நாடு கொடுத்து விடுவிடலாமா? இதற்கு என்ன தீர்வு சொல்ல போகிறீர்களோ அதே தீர்வை சீன – தீபெத் பிரச்சனைக்கும் தீர்வாக நாம் எடுத்துக் கொள்வோம்.

  அடுத்து மேத்தா பட்கர் பற்றி நான் குறிப்பிடவில்லை. இதே மேத்தா பட்கர் நந்தி கிராமம் பிரச்சனையில் பின்னங்கால் பிடறியில் பட ஓடிவந்தவர், குஜராத் கலவரத்தின் போதோ, தமிழ் நாட்டில் வாஸந்தியில் நடந்த சம்பவத்தில் போதோ இல்லை, தாமிரபரணியில் நடந்த படுகொலையின் போதோ தனது முன்னங்கால்களை கூட எடுத்து வைக்கவில்லை. நந்தி கிராமத்தை பற்றி கவலைப்படும் மேத்தா பட்கரும் உங்களை போன்ற அறிவிஜீவிகளும் இந்தியாவில் உள்ள சுமார் 600கும் மேல் சிறப்பு பொருளாதார மண்டளங்கள் எப்படி வந்தன? இவற்றுக்கு உண்டான பல ஏக்கர் நிலம் எங்கிறிந்து கைப்பற்றப் பட்டது? நிலம் இழந்த மக்கள் என்ன ஆனார்கள்? இதை பற்றியும், அந்த மக்களை பற்றியும் ஏன் உங்கள் ஓட்டைகளை திறக்கவில்லை? இவ்வளவு ஏன் குஜராத்தில் சுமார் 68மேல் சிறப்பு பொருளாதார மண்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்குள்ள விவசாய தொழிலாளிகளுக்காக மேத்தா பட்கர் என்ன குரல் கொடுத்தார்?அந்த விவசாயிகளுக்கு என்ன நஷ்டஈடு வாங்கி கொடுத்தார்? இவ்வளவு போராட்டம் நடத்தும் மேத்தா பட்கர் நமது தண்ணீரை எடுத்து நம்மளிடமே விற்கும் பன்னாட்டு குளிர் பான கம்பெனிகளை எதிர்த்து ஏன் போராட்டவில்லை? இதை பற்றி உங்களது பதில் தான் என்ன? இதற்கு எல்லாம் என்ன தீர்வு சொல்ல போகிறீர்கள்?

  இந்தனை பிரச்னை நடந்த பிறகும், பல்வேறு கட்சி தலைவர்களும் வந்து ஆய்வு நடத்திய பிறகும் ஏன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவில்லை? சரி அந்த ஒட்டு பொறுக்கிகள் ஒட்டுகளை பெறுகுவதை யார் தடுத்தது? எப்படி தொடர்ந்து 5 முறைக்கு மேல் ஆட்சியில் இருக்கமூடிகிறது? ஒவ்வொரு முறையும் ஒட்டு விகிதம் அதிகரிக்கிறதே.

  வெண்மணி ஒரு வருண போராட்டமா? அப்படி என்றால் மேல்ஜாதி முதலிகளிடம் பல ஆண்டுகளாக அடிமைபட்டு வந்த உழைக்கும் மக்கள்ளெல்லாம் தாழ்ந்த ஜாதி என்று தெரியவில்லையா? அப்படியே தெரிந்து இருந்தாலும் கூலி உயர்வு கேட்கும் போது மட்டும் ஏன் அவர்களை மேல்ஜாதிகாரன் அழித்தான். தன்னுடைய வாழ்வை தாழ்த்தபட்ட மக்களுக்காக அர்ப்பனித்த பெரியார் கூட இந்த சம்பவத்தை பற்றி தன்னுடைய குடியரசுயில் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. அப்போது ஆட்சியில் இருந்த அண்ணா அவர்கள் குற்றவாளிகள் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்ட போது மேல் முறையிடு செய்யாமல் கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார். இது தான் வெண்மணியின் வரலாறு. ஆனால் திருமாவளவன் இது இரண்டு ஜாதிக்குள் நடைபெற்ற போராட்டம் என்று வரலாறுகளை திருத்தி மீண்டும் ஜாதி பிரச்சனையை எழுப்பி மக்களை கூறு போட நினைக்கும் குறுகிய எண்ணத்தைத் தான் காமரேடுகள் எதிர்த்தார்கள்.

  உண்மையிலேயே வாபஸ் வாங்கிக் காட்டுங்கள். மக்களுக்கு அறிவிருந்தால் வருகிற தேர்தலில் பா.ஜ.க. வை வரவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். முதலில் இப்படி கேள்வி கேட்டு எழுதுகிறீகள். பிறகு, குஜராத் மக்கள் முட்டாள்ளென்று எழுதுகிறீகள் முதலில் தெளிவாக ஒரு முடிவெடுத்து எழுதுங்கள்.

  குஜராத்தில் காமரேடுகள் தான் ஒன்றும் செய்யவில்லையே. உங்களை போன்ற அறிவிஜீவிகள் எல்லாம் ஒன்று திரண்டு மோடியின் ஆட்சியை வீழ்த்தி இருக்கலாமே. கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று ஒத்துக்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு மடக்குகீறேன் என்பது எல்லாம் பதில் ஆகாது தோழரே.
  கேள்வியை கேட்கும் உங்களை போன்ற அறிவிஜீவிகள் அதற்கு உண்டான தீர்வையையும் எழுவீர்களா? இல்லை, எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியும் என்று திருவிளையாடல் தருமியைய் போல் ஒதுங்கி கொள்வீர்களா?

  மீண்டும் சிந்திப்போம்
  shakthi

 5. well set… keep it up

 6. நண்பர் ஷக்தி அவர்கள் தன்னுடைய பதிவின் பெயரை (எல்லாம் தெரிந்த கோபால் சாமி) மாற்றிய பிறகு அவருடைய மறுமொழிகள் பதிப்பிக்கப்படும். அவருடைய கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும்.

  நன்றியுடன்

  விஜய்கோபால்சாமி

 7. //உங்கள் முன் நான் வைத்த அத்தனை கேள்விகளிலும் பதில் உள்ளே ஒளிந்து இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லை.//

  அதுதான் மடையன் என்று சொல்லியாகிவிட்டதே. மடையனுக்கு நேரிலிருப்பதே தெரியாதே, ஒளிந்திருப்பது எப்படித் தெரியும். உங்கள் கணக்கில் நானெல்லாம் தற்குறி தானே.

  //திபெத் பிரச்சனையில் சீனா பலமுறை பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதும் தலாய்லாமா அமெரிக்கா என்னும் குள்ள நரியை நாட்டாமைக்கு அழைக்கிறார்.//

  எதற்கும் திறக்காத சீனாவின் இரும்புத்திரை திபெத்திய பௌத்த மடங்களில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதை காட்டுவதற்கு மட்டும் ஸ்ரீரங்கத்து சொர்கவாசல் மாதிரி விரியத் திறக்கிறது. இல்லாத கஞ்சாவைப் போலீசே வைத்து போனவன் வந்தவனை எல்லாம் அக்யூஸ்ட் ஆக்கிய கதை தமிழ்நாட்டிலேயே சந்துக்கு சந்து நடக்கிறது. இப்போது அதே வழிமுறையைக் கையில் எடுத்துள்ளது சீனா. இவ்வளவு மட்டமான வழிமுறையைக் கையில் எடுக்கிற எதிரியிடம் மோத அவனுடைய எதிரியிடம் தான் உதவி கேட்க வேண்டும்.

  //இந்தியாவில் உள்ள பிரச்சனைகளை எடுத்து கொள்ளுவோம். காஷ்மீரில் பல்வேறு இன குழுக்கள் பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என்று கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இந்தியா ராணுவத்தை எதிர்த்து போரிடுகிறார்கள்.//

  இந்தியாவா பாகிஸ்தானா என்று வந்தபோது பெருவாரியான காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இணையவே விருப்பம் தெரிவித்தனர். இது தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த வரலாறு. திபெத் விஷயத்தில் சீனாவுக்கு அப்படி ஏதும் வரலாறு இருக்கிறதா? பக்கத்து வீட்டுக்காரன் பெண்டாட்டியை நான் பத்து வருஷம் வைத்திருந்தாலும் எனக்கு அவள் வைப்பாட்டி தான், பெண்டாட்டி ஆக முடியாது. நீங்கள் ஆயிரம் கதை சொன்னாலும் திபெத் சீனா ஆக்கிரமித்த நாடு தான். மாற்றம் இல்லை.

  இதே சீனா சிக்கிமையும் அருணாசல பிரதேசத்தையும் உரிமை கொண்டாடி வாலாட்டுகிறதே, கொடுத்துவிடலாமா?

  //மணிப்பூர் மக்கள் தனி நாடு கேட்டு போராடுகிறார்கள். அஸ்ஸாமிலும் இதே நிலமை. இவர்கள் வைக்கும் கோரிக்கைகளை இந்திய அரசு பரிசிலித்து தனி நாடக பிரித்து கொடுத்து விடலாமா? இது இந்திய நாட்டு பிரச்சனையா? இல்லை, சர்வதேச பிரச்சனையா? தனி நாடு கேட்டு போராடும் மக்கள் அமெரிக்காவை துணைக்கு அழைப்பதை நீங்கள் ஆதரிப்பீர்களா? இல்லை, அவர்கள் கோரிக்கையை ஏற்று தனி நாடு கொடுத்து விடுவிடலாமா?//

  இந்தக் கேள்விகள் உங்கள் கூட்டணித் தோழன் காங்கிரசிடம் கேட்கப்பட வேண்டியது. நீங்கள் குறிப்பிட்ட மாநிலங்களில் நிகழ்ந்து வரும் போராட்டங்களுக்கு காரணம் புறக்கணிப்பு. ஐம்பது ஆண்டுகளுக்குப் பக்கமாக இந்தியாவில் ஆட்சியில் இருந்தவர்கள் உங்களது தற்போதைய கூட்டணித் தோழர்கள் தாம். அப்படியானால் ஐம்பது ஆண்டுகளாக இந்த மாநிலங்களைப் புறக்கணித்தே வந்த உங்கள் கூட்டணித் தோழர்களைக் கேட்பது தான் பொருத்தமாக இருக்கும். இப்போது அமெரிக்காவை நெருங்கிக் கொண்டிருப்பதும் உங்கள் கூட்டணித் தோழர்கள் தான்.

  //அடுத்து மேத்தா பட்கர் பற்றி நான் குறிப்பிடவில்லை. இதே மேத்தா பட்கர் நந்தி கிராமம் பிரச்சனையில் பின்னங்கால் பிடறியில் பட ஓடிவந்தவர்//

  மேற்கு வங்கத்தில் காவல் துறையின் அராஜகம் மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் குண்டர்களின் கொலைவெறியாட்டாமும் அரங்கேறியது. மார்க்சிஸ்ட் குண்டர்களின் தாக்குதல் காரணமாகத் தான் மேதாபாட்கர் வெளியேற நேர்ந்தது.

  //குஜராத் கலவரத்தின் போதோ, தமிழ் நாட்டில் வாஸந்தியில் நடந்த சம்பவத்தில் போதோ இல்லை, தாமிரபரணியில் நடந்த படுகொலையின் போதோ தனது முன்னங்கால்களை கூட எடுத்து வைக்கவில்லை. நந்தி கிராமத்தை பற்றி கவலைப்படும் மேத்தா பட்கரும் உங்களை போன்ற அறிவிஜீவிகளும் இந்தியாவில் உள்ள சுமார் 600கும் மேல் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எப்படி வந்தன? இவற்றுக்கு உண்டான பல ஏக்கர் நிலம் எங்கிருந்து கைப்பற்றப் பட்டது? நிலம் இழந்த மக்கள் என்ன ஆனார்கள்? இதை பற்றியும், அந்த மக்களை பற்றியும் ஏன் உங்கள் ஓட்டைகளை திறக்கவில்லை? இவ்வளவு ஏன் குஜராத்தில் சுமார் 68மேல் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்குள்ள விவசாய தொழிலாளிகளுக்காக மேத்தா பட்கர் என்ன குரல் கொடுத்தார்?அந்த விவசாயிகளுக்கு என்ன நஷ்டஈடு வாங்கி கொடுத்தார்? இவ்வளவு போராட்டம் நடத்தும் மேத்தா பட்கர் நமது தண்ணீரை எடுத்து நம்மளிடமே விற்கும் பன்னாட்டு குளிர் பான கம்பெனிகளை எதிர்த்து ஏன் போராட்டவில்லை? இதை பற்றி உங்களது பதில் தான் என்ன? இதற்கு எல்லாம் என்ன தீர்வு சொல்ல போகிறீர்கள்?//

  //வாஸந்தி// அது வாசந்தி அல்ல வாச்சாத்தி.

  உங்கள் தப்பைத் தட்டிக் கேட்கத் திரண்டு வந்தவர்களை எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள் என்றீர்கள். உங்கள் மாநிலத்தில் மேதா பாட்கர் எந்த தொகுதியில் நின்று ஓட்டுப் பொறுக்கினார் என்று கேட்டால் அதைத் திசைதிருப்புவதற்கு எத்தனை கேள்விகள். அவர்கள் எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள் என்று சொல்கிற நீங்கள் எத்தகைய பொறுக்கிகள்? அவர்களாவது சொந்தத் திருவோட்டோடு போய் சுயமாய்ப் பொறுக்குகிறார்கள். நீங்கள் எங்கிருந்து பொறுக்குகிறீர்கள்? திரிபுராவிலே, மேற்கு வங்கத்திலே, கேரளாவிலே மட்டும் தான் நீங்கள் சொந்தத் திருவோட்டில் பொறுக்குகிறீர்கள். மற்றபடி நாடு முழுவதும் நீங்கள் பொறுக்குவதே இன்னொருவன் திருவோட்டிலிருந்து தானே?

  இத்தனை சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒப்புக்கொள்கிறேன். இத்தகைய பொருளாதார மண்டலங்களைக் கொண்டுவந்தவர்கள் அயோக்கியர்கள் தான், காட்டு ஓநாய்கள் தான். ஆனால் அந்த ஓநாய்கள் செய்துவரும் ரத்தம் குடிக்கும் வேலையைத் தானே நீங்களும் செய்கிறீர்கள். அதை ஏன் ஒரு ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு செய்கிறீர்கள். என் பதிவின் தலையாய நோக்கமே, ஊரிலேயே நான் ஒருவன் தான் யோக்கியன் என்று ஏன் கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் வேஷம் கட்டுகிறீர்கள் எனக் கேட்பது தான்.

  //இத்தனை பிரச்னை நடந்த பிறகும், பல்வேறு கட்சி தலைவர்களும் வந்து ஆய்வு நடத்திய பிறகும் ஏன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவில்லை? சரி அந்த ஒட்டு பொறுக்கிகள் ஒட்டுகளை பெறுகுவதை யார் தடுத்தது? எப்படி தொடர்ந்து 5 முறைக்கு மேல் ஆட்சியில் இருக்கமூடிகிறது? ஒவ்வொரு முறையும் ஒட்டு விகிதம் அதிகரிக்கிறதே.//

  உங்கள் கையில் தான் வசமாய் சிக்கியிருக்கிறதே காங்கிரசின் குடுமி. எங்கிருந்து போடுவான் வழக்கு? மோடி மதத்தைச் சொல்லி ஓட்டுப் பொறுக்கினால் நீங்கள் முதலாளித்துவத்தைச் சொல்லி பொறுக்குகிறீர்கள். உங்களுக்கென்றே கண்டுபிடித்திருக்கிறீர்களே, “போராடுவோம் போராடுவோம், இறுதி வரை போராடுவோம்.”

  //வெண்மணி ஒரு வருண போராட்டமா? அப்படி என்றால் மேல்ஜாதி முதலாளிகளிடம் பல ஆண்டுகளாக அடிமைபட்டு வந்த உழைக்கும் மக்கள்ளெல்லாம் தாழ்ந்த ஜாதி என்று தெரியவில்லையா? அப்படியே தெரிந்து இருந்தாலும் கூலி உயர்வு கேட்கும் போது மட்டும் ஏன் அவர்களை மேல்ஜாதிகாரன் அழித்தான். தன்னுடைய வாழ்வை தாழ்த்தபட்ட மக்களுக்காக அர்ப்பனித்த பெரியார் கூட இந்த சம்பவத்தை பற்றி தன்னுடைய குடியரசுயில் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. அப்போது ஆட்சியில் இருந்த அண்ணா அவர்கள் குற்றவாளிகள் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்ட போது மேல் முறையிடு செய்யாமல் கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார். இது தான் வெண்மணியின் வரலாறு. ஆனால் திருமாவளவன் இது இரண்டு ஜாதிக்குள் நடைபெற்ற போராட்டம் என்று வரலாறுகளை திருத்தி மீண்டும் ஜாதி பிரச்சனையை எழுப்பி மக்களை கூறு போட நினைக்கும் குறுகிய எண்ணத்தைத் தான் காமரேடுகள் எதிர்த்தார்கள்.//

  தமிழ்நாட்டின் ஜாதி ஒற்றுமை திருமாவளவன் வந்து பிளவுபடுத்தும் நிலையில் இல்லை. ஏற்கெனவே பிளவுபட்டுத்தான் இருக்கிறது. எவனும் கேள்வி கேட்கவில்லை என்பதாலேயே ஒருவன் செய்த தவறு தவறில்லை என்றாகிவிடாது. வர்கமா வருணமா என்ற கேள்வி கொஞ்சம் விலகி இருக்கட்டும். வெண்மணி நினைவிடத்தில் திருமாவளவனை அனுமதிக்காத உங்களுக்கும், சிதம்பரத்தில் நந்தனை அனுமதிக்காத தீட்சிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?

  //குஜராத்தில் காமரேடுகள் தான் ஒன்றும் செய்யவில்லையே. உங்களை போன்ற அறிவிஜீவிகள் எல்லாம் ஒன்று திரண்டு மோடியின் ஆட்சியை வீழ்த்தி இருக்கலாமே.//

  என்ன செய்வது? என் கையில் இருப்பது தமிழ்நாட்டு வாக்காளர் அட்டை. அதை வைத்துக்கொண்டு தஞ்சாவூர் – 24வது வார்டில் மட்டும் தான் என்னால் வாக்களிக்க இயலும். அடுத்த வார்டில் ஓட்டுப் போட்டாலும் கைக்கு காப்பு தான். நான் என்னவோ ரயிலேறி குஜராத்திற்குச் சென்று தாமரையில் முத்திரை குத்தியது போலல்லவா குற்றம் சாட்டுகிறீர்கள்.

  மொத்தத்தில் உங்கள் மறுமொழியில் என்னை ஒருவன் கேள்வி கேட்டுவிட்டானே என்ற ஆத்திரத்தில் வந்து விழுந்த வசவுகள் தான் அதிகம். கடந்த மறுமொழியிலேயே சொன்னேன் நீங்கள் யாரேன்று தெரிந்து கொள்ள //பறையன்// இந்த ஒற்றைச் சொல்லே போதும் என்று. //பறையன்//, //தாழ்ந்த ஜாதி//, //முன்னங்கால்களை கூட எடுத்து வைக்கவில்லை// (ஒரு சகமனுஷியை நாலு கால் பிறவியாக சித்தரிக்கிற வக்கிர புத்தி) மற்றவர்கள் மீது இழிவைச் சுமத்துகிற இத்தகைய வார்த்தைகளையே தொடர்ந்து கூறிவருகிறீர்கள். இவை எல்லாம் சேர்ந்து நீங்கள் ஒரு போலி பகுத்தறிவுவாதி என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

  இனிமேல் வருகின்ற உங்களுடைய எந்த மறுமொழியும் பதிப்பிக்கப் படமாட்டாது. உங்களுடைய எந்த கேள்விக்கும் என்னிடமிருந்து பதில் பெயராது. இதற்காக உங்கள் பதிவில் என்னை எவ்வளவு அசிங்கமாக எழுத முடியுமோ எழுதிக்கொள்ளலாம். கிழிப்பது (கம்யூனிஸ்டுகளின் முகமூடிகளை) தொடரும்.

 8. Dear Vijay

  This is indeed the best way i can guess, to put forth your points n arguements.
  A communist is one who sheds blood to stop other persons tears.

  Im verymuch inclined towards Communism.But today’s communists and so called communists dont seem to understand what it really means.
  There is no real communists in today’s politics.True one are away.Because they dont go behind fame and money.

  Keep writing.
  We learn a lot from you.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: