அன்புள்ள அமீரண்ணா…

6:43 முப இல் ஏப்ரல் 13, 2008 | கடிதங்கள் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,

அமீரண்ணா, உன் மனதில் பட்டதை எல்லாம் தாங்கி வந்த ஜூனியர் விகடன் பேட்டியைப் படித்தேன். அவரவர் கருத்துக்கு அவரவர்க்கு உரிமை உண்டு. சொல்வதற்கு தடையில்லை, என்ன சொல்கிறோம் என்பதில் தான் அதை மற்றவர்கள் ஏற்பதும் மறுப்பதும். உன்னோடு என்னால் முழுமையாக உடன்பட முடியவில்லை அண்ணா.

ஒகேனக்கல் இந்தியாவுக்கு சொந்தம் என்று ஏன் யாருமே சொல்லவில்லை என்று வருத்தப்பட்டாய். அதே மேடையில் இதற்க்கும் வைரமுத்து பதில் சொல்லிவிட்டார். ஒரே மாநிலம் தான் தமிழ்நாடு, ஆனால் நூற்றி இருபது கிலோ மீட்டருக்கு ஒரு கலாசாரம் பின்பற்றப்படுகிறதே! இன்னொரு கலாசாரத்தோடு தமிழனால் ஒட்டி வாழ முடியும்போது கன்னடன் மட்டும் ஏன் மறுக்கிறான்? அது தானே இங்கே தலையாய கேள்வி.

பாண்டியாறு புண்ணம்புழா, முல்லைப் பெரியாறு இப்படி கேரளாவுடன் நதிநீர்ப் பங்கீட்டிலே தமிழனுக்கு சிக்கல் இருக்கிறது. அதற்காக திருவனந்தபுரத்திலே எந்த தமிழனும் தாக்கப்படவில்லை. மலையாளியாவது நம்மை பாண்டி என்று பழித்து ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கிறான். நாம் கொல்டி, கொல்டி என்று கேலி செய்தும் தெலுங்கன் நம்மை ஒன்றுமே செய்யவில்லையே. பாலாற்றுக்காக அவனுடனும் தான் நமக்குத் தகறாறு இருக்கிறது, அதற்காக ஹைதராபாதில் தமிழன் தாக்கப்பட்டதாக வரலாறு கிடையாதே. இந்த தகராறுகளுக்காக எந்த தெலுங்கனும், மலையாளியும் தமிழ்நாட்டிலும் தாக்கப்பட்டதில்லை. ஆனால் தமிழன் எதைச் செய்தாலும் அடி என்பதுதானே கன்னடர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. முதல்முறையாக நாமும் இப்போது தானே அவர்களின் வழிமுறையைக் கையில் எடுத்திருக்கிறோம். இதற்கே கண்டித்தால் எப்படி அண்ணா.

சத்தியராஜ் மேடையிலே கெட்டவார்த்தை பேசிவிட்டார் என்று வருந்துகிறாயே அண்ணா, பெரியார் பேசாததையா சத்தியராஜ் பேசிவிட்டார்? சத்தியராஜின் கோபம் எதனால் வந்தது. போராட வந்த காரணத்தை மறந்துவிட்டு மேடையிலிருந்தவர்கள் ஒரு தனிமனிதனை வழிபடத் தொடங்கிய பிறகு தானே. அப்படிப்பட்டவர்கள், தனியாக அவர்களது வீட்டிலே வழிபட்டுக் கொள்ளட்டும் அல்லது சொந்த செலவில் சம்பந்தப்பட்டவருக்கு விழா எடுத்துக் கொண்டாடட்டும், யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. சரத்குமாரைப் போலவோ, விஜயகாந்த்தைப் போலவோ ஓட்டுக்காக ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் சத்தியராஜுக்கு இல்லை.

முப்பது வருடங்களுக்கு மேலாக நம்மை நம்பி உடுப்பி ஓட்டல் வைதிருப்பவனை குறிவைத்து அடிக்கலாமா? என்று கேட்கிறாயே அண்ணா, அதே முப்பது வருடங்களுக்கு மேலாக கன்னடனை நம்பி அங்கே கொத்தனாராக இருந்தவன், சித்தாளாக இருந்தவன், லாரி ஓட்டியவன், பெட்டிக் கடை வைத்திருக்கிறவன் இப்படி அனைத்துத் தமிழனும் தானே தாக்கப்படுகிறான், இதற்கென்ன சொல்லுகிறாய் அமீரண்ணா?

பாக்கு விளம்பரம் முதல் தேர்தல் வரைக்கும் அத்தனைக்கும் ரஜினி தேவைப்படுகிறார் என்கிறாயே, இத்தனைக்கும் ரஜினி கட்டாயம் தேவை என்று எண்ணிக்கொண்டிருக்கிற தமிழனின் முட்டாள்தனத்தை ஏன் அண்ணா பாராட்டிக் கொண்டிருக்கிறாய்? தமிழனிடம் பெண் எடுத்தவர், தமிழனுக்குப் பெண் கொடுத்தவர் என்றேல்லாம் ரஜினியின் சிறப்பைப் பட்டியலிடுகிறாயே, முன்பு ஒரு முறை காவிரிப் பிரச்சனை பற்றி எரிந்தபோது, “நாற்பது லட்சம் தமிழர்கள் கர்நாடகாவில் இருக்கிறார்கள்” என்று அவர் விரல் உயர்த்தி மிரட்டிய செயலை என்னவென்று சொல்வாய். தமிழனால் மீட்டு திருப்பியனுப்பப்பட்ட ராஜ்குமார் முன்னிலையில் “வீரப்பனை சம்ஹாரம் செய்ய வேண்டும்” என்று முழங்கினாரே இந்த ரஜினி, அவரை பத்திரமாக மீட்க உயிரைப் பணயம் வைத்து காட்டுக்குள் சென்ற நக்கீரன் கோபால், பழ. நெடுமாறன் இருவரும் பொடா சட்டத்தில் சிறையில் இருந்தனரே, அவர்களை விடுவிக்கக் குரல் கொடுங்கள் என்று ராஜ்குமாரிடம் வேண்டுகோள் வைத்தாரா ரஜினி.

ரஜினி இன்று கன்னடர்களாலேயே எதிர்க்கப்படுகிறார் என்கிறாயே அண்ணா, அவரை பாதுகாக்க அங்கேயும் அவருக்கு மன்றங்கள் இருக்கின்றன. அந்த வேலையை ரஜினி பார்த்துக்கொள்வார். உனக்கு எதற்கண்ணா ரஜினியைத் தூக்கிப் பிடிக்கிற வேலை.

வந்தாரை வாழவைப்பது தான் தமிழனின் அடையாளம் என்று சொன்னாய், ஒப்புக் கொள்கிறேன். வந்தவன் சுரண்டித் தின்ன ஆரம்பித்தால் அடித்து தான் விரட்ட வேண்டும். தமிழர்கள் ஒரு சிலர் ரஜினியால் வளர்ந்த்தை மட்டும் சொல்கிறாயே, ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் சுரண்டி ரஜினி வளர்ந்த கதையை யாரிடம் போய் சொல்வது. சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைந்த பிறகு ரஜினி எத்தனை புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தினார்? தங்களது திறமையை ஏதாவது ஒரு வகையில் நிரூபித்த இயக்குனர்களை நம்பித்தானே இவரது திரைஉலக சவாரி ஓடிக்கொண்டிருக்கிறது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் என்று ஒரு திரைப்படத்திற்கு அறிவிப்பு வெளியிட்டார். பிறகு என்ன செய்தார்? அதை அம்போ என்று விட்டுவிட்டு சந்திரமுகியில் நடிக்கப் போய்விட்டார். உன்னை போல் ஒரு சக படைப்பாளி தானே அண்ணா கே.எஸ். ரவிகுமார். ரஜினிக்கு இன்று நீ குரல் கொடுக்கிறாய், கே.எஸ். ரவிக்குமாருக்கு யார் குரல் கொடுத்தார்கள்?

நாளைக்கே ரஜினி உன்னை அழைத்து ஒரு வாய்ப்பு கொடுத்தாலும், அது ப்ருத்திவீரன் என்ற உனது வெற்றியினால் தானே ஒழிய, அமீர் ஒரு திறமைசாலி என்பதற்காக அல்ல. ஏனெனில் ரஜினி என்கிற முதலாளி, ஓடுகிற குதிரையில் தான் பணம் கட்டுவார். புரிந்துகொள் அமீரண்ணா.

3 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post.

  1. சும்மா நச்சின்னு இருக்கு…

    அமீர் என்ன தான் படம் எடுத்தாலும், விசிலடிச்சான் குஞ்சாக இருக்கும் போது ரஜினி ரசிகனாகவே இருந்திருப்பார்..வளர்ந்துப் பின்னும் டெடி பியரை கட்டிக் கொண்டு தூங்கும் நடிகைகள் போல் அவருக்கு ரஜினி…. அவ்வளவே..

    அமீரின் அறம், புறம் எல்லாம் நாம் கேள்வி கேட்டு சலித்துப் போக வேண்டியது தான்.

  2. நண்பர் டிபிசிடி அவர்களே,

    அமீரண்ணன் நம்முடைய படைப்பாளி. இந்த மண்ணின் கலைஞன். அவருடைய வார்த்தைகளில் தெரிந்த மனிதாபிமானம் பத்தரை மாற்றுத் தங்கம். அமீரண்ணனின் மனிதாபிமானம் விழலுக்கு இறைத்த நீராகிவிடக் கூடாதே என்பது தான் என்னுடைய வருத்தம்.

    மறுமொழிக்கு மிக்க நன்றி நண்பரே.

    அன்புடன்

    விஜய்கோபால்சாமி

  3. திரு.விஜய கோபால்சாமிக்கு,

    வேற்றுமையில் ஒற்றுமை காணச்சொல்கிறது தேசம்,
    தமிழன் விஷயத்தில் மட்டும் ஒற்றுமையில் வேற்றுமை காண்கின்றனர்.

    திரையுலகம் உண்ணாவிரதம் இருந்தால் மட்டுமே சமூகப்பிரச்சினைகள் பெரிதாகப்பார்க்கப்படும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
    இதே விஷயத்திற்காக பழ.நெடுமாறன் உண்ணாவிரதமோ அல்லது பாத யாத்திரையோ நடத்தினால் கேடு கெட்ட சமூகம் கோமாளியாகப் பார்க்கிறது.இவருக்கு வேறு வேலையே இல்லையா என்று சிரிக்கின்றனர்.
    நமது அரசு கைதும் செய்யும்.

    திரையுலக உண்ணாவிரதமோ தமிழக மக்கள் மனதில் ஒரு திரை விழாவாக மட்டுமே பார்க்கப்படுகிறது.
    உண்ணாவிரதத்திற்கு வரும் நடிகைகளையும் பார்த்து மகிழ்வதற்காகவே கூட்டம் அலை மோதும்.

    எது எப்படியோ,
    தமிழ்ச் சமூகம் நியாயமான போராட்டத்திற்காக நீங்களோ நானோ அல்லது பழ.நெடுமாறன் போன்றவர்களோ அழைத்தால் யாரும் வரமாட்டார்கள்.

    அமீர் மனிதாபிமானம் பார்க்கிறார், அது அவருடைய குணம்,உரிமை என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்,
    தாங்களின் ஆதங்கங்கள் மிகச்சரியானவை.

    திரு.அமீரிடம் நீங்கள் கேட்டிருப்பவை ஒராயிரம் முறை சரியானவை.

    கர்நாடகத்தான் மட்டுமல்ல, மலயாளியும் நம்மை பழிக்கிறான்.

    பாண்டி என்று சொன்னால் அது பெரிய விஷயமில்லை என்றாலும்,
    அவர்களை விட ஏதோ குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள்…

    நண்பரே மீதம் நாளை எழுதுகிறேன்…
    நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: