அய்யா காம்ரேடுகளே – II

4:57 பிப இல் ஏப்ரல் 18, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்
குறிச்சொற்கள்: , , , , ,

எனது “அய்யா கம்ரேடுகளே” பதிவுக்கு ஷக்தி அவர்கள் முதன் முதலில் ஒரு மறுமொழி எழுதினார். அதில் எனது பதிவிலே நான் கேட்டிருந்த எந்த கேள்விக்கும் சரியான பதில் இல்லை. சிங்கூர், நந்திகிராம விவகாரங்களில் கம்யூனிஸ்டுகள் எல்லோரும் மகாத்மாக்கள் என்பது போலவும், அவர்களை எதிர்ப்பவர்கள் எல்லோரும் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் என்பது போலவும் மட்டுமே எழுதியிருந்தார்.

கம்யூனிஸ்டுகளை எதிர்த்த அனைவரும் கீழ்த்தரமான ஓட்டு அரசியல் நடத்துபவர்கள் என்றும் கூறியிருந்தார். அதற்கு பதில் கூறுவதற்காக அதே போராட்டத்தில் சமூக ஆர்வலர் மேதா பாட்கர் அவர்களும் கலந்து கொண்டார்களே, அவர்கள் மேற்கு வங்கத்தில் எந்த தொகுதியில் நின்று ஓட்டு அரசியல் நடத்தினார் என்று கேட்டால், சரியான பதிலில்லை. மேதா பாட்கர் வாச்சாத்திக்கு வந்தாரா, வேறு எந்தெந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்தார், மற்ற பொருளாதார மண்டலங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நஷ்ட ஈடு வாங்கித் தந்தார், என்று வயலுக்கு வந்தாயா, நாற்று நட்டாயா பாணியிலான திசைதிருப்பு வாதங்களைத் தான் எழுதியிருந்தார். ஏன் பின்னங்கால் பிடரியில் அடிபட புறமுதுகிட்டு ஓடினார் என்று கேள்வி வேறு கேட்கிறார். இதுவும் போதாது என்று “முன்னங்கால்களையாவது எடுத்து வைத்தாரா” என்று அவரை ஒரு நாலு கால் விலங்காக சித்தரிக்கிறார். மேதா பாட்கர் ஒரு சமூக ஆர்வலர் என்பது கூட இரண்டாம் பட்சம், ஒரு சக மனுஷியை விலங்காக சித்தரிக்கிற ஷக்தியினுடைய வக்கிர புத்தி தானே அவருடைய மறுமொழியிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது.

தாழ்ந்த ஜாதி என்ற ஒன்று கிடையவே கிடையாது, தாழ்ந்த ஜாதியில் தான் பிறக்க வேண்டும் என்று எவனும் வரம் வாங்கிக் கொண்டும் பிறப்பதில்லை. சில ஆதிக்க ஜாதியினரின் சுயநலத்தால் வலுவற்ற சாதிகள் ஒடுக்கப்பட்டு, இழிநிலைக்குத் தள்ளப்பட்டது. அதனால் தான் அவர்களை தாழ்ந்தவர்கள் என்று கூறுவதை விடுத்து தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி வருகிறோம். அந்த நாகரீகம் கூட இல்லாமல் பறையன், தாழ்ந்த ஜாதி என்ற வார்த்தைகளையே அருவருக்கத் தக்க வகையில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார் (பறையன் என்ற வார்த்தை அருவருக்கத் தக்கதல்ல, வன்மத்தோடு அந்த சொல்லைப் பயன்படுத்துவது தான் அருவருக்கத் தக்கது).

சில ஆண்டுகளுக்கு முன்பு வெண்மணி நினைவிடத்தில் திருமாவளவன் அஞ்சலி செலுத்த கம்யூனிஸ்டுகளால்அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் “வெண்மணி நினைவிடம் அமைந்திருக்கும் நிலம் ஒரு கம்யூனிஸ்டுக்கு சொந்தம்” என்பது தான். பொதுவுடமை பொதுவுடைமை என்று பேசுகிற கம்யூனிஸ்டுகளே, நிலம் எனக்கு சொந்தம், என் நிலத்துக்குள் நீ வரக்கூடாது என்று திருமாவளவனைப் பார்த்து சொன்னது எந்த வகையில் பொதுவுடைமை என்பது தான் எனது கேள்வி. அவர் எழுதிய இரண்டு மறுமொழிகளிலும் இதற்கு பதில் இல்லை. நான் வெண்மணியைப் பற்றிக் கேட்டால் இவர் எரையூரைப் பற்றிப் பேசுகிறார். இதற்கு எங்கள் தஞ்சை மாவட்டத்தில் “பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுவான்” என்ற முதுமொழியை சொல்வார்கள். நான் என்ன சொன்னாலும் 42 பேரை உயிரோடு கொளுத்திய முதலாளிகளுக்காகத் தான் தொடர்ந்து வக்காலத்து வாங்கி வருகிறார்.

இந்த கேடுகெட்ட செயலை பெரியார் தட்டிக் கேட்கவில்லை, அண்ணா தட்டிக் கேட்கவில்லை என்று கேட்கிறார். யாரும் தட்டிக்கேட்கவில்லை என்றால் ஒரு தவறு தவறே இல்லை என்றாகிவிடுமா? அதே பெரியார் தனது இறுதிப் பேருரையில் என்ன சொன்னார்? எல்லோரையும் பொறுக்கி பொறுக்கி என்று சொல்லும் கம்யூனிஸ்டுகளே பொறுக்கித் தின்று தான் பிழைப்பு நடத்துகிறார்கள் என்று போட்டு உடைத்துவிட்டல்லவா போயிருக்கிறார்!

ஷக்தி என்ன தான் சொல்ல வருகிறார்? இந்த படுகொலைகள் ஜாதியின் பெயரால் நடத்தப்படவில்லை, முதலாளித்துவத்தின் பெயரால் நடத்தப்பட்டிருக்கிறது, ஆகவே இது குற்றம் இல்லை என்கிறாரா? ”எதன் பெயரால் வேண்டுமானால் நடந்திருக்கட்டுமே, இந்த படுகொலைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று அவருடைய மறுமொழிகளில் எந்த இடத்திலும் ஏன் கூறவில்லை. மாறாக முதலாளிகள் பக்கம் ஒரு ”பறையனும்” (கவனிக்கவும் திரு. ஷக்தி கூறிய அதே வார்த்தையைத் தான் இங்கே பயன்படுத்துகிறேன்) இருந்தான் என்கிறார். தமிழ்நாட்டில் கோடாலிக் காம்புகளுக்கா பஞ்சம். முதலாளிகளின் காலை நக்கி முதலாளியானவன் அவர்கள் எதைச் செய்தாலும் வாயை மூடிக்கொண்டுதான் இருந்திருப்பான் என்று இதற்கும் பதில் சொல்லியாகிவிட்டது.

அவர்கள் ஆதிக்கம் செய்கிற ஜாதியை கொளுத்தினார்களே, அவர்களை ஆதிக்கம் செலுத்துகிற ஜாதியாக இருந்தால் கொளுத்தியிருப்பார்களா என்றும் கேட்டிருந்தேன். அதற்கும் பதிலில்லை. மாறாக “ஒற்றுமையாக” இருக்கிற இரு வேறு ஜாதியினரை திருமாவளவன் பிளவுபடுத்தப் பார்க்கிறார் என்கிறார். அவர் குறிப்பிடுகிற இருவேறு ஜாதிகளுக்குள் ஒற்றுமை இருந்தால் தஞ்சை மாவட்டத்தில் நான் குறிப்பிடுகிற சம்பவம் இன்றளவும் நடந்து வருமா என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

தஞ்சை மாவட்டத்தில் பறை இசைக்கு பெயர் போனவர்கள் “ரெட்டிப்பாளையம் வீரசோழன் குழுவினர்”. படையப்பா, சங்கமம் உள்ளிட்ட படங்களுக்கு பறை இசை வாசித்தவர்கள். பல்வேறு வெளிநாடுகளுக்கும் சென்று பறை இசை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியவர்கள். இவ்வளவு சிறப்பு இருந்தும் அவர்களால் ரெட்டிப்பாளையத்தில் காலுக்கு செருப்பு போட்டுக் கொண்டு நடக்க முடியாது. பொதுவீதியில் செருப்பை கக்கத்தில் இடுக்கிக் கொண்டுதான் நடந்து செல்லவேண்டும். இப்போது சொல்லுங்கள் ஷக்தி சொல்லுகிற ஒற்றுமையின் லட்சணம் எத்தகையது என்று. ஷக்தி எந்த ஊர் என்று தெரியாது, ஆனால் நான் அதே தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவன் தான்.

திபெத் மீது சீனா செலுத்திவரும் வல்லாதிக்கத்தைக் குறித்தும் எனது பதிவில் கேட்டிருந்தேன். அவருடைய முதல் மறுமொழியில் இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அதற்கான எனது பதிலில் வலியுறுத்திக் கேட்ட பிறகு, அவருடைய இரண்டாவது மறுமொழியில் ஒரு மழுப்பலான பதில் வந்தது. திபெத் மீது சீனா செலுத்தி வரும் வல்லாதிக்கத்தையும் காஷ்மீரின் மீதான இந்தியாவின் உண்மையான உரிமையையும் ஒப்பிட்டுக் கூறியிருந்தார். காஷ்மீர் மக்களின் பெருவாரியான ஆதரவோடுதான் இந்தியா காஷ்மீரை இணைத்துக் கொண்டது. இந்த உண்மை தெரிந்தவர்கள் ஒரு வாதத்திற்காகக் கூட திபெத்தையும் காஷ்மீரையும் ஒப்பிட மாட்டார்கள்.

வெறும் ஒப்பாரியும் வசைப்பாட்டும் மட்டுமே இருந்த அவருடைய மறுமொழியில் நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் ஒளிந்து இருந்ததாம்!

”அஸ்ஸாம், நாகலாந்து மக்கள் தனி நாடு கேட்டுப் போராடுகிறார்கள் கொடுத்துவிடலாமா?” என்கிறார். அஸ்ஸாம், நாகாலாந்து, சிக்கிம் மணிப்பூர் மாநிலங்களின் பெயரைக் கேட்டால் லாட்டரிச் சீட்டைத் தவிர வேறு ஏதாவது ஞாபகம் வருகிறதா? (அஸ்ஸாம் மட்டும் விதிவிலக்கு – தேயிலை) இந்த மாநிலங்கள், தமிழ்நாடு அளவுக்கு, ஆந்திரா அளவுக்கு, அவ்வளவு ஏன், பீகார் அளவுக்குக் கூட வளரவில்லையே. அவர்களையும் மற்ற மாநிலங்களைப் போல் வளர்த்தெடுத்திருந்தால் ஏன் பிரிவினை கோருகிறார்கள். தொட்டதற்கெல்லாம் போராட்டம் போராட்டம் என்று வீடுகட்டி வெள்ளையடிக்கிறவர்கள் காங்கிரசிடம் ஏன் இதற்காக போராடவில்லை?

இதையடுத்து அருணாசல பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் மீது சீனா உரிமை கொண்டாடி வாலாட்டிவருவது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தேன். இரண்டு மறுமொழிகளிலும் இதைக்குறித்த பதில் இல்லை.

இந்த கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவில் உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? கூலியை உயர்த்தி கேட்கிற தொழிலாளிகளுக்கும், உயர்த்தித் தர மறுக்கும் முதலாளிகளுக்கும் நடுவில் இடைத்தரகர் வேலை! இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்கிறார்கள் என்று யாருக்காவது விளக்க வேண்டுமென்றால் இந்த ஒரு வாக்கியத்தைக் கொண்டே தெள்ளத் தெளிவாக விளக்கிவிடலாம்.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து ஐந்து முறை ஆட்சி அமைத்தோம், ஒவ்வொரு முறையும் வாக்கு விகிதம் அதிகரித்து வருகிறது என்கிறார். உங்கள் வாக்கு விகிதம் மட்டுமல்ல நாட்டின் மக்கள் தொகையும் அதிகரித்து வந்துள்ளது, அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்திருக்கிறது. உங்களை விட உங்கள் பிரதான எதிர் கட்சியின் வாக்குகள் அதிகமாக சிதறுவதால் தான் இந்த மாயை. ஆகவே உங்கள் புள்ளிவிவரப் புளுகுகளை எல்லாம் சிவப்புச் சட்டையுடன் எவனாவது அப்பாவி மாட்டினால் அவனிடம் சொல்லுங்கள். ஐந்து முறை ஆட்சியில் இருந்ததாகக் கூறுகிறீர்கள், உங்கள் மேற்கு வங்கத்தில் எத்தனை பேருக்கு சொந்த வாகனம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது? ஐந்து முறை ஆட்சியிலிருந்தது உங்களது அதிருஷ்டம், மக்களின் துரதிருஷ்டம். மேற்கு வங்க மக்கள் ஒப்பீட்டுப் பார்வை இல்லாததால் பல்வேறு இலக்குகளில் அவர்கள் அடைய வேண்டிய வளர்ச்சிகளை அடையாளம் காணாமலே இருக்கிறார்கள். போட்டிக்கு ஒருவன் இருக்கிறான் என்ற காரணத்தால் தான் ஒவ்வொரு ஆளுங்கட்சியும் மக்களுக்கு ஓரளவுக்காவது நல்லதைச் செய்து வருகின்றன. ஆக மேற்கு வங்க மக்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. உங்களுக்கு மத்திய ஆட்சியில் பங்கும் வேண்டும், நடுநிலை வேஷமும் கலைந்துவிடக் கூடாது, அரசியல் ஆதாயத்தையும் அனுபவிக்க வேண்டும். ஆட்சியில் பங்கு, பாராளுமன்ற சபாநாயகர் பதவி; நடுநிலை வேஷம், மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள்; அரசியல் ஆதாயம், காங்கிரசை மிரட்டி மிரட்டியே காரியம் சாதிப்பது, அதன் மூலம் செல்வாக்கை வளர்த்துக் கொள்வது.

கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியுமா? தீர்வும் சொல்வீர்களா என்று கேட்கிறார். என் அறிவுக்கு எட்டிய தீர்வை சொல்லுகிறேன். உண்மையிலேயே விவசாயப் பயன்பாடற்ற நிலங்கள் உங்கள் மாநிலத்தில் இருக்கிறதென்றால் தாராளமாக எடுத்துக்கொடுங்கள். உதாரணமாக ஆந்திர தலைநகர் ஹைதராபாதில் விவசாயம் செய்ய முடியாத பாறைப் பகுதிகளில் தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடம் வழங்கப்பட்டு ஹைடெக் சிட்டியாக உருமாறி இருக்கிறது. இப்படியான விவசாயப் பயன்பாடற்ற நிலங்கள் தமிழகத்தில் மிகவும் குறைவு. இருந்தும் சென்னையில் எத்தனை பன்னாட்டு நிறுவனங்கள் அண்ணா சாலையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் இருக்கின்றன. இந்த இடங்களை எல்லாம் தமிழகத்தில் இருந்த அரசாங்கங்களா கைப்பற்றித் தந்தன? அந்தந்த நிறுவனங்கள் நில உரிமையாளர்களிடம் நேரடியாக விலை கொடுத்தோ, குத்தகைக்கோ எடுத்தார்கள். விற்றவனும் பாதிக்கப்படவில்லை, சட்டம் ஒழுங்கும் கெடவில்லை. அரசாங்கம் அந்த நிறுவனங்களுக்கு சாலை, போக்குவரத்து, போன்ற வசதிகளை மட்டும் தான் செய்து கொடுத்திருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டல விவகாரங்களில் மாநில அரசாங்கங்கள் எதற்காக இடைத்தரகு வேலை செய்ய வேண்டும். எவனுக்கு எது வேண்டுமோ அவனே அதை வாங்கிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுங்கள். டாடாவிடம் இல்லாத காசா, நேரடியாக டாடா நிறுவனமே நிலத்தை விலைபேசி வாங்கிக்கொள்ளட்டுமே. வரிந்து கட்டிக் கொண்டு ஏன் டாடாவுக்காக தரகு வேலை பார்க்கிறீர்கள். நில உரிமையாளனும் கொஞ்சம் லாபம் பார்க்கட்டுமே. எத்தனை நாளைக்கு டாடா மட்டும் லாபம் பார்ப்பது. இது ஏதோ நானாக யோசித்து சொன்ன தீர்வு அல்ல. உங்கள் அர்த்தமற்ற காழ்புக்கும் வெறுப்புக்கும் உள்ளான அறிவுஜீவிகள் பலரும் சொல்லுகிற தீர்வுதான் இது.

தூங்குகிறவனை எழுப்பிவிடலாம், ஷக்தியைப் போல் நடிப்பவர்களை சங்கை காதுக்கு அருகில் வைத்து ஊதினாலும் எழுப்ப முடியாது. இனியும் இவருடன் விவாதம் நடத்துவது முழு மூடத்தனம். இனி ஷக்தியுடன் எந்த விவாதத்திலும் ஈடுபடப் போவதில்லை. ஷக்தியின் தளத்தில் இனி எந்த மறுமொழிப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. புறக்கணிப்போம் இந்த போலியை…

Advertisements

1 பின்னூட்டம் »

RSS feed for comments on this post.

 1. \\நாலு கால் விலங்காக சித்தரிக்கிறார். மேதா பாட்கர் ஒரு சமூக ஆர்வலர் என்பது கூட இரண்டாம் பட்சம், ஒரு சக மனுஷியை விலங்காக சித்தரிக்கிற ஷக்தியினுடைய வக்கிர புத்தி தானே அவருடைய மறுமொழியிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது.\\

  ஒரு மனிதனுக்கு முன்னங்கால் எது பின்னங்கள் எது என்று கூட உங்களுக்கு தெரியவில்லை. மேத பட்கர் ஏன் செல்லவில்லை என்பதற்கு பதில் சொல்லாமல் அவரை நான் விலங்காக சித்தரித்தேன் என்று பிரச்சனையை திசை திருப்பும் உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள்.

  \\“வெண்மணி நினைவிடம் அமைந்திருக்கும் நிலம் ஒரு கம்யூனிஸ்டுக்கு சொந்தம்” என்பது தான். பொதுவுடமை \\

  அந்த இடம் எந்த ஒரு தனி மனிதனுக்கும் சொந்தம் இல்லை. இரண்டாவது ஜாதியின் பெயரால் எவரும் நுழைவதற்கு அனுமதி கண்டிப்பாக இல்லை.

  இந்த கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவில் உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? கூலியை உயர்த்தி கேட்கிற தொழிலாளிகளுக்கும், உயர்த்தித் தர மறுக்கும் முதலாளிகளுக்கும் நடுவில் இடைத்தரகர் வேலை! இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்கிறார்கள் என்று யாருக்காவது விளக்க வேண்டுமென்றால் இந்த ஒரு வாக்கியத்தைக் கொண்டே தெள்ளத் தெளிவாக விளக்கிவிடலாம்.\\

  உண்மை தான். நாங்கள் இந்த போலி ஜனநாயக நாட்டில் அதிக பட்சமாக ஒரு தொழிலாளிக்கு கூலி உயர்வு வாங்கி தருவதே மிக பெரிய வெற்றி. இந்த தகவலை வெளியிட்டதற்கு நன்றி

  \\உங்கள் வாக்கு விகிதம் மட்டுமல்ல நாட்டின் மக்கள் தொகையும் அதிகரித்து வந்துள்ளது, அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்திருக்கிறது. உங்களை விட உங்கள் பிரதான எதிர் கட்சியின் வாக்குகள் அதிகமாக சிதறுவதால் தான் இந்த மாயை. ஆகவே உங்கள் புள்ளிவிவரப் புளுகுகளை எல்லாம் சிவப்புச் சட்டையுடன் எவனாவது அப்பாவி மாட்டினால் அவனிடம் சொல்லுங்கள்.\\

  1. மக்கள்தொகை அதிகரித்தால் எப்படி ஒரே காட்சிக்கு வாக்குகள் சேரும் என்பது தான் என் கேள்வி?
  2. அதிகமான காட்சிகள் தோன்றுவதால் ஓட்டுகள் சிதருமே தவிர எப்படி கூடும்?
  3. பிரதான எதிர் கட்சிக்கு ஏன் வாக்குகள் சிதறுகிறது?

  \\ஐந்து முறை ஆட்சியிலிருந்தது உங்களது அதிருஷ்டம், மக்களின் துரதிருஷ்டம்\\

  பெரியாரின் சீடர்கள் இப்படி அதிர்ஷ்டம், தூரத்ிஷ்ட்த்தின் மேல் நம்பிக்கை வைக்கலாமா?

  \\ஆந்திர தலைநகர் ஹைதராபாதில் விவசாயம் செய்ய முடியாத பாறைப் பகுதிகளில் தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடம் வழங்கப்பட்டு ஹைடெக் சிட்டியாக உருமாறி இருக்கிறது\\

  ஹைடெக் சிட்டி உருவாக்கியவர் ஏன் இப்போது ஆட்சியில் இல்லை?

  \\தூங்குகிறவனை எழுப்பிவிடலாம், ஷக்தியைப் போல் நடிப்பவர்களை சங்கை காதுக்கு அருகில் வைத்து ஊதினாலும் எழுப்ப முடியாது. இனியும் இவருடன் விவாதம் நடத்துவது முழு மூடத்தனம்\\

  நன்றி

  கடைசியாக நாங்கள் களத்தில் இருந்து போராடிக் கொண்டு இருக்கிறோம். உங்களை போன்ற அறிவிஜீவிகள் போகிறபொக்கில் ——- தூற்றி விட்டு செல்வது வாடிக்கையான செயல் தான் இது ஒன்றும் புதிது அல்ல எங்களுக்கு. பேசிக்கொண்டு பொழுதை போக்குவது உங்களுக்கு வாடிக்கை. களத்தில் இருந்து உயிர் இழப்புகளை சந்தித்து வரும் எங்களை பார்த்து ரசிப்பது உங்களுக்கு வேடிக்கை. மீண்டும் இந்த முட்டாளை சந்திப்பீர்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: