அய்யா காம்ரேடுகளே – III

9:16 முப இல் ஏப்ரல் 21, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக
குறிச்சொற்கள்: , , , , , , , ,

அய்யா காம்ரேடுகளே IIன் இறுதியில் ஷக்தியைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். இருந்தாலும் அவரிடமிருந்து ஒரு மறுமொழி வந்திருந்தது. அதை பதிப்பிக்காமல் இருப்பது ஷக்தியினுடைய கருத்தை மறைப்பது போலாகும் என்று கருதியதால் அதையும் பதிப்பிக்கிறேன். அவருடைய மறுமொழிக்கான பதில்தான் அய்யா காம்ரேடுகளே III.

மனிதனுக்கு இருப்பவை இரண்டே கால்கள் தான், வலது கால் இடதுகால். நாலு கால் உள்ள விலங்குகளுக்கு மட்டும்தான் முன்னங்கால் பின்னங்கால் எல்லாம். அப்படி முன்னங்கால்களும் பின்னங்கால்களும் உள்ள மனிதனைப் பார்த்தால் மறக்காமல் புகைப்படம் எடுத்து அனுப்பி வையுங்கள்.

மேதா பாட்கர் வாச்சத்திக்கு வந்தாரா, தாமிரபரணிக்கு வந்தாரா என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. கருணாநிதி முஷரப் உடன் ஏன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, உத்திரப் பிரதேசத்தில் பெரியார் என்ன சீர்திருத்தம் செய்து கிழித்துவிட்டார் என்பது போல. மேதா பாட்கர் மீது உங்களுக்கு இருக்கிற கோபம் நியாயமானது தான். உங்கள் ஆதர்ச ரஷ்யாவிடம் மேலும் மேலும் அனுஉலைகளை வாங்கி கூடங்குளத்தில் நிறுவுதற்கும் எதிர்ப்பு தெரிவித்தவராயிற்றே. 1985ம் ஆண்டு முதல் போராடி வருகிற மேதா பாட்கர் நீங்கள் சொல்லுகிற போராட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லைதான். ஆனாலும் அந்த நேரங்களில் அவர் ஒன்றும் சொகுசாக வாழ்ந்துவிடவில்லை. சர்தார் சரோவர் திட்டத்தையும், உலக வங்கியையும் எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருந்தார். நீங்கள் என்னை மேதா பாட்கரின் வழக்கறிஞர் ஆக்காமல் விடமாடீர்கள் போலிருக்கிறது.

ஜாதியின் பெயரால் வெண்மணிக்குள் திருமாவளவன் நுழையக் கூடாது, ஆனால் ஜாதி முத்திரை உள்ள திருமாவளவன் இருக்கும் கூட்டணிக்குள் மட்டும் மார்க்சிஸ்டுகள் நுழையலாம். இதைக் கேட்பவன் எதால் சிரிப்பது? சீர்திருத்தம் தான் நோக்கமென்றால் ஓட்டு அரசியலுக்கு வந்திருக்கக் கூடாது. ஓட்டு அரசியல் தான் முக்கியம் என்றால் சீர்திருத்தவாதியாக வேஷம் போடக்கூடாது.

கூலி உயர்வு மட்டும் தான் வாங்கித் தருவோம். அது மட்டும் தான் எங்கள் வேலை என்று கூறுவீர்களேயானால் மூண்றாவது அணி, மத்தியில் ஆட்சி என்றெல்லாம் பகல் கனவு காணக் கூடாது.

உங்கள் அறியாமைக்கு பரிதாபம் மட்டும் தான் படமுடியும். இருந்தாலும் விளக்குகிறேன். காங்கிரஸ் இயக்கம் மேற்குவங்கத்திலே சந்தித்த பிளவைப் போல் (திரினாமுல் காங்கிரஸ்) கம்யூனிஸ்டுகள் எந்த பெரிய பிளவையும் சந்திக்கவில்லை. ஆக உடைந்தது காங்கிரசின் வாக்குவங்கி தான். உங்களுக்கு இருந்த வாக்குவங்கி அப்படியே தான் இருக்கிறது. அத்துடன் அதிகரித்த மக்கள் தொகையிலிருக்கும் புதிய வாக்காளர்கள் அவர்களுக்கும் வாக்களித்திருப்பார்கள். அவர்களுக்கு வாக்களித்ததைப் போல உங்களுக்கும் வாக்களித்திருப்பார்களா இல்லையா?

இதல்லாமல் விடுதலைக்குப் பிந்தைய மேற்கு வங்கத் தேர்தல்களில் 1996ல் மட்டும்தான் அதிகபட்சமாக 80.64% வாக்குகள் பதிவாகியுள்ளது. அப்படிப் பார்த்தல் 1982லிருந்து 2001 வரையிலான 20 ஆண்டுகளில் சராசரியாக 19% திலிருந்து 24% வரைக்கும் ஓட்டுக்கள் பதிவாகவே இல்லை. இப்படி ஓட்டுப் போடாமல் விட்ட அதிருப்தி வாக்காளர்களை எந்த கணக்கில் சேர்ப்பது? ஓட்டுப் போடாதவர்களாலும் தானே உங்கள் வாக்கு விகிதம் அதிகரிக்கிறது! இது உங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் வாக்கு விகிதம் அதிகரித்து வருகிறது என்று சொல்லும் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும், எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும்.

என்ன செய்வது, பெரியாரின் சீடனாகவே இருந்தாலும் நீங்கள் ஐந்து முறைக்குமேல் ஆட்சியமைத்ததைப் பார்க்கும்போது அதிருஷ்டம் துரதிருஷ்டம் போன்ற மூட நம்பிக்கைகள் உன்மையாக இருந்து தொலையுமோ என்று அஞ்சத்தான் வேண்டியிருக்கிறது.

ஹைடெக் சிட்டி எத்தகைய நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது என்று சொன்னால், ஹைடெக் சிட்டியை உருவாக்கியவர் ஏன் இப்போது ஆட்சியில் இல்லை என்று கேட்கிறீர்கள் அல்லவா? இதைத்தான் விவாதத்தை வேறு திசைக்கு இழுத்துச் செல்வது என்று கூறுகிறேன். இருந்தாலும் அவர் ஏன் ஆட்சியில் இல்லை என்பதற்கான காரணத்தையும் சொல்கிறேன். ஆந்திராவிலேயே வசிக்கிற காரணத்தால் இங்குள்ள மக்களிடம் கேட்டறிந்த வகையில் பாரதிய ஜனதாவுடனான கூடா நட்பும், தகவல் தொழில்நுட்பம் தவிர்த்த பிற துறைகளில் காட்டிய கவனக்குறைவுமே காரணம் என்று தெரியவருகிறது.

இருந்த காலத்தை எல்லாம் விட்டுவிட்டு, இந்த அரசின் ஆயுள் முடிய இன்னும் ஒன்பது அல்லது பத்து மாதங்களே உள்ள நிலையில் நீங்கள் போராட ஆரம்பித்திருப்பது, சொத்தில எனக்கும் பங்கு உண்டு ஆனால், கடனெல்லாம் உனக்கு மட்டும் தானடா பங்காளி என்று சொல்வது போலல்லவா இருக்கிறது. மக்களில் ஒருவனான எனக்கு உங்கள் போராட்டங்களில் எப்படி வரும் நம்பிக்கை?

அரிசி முன்பிருந்ததை விட 60 முதல் 100 சதவீதம் வரை விலையேற்றம் அடைந்துள்ளது. ஒரு லிட்டர் நல்லெண்ணை 175 ரூபாய்க்கு விற்பது எனக்கு மட்டும் சந்தோஷமா என்ன? நானும் எண்ணையில் தான் தாழிக்க வேண்டும், அரிசியில்தான் சோறாக்க வேண்டும். நான் எப்படி இதிலே பேசிக்கொண்டு பொழுதுபோக்க முடியும், வேடிக்கை பார்த்துவிட்டு ஒதுங்கிப் போக முடியும்? என் பசியை ஓட்டாக அறுவடை செய்ய எண்ணும் உங்கள் மோசடிக்கு என்னால் எப்படி உடன்பட முடியும் சொல்லுங்கள்?

அறிவுஜீவிகள் என்கிற வார்த்தையைக் கொண்டே கேள்வி கேட்பவர்களை எல்லாம் ஒதுக்கிவைத்துவிடுகிறீர்கள். அப்படியானால் உங்கள் இயக்கத்தில் முட்டாள்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்கிறீர்களா? இந்த அறிவுஜீவிகள் உங்களை நெருங்கி வர என்னதான் செய்தீர்கள்? கேள்வி கேட்பதையே தூற்றுவதாகக் கருதுவீர்களேயானால், நாங்கள் மட்டுமா தூற்றினோம், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தூற்றிக்கொள்ளத்தானே செய்தோம்.

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

RSS feed for comments on this post.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: