நம் ஊரில் எப்போது?

2:10 முப இல் ஏப்ரல் 27, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,

சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில், ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. நம் ஊர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, எல்லாமே சிரிப்புதான் போன்ற நிகழ்ச்சி அது. பங்கேற்க வந்த ஒருவர் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியையும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் போல் குரலை மாற்றி நகைச்சுவை செய்து காட்டினார். அந்த நகைச்சுவை, இதோ உங்களுக்காக…

கௌன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிறார் திரு. சந்திரபாபு நாயுடு. அமிதாப்பச்சனுடன் பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்ட பிறகு போட்டி தொடங்குகிறது. பதிமூண்று கேள்விகளுக்கு நாயுடு சரியாக பதில் சொல்லிவிடுகிறார். பதினாலாவது கேள்வியில் கொஞ்சம் திணறுகிறார். கைவசம் இரண்டு லைப் லைன்கள், இரண்டு தவறான விடைகளை நீக்கலாம், நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் சரியான விடையை கேட்டுச் சொல்லலாம். கேள்வி என்ன என்றால் “1997ல் ஆந்திராவின் மக்கள் தொகை எவ்வளவு?” என்பதுதான். நான்கு விடைகளில் சரியானதைச் சொல்ல வேண்டும். ஏ. 2,15,00,000; பி. 12,42,00,000; சி. 45,00,00,000; டி. 7,10,00,000. நான்கில் ஒன்று சரியான விடை. ஆனால் நாயுடுவுக்கு அந்த விடை தெரியவில்லை. நாயுடு தவறான இரண்டு விடைகளை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறார். பி, சி, இரண்டும் நீக்கப் படுகிறது. மீதமுள்ள இரண்டு விடைகளிலும் நாயுடுவுக்கு உறுதியாக எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம்.

அமிதாப் பச்சன் யாரையாவது தொலைபேசியில் அழைத்து கேளுங்களேன் என்று ஆலோசனை கூறுகிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை அழைக்குமாறு கேட்கிறார். அமிதாப் பச்சன் மற்றும் பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி. நாயுடு கேட்டபடியே திரு ரெட்டி அவர்களை தொலைபேசியில் அழைக்கப்படுகிறார். அப்போது திரு ரெட்டி சட்டசபையிலிருக்கிறார். அமிதாப் பச்சனுடனான வழக்கமான அறிமுகத்துக்குப் பிறகு, கேள்வியும் பதில்களும் அவருக்கு சொல்லப்படுகிறது. திரு. ரெட்டி யோசனையுடன் “1997ம் வருடம் சந்திரபாபு ஆட்சியிலே, ஆந்திர மாநிலம் தொழில்துறை, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளிலே,” என்று தொடங்கி 20 விநாடிகளை காலி செய்கிறார். பதற்றமடைந்த திரு நாயுடு, விடையை சீக்கிரம் சொல்லுங்கள் என்று அவசரப் படுகிறார். கடுப்பான திரு ரெட்டி, ஏ. 2,15,00,000 என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டிக்கிறார்.

அமிதாப் பச்சன், “உங்கள் நண்பர் ஏ. 2,15,00,000 என்று கூறியிருக்கிறார் , நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் திரு நாயுடு? என்று கேட்கிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு டி. 7,10,00,000 என்று விடை சொல்லுகிறார். ரெட்டி கூறிய பதிலை விட்டுவிட்டு இவர் வேறு பதில் சொல்லுகிறாரே என்று அனைவருக்கும் ஆச்சரியம். அமிதாபின் வழக்கமான இழுத்தடிப்புக்குப் பிறகு நாயுடு சொன்னதுதான் சரியான விடை என்று தெரிய வருகிறது. மிஸ்டர் நாயுடு, உங்கள் நண்பர் சொன்ன விடை தவறானது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்என்று ஆச்சரியம் விலகாமல் கேட்கிறார் அமிதாப். அவர் எப்போதுமே வாய்க்கு வந்ததை சொல்லுவார், அவருக்கு எதையும் சொந்தமாக யோசிக்க வராது. அப்படியே சரியான விடை தெரிந்தாலும் எனக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறதே என்பதற்காக தவறான விடையைத்தான் சொல்லுவார். அதனால் தான் அவர் சொல்லாமல் விட்ட விடையை நான் சொன்னேன்என்று அந்த இளைஞர் நாயுடுவின் குரலில் சொல்லி முடித்த பிறகு அரங்கமே அதிர்கிறது. எனக்கும் சிரிப்பை அடக்க சில நிமிடங்கள் பிடித்தன.

இந்த நிகழ்ச்சி எனக்குள் சில கேள்விகளையும் எழுப்பிவிட்டுச் சென்றது. ஒரு முதலமைச்சரையும், வருங்காலத்தில் முதலமைச்சராக வரும் வாய்ப்புள்ள ஒருவரையும் கேலி செய்வது கூட ஆந்திராவில் இயல்பாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நம் ஊரிலும் கருணாநிதி ஜெயலலிதா போன்ற அரசியல் பிரபலங்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பகடி செய்யும் எந்த நிகழ்ச்சிகளும் ஏன் தமிழ் ஊடகங்களில் வெளிவருவதில்லை? விதி விலக்காக விகடன், மற்றும் குமுதத்தில் மட்டும் அரசியல், திரைப் பிரபலங்களைப் பற்றி நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் படக்கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. காட்சி ஊடகங்களில் மருந்துக்குக் கூட இதுபோன்ற நகைச்சுவைகளைக் காண முடிவதில்லை. மறைந்த திரு எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றியவை மட்டுமே காட்டப்படுகின்றன. அப்படிக் காட்டப்படுபவை கூட அரசியல் சார்ந்த நகைச்சுவையாக இல்லாமல் அவருடைய திரைப்படங்கள் சார்ந்தவையாகவே இருக்கின்றன.

நான் எதிர்பார்க்கிற கேலி என்பது, ஜெயமோகனின் சிவாஜி, எம்.ஜி.ஆர். கேலிகளைப் போன்றதல்ல. ஆபாசமில்லாத, தனி நபர் சாடல்களற்ற, நாகரிகமான கேலி அல்லது நகைச்சுவை. நம் ஊரில் எப்போது காணக்கிடைக்கும் இதுபோன்ற நகைச்சுவை?

5 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. ஏம்ப்பா........ ஒனக்கு இங்க கீறவங்க ஒயுங்கா இருக்கறது புடிக்கலியா........ நீ பாட்டுக்கு ஐதராபாத்துல குந்திக்கினு எதையாவது கெயப்பி வுட்ராத ராசா......

  2. அய்யே அண்ணாத்தே,

    நீயே பயந்தா கதைக்காவுமா?

  3. அமெரிக்காவில் இத்தகைய நகைச்சுவைகள் சர்வ சாதாரணம். கிண்டலடிக்கவில்லையெனில் இங்கே தலைவர்கள் கோபித்துக் கொள்வார்கள்.

  4. வீட்டுக்கு ஆட்டோ வரும் புரியுதா

  5. தாராளமா வரட்டும். ஆனா, செலவு அதிகமாகும். பரவாயில்லையா? (சென்னை டு ஹைதராபாத் ஆட்டோலயே வரனும்னா செலவாகாதா பின்னே)


பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.