பார்த்தேன், சிந்தித்தேன் – I
3:25 பிப இல் ஜூலை 21, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: கன்சர்வேட்டிவ்கள், தாலி, நீயா நானா, விஜய் டிவி
வழக்கமாகச் சேனலுக்குச் சேனல் தாவுகிற நான் ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்ப்பதுண்டு. அப்படி ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியின் நீயா நானா. சில முறை அலர்ட் வைத்து இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தாலும் விளம்பர இடைவேளைகளில் சேனலை மாற்றிவிட்டு இந்த நிகழ்ச்சியைத் தவறவிட்டதும் உண்டு. ஆனால் இன்றைக்கு எடுத்துக் கொண்ட விஷயம் அதி முக்கியமான விஷயம் என்பதால் இன்று விளம்பரங்கள் உள்பட நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்தேன்.
இன்றைய நிகழ்ச்சியில் திருமணங்களில் பின்பற்றப்படும் சடங்குகளைக் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் நான் மிகவும் ரசித்தது “தாலி தேவையா தேவையில்லையா?” என்ற பகுதி. ஒரு பெண் திருமணமாகி ஏழாண்டுகளாக நான் தாலி அணிவதில்லை என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். அதற்கு அவர் கூறி காரணமும் ஏற்கத்தக்கதாக இருந்தது. கணவனை ஆத்ம ஸ்நேகிதனாகக் கருதுகிற எனக்கு தாலி என்பது வெறும் அலங்கார ஆபரணம் தான் என்று கூறினார்.
உயிரோடு கண் முன்னே இருக்கிற கணவனை விட ஒரு துண்டு தங்கம் எனக்குப் பெரிய விஷயமில்லை என்று ஒரு விவாத அரங்கில் வெளிப்படையாகக் கூறிய அவரது துணிச்சல் பாராட்டத் தக்கது. பழங்காலத்தில் பெண்ணைப் போலவே ஆணுக்கும் திருமணமானதன் அடையாளமாக பெண்கள் அணியும் மெட்டி போன்ற ஆபரணம் ஒன்று அணிவிக்கப்பட்டது. அதில் மெல்லிய ஒலி எழுப்பக் கூடிய சலங்கைகளும் இருக்கும். அவனை நம்பி ஒரு குடும்பம் இருப்பதால் அவன் உயிர் வாழ்வது மிகவும் அவசியமாக இருந்தது. பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் அவன் நடந்து வரும் வழியில் அந்த ஆபரணத்தின் ஒலியைக் கேட்டு விலகிப் போகும் என்பதால் ஆணுக்கும் அந்த ஆபரணம் அணிவிக்கப்பட்டது. இந்த ஆபரணம் இன்றளவும் சில ஜாதியாருடைய திருமணங்களில் அணிவிக்கப்பட்டாலும், திருமணம் முடிந்த இரண்டொரு நாளில் அந்த மணமகன்கள் அதை கழற்றிவிடுகின்றனர்.
திருமணமானவன் என்ற அடையாளத்தை மறைப்பதற்காக அல்லது தங்களுடைய வசதிக்காக ஆண்கள் இந்த ஆபரணத்தைக் கைவிட்டதை ஏற்றுக் கொள்ளும் சமூகம் ஏன் ஒரு பெண் அதைச் செய்யும் போது மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறது? அதே நிகழ்ச்சியில் “நீங்கள் மணமாகதவர் என்று நினைத்து மற்ற ஆண்கள் உங்களை அணுக மாட்டார்களா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்கள் எதிரணியினர். அந்தப் பெண் அதற்கும் அருமையாகப் பதிலளித்தார். “ஆண்களுக்குத் திருமணமானவர் என்பதற்கான விசேஷ அடையாளங்கள் ஏதும் இல்லாத போது அவர்கள் மட்டும் எப்படி அந்தக் கேள்வியை எதிர்கொள்கிறார்கள்?” என்று கேட்டு அவர்களை மடக்கினார்.
இப்படி ஒரு கேள்வியைக் கேட்ட அந்தக் கன்சர்வேட்டிவ்கள், கணவன் இறந்த பிறகு பலவந்தமாக தாலி அகற்றப்பட்டக் கைம்பெண்களையும் திருமணமாகாதவர் என்று நினைத்து மற்ற ஆண்கள் அணுகுகிற அபாயம் இருக்கிறது என்பதை ஏன் நினைத்துப் பார்க்கவில்லை? இதே அபாயங்களைத் தவிர்க்க ஒரு கைம்பெண் தன்னுடைய கணவன் கட்டிய தாலியை அகற்றாமல் வைத்திருந்தால் அதை மட்டும் ஏன் பூதக் கண்ணாடி வைத்துப் பெரிய குற்றமாகக் காட்டுகிறது இந்தக் கன்சர்வேட்டிவ் கூட்டம்.
மாப்பிள்ளை அழைப்பைக் குறித்து தங்களுக்கு இருந்த சங்கடங்களை சில இளைஞர்கள் வெளிப்படுத்திய போது ஒரு கண்சர்வேடிவ் பெண்மணி திருமணத்துக்கு வர முடியாதவர்கள், உதாரணமாக கைம்பெண்கள் உள்ளிட்டோர் அந்த மணமகனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக வைக்கப்படுவது தான் மாப்பிள்ளை அழைப்பு என்று ஒரு சப்பைக்கட்டு சமாதானத்தைச் சொன்னார். இதற்கு கோபி எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தக்கது. கைம்பெண்கள் மறைந்து நின்று தான் பார்க்க வேண்டுமா, ஏன் அந்தத் திருமண அரங்கத்துக்கே வந்து பார்க்கக் கூடாதா? என்று கேட்டார். அதற்கு கன்சர்வேடிவ்கள் பக்கமிருந்த ஒருவர், சடங்குகளிலும் விலக்கத் தக்கவை உண்டு, அதில் இதுவும் ஒன்று என்று ஒப்புக் கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் ஒரு கைம்பெண்ணும் கலந்து கொண்டார். கணவனைப் பறிகொடுத்த ஒரே காரணத்துக்காக பல விசேஷங்களில் சம்பிரதாயங்களைக் காரணம் காட்டி ஒதுக்கப் படுவதைக் கூறினார். கன்சர்வேட்டிவ்களின் பக்கமிருந்து ஒரு பெண் தன்னுடைய திருமணத்தில் மற்றவர்கள் செய்யக் கூடிய சடங்குகளை அந்தக் கைம்பெண்ணையும் அழைத்து செய்ய வைப்பேன் என்று கூறினார். வரவேற்போம்.
நிகழ்ச்சியின் இரண்டாம் பாதியில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.பி.வி.எஸ். மணியன் என்பவர் கன்சர்வேடிவ்களின் பக்கம் சிறப்புப் பங்கேற்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். பல பேரைப் போல கோபியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் கலாச்சாரக் காவலர்களில் கூடாரம் என்று கருதிவிட்டார் போலிருக்கிறது.
கோபி கடைசியாய் சொன்ன பஞ்ச் மிகவும் நன்றாக இருந்தது, “வெறும் சடங்குகளைக் கட்டிக் கொண்டு வாழ்வதை விட, மனிதர்களைக் கட்டிக் கொண்டு வாழ்வதல்லவா வாழ்க்கை”. நிஜம் தானே!
12 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
///“வெறும் சடங்குகளைக் கட்டிக் கொண்டு வாழ்வதை விட, மனிதர்களைக் கட்டிக் கொண்டு வாழ்வதல்லவா வாழ்க்கை”. நிஜம் தானே!///
Comment by mohideen— ஜூலை 21, 2008 #
சந்தேகமே இல்லை. நம் திருமண சடங்குகளில் பலவற்றை விலக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம். அதிலும் கணவன் இறந்த பிறகு 8ம் நாள், 16ம் நாள் சடங்குகள் என்ற போர்வைக்குள் அந்த பெண்ணை சமூகம் படுத்தும்பாடு, நாம் காட்டுமிராண்டிகளோ என நினைக்கும் அளவிற்கு இருக்கின்றது. தாலி போடச்சொல்வது, கணவன் இறந்தால் தாலியை கழற்ற சொல்வது, கைம்பென்கள் சுப காரியங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்பது போன்ற பல நம்பிக்கைகளிலிருந்து நம் சமூகம் விடுபடும் நாள் எந்நாளோ….
அதெல்லாம் சரி, தாலியெல்லாம் வேண்டாம்னா பி.வாசு மற்றும் சின்னத்திரை இயக்குநர்கள் எத வச்சு சினிமா, சீரியல் எடுப்பாங்க.
‘அவளும் சோனி, அவனும் சோனி’ன்னு கொ.வெ.கவிதை எழுதப்போறீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தபோது இது மாதிரி ஒரு
பதிவு எழுதியதற்கு நன்றி விஜய்கோபால்சாமி.
நித்தில்
Comment by nithil— ஜூலை 21, 2008 #
இந்த விஷயத்தை விவாதத்துக்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி விஜய கோபலசாமி!
ரொம்ப நாளாக மனதை வருத்திய விஷயம் இந்த விதவைகளை மங்கல விஷயங்களில் சேர்க்காமல் வருத்துவது.இதை எண்ணி மனம் புண் பட்டவர்களில் நானும் ஒருத்தி.
காலம் மாறி வருகிறது என்றாலும் பல மங்களமான காரியங்களில் விதவைத்துன்புருத்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஏழைகளுக்குச்சாப்பாடு போடுவார்கள். முதியோருக்கு சாப்பாடு போடுவார்கள்,துணி எடுத்து கொடுப்பார்கள். ஆனால் இளம் விதவையை மறக்காமல் மனம் நோக அடிப்பார்கள்.
அவர்கள் பெற்ற பிள்ளைகளின் திருமணத்துக்கே அவர்கள் முன்னின்று நடத்துவதைத்தவறாக நின்பைப்பர்கள். புகைவதை எரிய வைக்க சுமங்கலி பூஜைகள் வேறு.
இதெல்லாம் மாறும் காலம் எப்போ வருமோ?
கமலா
Comment by kalyanakamala— ஜூலை 21, 2008 #
அருமையாக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கென்னவோ இப்போதெல்லாம் திருமணத்தை வெகு விரைவாகச் செய்வதாலோ என்னவோ ( மாப்ளைக்கு 15 நாள் தான் லீவு, அதுல ஒரு நாள் யூ.எஸ் கவுன்ஸ்லேட் போணும், அதுக்க்குள்ள திருமணத்தை முடிச்சுடலாமா ? ) மண முறிவுகளும் வெகு விரைவிலேயே நடந்து விடுகின்றன என தோன்றுகிறது.
Comment by சேவியர்— ஜூலை 21, 2008 #
தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். அது போல் அடுத்தவங்களுக்கு என்றால் சடங்கின் மேல் பழிபோடுவார்கள், அவர்களுக்கு என்று வரும் போது புரட்ச்சிகரமான தத்துவங்களை உதிர்ப்பார்கள்.
கடவுளின் உன்னத படைபான மனிதர்கள் முன்னால், சடங்குகள் குப்பை என்று உணர்வதற்கு படித்தோ, பக்திமானாகயிருக்க வேண்டுமென்றோ அவசியம் கிடையாது, சாதாரண மனசுள்ள மனிதரே போதும். அது கூடயில்லாதவங்க தான் கலாச்சாரபோர்வைக்குள் கிடந்து சடங்கு, சம்பிருதாயம் என்று கூச்சலிடுவார்கள்.
Comment by kunthavai— ஜூலை 22, 2008 #
///
தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். அது போல் அடுத்தவங்களுக்கு என்றால் சடங்கின் மேல் பழிபோடுவார்கள், அவர்களுக்கு என்று வரும் போது புரட்ச்சிகரமான தத்துவங்களை உதிர்ப்பார்கள்.
///
இது யாருக்காக? ஒங்க கமெண்ட் படிச்ச உடனே நடுங்க ஆரம்பிச்சது தான், இன்னும் நிக்கல. ஜன்னியே வந்திடும் போல இருக்கு.
Comment by vijaygopalswami— ஜூலை 22, 2008 #
உங்கள் பதிவில் உள்ளவர்களுக்கு (கன்சர்வேட்டிவ்) தான் பின்னூட்டம் எழுதினேன்.
ஆனா குற்றம் உள்ள மனசு தான் குறுகுறுக்கும்ன்னு சொல்லுவாங்க.
இப்படி நடுங்குகிறதுக்கு என்ன தப்பு பண்ணுணீங்க தம்பி?
Comment by குந்தவை— ஜூலை 23, 2008 #
கோவாலு!
ரன்னிங் கமென்ட்ரிகளை உடுப்பா! க்ரியேடிவா நீயே எழுது! இன்னும் பிரகாசிப்பே!
Comment by லதானந்த்— ஜூலை 23, 2008 #
🙂
Comment by விக்னேஸ்வரன்— ஜூலை 30, 2008 #
சொல்ல வந்ததை மிக எளிதாகவும் ஆழமாகவும் சொல்லி இருக்கீங்க. நமது தலைமுறை இப்படி விவாதம் பண்ணுவதிலேயே காலத்தை விட்டு செயற்படுத்த மாட்டார்கள். நிச்சயமாக அடுத்த தலைமுறை இந்த தேவையற்ற சடங்குகளை துாக்கியெறிந்துவிடுவார்கள். அதற்கு ”எல்லோருக்கும்” கல்வியறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
ஏன் இப்படியென்கிற கேள்வியை முந்தய தலைமுறையிடம் கேட்காமல் தானே சுதந்தரமாக சிந்தித்து ”முடிவெடுக்க” வேண்டும். அதற்கு அந்த காலத்தில் பெற்றோராயிருக்கும் நாம் கண்டிப்பாக உதவ வேண்டும்.
அத்தோடு இச்சிக்கல் தீரும்.
Comment by சுபாஷ்— ஓகஸ்ட் 9, 2008 #
மிகப் பெரிய விஷயங்களைச் சொல்லுகிற திருக்குறளே இரண்டு அடிகள் தான். அதைவிட எளிதாக எதையும் சொல்லிவிட முடியாது. மனதுக்குத் தோன்றியதை எழுதினேன், அவ்வளவே. தங்களுடைய முதல் வருகை இது, தொடர்ந்து வந்து செல்லுங்கள். வாழ்த்துக்கள்…
Comment by vijaygopalswami— ஓகஸ்ட் 9, 2008 #
எனக்கும் இப்படி புரட்சிகரமாக எதாவது செய்ணும் என்று ஆசை தான். அப்புறம் எனக்கு கல்யாணமே ஆகாதோ என்று பயமாக இருக்கிறது. எதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கள்.
Comment by Varadharajan— செப்ரெம்பர் 5, 2008 #