பார்த்தேன், சிந்தித்தேன் – II
4:46 பிப இல் செப்ரெம்பர் 14, 2008 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 6 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: தலைமுறை இடைவெளி, ப. சிதம்பரம், பிரசவம், மருத்துவமணை
ஊருக்குத் திரும்பும் போது சென்னையில் கண்ட இரு விளம்பரங்கள் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. இப்போது முதல் விளம்பரத்தைப் பற்றிப் பார்ப்போம். கோயம்பேட்டிலிருந்து வடபழனி செல்லும் வழியில் ஒரு பிரம்மாண்டமான விளம்பரத் தட்டியில் (ப்ளெக்ஸ் போர்டில்) சில செய்தித்தாள் துண்டுகள் (நியூஸ் பேப்பர் கட்டிங்குகள்) இருந்தன. அவை ஐம்பத்தைந்து வயதில் இரட்டைக் குழந்தையைப் பிரசவித்த ஒரு பெண்மணியைப் பற்றிய ஒரு செய்தி. அந்தப் பெண்மணி சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமணையைப் பிரபலப் படுத்தத் தான் அந்த செய்தித்தாள் துண்டுகள் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.
அந்த மருத்துவமணையின் மீது நான் அவதூறு சுமத்துவதாகத் தவறாகக் கருத வாய்ப்பிருப்பதால் அந்த விளம்பரத்தின் புகைப்படத்தை இந்தப் பதிவில் போடவில்லை.
ஐம்பத்தைந்து வயதில் ஒரு பெண்மணி பிரசவிப்பதையோ, அவ்வாறு பிரசவிக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள விஞ்ஞானத்தையோ நான் குறை கூற வரவில்லை. ஆனால் அந்தக் குழந்தையின் இடத்திலிருந்து யோசித்துப் பாருங்கள் நண்பர்களே. இந்த நிகழ்ச்சி சில செய்திகளை சொல்லாமல் சொல்லும்.
குழந்தை பெற்றுக்கொள்வது என்பது ஒரு பொறுப்பை வலிந்து ஏற்றுக்கொள்ளும் செயல். அதனால் தான் முப்பது வயதைக் கடந்தும் பிள்ளைப் பேற்றைத் தள்ளிப் போடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சூழ்நிலைகள் இவ்வாறிருக்கையில், ஐம்பத்தைந்து வயதான ஒருவர் ஒன்றுக்கு இரண்டாக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறார் என்றால் எவ்வாறு அந்தப் பொறுப்பை சரியாக நிறைவேற்ற முடியும்?
நானறிந்த வரையில் இந்தியர்களின் ஆயுள் நீட்சி இன்னும் எழுபது வயதைக் கூடத் தொடவில்லை. அந்தப் பெண்மணி ஐம்பத்தைந்து வயதானவர். அப்படியென்றால் அவருடைய கணவர் அவரைவிடவும் மூத்தவராகத்தான் இருக்கக்கூடும். அதிகபட்சம் இவர்கள் இன்னொரு பதினைந்து ஆண்டுகள் வாழலாம். அந்தக் குழந்தைகள் தங்களது பதினைந்தாவது வயதுக்குப் பக்கமாக தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழக்கலாம். வளரிளம் பருவத்தில் இப்படி ஒரு இழப்பைச் சந்தித்தால் அந்தக் குழந்தைகளின் நிலை என்ன?
நண்பர்கள் கேட்கலாம், “இப்போது எழுபதுக்குப் பக்கமாக இருக்கும் இந்தியர்களின் ஆயுள் நீட்சி இன்னும் ஐந்தே வருடங்களில் எண்பதைத் தொடலாமல்லவா?” என்று. இந்தப் பெற்றோர்கள் விஷயத்தில் அப்படி நடந்தாலும் ஒரு பெரிய சிக்கல் காத்திருக்கிறது.
இருபத்தைந்து வயது வித்தியாசம் இருக்கிற பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமே இன்று ஏராளமான தலைமுறை இடைவேளை இருந்துவருகிறது. இவர்கள் விஷயத்தில் அந்த வயது வித்தியாசம் ஐம்பத்தைந்தைத் தொடுகிறதே! அப்படியென்றால் அவர்கள் எத்தனை பெரிய சவால்களைச் சந்திக்க வேண்டும்?
இவற்றை விட்டுத் தள்ளுங்கள். நடைமுறைச் சிக்கல்களுக்கு வருவோம். இந்தப் பிள்ளைகள் பள்ளி செல்லுகிற வயதில், மற்ற பிள்ளைகளைப் போல இயல்பாக இருக்க முடியுமா? நாம் அப்பா என்று அழைக்கிற ஒருவரை, நம்முடைய வகுப்புத் தோழர்கள் தாத்தா என்று அழைக்கிறார்களே என்று அந்தக் குழந்தைகள் நினைக்க மாட்டார்களா?
இந்த செயலை என்னவென்று சொல்லுவது? நான் சம்பாதித்து வாங்கிய வீடு, நான் சம்பாதித்து வாங்கிய தோட்டம், நான் சம்பாதித்து வாங்கிய வாகனம், என்று சொல்வது மாதிரி தான், இவன் அல்லது இவள் என் சொந்த ரத்தம், எனக்குப் பிறந்த மகன் அல்லது மகள் என்று சொல்லிக் கொள்வதும். இவர்களைப் பொறுத்த வரையில் கௌரவத்துக்காக வீட்டு வாசலில் நாலு வாகனத்தை நிறுத்தி வைப்பதும், இரண்டு குழந்தைகளைப் பெற்று விளையாட விடுவதும் ஒன்று தான்.
சரி விடுங்கள், அடுத்த விளம்பரத்துக்கு வருவோம். இந்த விளம்பரத்தை நல்லி சில்க்சிலிருந்து சௌந்திரபாண்டியனார் அங்காடி (அதாங்க நம்ம பாண்டி பஜார்) போகும் வழியில் பனகல் பூங்கா முனையில் பார்க்க நேர்ந்தது. அது ஒரு முப்பது அடி உயர விளம்பரம் (கட்-அவுட்). நமக்குப் நன்கு அறிமுகமான ஒரு காங்கிரஸ் பிரபலத்தின் பிறந்தநாள் விளம்பரமாம் அது. நம்ம சீனாதானா தோளில் கலப்பையுடன் நிற்கின்ற மாதிரி வரைகலையில் (கிராபிக்சில்) மாற்றியிருந்தனர். விளம்பரம் போதாதென்று கீழே ஒரு குத்து வசனம் (பஞ்ச் டயலாக்) வேறு. “அன்னமிட்ட கைகளின், உடுக்கை இழந்த கையே” என்று.
அதனடியில் சில காங்கிரஸ் புள்ளிகளின் பெயர்களும் கட்சிக் கொடியின் மூவர்ணத்தில் எழுதப்பட்டிருந்தது. எனக்குப் புரியாததெல்லாம் அவர்கள் சீனாதானாவைப் பாராட்டுகிறார்களா அல்லது திட்டுகிறார்களா? என்பது தான். ஒருவேளை இது தான் “வஞ்சப் புகழ்ச்சியோ”?
ஏற்கெனவே எனக்கும் காரைக்குடி வாசிகளுக்கும் முன்விரோதம் இருப்பதால் (பாக்குவெட்டி குறித்த பதிவு) இந்தப் படத்தையும் போடவில்லை. தயை கூர்ந்து மன்னிக்கவும்.
6 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
தம்பி வி.கோ…. திருமணம் ஆன உடனேயே “குழந்தை” குறித்த பதிவு !!! ம்ம்…. 😉
இருக்கட்டும், வாழ்வின் மிக உன்னதது குழந்தை வரம். குழந்தைகள் இல்லாத வாழ்வின் வெறுமை எளிதில் விளக்கக் கூடியதல்ல. 55 வயதில் குழந்தை பெறுவதில் சிக்கல்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனாலும் அந்த பெற்றோருடைய நீண்ட கண்ணீரின், ஏக்கத்தின், எதிர்பார்ப்பின் முற்றுப் புள்ளியாய் ஒரு மழலை கிடைத்திருப்பதில் ஒரு சமூகமே மகிழவேண்டும் தம்பி….
Comment by சேவியர்— செப்ரெம்பர் 15, 2008 #
பிழை நேர்ந்து விட்டது …
வாழ்வின் மிக உன்னதது => வாழ்வில் மிக உன்னதமானது
Comment by சேவியர்— செப்ரெம்பர் 15, 2008 #
இது மாதிரி லட்சத்தில் ஒரு தம்பதியினருக்கு நேரலாம். இவற்றையெல்லாம் பற்றி அவர்கள் யோசிக்காமல் இருந்திருப்பார்களா என்ன? அவர்களுக்கு என்ன பிரச்சினையோ, பாவம். அதிலும், இவ்வாறு விள்ம்பரம் தேடும் மருத்துவமனைகள் மிக மலிந்து விட்டன என்பதே வருத்தத்திற்குரியது.
Comment by கடுகு— செப்ரெம்பர் 15, 2008 #
விஜய கோபலசாமி உங்கள் எண்ணம் புரிகிறது. மிகவும் பெற்றொருக்கும் ,பிள்ளைக்கும் கஷ்டம்தான். ஸ்கேனில் இரட்டைக்குழந்தை என்று தெரிந்து அதை வளர்க்கும் கடினத்தைப் புரிந்து கொண்டிருப்பார்கள். அனால் அதையும் மீறி அவர்கள் பெற்றுக்கொள்ளும் போது கொஞ்சம் சிந்திக்கத் தோன்றுகிறதே?என்ன நிர்பந்தமோ?தத்து எடுத்துக்கொள்வதை சரியான முறையில் அணுக முடியாமை காரணமாக இருக்கலாம். பிரச்சினைக்குள்ளிருப்பவர்களை பிரச்சினைக்கு வெளியே இருந்து விமரிசிக்கிறோம். அந்தப் போஸ்டர் என்னையும் மிகவும் சிந்திக்க வைத்தது என்னவோ உண்மைதான்.
சிந்தனையுடன்
கமலா
Comment by kalyanakamala— செப்ரெம்பர் 15, 2008 #
வருகை தந்த அனைவருக்கும் நன்றி. மிகவும் தீவிரமான ஒரு விஷயத்தைச் சொல்லுகிறோமே என்று எண்ணியதால் கடைசியில் நகைச்சுவையாகவும் ஒரு விஷயத்தைச் சேர்த்திருந்தேன். அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
அந்தத் தம்பதியரின் மீது எனக்கு எந்தக் கோபமும் கிடையாது. ஆனால் அந்தக் குழந்தைகளை நினைத்துப் பார்த்தபோது தோண்றியவை தான் நான் கூறியிருப்பவை. சம்பந்தப்பட்ட மருத்துவமணை இதை வர்த்தக நோக்கில் மக்களிடையே பரவலாக்க நினைப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த வர்த்தக நோக்கம் அடுத்த கட்டத்தை அடையும் போது குழந்தைகளைப் பாலிதீன் பாக்கெட்களில் வைத்து விற்பணை செய்வது கூட நடக்கலாம். 😦
Comment by vijaygopalswami— செப்ரெம்பர் 16, 2008 #
ஆமா பாக்கு வெட்டி ஆபத்து….
Comment by விக்னேஷ்வரன்— செப்ரெம்பர் 19, 2008 #