சினிமா சினிமா…. அன்பு அழைப்புகளுக்கு இணங்கி….

11:33 பிப இல் ஒக்ரோபர் 21, 2008 | பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: ,

சகோதரி உமா மற்றும் என்னை அன்போடு சித்தப்பா என்று அழைக்கும் அன்பு மகன் விக்னேஷ் ஆகியோரின் அழைப்பை ஏற்று சினிமா சினிமா… தொடர் பதிவு எழுதுவதில் மிகுந்த மகிழ்ச்சி. முதலில் அழைப்பு வந்தது சகோதரி உமா அவர்களிடமிருந்து. அதனால் நான் எழுதிவிட்டு தம்பி விக்னேஷை எழுத அழைக்கலாம் என்றிருந்தேன். ஆனால் அவன் முந்திக்கொண்டான். இருந்தாலும் என்னை அழைத்தமைக்கு இருவருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேட்டி எடுக்கின்ற பாணியில் இருக்கின்ற சினிமா சினிமா… எனக்குக் கொஞ்சம் பயத்தைத் தருவதால் கட்டுரை வடிவத்தில் எழுதுகிறேன். எனது விருப்பத்திற்காகவே இப்படி எழுதுகிறேன். மற்றபடி எனக்குப் பிறகு எழுத இருக்கிறவர்களும் இப்படியே எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவரவர் விருப்பம் போல் எழுதுக. நன்றி. இனி சினிமா சினிமா…

தொலைக்காட்சி அறிமுகமாகாத காலத்தில் என் பாட்டி திருமதி கிருஷ்னவேணி அவர்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமா மட்டும் தான். கைக்குழந்தை வயதிலேயே பல படங்களுக்கு அவர்கள் என்னைத் தூக்கிச் சென்றிருந்தாலும் நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் படம் விசு நடிப்பில் இயக்கத்தில் வந்த “வீடு, மனைவி, மக்கள்”. ஆறு அல்லது ஏழு வயதில் பார்த்த அந்தப் படத்தின் நகைச்சுவையையோ அல்லது படத்தில் இருக்கின்ற நுன்மையான விஷயங்களையோ ரசிக்கும் அளவுக்கு எனக்கு ரசனை வளரவில்லை. ஆனாலும், பிற்காலங்களில் இந்தப் படத்தைப் பார்த்தபோதெல்லாம் மிகவும் ரசித்திருக்கிறேன்.

பொதுவாகவே திரையரங்குகளுக்குச் செல்வதை நான் பெரிதும் விரும்புவதில்லை. இருந்தாலும் என் திருமதியார் கிரிஜா மற்றும் அவருடைய சகோதர சகோதரிகளின் அழைப்பை ஏற்று “ஜெயம் கொண்டான்” திரைப்படத்திற்குச் சென்றேன்(றோம்). கும்பகோணத்தில் பரணிகா தியேட்டர் என்ற சுமாரான தியேட்டரில் பார்த்தோம். மனதுக்குப் பிடித்தவர்களுடன் பார்க்கும்போது சுமாரன இடம் கூட சொர்கம் தானே! இங்கிதம் தெரிந்த கொளுந்தியாள்கள் இருவர் எங்களுக்கு மட்டும் பால்கனியில் டிக்கெட் எடுத்திருந்தது குறிப்பிட வேண்டிய செய்தி. ஹி ஹி…

என்னை மிகவும் பாதித்தது ஒரே ஒரு படமல்ல, ஒரு சிறிய பட்டியலே இருக்கிறது. ஆனாலும் அவற்றுள் அதி முக்கியமானவை அஞ்சலி மற்றும் வெயில். என்னுடைய இளம் வயதில், பிறந்து ஒரு வயது கூட நிரம்பாத என் தங்கையை (சித்தப்பா மகள்) இயற்கை திரும்பி எடுத்துக் கொண்டதை அஞ்சலி படம் இன்றளவும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. என் இன்னொரு சித்தப்பாவின் முகச்சாயல் சற்றேரக் குறைய நடிகர் பசுபதியைப் போலவே இருக்கும். என் சித்தப்பாவின் மறைவுக்கு முன் எனக்கும் அவருக்கும் சிறிய மனஸ்தாபம் இருந்தது. அதற்கு மன்னிப்பு கேட்கும் சந்தர்பத்தைக் கூட வழங்காமல் இயற்கை அவரை அழைத்துக் கொண்டது. அவருடைய மறைவுக்குச் சில ஆண்டுகள் கழித்து வெளிவந்த படமாக இருந்தாலும், பசுபதியின் முகச் சாயலும் படத்தின் கதையமைப்பும் எங்களிடையே நடந்த சம்பவங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. திரையரங்கில் இல்லாமல் பார்த்த கடைசிப் படமும் அது தான். கடந்த ஞாயிறு அன்று கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

மிகவும் பாதித்த அரசியல் சார்ந்த திரைப்படம் என்று சொல்வதானால் “இனியொரு சுதந்திரம்” படத்தைச் சொல்லலாம். நடிகர் சிவகுமார் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகியாக நடித்திருப்பார். காந்தியவாதியான அவர் கடைசியில் தன் மகளின் வாழ்வைச் சிதைத்த மாவட்ட ஆட்சியரை சுட்டுக் கொல்லுகிற காட்சியுடன் படம் நிறைவடையும். மனதைக் கணக்கச் செய்த முடிவு. இந்த வரிசையில் சேரன் இயக்கிய தேசிய கீதம், மணிரத்தினத்தின் இருவர் (பல விமர்சனங்களுடன் ரசித்தது) போன்ற பல படங்களைச் சொல்லலாம். இவையல்லாமல் சார்லி சாப்ளினின் “தி கிரேட் டிக்டேட்டர்” படத்தையும் இந்த வரிசையில் சொல்லலாம். ஒரு சர்வாதிகாரியாக அவர் உலக உருண்டையைத் தூக்கிப் போட்டு விளையாடும் காட்சி மிக அற்புதமான சாப்ளினிஸ்ட்டிக் டச்.

ஹே ராம் திரைப்படத்தைக் குறித்து எனக்கு எதிரிடையான கருத்துக்கள் இருந்தாலும் அதில் பயன்படுத்தப்பட்ட “பேஜ் எ மினிட்” என்ற உத்தி என்னை மிகவும் ஈர்த்தது. திரைக்கதை எழுதப்பட்ட ஒரு பக்கம் படத்தில் ஒரு நிமிடமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும். அதன் தாக்கத்தில் கல்லூரி ஆண்டு விழாவில் அதே உத்தியைப் பயன்படுத்தி ஒரு நகைச்சுவை நாடகத்தையும் இயக்கி நடித்தேன். பொன்னியின் செல்வனை அனிமேஷனில் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் மனது முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறது. வாய்ப்பு கிடைக்கிறதா பார்ப்போம்!

திரைப்படங்களைக் குறித்து ஓரளவுக்கு ஈடுபாடு இருந்தாலும் அது சார்ந்த சஞ்சிகைகளைத் தேடி வாசிக்கும் பழக்கம் இருந்ததில்லை. ஆனாலும் அந்த இடத்தை நிறைவு செய்யும் வகையில் இன்றைய தொலைக்காட்சி அலைவரிசைகள் அனைத்திலும் ஏதாவது நிகழ்ச்சிகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. நான் வசிக்கும் செகந்திராபாதில் ஒரு கடையில் தமிழ் புத்தகங்கள் இருக்கிறதா என்று விசாரித்த போது கடைக்காரர் எடுத்துப் போட்ட இரண்டு புத்தகங்கள் என்னைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தின. அட்டைப் படத்தில் பாபிலோனாவும் ஷகிலாவும் இருந்தனர். உள்ளே ஒரு இடத்திலும் படங்களே இல்லை. பத்தி பத்தியாகக் கதைகள். நீங்களே ஊகித்திருப்பீர்கள். அவற்றின் பெயரை வேறு சொல்ல வேண்டுமா என்ன?

திரைப்படப் பாடல்களைப் பொறுத்த அளவில் எனது விருப்பங்கள் வன்பாடல்கள், மென்பாடல்கள், பழையவை, புதியவை என்று அனைத்தும் கலந்த கலவையாகவே இருந்து வந்திருக்கிறது. இளையராஜாவுக்கு என் இதயத்தில் ஒரு தங்கச் சிம்மாசனமே இருக்கிறது. “வீடு” படத்தில் வார்த்தைகளே இல்லாமல் ஒரு பின்னனி இசையிலேயே அனைத்து உணர்வுகளையும் வரவழைத்துவிடுவார். இன்று வரை அதற்கு இணையாக இன்னொன்றைக் கேட்டதில்லை. வைரமுத்துவின் கவிதைகள் மீது எனக்கு எப்போதுமே ஈர்ப்பும் ஈடுபாடும் உண்டு. அவருடைய கவிதைகளைக் காயப்படுத்தாமல் இசையமைக்கின்ற பரத்வாஜ் என்னுடைய விருப்பத்திற்குரிய இசையமைப்பாளர்களில் ஒருவர்.

பிறமொழிப்படங்களில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும், மொழிகளைக் கடந்த, மொழிகளற்ற சாப்ளினின் படங்களில் அதீத ஈடுபாடு உண்டு. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியானவை “கோல்டு ரஷ்”, “தி கிட்”, “சிட்டி லைட்ஸ்” போன்றவை. ஒரு கலெக்‌ஷனே வைத்திருக்கிறேன், யார் கேட்டாலும் கொடுப்பதில்லை என்ற வெறியுடன். இதல்லாமல் தற்போது தெலுங்கு மொழித் திரைப்படங்களையும் ஆர்வமாகப் பார்த்து வருகிறேன்.

தமிழ் சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது. நண்பர் ஒருவர் ஒளிப்பதிவாளராக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அவருடைய முயற்சிகள் வெற்றியடையும் போது நேரடித் தொடர்பு ஏற்பட்டுவிடும். ஹி ஹி…

வாழ்க்கையை ஒட்டிய சினிமாக்களை கொடுத்தால் தமிழ் சினிமா நீண்டகாலம் பிழைத்திருக்கும். நம்பிக்கை தரும் வகையில் காதல், வெயில், பருத்தி வீரன், மொழி போன்ற படங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. இந்த முயற்சிகள் தொடர வேண்டும்.

சினிமா என்பது நம் மக்களின் வாழ்வில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டாலும் அதற்கும் ஒரு விடுமுறை வந்தால் நன்றாகத்தான் இருக்கும். அதுவும் ஒரு வருடத்துக்கு… கவனிக்கப் படாத எத்தனையோ கலைகளின் மீது மக்களின் கவனம் திரும்ப அந்த ஒரு வருடம் நிச்சயம் வழி செய்யும்.

சரி, தொடர்ந்து எழுத நான் யாரையாவது அழைத்தாக வேண்டும். விக்னேஷின் அழைப்பை ஏற்று நான் எழுதிவிட்டதால் திரு. சேவியர் அவர்கள் என் அழைப்பையே ஏற்கவேண்டும் என்று அன்பான கண்டிப்புடன் அழைக்கிறேன். நன்றி.

Advertisements

5 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

 1. சூப்பராக இருக்கிறது… ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க… ஹே ராம் படத்தின் அந்த ஒரு பக்க கதை எது என்று சொஞ்சம் சொல்லுங்களேன்… அது புரியவில்லை… சேவியர் அண்ணனை நானும் அழைத்திருக்கிறேன்… :))

 2. நன்றாக உள்ளது. ரசித்ததை பகிர்வது மிக நன்று.

  – சாந்தி –

 3. விஜய்,

  ‘வீடு’ படத்திற்கு இளையராஜா தனியாக ஏதும் இசை அமைக்கவில்லை. இளையராஜாவின் How to name it / Nothing but wind என்கிற இசை ஆல்பங்களில் ஏதோ ஒன்றைத்தான் படம் முழுவதிற்கும் பின்னணி இசையாக இயக்குநர் பாலுமகேந்திரா பயன்படுத்திக் கொண்டார். இப்போதும் கூட பல குறும்படங்களுக்கு பின்னணி இசையாக அந்த ஆல்பங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

  அன்புடன்,
  பாண்டியன்

 4. என்னை மற்ந்துட்டீங்களே.. நண்பா..

 5. தகவலுக்கு நன்றி பாண்டியன். படம் முதலில் வந்ததா அல்லது அந்தத் தொகுப்பு முதலில் வந்ததா என்று தெரியாததால் வந்த குழப்பம் இது. நன்றி.

  கேபிளண்னே, ஒங்கள மறக்க முடியுமா….

  ஆவக்காய் பிரியாணி படத்தப் பாத்துட்டு வந்து உங்களுக்கு போன் பண்றேன்…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: