என்னமோ போடா மாதவா… 22/02/2009
11:15 முப இல் பிப்ரவரி 25, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: கருணாநிதி, திமுக, தீக்குளிப்பு, தேவகௌடா, நாட்டுடைமை, ராஜபக்ஷே
ஈரான் எழுத்தாளரும் “சாத்தானின் வேதங்கள்” நூலை எழுதியவருமான சல்மான் ருஷ்டி மீது ஃபத்வா அறிவித்தார் அந்நாட்டு இஸ்லாமியத் தலைவர் அயத்துல்லா கொமைனி. அதே போல பல்லடத்தில் இந்து மக்கள் கட்சி ராஜபக்ஷேவின் தலைக்கு விலை வைத்து ஃபத்வா அறிவித்திருக்கிறது. கொஞ்சம் காஸ்ட்லியான தலைதான், விலை ஏழரை கோடி ரூபாய். ஏழரை கோடியை ஒவ்வொரு தமிழனும் தலைக்கு ஒரு ரூபாய் கொடுத்து திரட்ட வேண்டுமாம். தலைக்கு ஒரு ரூபாய் கொடுப்பதல்ல இங்கே பிரச்சனை, இந்த இயக்கம் எதற்காக இந்தியாவை இப்பிரச்சனையில் தலையிடச் சொல்கிறது என்று பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. கைவிட்டுப் போன கச்சத்தீவைப் போலவே இலங்கையும் இந்தியாவின் ஒரு அங்கம் என்ற அகண்டபாரத இந்துத்துவக் கனவின் வெளிப்பாடாகவே விளங்குகிறது இந்த ஃபத்வா. இதற்காக முப்பது பேர் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மீண்டும் மீண்டும் வளருகிற முடியைக் காணிக்கையாகக் (மொட்டை என்று சொன்னால் எனக்கும் ஃபத்வா விதித்துவிடுவார்களோ என்று பயமாயிருக்கிறது) கொடுத்திருக்கிறார்களாம். ஏழரையின் பாதிப்பு குறைவாக இருக்க வேண்டும் என்று திருமதி ராஜபக்ஷே சமீபத்தில் தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் வழிபாடு நடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் தீக்குளிப்புகள் பரவலான கவனத்தைப் பெற்றாலும், மக்களை சலிப்படையவே வைக்கின்றன. வருந்தத்தக்க நிகழ்வாகவே இருந்தாலும், முத்துக்குமரனின் மரணம் ஈழப் பிரச்சனையின் பக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பிரச்சனையின் தீவிரத்தை அனைவருக்கும் உணர்த்தியது. ஆனால், தொடர்ந்து நடைபெறும் தீக்குளிப்புகளும் தீக்குளிப்பு முயற்ச்சிகளும் போராட்டத்தை நீர்த்துப் போகவே செய்யும். இன்று எத்தனை பேர் பற்றவைத்துக்கொண்டார்கள் என்று தொலைக்காட்சி செய்திகளில் தேட நேரிடுகிற அபாயம் இருக்கிறது. நேற்றைய தினம் தீக்குளித்த திமுக தொண்டரின் செயல் ஈழத் தமிழர் மீதான அக்கறையை விட கலைஞர் மீதான களங்கத்தைப் போக்கும் முயற்சியாகவே சித்தரிக்கப்படும். நேற்றைய மரணம் திமுக-விலும் ஒருவர் தீக்குளித்துள்ளார் என்று சொல்லிக்கொள்ள வேண்டுமானால் பயன்படுமே ஒழிய ஈழ விடுதலையில் நம்முடைய நோக்கம் நிறைவேற ஒருபோதும் உதவாது.
ஹெச்.டி.தேவேகௌடா, ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். பொது நிகழ்வுகளின்போது மேடைகளிலேயே தூங்கக்கூடியவர் என்று பெயரெடுத்தவர். வெகு சமீபத்தில் தூக்கம் கலைந்து எழுந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் மூண்றாவது அணியில்தான் இருக்கிறது” என்பதே அந்த அறிக்கையின் சாரம். மீண்டும் கண்விழித்து ஜெயலலிதா அம்மையார் காங்கிரசுக்கு கூட்டணி அழைப்பு விடுத்ததை அறிந்தால் மாரடைப்பில் மண்டையப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர் எழுந்த உடன் யாரவது பக்குவமாகச் சொல்லி சாந்தப்படுத்துங்கள்.
கடந்த வாரம் சில எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதில் ஒருசிலரின் குடும்பத்தார் தெரிவித்த எதிர்ப்பின் பேரில் அவர்களுடைய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு சுந்தரராமசாமியைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அவருடைய எழுத்துக்களுடனும் பரிச்சயம் கிடையாது. ஆதலால் அவரைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.
எனக்குத் தெரிந்து கண்ணதாசனின் படைப்புகளில் இன்றும் ஓரளவுக்கு நன்றாக விற்பனையாவது எது என்றால் “அர்த்தமுள்ள இந்துமதம்” ஒன்றுதான். தகப்பனை மட்டுமே நம்பினால் கரையேற முடியாது என்று காந்தி கண்ணதாசனுக்கே தெரியும். அதனால் தான் வெளிநாட்டு சுயமுன்னேற்ற நூலாசிரியர்களின் நூல்களுக்கு மொழிபெயர்ப்பு வெளியிட்டு வருகிறார். அவரது எதிர்ப்பை ஏற்று கண்ணதாசன் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படாதது அரசுக்கு லாபமே. கண்ணதாசன் படைப்புகள் அடுத்த தலைமுறையை நோக்கிப் பயணிப்பது சாத்தியமில்லை. இன்னும் இருபது வருடங்கள் சென்று கண்ணதாசன் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கலாமா என்று பரிசீலிக்கக் கூட ஆளிருக்காது. அந்த வகையில் காந்தி கண்ணதாசனுக்கு இழப்புதான். (கண்ணதாசனைப் பற்றி எழுத உனக்கென்ன அருகதை இருக்கிறது என்று பின்னூட்ட விரும்புகிறவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அடுத்த தலைமுறை கண்ணதாசனின் எழுத்துக்களை விரும்புமா என்று மனசாட்சியோடு யோசித்துப் பாருங்கள். அதற்குப் பிறகு என்னைத் திட்டி பின்னூட்டம் எழுதலாம்.) கண்ணதாசனை அவரது எழுத்துக்களுக்காக ரசிபவர்களை விடவும் பாடல்களுக்காக ரசிப்பவர்களே அதிகம். அவர்களுக்கெல்லாம் பண்பலை வானொலிகளே போதுமானது.
தமிழில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆய்வுப்படிப்பு என்று அனைத்திற்கும் பயன்படுபவை புலியூர் கேசிகன் அவர்களின் எழுத்துக்கள். அவை நாட்டுடைமை ஆக்கப்பட்டது, உள்ளபடியே பாராட்டப்பட வேண்டிய செய்தி. இதனால் தமிழை மேற்கல்விக்காகத் தேர்ந்தெடுப்பவர்கள் மலிவு விலையில் புலியூர் கேசிகனாரின் நூல்களை வாங்க ஏதுவாகும். தமிழ்க் கல்வி பயிலும் மாணவர் சமுதாயம் இந்த ஒரு காரணத்துக்காக அரசுக்குத் தாராளமாக தங்களது நன்றியைத் தெரிவிக்கலாம்.
எனக்கு ஒரு சந்தேகம் கலைஞர் கருணாநிதியின் நூல்கள் இன்றளவும் பரவலாகப் பலரால் வாசிக்கப்படுபவை. அவற்றுள் வெகு சில நூல்களே முப்பது நாற்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. அவருடைய மாஸ்டர் பீஸ்களான நெஞ்சுக்கு நீதி, பாயும்புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம் உள்ளிட்ட எந்த நூலும் மலிவாகக் கிடைப்பதாகத் தெரியவில்லை. நூற்றைம்பது ரூபாய் முதல் ஐந்நூறு ரூபாய் வரை விலை வேறுபடுகிறது. ஆகவே பகுத்தறிவாளர்களே, கலைஞரின் எழுத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று கோரிக்கை வையுங்கள். பயந்து போய், நம்மை விட்டால் போதும் என்று பெரியார் நூல்களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கினாலும் ஆக்கிவிடுவார்!
[பதிவு எழுத “விண்டோஸ் லைவ் ரைட்டர்” கருவியைப் பயன்படுத்துவேன். அதில் இருந்த கோளாறு காரணமாக நேற்று முந்தினம் எழுதிய பதிவை உடனே பதிப்பிக்க முடியவில்லை. அதனால் “ரெண்டு நாள் லேட்டுடா மாதவா” என்று கூட சொல்லலாம். ஸ்லம்டாக் ஆஸ்கர் விருதுகள் குறித்து வேறொரு பதிவில் எழுதுகிறேன்.]
4 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
நீங்கள் எழுதியுள்ள பல விஷயங்களோடு ஒத்துப் போகிறேன்.
Comment by ஜ்யோவ்ராம் சுந்தர்— பிப்ரவரி 25, 2009 #
Good Post
Comment by Senthazal Ravi— பிப்ரவரி 25, 2009 #
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – http://www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
Comment by valaipookkal— பிப்ரவரி 25, 2009 #
ஜ்யோவ்ஸ், பல விஷயத்துல ஒத்துப்போறது இருக்கட்டும். ஒத்துப் போகாத அந்த சில விஷயங்கள் என்னன்னு சொல்லிட்டுப் போகலாம்ல?
செந்தழல் ரவி, பாராட்டுக்கு நன்றி…
Comment by vijaygopalswami— பிப்ரவரி 26, 2009 #