என்ன கூத்துடா இது!

3:11 முப இல் மார்ச் 29, 2009 | விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

image எர்த் ஹவர் என்று ஒரு விஷயம் இருப்பதே கடந்த முறை வங்கியிலிருந்து அறிக்கை வந்தபோதுதான் தெரியவந்தது. எங்கள் வங்கி “எர்த் ஹவர்” ஐ ஆதரிக்கிறது என்று பெரிய விளம்பரம். அந்த அறிக்கையின் பின்புறத்தில், உங்கள் இல்லங்களில் மார்ச் மாதம் 28ம் தேதியன்று இரவு 8:30 மணி முதல் 9:30 வரை மின் விளக்குகளை அணைத்து விடுங்கள் என்று சொல்லியிருந்தது. எனக்கோ குழப்பம், மின் விளக்குகளை மட்டும் அணைப்பதா அல்லது எந்த மின்சாரக் கருவிகளையும் பயன்படுத்தாமல் இருப்பதா என்று?

சன் தொலைக்காட்சியின் செய்தியிலும் இத்தகவல் அறிவிக்கப்பட்டது. ஆனால் விளக்குகள் மட்டுமா அல்லது அனைத்து மின் கருவிகளுமா என்று அதிலும் கூறவில்லை. அதிலும் ஒரு ஐந்து நட்சத்திர உணவகத்தின் நிர்வாகி “நாங்கள் இந்தத் திட்டத்தை ஆதரிக்கிறோம். அந்த ஒரு மணிநேரமும் எங்கள் உணவகம், மது அருந்துமிடம், சமையல் கூடம் எங்குமே மின் விளக்குகள் பயன்படுத்தப் போவதில்லை” என்றார். இத்துடன் நிறுத்தியிருந்தால் நல்லது. மேலும் ஒரு வாக்கியத்தையும் சொன்னார். “மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவருந்துவது ரொமாண்டிக்காக இருக்கும்”. இது போன்ற பண்ணாடைகள் எதைச் செய்தாலும் தங்களுக்கென்று அதில் ஒரு ஆதாயம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போலிருக்கிறது.

பல பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய அலுவலகங்கள் திடீர் சூழலியல் ஆதரவாளர்களாக மாறியிருக்கிறன. மதிமாறன் அவர்கள் ஒரு கட்டுரையிலே கார்ல் மார்க்ஸ் கூறியதை மேற்கோள் காட்டியிருப்பார் “முதலாளித்துவம் தனக்கு ஆதாயம் தரும் செயல் என்று தெரிந்தால் தனக்கான கல்லறைக் குழியைத் தானே தோண்டிக் கொள்ளும்” என்று. அப்படித்தான் இந்த நிறுவனங்களும் தங்களது சிக்கனத்தை சூழலியல் ஆதரவு என்று விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. நண்பன் ஒருவனின் அலுவலகத்தில் வழக்கமாக கைதுடைக்கும் காகிதம் வைக்குமிடத்தில் காகிதங்கள் இல்லை. மாறாக அங்கே ஒரு சிறிய சுவரொட்டி. “வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துவோம். காகிதத்துக்குப் பதிலாக சூடான காற்றை உமிழும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவீர்” என்று அதில் அச்சிட்டிருந்ததாம்.

வழக்கமாக கழிப்பறையைப் பயன்படுத்திவிட்டு கைகளை மட்டும் கழுவிக் கொள்பவர்களுக்குப் பிரச்சனையில்லை. என் நண்பனோ சட்டை, கால்சராய், காலுறை இவற்றுக்கு வெளியே தெரிகிற எல்லா இடங்களையும் கழுவிக் கொள்பவன். அதாவது கைகளுடன் சேர்த்து முகத்தையும் கழுவிக் கொள்பவன். அன்றைக்கு முகத்தைக் கழுவிய பிறகுதான் சுவரொட்டியைப் பார்த்திருக்கிறான். மூ… மன்னிக்கவும், ஆத்திரத்தில் முகம் சிவந்துவிட்டது. ஈரக் கையுடன் தன் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து அதே சுவரொட்டியில் “மின்சாரமும் ஒரு வளம்தான் என்று சொல்லி வெகு விரைவில் இந்த சூடான-காற்றடிக்கும் இயந்திரத்தையும் நிறுத்திவிடாதீர்கள். பின்குறிப்பு: முகம் கழுவிய பிறகு இந்த இயந்திரத்தினுள் என்னுடைய முகத்தை நுழைக்க முடியவில்லை.” என்று எழுதிவிட்டு வந்தான். அவனது பெயரிலிப் பின்னூட்டத்திற்குப் பிறகு காகிதங்களும் வைக்கப்படுகின்றனவாம்.

இன்னொரு நண்பனின் அலுவலகத்தில் இரவு நேரத்தில் குளிர்சாதனத்தை முழுவதுமாக நிறுத்திவிடுவார்களாம். அவனுடைய குழுவில் வெகு சிலர் மட்டுமே இரவுப் பணியில் இருப்பதால் மொத்தத் தளத்துக்கும் குளிர்சாதனத்தை இயக்க முடியாதாம். கொடுமை என்னவென்றால் அவன் பணிபுரியும் தளம் தரை மட்டத்துக்கு அடியில் இருக்கிறது. புழுங்கி சாக வேண்டியதுதான்.

சரி, விட்ட இடத்துக்கே வருவோம். இந்த “எர்த் ஹவர்” செய்தியைக் கூறிய சன் தொலைக்காட்சி 8:30 முதல் 9:30 மணி வரை ஏன் ஒளிபரப்பை நிறுத்தவில்லை (கேள்வி அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் பொருந்தும்)? அந்த நேரம் நீ என்னடா செய்தாய் என்று கேட்க இருப்பவர்களே, பொறுமை! எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு டிவியை மட்டும் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் விளக்குகளை மட்டும் தான் அணைக்கச் சொல்லியிருந்தனர். தாகம் எடுத்தபோது குளிர்சாதனப் பெட்டியைக் கூடத் திறக்கவில்லை, அதற்குள்ளும் ஒரு விளக்கெரியுமே. 9:30 ஆன பிறகு தான் தண்ணீர் குடித்தேன்.

“எர்த் ஹவர்” எல்லாம் எடிசன் நினைவைப் போற்றுவதற்கு மட்டுமே மின்வெட்டு அனுசரிக்கும் நாடுகளுக்குச் சரி. பற்றாக் குறையால் நாள்தோறும் இரண்டு முதல் இருபது மணிநேரம் மின்வெட்டைச் சகித்துக் கொள்ளும் இந்தியாவில் எதற்கு “எர்த் ஹவர்”? அதுவும் இரவு 8:30 முதல் 9:30 வரை (பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் வேறு நடைபெறுகின்றன).

11 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

 1. பற்றாக் குறையால் நாள்தோறும் இரண்டு முதல் இருபது மணிநேரம் மின்வெட்டைச் சகித்துக் கொள்ளும் இந்தியாவில் எதற்கு “எர்த் ஹவர்”? அதுவும் இரவு 8:00 முதல் 8:30 வரை (பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் வேறு நடைபெறுகின்றன)

  🙂

 2. உலகிலேயே எர்த் அவரை முதன் முதலாய் அமல் படுத்தியவர் ந்ம் மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிதான் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொண்டு, வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை, எங்களுக்கு அளீத்து இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே இருந்த எர்த அவர் சிஸ்டத்தை இந்தியா முழுவதும் செய்ல்படுத்த ஆணையிடுவோம் என்று தெரிவித்து கொள்கிறோம்.

 3. என்ன விஜய்.. சென்னை வரும் போது போன் செய்கிறேன் என்றீர்களே..? வந்திட்டு போயிட்டீங்களா>>?

 4. தலைப்பை பார்த்து ஏதோ மருத்துவர் அண்ணன் புர்ச்சி தங்கச்சி பற்றிய பதிவுன்னு நெனைச்சா…

  அது சரி உங்களோட கோவம் மிகவும் நியாயமானதே…ஆற்காட்டாரை கிண்டலடிப்பதற்காகவே சன் தொ.கா இந்த செய்திய ஒளிபரப்பியிருக்குமோ. நம்மூருக்கு இதெல்லாம் எதுக்கு.. நான் உங்க பக்கம்

  நித்தில்

 5. //“எர்த் ஹவர்” எல்லாம் எடிசன் நினைவைப் போற்றுவதற்கு மட்டுமே மின்வெட்டு அனுசரிக்கும் நாடுகளுக்குச் சரி. பற்றாக் குறையால் நாள்தோறும் இரண்டு முதல் இருபது மணிநேரம் மின்வெட்டைச் சகித்துக் கொள்ளும் இந்தியாவில் எதற்கு “எர்த் ஹவர்”?//

  வழிமொழிகிறேன்.

  மின்சாரத்தை சேமிக்க,உலக வெப்பமாகுதலை தடுக்க வேறு பல வழிகள் உள்ளன.உதாரணத்திற்கு… தேவையில்லாமல் ஒளிரும் விளக்குகள்,ஓடும் மின்விசிறிகள் போன்றவற்றை அணைப்பதே இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் போதுமானது. மற்றபடி நீங்கள் கூறியுள்ளபடி நமது மின்சார வாரியமே எர்த் ஹவரை கவனித்துக் கொள்ளும்

 6. வணக்கம் விஜய்,
  நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையும் உண்மை. மேல்மட்டத்தில் இருக்கும் எவனோ ஒருவன் சூழலியல் பாதுகாப்பு, புவிவெப்பமயமாதலை தடுத்து நிறுத்தும் முயற்சி என்ற பெயரில் ஜிகினாத்தனமாக இப்படியான விஷயங்களை முன்மொழிகிறார். சூழலியல் பாதுகாப்பு குறித்து எந்த புரிதலுமே இல்லாத நம்மவர்கள் அப்படியே ஈ அடிச்சான் காப்பி அடிக்கிறார்கள். ஊடகத்துறையில் இருப்பதால் இதை அழுத்தமாகச் சொல்கிறேன்.
  சமீபத்தில் என்டிடீவி “கிரீனதான்” என்ற பெயரில் ஒரு கேம்பைன் நடத்தியது.ப்ரீத்தி ஜிந்தா அதற்கு சிறப்புத்தூதர். பாடல் காம்போஸ் செய்து பெரிய அளவில் விளம்பரம். அந்த பாடல் காட்சியில் ஒரு சிறுமி மரம் நடுவதன் அவசியத்தைச் சொல்ல ரொம்ப பிரயத்தனப்பட்டு பிடுங்கி எறியப்படும் ஒரு செடியை நடுவதாக காட்டுவார்கள். அது அழகுக்குக்காக வளர்க்கப்படும் ஒரு குரோட்டன்ஸ் செடி. நம் மண்ணுக்கு தொடர்பே இல்லாத இறக்குமதியான இந்த செடிகளை நடுவதற்கு நிலத்தை அப்படியே தரிசாக வைத்திருக்கலாம் என்பதுதான் சூழலியல்வாதிகளின் கருத்து.இதை தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்கள். இதைக்கூட உணராமல் பொத்தாம் பொதுவாக ஸ்பான்சர் கிடைக்கிறது,செய்கிறோம் என்பவர்களை சூழலியல்வாதிகள் என்பதா? வியாபாரிகள் என்பதா?

 7. @ யாத்திரிகன்: என்னண்ணே சும்மா சிரிச்சிட்டா போதுமா? கருத்து? 🙂

  @ கேபிள் சங்கர்: ஆமாண்ணே, இதையே ஒரு சாதனையா சொல்லி ஓட்டு கேட்டாலும் கேப்பாங்க… சந்திக்க முடியாமைக்கு மன்னிக்கவும். தொலைபேசியில் விவரமாக பேசுவோம்.

  @ நித்தில்: வாங்க நித்தில். பூக்கடைக்கும் சாக்கடைக்கும் விளம்பரம் தேவையில்லை. சாக்கடைகளின் மகாசங்கமத்தைப் பற்றி நாம் ஏன் விளம்பரம் செய்ய வேண்டும் என்றுதான் அதைக் குறித்து எதுவும் எழுதவில்லை.

  @ எட்வின்: வருக வருக. கடந்த ஆண்டு பதினைந்து நாட்களுக்கும் மேல் ஊரில் இருக்க நேர்ந்தது. அப்போது மின்வெட்டின் மிகக் கடுமையான பாதிப்புகளைக் கண்கூடாகக் காண நேர்ந்தது. அந்த விஷயத்தில் ஆந்திர மாநிலம் பரவாயில்லை. அறிவிக்கப்பட்ட இரண்டு மணிநேரத்துக்கு மேல் எக்காரணம் கொண்டும் மின்வெட்டு கிடையாது. பழுது பார்க்கும் பணிகள் இருந்தால் மட்டுமே, அதுவும் பதினைந்து நிமிடங்களுக்குள் சரி செய்யப்பட்டுவிடுகிறது.

  @ நந்தினி: வருக. தாங்களும் சூழலியலில் ஈடுபாடுள்ளவர் என்பதைத் தங்களது அறிமுகப் பக்கத்தின் வாயிலாக அறிய நேர்ந்தது. தொடர்ச்சியாக எழுதிவருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

 8. “முதலாளித்துவம் தனக்கு ஆதாயம் தரும் செயல் என்று தெரிந்தால் தனக்கான கல்லறைக் குழியைத் தானே தோண்டிக் கொள்ளும்”

  இது காரல் மார்க்ஸ் அவர்கள் சொன்னது.

 9. Vijay,

  I agree that “Earth Hour” has been given more hype in the media. Totally agree to all your comments that TN is suffering from shortage of electricity.

  But at the same time, one must understand our responsibility and try to create awareness among people about the need to save our nature. We need to think in terms of what we have given back to the mother nature.

  Though the basic reason behind the media is very well known, i feel by doing this the media is able to create awareness among atleast 1 or 2 person/kids in this world which will greatly help us in today’s scenario.

  Siru thuli peru vellam.! 🙂

 10. வர, வர ஆந்திராவுல இருக்கிறதாலயோ என்னவோ, பதிவு தலைப்பு ” இது தாண்டா போலீஸ் “ ரேஞ்சுக்கு இருக்கு 🙂

 11. மன்னிக்கவும், ”மதிமாறன் அவர்கள் மேற்கோள் காட்டிய” என்பது தவறுதலாக மதிமாறன் அவர்கள் கூறியது என்று எழுதிவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. பதிவிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுவிட்டது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: