கொலை வெறிக் கவிதைகள் 1754 – 4
2:23 முப இல் மே 27, 2009 | கவிதை, கவிதையைப் போல் இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: ஆட்டோகிராப், ஒரண்டை இழுத்தல், கவிதை, ஜனவரி 10, பிரிவு, பொன்னியின் செல்வன், வழியனுப்பல்
ஹாய் விஜயகோபால்,
ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். தமிழில் எனக்கிருக்கும் அறியாமையை உங்களிடம் காட்சிப்படுத்த எனக்கு விருப்பமில்லை. “பொன்னியின் செல்வனுக்கு” நன்றி. ஐந்தாம் பாகத்தை வேறு எங்கேயாவது தேடிப் படித்துக் கொள்கிறேன். தமிழ் மீதான எனது ஈடுபாட்டை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.
உங்கள் கனவுகள் மெய்ப்பட வேண்டும். அனைத்தும் சிறப்பாக அமைந்து, அனைவரிலும் சிறப்பானவராக வாழ வாழ்த்துகிறேன்.
______________________________________________________
Hai Vijayagopal,
Sorry for writing in English, but I’d not want to exhibit my Tamil ignorance to you. Thanks for “பொன்னியின் செல்வன்”. I’ll manage to get the fifth volume & read it. Thanks for reminding me of my liking for tamil.
All the best! Wishing to see Vijayagopal to be the “Best of all!”
Hope all your dreams come true.
தங்கள்,
XXXXX (நெஜப் பேர போட நான் என்ன மடையனா)
மேலே இருப்பது, என்னுடன் வேலை பார்த்த ஒரு தோழர் (பால் வேறுபாட்டை வலிந்து மறைக்கும் முயற்சி) ராஜினாமா செய்த பிறகு கடைசி நாளில் எனக்கு எழுதித் தந்த பிரிவு மடல் (ஆட்டோகிராப்). கீழே இருக்கும் கவிதை (கோவப் படாதீங்க, வேணும்னா கவித மாதிரீன்னு வச்சுக்குங்க) இதனோடு தொடர்புடையதே.
ஜனவரி பத்து,
நாம் ஒன்றாய்ப்
பணிபுரிந்த
கடைசி நாள்!
விடை பெறும் முன்பு
கையில் கிடைத்த
காகிதமொன்றில்
நீ எனக்காகக்
கிறுக்கித் தந்த வாசகங்களை
மனைவி பார்த்துவிடக்
கூடாதே என்ற பதைப்புடன்
ஒளித்து வைத்திருக்கிறேன்.
வேலையை விடுவதற்கு
முன்பொரு நாள்
என்னிடம்
“பொன்னியின் செல்வன்”
படிக்கக் கேட்டிருந்தாய்.
என்னிடம் இல்லாததை
நீ கேட்டும்
இல்லையென்று
சொல்ல,
மனம் வரவில்லை.
மாதக் கடைசியில்
புதிதொன்று வாங்கவும்
வழியில்லை.
“பத்து நாள்
பொறுப்பாயா?
ஊர் சென்று
எடுத்து வர
வேண்டும்”
பொய் சொன்னேன்.
சரியென்றாய்!
அடுத்த திங்கட் கிழமை
லேண்ட்மார்க்கில்
தேடி வாங்கிய
“பொன்னியின் செல்வனுடன்”
உன் இருக்கை
தேடி வந்தேன்.
ஐந்து பாகங்களையும்
ஒன்றாய்த் தரத்தான்
எண்ணியிருந்தேன்!
நூலின் எடையால்
நூலிடை நோகுமென்று
ஒவ்வொன்றாய்த்தான்
தந்தேன்.
அன்றுதான் ஒரு
விஷயம் தெரிந்தது,
நீயும் என்னைப் போல்
புதிய புத்தகத்தின்
பக்கங்களை விசிறி
வாசம் நுகர்வாய் என்று!
“அடப் பாவி,
நான் கேட்டதற்காகப்
புதியதாய்
வாங்கியிருக்கிறாய்தானே!”
பொய்க் கோபம் காட்டினாய்.
நான் வாசித்த
புத்தகம் என்று
சொன்ன பொய்யை
நிரூபிக்க,
பாகம் ஒன்றில்
வந்தியத் தேவனும்
குந்தவையும்
முதல் முறை
சந்திக்கும் காட்சியை
வரிக்கு வரி
அடிக்கோடு
போட்டிருந்ததைக்
காட்டினேன்.
ஒரு வழியாய்
சமாதானமடைந்தாய்.
ஒவ்வொரு பாகத்தையும்
படித்துத்
திருப்பித் தரும் நாளில்
அடுத்த பாகத்தைத்
தரவேண்டுமென்பது
நாம் எழுதிக்
கையொப்பமிடாத
ஒப்பந்தம்.
உன் மீதான
என் விருப்பத்தை
ஒரு காகிதத்தில்
எழுதி வைத்திருந்தேன்.
ஒவ்வொரு முறை
புத்தகம் மாற்றும்போதும்
அதை அடுத்த பாகத்தினுள்
மறைத்து வைத்துதான்
வீட்டிலிருந்து
கொண்டு வருவேன்.
புத்தகம்
உன்னைச்
சேரும்போது
கடிதம் என்
சட்டைப் பையில்
சிறைப்பட்டிருக்கும்.
எப்படியும்
கொடுத்துவிட
வேண்டுமென்ற
துணிச்சல்
ஐந்தாம்
பாகத்தில்தான்
வந்தது.
வேர்வையில் நைந்த
அக்கடிதத்தின்
உள்ளடக்கத்தை,
கடைசிப் பக்கத்தை
அடுத்த
வெள்ளைத் தாளில்
பென்சிலால்
எழுதியிருந்தேன்.
நீ விடைபெறும்
நாளும் வந்தது.
எனக்கான
பிரிவு மடலுடன்
கைப்பையிலிருந்த
ஐந்தாம் பாகத்தையும்
என்னிடம் தந்தாய்.
திருப்பித் தந்த போது
நூலின் ஒருசில
அத்தியாயங்களை
மட்டுமே
படித்திருந்தாய்.
காபி அருந்திய பின்
நீ எச்சில் தொட்டுப்
புரட்டிய பக்கங்கள்
காட்டிக்
கொடுத்து விட்டது.
“நான் சென்ற பிறகு
இரவல் தந்த நூல்
கிடைக்குமோ
கிடைக்காதோ என்று
நீங்கள் சங்கடப்
படக் கூடாதல்லவா?”
புன்னகையும் பதிலும்
ஒன்றாய் வந்தது.
கையும் மனதும்
கணக்க
பேருந்து
புறப்படும் வரை
உடனிருந்து
வழியனுப்பினேன்.
இதோ,
நாலு வருடங்கள்
கழித்து, அந்தப்
பென்சில் வரிகளை
ரப்பரால் அழித்துக்
கொண்டிருக்கிறேன்!
மனைவி அறிந்தால்
மண்டை உடையும்!
[இந்தக் கவிதையைப் படித்து என்னை அடிக்க வேண்டும் என்று கொலைவெறியோடு தேடுகிறவர்கள் என்னை அடிப்பதற்குப் பதில் நான் கைகாட்டுகிற நபரை அடிக்கத் தயாரா? ஆம் எனில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டியைச் சொடுக்கி அவரது வலைப்பூவுக்குச் செல்லுங்கள். வயது அறுபதானாலும் தன் வயதில் நான்கில் ஒரு பங்கே உடைய கதாநாயகியுடன் டூயட் பாடுகிற நடிகரைப் போல, பள்ளியில் படிக்கும் மகள் இருக்கும் போதும் கவிதைகளை எழுதிக் குவிக்கிற இவரால் உந்தப்பட்டுதான் நான் இப்படி எழுத நேர்ந்தது. மாமனாருக்குக் கடிதம் எழுதும்போது கூட கவிதை கவிதையாக எழுதுவார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தக் கவிதையை எழுதும்போது எழுத்துக்களை அடித்ததை விடவும் “எண்ட்டர்” விசையை அடித்தது தான் அதிகம். நீட்டி எழுதிட்டா பேராகிராப், ஒரே வரியை நான்கு அல்லது ஐந்தாகப் பிரித்துப் போட்டால் கவிதை என்ற அவதானத்துக்கு வந்ததற்கும் இவர் தான் காரணம். இதற்கும் சேர்த்து நன்கு கவனிக்கவும்.]
அவரது தள முகவரி. பின்னூட்டத்தப் போட்டுட்டுப் போனா போதும்.
உங்கள் கவனத்துக்கு: நகைச்சுவை, அல்லது கற்பனை போன்ற குறிச்சொற்கள் கொடுக்கப் படவில்லை. வெகு சமீபத்தில் கொலை வெறிக் கவுஜைகள் எதுவும் எழுதாததாலும், யாரையும் ஒரண்டை இழுக்காததாலும் இப்பதிவை நீங்கள் அன்புடன் அல்லது வெறுப்புடன் படித்தே ஆகவேண்டும்.
அளவிலா லந்துடன்,
விஜய்கோபால்சாமி
கொலைவெறிக் கவிதைகளின் முந்தைய பாகங்கள்: [பாகம் 1] | [பாகம் 2] | [பாகம்3]
9 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
///யாரையும் ஒரண்டை இழுக்காததாலும் இப்பதிவை நீங்கள் அன்புடன் அல்லது வெறுப்புடன் படித்தே ஆகவேண்டும்.////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…
Comment by உருப்புடாதது_அணிமா— மே 27, 2009 #
//நீட்டி எழுதிட்டா பேராகிராப், ஒரே வரியை நான்கு அல்லது ஐந்தாகப் பிரித்துப் போட்டால் கவிதை//
ஆஹா இவ்ளோதானா மேட்டரு.. கவிதை எழுதுவது இவ்வளவு சுலுவா
Comment by நித்தில்— மே 27, 2009 #
//வயது அறுபதானாலும் தன் வயதில் நான்கில் ஒரு பங்கே உடைய கதாநாயகியுடன் டூயட் பாடுகிற நடிகரைப் போல, பள்ளியில் படிக்கும் மகள் இருக்கும் போதும் கவிதைகளை எழுதிக் குவிக்கிற இவரால் உந்தப்பட்டுதான் நான் இப்படி எழுத நேர்ந்தது.
எத்தனை வயசானாலும் கவிதை எழுதலாமுங்கோ. இருந்தாலும் நீங்க சேவியர் அண்ணாவிர்க்கு வயதாகிவிட்டது என்றதை வன்மையாக கண்டிக்கிறேன்.
Comment by குந்தவை— மே 27, 2009 #
தம்பி..நலமா…கவி…..தை..நன்றாக..வாசித்தேன்.
Comment by uumm— மே 27, 2009 #
@ அணிமா
என்ன ஆச்சு, யாராவது எனிமா குடுத்துட்டாங்களா
@ நித்தில்
இவ்வளவு சுலபமா இருக்கேன்னு நீங்களும் எழுத ஆரம்பிச்சிராதிங்க. காம்பெடிஷன் அதிகமாயிட்டா எனக்கு சிக்கலாகிரும்.
@ குந்தவை
யக்கா, கவிதைல உங்களையும் குறிப்பிட்டிருக்கேன் கண்டுகினிங்களா? உங்கள மாதிரி நாலு பேரு கண்டிச்சாதான் இந்த அன்புத் தம்பி மேலும் மேலும் பெரிய ஆளா வர முடியும். தாராளமா கண்டிக்கலாம்.
சேவியரண்ணன இதே மாதிரி முன்னாடி ஒரு தடவயும் ஒரண்டை இழுத்தேன். மனுஷன் அப்பயும் கவித நல்லாருக்குடா தம்பின்னு சொல்லிட்டு எதுவுமே நடக்காத மாதிரி போயிட்டாரு.
தம்பி முன்ன மாதிரி பேச்சிலர் கெடையாது. வெறும் கவிதைய மட்டும் எழுதிருந்தா நெஜமாவே மண்ட ஒடையும். எனக்குத் தேவையா? அதனால தான் இந்த கொலை வெறி ஜிகினா வேலையெல்லாம்.
@உமா
யக்கா, உங்க கம்பியூட்டர்ல ஸ்பேஸ் கீ இருக்கறதையே மறந்துட்டிங்களா? புள்ளி புள்ளியா வைக்கிறீங்க. கோலம் போடப் போறிங்களோ என்னமோ?
Comment by vijaygopalswami— மே 27, 2009 #
விஜய்… நிஜமாவே கவிதை சூப்பர் 🙂
ஒரு சிறுகதையை ஒளித்து வைத்த கவிதை ! ரசித்துப் படித்தேன்.
இருந்தாலும் “எண்டர்” நீ சரியா தட்டலேடா தம்பி ! இன்னும் கொஞ்சம் சரியா தட்டணும். நேர்ல சந்திக்கும்போ நாலு தட்டு தட்டி விளக்கறேன் 😀
Comment by சேவியர்— மே 27, 2009 #
//நேர்ல சந்திக்கும்போ நாலு தட்டு தட்டி விளக்கறேன்//
தாராளமா தட்டலாம், உங்க லேப்டாப்புக்கு வலிக்காமல் இருந்தால் சரி.
இப்பவாவது ஒரு பெரிய ரகளையாகும்னு எதிர்பாத்தேன் 😦 மனுஷன் ஏமாத்திட்டுப் போயிட்டாரே. இன்னும் 1750 இருக்குல்ல. சண்டைக்கு வராமலா போகப் போறீங்க.
Comment by vijaygopalswami— மே 27, 2009 #
வழக்கமான எங்கள் விஜயகோபலின் மனம்மாறாத நக்கலும் நையாண்டியும்..ஒரு எதிர்பார்ப்புடனேயே பயணம் செய்ய வைத்தது…. உன் வரிக்கள்..வாழ்க வளர்க!
Comment by rasanaikaaran— மே 27, 2009 #
அஞ்சு நிமிஷத்துல ஒரு பாலசந்தர் படம் பார்த்த மாதிரி இருக்கு… அற்புதம்.
Comment by Praveen— மே 28, 2009 #