வாழ்க துட்டகேமுனு…

11:30 பிப இல் மே 28, 2009 | அங்கதம், அரசியல், ஈழம் இல் பதிவிடப்பட்டது | 13 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

[துட்டகேமுனு என்பது ஒரு சிங்கள மன்னனின் பெயர். சரியான உச்சரிப்பு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்துகொள்ள வசதியாயிருக்கும்.]

கவிக்கோ அப்துல் ரகுமான் ஆனந்த விகடனில் எழுதிய ஈழம் குறித்த தொடர் ஒன்றில் வழியாக இந்த ஆளுமை எனக்கு அறிமுகமானது. சிங்கள இதிகாசமான மஹாவம்சத்தின் நாயகன். ஒரு நாள் தனது மஞ்சத்தில் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறான். “கொஞ்சம் வசதியாகத்தான் படுத்துக் கொள்ளேன்” என்கிறாள் அவனது அன்னை விகாரமகாதேவி (விகார என்பது புத்த விகாரையைக் குறிக்கும் சொல் என்றே கருதுகிறேன்). மகன் பதில் சொல்கிறான் “தென்புறத்தில் கடலும், வட புறத்தில் சைவமும் தமிழும் நெரிக்கும் போது உடலைக் குறுக்கிக் கொண்டு இப்படித்தான் படுக்க முடியும்” என்கிறான்.

மேலே சொல்லப்பட்ட உரையாடல்தான் மஹாவம்ச நாயகனின் அறிமுகம். இந்தியாவில் குண்டு வெடிப்பில் செத்தவனெல்லாம் அடுத்த தலைமுறையின் பாடப் புத்தகத்தில் இடம்பெறுகிறனல்லவா, அதே போல தமிழர்களை எதிர்த்தவன் என்ற காரணத்தால் நமது கதையின் நாயகன் சிங்கள காப்பியத்துக்கே நாயகனாகிறான். மொத்த மகாவம்சமும் தனி ஒருவரால் எழுதப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாழ்ந்தவர்கள் நாயகனின் மேன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்ல தத்தமது கற்பனையையும் கதையில் நுழைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆக துட்டகேமுனுவின் நாயக பிம்பம் என்பது மற்றவர்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கிய “கைப்புள்ளையின் வீரம்” போன்றதுதான் என்றும் அவதானிக்க நேர்கிறது.

கதையின் நாயகன் செய்த உச்சபட்ச சாதனையாக இன்றளவும் சொல்லப்படுவது “எல்லாளன்” என்ற தமிழ் மன்னனைப் போரிட்டு வென்றதுதான். அதுவும் கூட படையுடன் படை பொருதிய யுத்தமல்ல. பாட்டன் வயதுள்ள எல்லாளனை துட்டகேமுனு “ஒண்டிக்கு ஒண்டி வற்றியா” என்று அழைக்க, அவரும் ஒப்புக்கொண்டு மோதினார். எதிர்பார்த்த மாதிரியே எல்லாளன் தோற்றுப் போனார். கள்ளியிலும் பாலிருப்பதைப் போன்று துட்டகேமுனுவின் மனதிலும் கொஞ்சம் ஈரம் இருந்தது. “முதுகு வலிக்கு இப்போதான் ஆப்ரேஷன் பண்ணேன். என்னால சண்டையெல்லாம் போட முடியாது” என்று சாக்குப் போக்கு சொல்லாமல் தன்னோடு மோதி உயிர் துறந்த எல்லாளனுக்கு மரியாதை செய்ய எண்ணி, அவரை அடக்கம் செய்த இடத்தை அனைவரும் வழிபாட்டுக்குரிய இடமாகக் கருத வேண்டும் என்று கட்டளையிடுகிறான். அநுராதபுரத்திலுள்ள அந்த இடம் இன்றளவும் சிங்களர்களின் வழிபாட்டுக்குரிய ஸ்தலமாக இருந்து வருகிறது. அறியாமையினால் சிங்களர்கள் அதை எல்லாளனின் சமாதியாகக் கருதாமல் துட்டகேமுனுவின் சமாதி என்று நினைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். எது எப்படியோ, தமிழனாக இருந்தாலும் எல்லாளனின் நேர்மையை மதித்துள்ளான் துட்டகேமுனு.

இவ்வாறான கதைகளால் மேலும் மேலும் ஊதிப் பெரிதாக்கப்பட்டு துட்டகேமுனுவுக்குப் பௌத்தக் காவலன் என்ற பிம்பமும் வந்து சேர்கிறது. இந்த பௌத்தக் காவலன் பிம்பத்தின் விளைவாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் துட்டகேமுனுவின் பெயர் பாடசாலைகளுக்குச் சூட்டப்படுகிறது. துட்டகேமுனுவின் பெயரால் “கேமுனு வாட்ச் (Kemunu Watch) என்ற படைப் பிரிவு சிங்கள ராணுவத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட்டில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் “பௌத்தத்தைக் காக்க அதிபர் ராஜபக்‌ஷே துட்டகேமுனு வழியில் போராட வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார். துட்டகேமுனு துதிபாடல் இத்துடன் நிற்க.

புலிகளின் வீழ்ச்சி தற்போது ராஜபக்‌ஷேவுக்கு இரண்டாம் துட்டகேமுனு என்ற பிம்பத்தைக் கொடுத்துள்ளது. “உட்டாலக்கடி செவத்ததோலுடா உத்துபாத்தா உள்ளே தெரியும் நாயுடுஹாலுடா” என்று பாட்டெழுதியவரை செருப்பாலடிக்க வேண்டும் என்று எல்லாருக்கும் தோண்றினாலும், “உன் கண்வீர்யம் தாங்கமல், சம்சார்யம் வாங்காமல் காம்பு வீங்குதே” என்று எழுதியவன் முன்னவரை நல்லவனாக்கிவிடுகிறனல்வா. இதையே துட்டகேமுனு ராஜபக்‌ஷே சம்பவத்தில் பொருத்துங்கள்.

இன்னுமொரு இருநூறு ஆண்டுகள் சென்று இரு சிங்களர்கள் இப்படிப் பேசினாலும் பேசிக் கொள்ளலாம் (சிங்களத்தில்). முதலாமவன்: “துட்டகேமுனு என்று ஒரு மகாராஜா இருந்தார் தெரியுமா? தமிழர்களை என்னமாய் ஒடுக்கினார்.” இரண்டாமவன்: “மடையா, ராஜபக்‌ஷே என்று ஒரு அதிபர் இருந்தார், அவரது கால் தூசுக்குப் பொற மாட்டான் இந்த துட்டகேமுனு.”

ஆம் நண்பர்களே, ராஜபக்‌ஷேவை இரண்டாம் துட்டகேமுனு என்று அழைப்பதை இன்றுடனாவது நிறுத்துங்கள். வேண்டுமானால் துட்டகேமுனுவை இரண்டாம் ராஜபக்‌ஷே என்று அழைத்துக் கொள்ளுங்கள். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், “துட்டகேமுனு நல்லவன்”. எங்கே, என்னோடு சேர்ந்து எல்லோரும் குரலெழுப்புங்கள்… “வாழ்க துட்டகேமுனு…”

13 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

 1. அது துட்டகைமுனு.

  முன்பு இந்த வரலாறு வாசித்த போது, எல்லாளன் இறந்த போது அன்று இருந்த தமிழ் மக்கள்
  எல்லோரும் எவ்வளவு கவலைப்பட்டு இருப்பார்கள் என்று நினைத்தேன்.
  நேர்மையாக ஆட்சி செய்த மன்னன் என்கிறது வரலாறு.
  அதனால் தான் இன்று அவனது சமாதி வணக்கத்தலமாக போற்றப்படுகிறது போலும்.
  துட்டகைமுனுவினது சமாதி என்று உரிமை சொல்லி வணக்குகிறார்கள்.
  சமாதிக்காக சண்டை பிடிக்கும் நிலையிலா தமிழர் இங்கு இருக்கிறார்கள்.

 2. வாசுகி அவர்களே, சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தங்களது திருத்தத்தை முழுமனதாக ஏற்கிறேன். பதிவிலே திருத்தம் செய்துவிட்டால் தங்களது பின்னூட்டம் கவனிக்கப்படாமல் போகலாம் என்பதால் பதிவை அப்படியே வைக்கிறேன்.

  தங்களது எழுத்துநடை தாங்கள் ஒரு ஈழத் தமிழரோ என்று ஐயுறச் செய்கிறது. நான் எழுதியதன் தொனி தமிழர்கள் எல்லாளனின் சமாதிக்காக சண்டை பிடிக்க வேண்டும் என்று தங்களை எண்ணச் செய்திருந்தால் மிகவும் வருந்துகிறேன். துட்டகைமுனுவின் வார்த்தையை மீற முடியாவிட்டாலும் ஒரு தமிழனை வணங்குவதா என்ற மனத்தடை காரணமாக அதை துட்டகைமுனுவின் அடக்கத்தலம் என்று கூறியிருக்கலாம். இதுதான் நான் சொல்லக் கருதி சொல்லாமல் விட்டது.

  கருத்துக்கும் உணர்வுக்கும் மிக்க நன்றி.

 3. வணக்கம்.
  நீங்கள் எழுதி உச்சரித்தது “துட்டகெமுனு” என்பது சரியானதே,
  சகோதரி வாசுகி குறிப்பிட்டது தமிழில் உச்சரிக்கும் முறை.
  சிங்கள நண்பர்கள் சொல்லும் போது துட்டகெமுனு என்றுதான் சொல்கிறார்கள்.
  இலங்கை இராணுவத்தில் “கெமுனு” என்றொரு படைபிரிவு உள்ளது இதற்கு சான்றாக அமையும் என நினைக்கிறேன்.

  இதே போல்
  தமிழில் தேவநம்பியதீசன் என்போம், ஆனால் சிங்களர்கள் தேவநம் திஸ்ஸ என்பார்கள், இவர் அசோக சக்கரவர்தியின் மகன் என்று சொல்லப்படுகிறது, இவரால்தான் புத்தமதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது, அசோகனின் மகனிற்கு எப்படி சிங்கள பெயர் வந்தது என்று என்னை கேட்க கூடாது.

  உதாரணத்திற்கு…இன்னும் சில பெயர்கள்

  மூத்தசிவன் – மூத்தசிவ
  சங்கமித்தை – சங்கமித்தா
  பண்டுகாபயன் – பண்டுகாபய
  பராக்கிரமபாகு – பராக்கிரமபா
  காசியப்பன் -காசியப்பா

  இப்படி சொல்லிக் கொண்டேபோகலாம்.

  நன்றி.

 4. “முதுகு வலிக்கு இப்போதான் ஆப்ரேஷன் பண்ணேன். என்னால சண்டையெல்லாம் போட முடியாது” 🙂

 5. கவின்,
  நான் சிங்களத்தில் எப்படி உச்சரிப்பார்கள் என்று நினைத்துப்பார்க்க தவறிவிட்டேன்.
  அவர்கள் உச்சரிப்பு வித்தியாசம் தான்.

  //இவர் அசோக சக்கரவர்தியின் மகன் என்று சொல்லப்படுகிறது, //
  அசோகன் இந்தியாவை ஆண்ட காலத்தில் இலங்கையை ஆண்ட மன்னன் தேவநம்பிய தீசன்.
  அவனது தந்தை மூத்தசிவன் . மூத்தசிவன் என்பது தமிழ்ப்பெயர்.
  தேவநம்பியதீசன் காலத்தில் இலங்கைக்கு பௌத்தமதம் கொண்டுவரப்பட்டது. அசோகச்சக்கரவர்த்தி தனது மகளான சங்கமித்தையையும் மகனான மகிந்தவையும் புத்த மதத்தை பரப்ப அனுப்பினார். தேவநம்பிய தீசனின் சகோதரன் வழி வந்த மன்னனே துட்டகமுனு.
  இது எனக்கு தெரிந்தது. பிழை எனின் சுட்டிக்காட்டவும்.

  //
  vijaygopalswami
  நான் எழுதியதன் தொனி தமிழர்கள் எல்லாளனின் சமாதிக்காக சண்டை பிடிக்க வேண்டும் என்று தங்களை எண்ணச் செய்திருந்தால் மிகவும் வருந்துகிறேன்.//
  அப்படியான எந்த எண்ணத்தையும் தரவில்லை.
  நான் ஏதோ கவலையில் எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.

  ஒரு பதிவு எழுதப்போய் இப்ப அசோகன், தேவநம்பியதீசன் வரை வந்து விட்டதே என்று தலையில் கை வைக்காதீர்கள். ஹா ஹா

 6. மகாவம்ச கதைகள் விகடனில் வந்துள்ளன.

  துட்டக்கேமுனுவின் தந்தை எல்லாளனுக்கு அடங்கி கப்பம் செலுத்தி வந்தவர். அவர் தனது மகனிடம் (அப்போது கேமுனு என்று மட்டும் பெயர் அவனுக்கு) எல்லாளனிடம் அடங்கி போவதாக கூறி சத்தியம் செய்து பால்சோறு உண்ணவேண்டும் என கூற, அவன் அதை உக்கிரமாக மறுக்கிறான்.

  அப்போது அவன் தந்தை தன் மனைவியிடம் அவள் மகனை பற்றி “இந்த துஷ்ட கேமுனுவால் நம் குலம் அழிவது நிச்சயம்” என கூற, அன்றிலிருந்து அவன் துஷ்ட கெமுனு –> துட்டக்கேமுனுவானான்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 7. kavin you wrong Mahinthan is Asokan son he met thevanampiyathesan(king) at Mihinthle
  that is history

 8. துடுகெமுனு என்று தான் சிங்களத்தில் சொல்லு வார்கள் , துடு= என்றால் பார்த்தல் என்றும் பொருள்.நான் வாசித்த அளவில் விஹாரமஹா தேவி மகனிடம் கேட்க,மகன் சொன்னான் ,உதுரே ஹடி தெமலா என்று=வடக்கில் கெட்ட தமிழன் தெற்கில் பெருங் கடல் அதனால் நான் எப்படி நீட்டி நிமிர்ந்து படுப்பேன் என்று.எப்படி இருந்தாலும் விஜய மன்னன் இலங்கைக்கு வந்து குயேனி என்ற யக்ஷ்=பேய் இனத்துடன் குடும்பம் நடத்தி தனது அரச குடும்பத்துக்கு கவுரவம் தேவை என்று மதுரா புரியில் இருந்து தனக்கும் தனது தோழர்கலுக்கும் பெண் எடுத்தாராம். அதன் பின்புதான் புத்தமும் சிஙளமும் வளர்ந்ததாக எப்பொதோ படித்த நினைவு. ஆக மொத்ததில் இன்றய போரில் அந்த மதுராபுரி தமிழ் பெண்களுக்கும் விஜயன் அன் கோ வுக்கும் பிறந்த பிள்ளைகள் தான் அடித்துக்கிட்டு இறந்து போனார்கள் என்று நினைக்க தோன்றுகிறது.

 9. //உட்டாலக்கடி செவத்ததோலுடா உத்துபாத்தா உள்ளே தெரியும் …. என்று பாட்டெழுதியவரை செருப்பாலடிக்க வேண்டும் என்று எல்லாருக்கும் தோண்றினாலும், “உன் கண்வீர்யம் தாங்கமல், சம்சார்யம் வாங்காமல் ……//

  இப்படியெல்லாமா பாட்டு எழுதுறான்க…ச்சீ ச்சீ

  தங்கள் இந்த பதிவும் மற்றும் பின்னூட்டங்களும் பல வரலாற்று தகவல்களை எனக்கு அறிய வைத்திருக்கின்றன. நன்றிகள்

 10. பின்னூட்டம் இட்ட சிலர் பிழையான தகவல் கூறியதால், ஈழத்தை சேர்ந்தவள் என்ற வகையில் சுட்டிக்காட்ட எனக்கு கடமை இருக்கிறது.

  //@kumar
  விஜய மன்னன் இலங்கைக்கு வந்து குயேனி என்ற யக்ஷ்=பேய் இனத்துடன் குடும்பம் நடத்தி தனது அரச குடும்பத்துக்கு கவுரவம் தேவை என்று மதுரா புரியில்//

  ஆமாங்க, நாங்கள் எல்லோரும் பேய் பரம்பரை, மூதாதையர் பேயாக இருந்தார்கள்.
  இந்த வட இந்திய, சமஸ்கிருதகாரன்களுக்கு இப்ப மட்டுமல்ல எப்பவுமே கிறுக்கு தான்.வட இந்தியரை பொறுத்தவரை அவர்கள் கடவுளின் அவதாரம், தென் இந்திய தமிழர் வானரம்,ஈழத்தமிழர் அரக்கர், பேய். நாமும் அவர்களை கும்பிட்டு எமது காலத்தை ஓட்டுவம்.

  இலங்கையின் பூர்விக குடியினர் இயக்கர், நாகர் என்ற திராவிட இனத்தினர்.
  புத்தர் இரண்டாவது தடவை இலங்கை வந்தபோது ‘நாகதுவீபம்’ என்னும் நாகநாட்டில் (இலங்கை வட பகுதி) நாகமன்னர் குடும்பத்தில் அரச கட்டில் தொடர்பாக எழுந்த பிணக்கைத் தீர்த்துவைத்ததாக
  மகாவம்சம் ,மணிமேகலையில் ஆதாரம் இருக்கிறது.

  புத்தர் மூன்றாவது தடவை இலங்கை வந்தபோது தென்னிலங்கையில் உள்ள களனியில் நாகர்கள் அரசு இருந்ததாக மகாவம்சத்தில் இருக்கிறது.புத்தர் மூன்றாவது தடவை இலங்கை வந்துசென்று 37 ஆண்டுகளின் பின் தான் விஜயன் இலங்கைக்கு வந்தான் என்பதும் மகாவம்சத்தில் தான் இருக்கிறது.

  ஆகவே விஜயன் வர முன்பே இலங்கையில் நாகர் குடிமக்கள் சிறப்புற வாழ்ந்து, ஆட்சி நடத்தி வந்தார்கள் என்பது சந்தேகமற்றது. அதனால் அவர்கள் கூறுவது போல் இலங்கையில் பேய் இனம் இருந்ததிற்கு வாய்ப்பே இல்லை. குவேனி இயக்கர் இனப்பெண். அவர்களும் திராவிடர் தான்.

 11. விஜயன் செய்த சாதனைகள்( வேதனைகள்).

  கலிங்க நாட்டில் சிங்கபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த சிங்கவாகுவின் மகன் விசயன்.(கி. மு. 548).அவனும் 700 நண்பர்களும் துர்நடத்தை காரணமாக நாடு கடத்தப்பட்டார்கள்.அவர்கள் சென்ற படகுகள் புயலால் திசை திருப்பப்பட்டு வந்து சேர்ந்த இடம் தென்இலங்கை.

  அந்த காலத்தில் தென்இலங்கையை ஆட்சி செய்தள் குவேனி (தென் இலங்கையை பெண்களே ஆண்டார்கள்).முதலில் குவேனியிடம் வாழ்வதற்கான அடைக்கலம் கேட்ட விஜயன் பின் அவளை காதலித்து திருமணம் செய்தான். பின் ஆட்சிப்பொறுப்பை தான் ஏற்று தென் இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தான்.

  தமது பர‌ம்பரையினரே (700 நண்பர்) இனி இலங்கையில் இருக்க வேண்டும் என்ற‌ நோக்கத்தினால் பூர்விக ஆண்களை அழித்து பெண்களை அடிமைப்படுத்திக்கொண்டார்கள். பெண்களை பங்கு போட்டார்கள் என்றும் சொல்லலாம். பின்னர் பாண்டிய நாட்டு அரசகுமாரிகளை வரவழைத்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த இனக்கலப்பினால் (ஆரிய ஆண்கள், திராவிட பெண்கள், பாண்டிய நாட்டு பெண்கள்) புதிய இனம் உருவானது.

  விஜயனால் இலங்கையின் வட பகுதியில் ஆதிக்கம் செய்ய முடியவில்லை. வட தென் பகுதியை பிரித்து 3 பெரிய நீராரிகள் இருப்பதனால் வட, தென் பகுதி தொடர்புகள் அற்ற நிலை இருந்தது. இலங்கை வட பகுதி மக்கள் தென் இந்திய மக்களுடன் நெருங்கிய வர்த்தக தொடர்பு வைத்திருந்தார்கள்.

 12. நாம்,”யாதும் ஊரே,யாவரும் கேளிர்”என்ற தத்துவத்தை மறக்க
  வேண்டும்.வரலாற்று விழிப்புணர்சியை ஏற்படுத்த வேண்டும்.
  இனமானத் தலைவர்,என்று சொல்லிக்கொண்டு,ஈனம் ஆன
  தலைவர்கள் உருவாகாமல் தடுக்க வேண்டும்.சுதந்திரப் போராட்டம்
  என்றால் நேர்த்திக்கடனுக்கு உயிர்ப்பலி நேர்ந்தே தீரும் என்பதை
  உணர்ந்திக்க வேண்டும்.நோகாமல் நோன்பு கும்பிடும் பழக்கம்
  மாறவேண்டும்.ஆனால் நாம் இவையெல்லாம்,வேண்டாம்,என்று
  சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆரியர்,திராவிடர்,என்ற விழிப்புணற்சி
  ஊட்டினாலும் இன்றையவரைக்கும்,நாட்டை ஆள்வதென்னவோ,
  ஆரியர்கள்தான்.

 13. துட்டகெமுனு யுத்தத்தில் வெற்றிபெற செய்த தில்லுமுல்லுகள் மிக அதிகம். எல்லாளனுடைய யானையை யுத்த முறைகளுக்கு மாறாகத் தாக்கியே இறுதிப் போரில் அவன் வென்றதாகவும், இன்றைய பொலனறுவையில் அல்லது அதற்கருகில் இருந்த எல்லாளனின் வலிமைமிக்க தளபதியின் கோட்டையை வீழ்த்த, பெண் பலவீனமுள்ள அந்தத் தளபதிக்கு தன் தாயையே தூண்டிலாக்கி மயக்கி வீழ்த்தியதாகவும் வரலாறு சொல்கிறது. (உண்மையோ பொய்யோ) இராவணன் தொடங்கி, எல்லாளன், பண்டாரவன்னியன் வரை தொடர்ந்து, இறுதியான வன்னி யுத்தம்வரை தமிழர்களின் வீழ்ச்சி ஒரேமாதிரியாக இருப்பது வேதனைக்குரிய ஒற்றுமை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: