கொடுமை கொடுமைன்னு கும்பகோணத்துக்குப் போனா…
6:01 பிப இல் ஜூன் 11, 2009 | அங்கதம், அரசியல், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: காங்கிரஸ், கும்பகோணம், சேது சமுத்திரம், தஞ்சாவூர், வாசன்
[படத்தின் மேல் அழுத்தித் தனிச் சாளரத்தில் பெரிதாகப் பார்க்கலாம்]
கடல்வழிப் போக்குவரத்துத் துறையை காங்கிரசே வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதிலிருந்து ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போடுகிற முயற்சி ஆரம்பமாகிவிட்டது. பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இது இந்துத்துவ அமைப்புகளை சாந்தப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.
புள்ளியியல் துறையைக் கொடுத்த போது ஜி.கே. வாசன் என்ன செய்தார் என்று தெரியவில்லை. அந்தத் துறையைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று அவருக்கே தெரிந்திருக்குமோ தெரியாதோ, யானறியேன். மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டால் இவர் டி.ஆர். பாலு அளவுக்கு துணிச்சலாகப் பேசுவாரா என்பதும் சந்தேகமே.
அவர் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்று டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த போதுதான் இத்தனை கூத்துக்களும் அரங்கேறியது. பூர்வீக வீடு கபிஸ்தலத்தில் இருந்தாலும் குடந்தை நகரில் அவருக்கு ஒரு கெஸ்ட் ஹவுசும் இருக்கிறது. அந்த வீட்டிற்கு எதிரில்தான் காங்கிரஸ் காரர்கள் கைங்கரியத்தில் இந்த ஃப்ளெக்ஸ் போர்டு எழுந்து நிற்கிறது. இதல்லாமல் குடந்தையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை நெடுகிலும் இவரை வாழ்த்திப் பல்வேறு சுவரொட்டிகள். மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட மணிசங்கர ஐயருக்கு எதிராக தமிழமைப்புகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும் காணக் கிடைத்தது. ஓடுகிற பேருந்திலிருந்து அவற்றைப் படமெடுக்க முடியவில்லை.
மந்திரியாகப் பொறுப்பேற்று கோப்புகளைக் கூடப் பார்க்கவில்லை, அதற்குள் “சேது சமுத்திர நாயகனே”, “கப்பலோட்டிய தமிழனே” என்றெல்லாம் சுவரொட்டிகள் முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இவரது மாநிலங்களவைப் பதவி முடிய இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளது. கொடுத்த அசைன்மெண்ட்டை சரியாக முடித்துவிடுவாரோ என்பதுதான் நமக்கிருக்கிற பயமெல்லாம்.
வாழ்க துட்டகேமுனு…
11:30 பிப இல் மே 28, 2009 | அங்கதம், அரசியல், ஈழம் இல் பதிவிடப்பட்டது | 13 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: எல்லாளன், சிங்களர், தமிழர், துட்டகேமுனு, ராஜபக்ஷே
[துட்டகேமுனு என்பது ஒரு சிங்கள மன்னனின் பெயர். சரியான உச்சரிப்பு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்துகொள்ள வசதியாயிருக்கும்.]
கவிக்கோ அப்துல் ரகுமான் ஆனந்த விகடனில் எழுதிய ஈழம் குறித்த தொடர் ஒன்றில் வழியாக இந்த ஆளுமை எனக்கு அறிமுகமானது. சிங்கள இதிகாசமான மஹாவம்சத்தின் நாயகன். ஒரு நாள் தனது மஞ்சத்தில் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறான். “கொஞ்சம் வசதியாகத்தான் படுத்துக் கொள்ளேன்” என்கிறாள் அவனது அன்னை விகாரமகாதேவி (விகார என்பது புத்த விகாரையைக் குறிக்கும் சொல் என்றே கருதுகிறேன்). மகன் பதில் சொல்கிறான் “தென்புறத்தில் கடலும், வட புறத்தில் சைவமும் தமிழும் நெரிக்கும் போது உடலைக் குறுக்கிக் கொண்டு இப்படித்தான் படுக்க முடியும்” என்கிறான்.
மேலே சொல்லப்பட்ட உரையாடல்தான் மஹாவம்ச நாயகனின் அறிமுகம். இந்தியாவில் குண்டு வெடிப்பில் செத்தவனெல்லாம் அடுத்த தலைமுறையின் பாடப் புத்தகத்தில் இடம்பெறுகிறனல்லவா, அதே போல தமிழர்களை எதிர்த்தவன் என்ற காரணத்தால் நமது கதையின் நாயகன் சிங்கள காப்பியத்துக்கே நாயகனாகிறான். மொத்த மகாவம்சமும் தனி ஒருவரால் எழுதப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாழ்ந்தவர்கள் நாயகனின் மேன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்ல தத்தமது கற்பனையையும் கதையில் நுழைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆக துட்டகேமுனுவின் நாயக பிம்பம் என்பது மற்றவர்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கிய “கைப்புள்ளையின் வீரம்” போன்றதுதான் என்றும் அவதானிக்க நேர்கிறது.
கதையின் நாயகன் செய்த உச்சபட்ச சாதனையாக இன்றளவும் சொல்லப்படுவது “எல்லாளன்” என்ற தமிழ் மன்னனைப் போரிட்டு வென்றதுதான். அதுவும் கூட படையுடன் படை பொருதிய யுத்தமல்ல. பாட்டன் வயதுள்ள எல்லாளனை துட்டகேமுனு “ஒண்டிக்கு ஒண்டி வற்றியா” என்று அழைக்க, அவரும் ஒப்புக்கொண்டு மோதினார். எதிர்பார்த்த மாதிரியே எல்லாளன் தோற்றுப் போனார். கள்ளியிலும் பாலிருப்பதைப் போன்று துட்டகேமுனுவின் மனதிலும் கொஞ்சம் ஈரம் இருந்தது. “முதுகு வலிக்கு இப்போதான் ஆப்ரேஷன் பண்ணேன். என்னால சண்டையெல்லாம் போட முடியாது” என்று சாக்குப் போக்கு சொல்லாமல் தன்னோடு மோதி உயிர் துறந்த எல்லாளனுக்கு மரியாதை செய்ய எண்ணி, அவரை அடக்கம் செய்த இடத்தை அனைவரும் வழிபாட்டுக்குரிய இடமாகக் கருத வேண்டும் என்று கட்டளையிடுகிறான். அநுராதபுரத்திலுள்ள அந்த இடம் இன்றளவும் சிங்களர்களின் வழிபாட்டுக்குரிய ஸ்தலமாக இருந்து வருகிறது. அறியாமையினால் சிங்களர்கள் அதை எல்லாளனின் சமாதியாகக் கருதாமல் துட்டகேமுனுவின் சமாதி என்று நினைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். எது எப்படியோ, தமிழனாக இருந்தாலும் எல்லாளனின் நேர்மையை மதித்துள்ளான் துட்டகேமுனு.
இவ்வாறான கதைகளால் மேலும் மேலும் ஊதிப் பெரிதாக்கப்பட்டு துட்டகேமுனுவுக்குப் பௌத்தக் காவலன் என்ற பிம்பமும் வந்து சேர்கிறது. இந்த பௌத்தக் காவலன் பிம்பத்தின் விளைவாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் துட்டகேமுனுவின் பெயர் பாடசாலைகளுக்குச் சூட்டப்படுகிறது. துட்டகேமுனுவின் பெயரால் “கேமுனு வாட்ச் (Kemunu Watch) என்ற படைப் பிரிவு சிங்கள ராணுவத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட்டில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் “பௌத்தத்தைக் காக்க அதிபர் ராஜபக்ஷே துட்டகேமுனு வழியில் போராட வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார். துட்டகேமுனு துதிபாடல் இத்துடன் நிற்க.
புலிகளின் வீழ்ச்சி தற்போது ராஜபக்ஷேவுக்கு இரண்டாம் துட்டகேமுனு என்ற பிம்பத்தைக் கொடுத்துள்ளது. “உட்டாலக்கடி செவத்ததோலுடா உத்துபாத்தா உள்ளே தெரியும் நாயுடுஹாலுடா” என்று பாட்டெழுதியவரை செருப்பாலடிக்க வேண்டும் என்று எல்லாருக்கும் தோண்றினாலும், “உன் கண்வீர்யம் தாங்கமல், சம்சார்யம் வாங்காமல் காம்பு வீங்குதே” என்று எழுதியவன் முன்னவரை நல்லவனாக்கிவிடுகிறனல்வா. இதையே துட்டகேமுனு ராஜபக்ஷே சம்பவத்தில் பொருத்துங்கள்.
இன்னுமொரு இருநூறு ஆண்டுகள் சென்று இரு சிங்களர்கள் இப்படிப் பேசினாலும் பேசிக் கொள்ளலாம் (சிங்களத்தில்). முதலாமவன்: “துட்டகேமுனு என்று ஒரு மகாராஜா இருந்தார் தெரியுமா? தமிழர்களை என்னமாய் ஒடுக்கினார்.” இரண்டாமவன்: “மடையா, ராஜபக்ஷே என்று ஒரு அதிபர் இருந்தார், அவரது கால் தூசுக்குப் பொற மாட்டான் இந்த துட்டகேமுனு.”
ஆம் நண்பர்களே, ராஜபக்ஷேவை இரண்டாம் துட்டகேமுனு என்று அழைப்பதை இன்றுடனாவது நிறுத்துங்கள். வேண்டுமானால் துட்டகேமுனுவை இரண்டாம் ராஜபக்ஷே என்று அழைத்துக் கொள்ளுங்கள். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், “துட்டகேமுனு நல்லவன்”. எங்கே, என்னோடு சேர்ந்து எல்லோரும் குரலெழுப்புங்கள்… “வாழ்க துட்டகேமுனு…”
என்னமோ போடா மாதவா – 16/05/2009
2:45 முப இல் மே 16, 2009 | அங்கதம், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: அரசியல்வாதி, அலுவலகம், ஓட்டு, குறுஞ்செய்திகள், கோதானம், சுய இன்பம், செல், ஜோசியம், தெலுங்கு, நாடி, பரிகாரம், மாணவர்கள்
சொல்லுங்க எசமான், நான் செல்போன் திருடனா?
கடந்த வாரம் வேலையில் மும்முரமாக மூழ்கியிருந்த நேரத்தில் நண்பன் ஒருவனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்த பெண்மணி தெலுங்கில் பேசியதால் நண்பண் என்னிடம் தொலைபேசியைக் கொடுத்துப் பேசச் சொன்னான். உரையாடல் மொத்தமும் தெலுங்கில், உங்கள் வசதிக்காக தமிழில் பெயர்த்திருக்கிறேன். எதிர்முணை அம்மணி “புருஷோத்தமன் இருக்காரா” என்றார். “இல்லைம்மா, என் பேரு குமார்” என்றேன் (நண்பனின் தொலைபேசி என்பதால் அவன் பேசுவது போலவே பேசினேன்). “பொய் சொல்லாதீங்க, நீங்க புருஷோத்தமன் தானே!” என்று மறுபடியும் கேட்டாள் எ.மு. அம்மணி. கொஞ்சம் சுதாரித்து, “உனக்கு என்ன நம்பர்மா வேணும்” என்றேன். அப்போதும் “இந்த நம்பர் தான், நான் சரியாத்தான் போட்டேன்” என்றார். “இல்லையம்மா, நான் புருஷோத்தம் கெடையாது போன வை” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன்.
இரண்டே நிமிடத்தில் அதே எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு. குமார் இம்முறையும் என்னிடமே கொடுத்தான். பொத்தானை அழுத்திக் காதில் வைத்தால் “புருஷோத்தமன் சார், வெளையாடுறீங்க தானே” என்று அதே அம்மணி. “இல்லையம்மா, நீ தப்பான நம்பர் போட்டு பேசிக்கிட்டிருக்கே, போன வை” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன். போனைக் குமாரிடம் கொடுக்குமுன்பே மறுபடியும் அதே எண்ணிலிருந்து இன்னொரு அழைப்பு. “நம்பர் புருஷோத்தமனோடது தான், ஆனா அவரு போன நீங்க ஏன் வைச்சிருக்கீங்க” என்று போட்டாளே ஒரு போடு, உஷ்ணம் தலைகேறி “நோரு முயி (வாய மூடு). நேனு புருஷோத்தமன் காது, காது, காது…. ரெண்டு சாரி செப்பேனுகா… கட் ச்செய்…” என்று நான் கத்திய கத்தலில் சுற்றியிருந்த பத்துப் பதினைந்து பேரும் தங்கள் அலுவல் மறந்து சிரித்தனர். அதிலொருவர், “நம்பரக் குடு நயனா, வீட்ல தனியாதான் இருக்கேன்” என்றதும் மீண்டும் ஒருமுறை வெடிச் சிரிப்பு.
அவளாவது என்னை “செல்” திருடனாக்கினாள், இன்னொருவர் என்னை தரகனாகவே ஆக்க நினைத்துவிட்டார். சொல்லுங்க எசமான், நான் “செல் திருடனா”?
எஸ்.எம்.எஸ்.
நண்பர்களே, இது அந்தப் படத்தைக் குறித்த விஷயமல்ல. ஆந்திரத் தேர்தல் முடியும் வரை நான் அனுபவித்த கொடுமை. ஒவ்வொரு நாளும் ஆந்திராவின் முக்கியத் தலைவர்களிடமிருந்து என் தொலைபேசிக்கு ஓட்டுக் கேட்டுக் குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருந்தது (என்னைப் போல நெறைய பேருக்கு அனுப்புனாங்கன்னு தனியா வேற சொல்லனுமா…). “வேலையிழந்த இளைஞர்களே, (அடப் பாவி, என்ன இன்னும் வேலைய உட்டுத் தூக்கலடா) உங்கள் வேலைக்கு உத்திரவாதம் தரும் ஆட்சியை அமைக்க எனக்கு வாக்களியுங்கள் – உங்கள் சந்திரபாபு”, “வளாமான ஆந்திராவை உருவாக்க காங்கிரஸ் இயக்கத்துக்கு வாக்களியுங்கள் – உங்கள் ஒய்.எஸ்.ஆர்.”, “நான் விபத்திலிருந்து குணமாகி வர உங்கள் அனைவருடைய அன்பும் பிரார்த்தனைகளுமே காரணம். மிக்க நன்றி. – உங்கள் ஜூனியர் என்.டி.ஆர்”, தேர்தல் முடியும் வரை இவ்வாறாக நாளொன்றுக்கு நான்கைந்து குறுஞ்செய்திகள் வந்த வன்னமிருந்தன. இன்னைக்கு முடிவுகள் வெளியான பிறகு ஜெயிச்ச கட்சிக்காரனுங்க நன்றி சொல்லி வேற சாகடிப்பானுங்களே (சொல்லுவானுங்க?), நான் என்னாத்த செய்வேன்…. தமிழ்நாட்டு சொந்தங்களே, உங்களுக்கு இது மாதிரி எதுவும் வரலியா? ஈரோட்டுத் தாத்தா அப்பவே சொன்னாரு “ஓட்டுன்னா எத வேணாலும் தருவான். பொண்டாட்டியத் தவிற” அப்படீன்னு. எனக்கென்ன வருத்தம்னா அவரு சொன்னத இவனுங்க பொய்யாக்கிருவானுங்களோன்னு தான். அட, திருந்திட்டாப் பரவாயில்லீங்க, பொண்டாட்டியையும் குடுத்துட்டானுங்கன்னா?.
இதுவும் ரிசல்ட்டு மேட்டர்தான்
அரசியல்வாதிகளைப் போலவே ரிசல்ட்டுக்குக் காத்திருந்த இன்னொரு கூட்டம் மாணவர் கூட்டம். இவுங்க பதட்டம் ரெண்டு நாளைக்கு முன்னயே தணிஞ்சிருச்சு. முதலிடத்தில் மூன்று மாணவர்கள், ஒரு மாணவி. கேட்கவே மகிழ்ச்சியாயிருக்கிறது. தெனமும் ஒரு கிழம் (இதுக்கு மரியாத வேறயா) ராஜ் டிவில “சுய இன்பத்தால வீணாப் போகாதீங்கடா. தமிழ்நாட்ல ஒரு மாணவன் கூட ஏன் மொதலிடம் வரமுடியல? எல்லாரும் கைப்பழக்கத்தால வீணாப் போறானுங்க” என்று தினந்தோறும் ஒப்பாரி வைக்கும். என்னமோ தமிழ்நாட்டுல அத்தன பயலும் இருபத்திநாலு மணி நேரமும் கைல புடிச்சிக்கிட்டு அலையிற மாதிரி ஒரு பில்டப் குடுத்துக்கிட்டிருந்துச்சு. ஒருத்தனுக்கு மூணு பேரு மொதலிடத்துக்கு வந்திருக்காங்க. சேலம் வரைக்கும் போய் அது மூஞ்சில யாராவது கரியப் பூசிட்டு வாங்களேன்.
என்ன கூத்துடா இது?
இந்த ஜோசியக் காரணுங்க முன்னையெல்லாம் விதவிதமா தோஷத்துக்குப் பரிகாரம் சொல்லுவானுங்க. இப்போ இவனுங்களும் ரொம்ப ஹைடெக்கா மாறிக்கிட்டிருக்கானுங்க. முந்தாநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு விஜய் டிவியில ஒருத்தன் பரிகாரம் சொல்லிக்கிட்டிருந்தான் “ஆள் காட்டி வெரல்ல மச்சமிருக்கவனுக்கெலாம் அல்ப ஆயுசாம். அதுக்காகத் திருவண்ணாமலை கோயில்ல இருக்க சித்திரகுப்தன் செலைக்கு முன்னால ரெண்டு நோட்டும் ரெண்டு பேணாவும் வாங்கி வைங்கடாங்கறான். விட்டா ஒரு லேப்டாப்ப வாங்கி எனக்கு அனுப்பி வைங்கடான்னு சொன்னாலும் சொல்லுவானுங்க. ஆறு ஏழு மாசத்துக்கு முன்னால என் நண்பன் ஒருத்தன் ஏதோ ஒரு நாடி ஜோதிட வெப்சைட்டப் பாத்துட்டு கைய ஸ்கேனர்ல வச்சு படத்த அந்த நாடிஜோதிட கம்பெனிக்கு அனுப்பி வைச்சான். ரெண்டு நாள் கழிச்சு ஒரு ரிப்ளை வந்திருந்துச்சு “தங்களது நாடியை ஆராய்ந்து பார்த்ததில், நீங்கள் கோதானம் கொடுத்தால் தங்களது தோஷங்கள் விலகி இன்னல்கள் தீரும் என்று தெரிய வந்துள்ளது. மாட்டின் விலையான பன்னிரண்டாயிரத்தை டிடி எடுத்து அனுப்பினால் உங்கள் சார்பில் நாங்களே கோதானம் கொடுத்துவிடுவோம். மாட்டைப் பெற்றுக்கொள்ள நாங்களே ஆட்களை ஏற்பாடு செய்துகொள்வோம்” என்று ரிப்ளையில் கண்டிருந்தது. படித்துப் பார்த்த நண்பன் சத்தமாக “ஓ” போட்டான்… (__த்தா) அடைப்புக் குறிக்குள் கோடிட்ட இடத்தில்.
நம்முடைய கவலையெல்லாம்…
9:07 முப இல் ஏப்ரல் 12, 2009 | அங்கதம், அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: கலைஞர், கையறு நிலை, தேர்தல் முடிவுகள்
ஈழத் தமிழினத்தின் மீதான உண்மையான அக்கறையுடன் (?!) கலைஞரவர்கள் தற்போது பேசி வருகிறார். நம்முடைய கவலையெல்லாம் கலைஞரவர்களைக் குறித்தே சுற்றிவருகிறது. ஈழத்தில் இரண்டு விதமான விளைவுகளே நடக்க வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளார். ஈழம் அமைவது அல்லது விடுதலைப் புலிகள் வீழ்வது. இரண்டாவது விளைவு, அதாவது விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளபடியே வரவேற்கத்தக்க விஷயம்.
கலைஞரைப் பொறுத்த அளவிலே பிரபாகரன் கவலைக்குரிய கட்டத்தில் இருக்கிறார். ஆனால் நமக்கோ பிரபாகரனைவிடவும் கலைஞரே பெரிய கையறு நிலையிலிருப்பதாகத் தோன்றுகிறது. ஈழ விவகாரத்தில் இரண்டே விதமான விளைவுகளை அவதானிக்க முடிந்தவர்களால் கூடத் பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு எத்தனை விதமான விளைவுகள் ஏற்படும் என்று அவதானிக்க முடியாது. இருந்தாலுல் சில விதமான விளைவுகளின் போது அதைத் தொடர்ந்து என்ன நடைபெறலாம் என்று பார்க்கலாம்.
தேர்தலில் இந்தியா முழுவதும் (தமிழகம் உட்பட) காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான தொகுதிகளைப் பெறலாம். அவ்வாறாயின் கலைஞரின் நிலைமையில் யாதொரு மாற்றமும் இல்லை. செல்வாக்குள்ள அமைச்சர் பதவிகளைக் கேட்டுப் பெறுவார். இங்கே மீண்டும் “அமைச்சரவையில் காங்கிரசுக்குப் பங்கு” என்ற கோஷம் ஒலிக்கும். உடல்நிலையையும் கருத்தில் கொள்ளாமல் டெல்லிக்கு விமானம் ஏறுவார். சோனியாவைச் சந்தித்துத் திரும்புவார். இங்கே அமைச்சரவையில் பங்கு என்ற கோஷம் ஆறிப் போன பூரியாக அமுங்கிவிடும்.
அடுத்தபடியாக காங்கிரசுக்கு இந்தியா முழுவதும் பெருவாரியான இடங்கள் கிடைத்து தமிழகத்தில் திமுக பெருவாரியன இடங்களில் தோற்கலாம். அப்போது ஒன்று அல்லது இரண்டு அமைச்சர்களுடன் கலைஞர் அமைதியாகலாம். அந்த நேரத்தில் 2004ல் நாற்பதையும் வென்று தந்தவன் என்ற பழைய பெருமையெல்லாம் அப்போது வேலைக்காகாது. தமிழகத்திலும் “ஆட்சியில் பங்கு” கோஷம் மீண்டும் தலையெடுக்கும். டெல்லி மேலிடத்திலும் “கொடுதால்தான் என்ன” என்பார்கள். ஐந்து பதவிகள் என்ற பழைய கணக்கையெல்லாம் அப்போது சொல்ல முடியாது. பத்திலிருந்து பதினைந்து அமைச்சர்கள் வரை கொடுத்தே ஆக வேண்டும். அப்போதுதான் 2011 வரை கலைஞரின் நாற்காலியில் நாலு காலும் தரையிலிருக்கும்.
காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்ற முடியாமல் போகலாம். இலவச டிவி, ஒரு ரூபாய் அரிசி உள்ளிட்ட சாதனைகளைச் சொல்லித் தமிழகத்தில் திமுக பெரும்பாலான தொகுதிகளை வென்றிருக்கலாம். இப்போது கலைஞர் முன்பு இரண்டு வாய்ப்புகள். வசதியாக ஆட்சியமைக்கும் கூட்டணியிடம் சரணடையலாம். ஆட்சியமைப்பது பாஜக வாக இருந்தால், உடனடியாகத் தனது ஆதரவைக் கொடுத்துவிடவும் முடியாது. காங்கிரசுக்கு மாற்றாக திமுக வை ஆதரிக்க பிஜெபி யிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. அதனால் 2011 வரை பொறுமையாக இருக்க வேண்டும். டெல்லி ஆட்சிக்கு கலைஞரின் தயவு தேவையில்லை என்பதாலும் மீண்டும் “ஆட்சியில் பங்கு” என்ற கோஷம் ஒலிக்கும். இப்போது திமுக வின் குடுமி மட்டும்தான் காங்கிரஸ் வசம். கொடுத்துதான் ஆகவேண்டும், இன்னும் இரண்டாண்டு ஆட்சி மிச்சமிருக்கிறதே.
மூண்றாவது அணி ஆட்சியமைக்கலாம். அப்போதும் காங்கிரஸ் தரப்பிலிருந்து “ஆட்சியில் பங்கு” கோஷம் எழுப்பப்படலாம். காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்காவிட்டால் அப்போதும் சிக்கல்தான். அத்துடன் இன்னொரு சிக்கலையும் திமுக சந்திக்க வேண்டும். மூண்றாவது அணியில் செல்வாக்கு மிக்க அதிமுக தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க நிர்பந்திக்கலாம். ஆட்சிக் கலைப்புக் கோரிக்கைக்கு மூண்றாவது அணி ஆட்சி செவிசாய்த்தால் அப்போதும் கலைஞருக்கு சிக்கலே. திமுக வின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை இந்த நேரத்தில் முக்கியமாகிறது. அதிமுக வை விட அதிகமாக அல்லது சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருந்தால் மூண்றாவது அணிக்கு ஆதரவளித்துவிட்டு பாமக, மதிமுக ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு மாநில ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.
மேற் சொன்ன விளைவுகள் ஏதொன்று நடந்தாலும் கலைஞருக்குப் பெருத்த சங்கடமே காத்திருக்கிறது. அதுவும் காங்கிரஸ் கட்சியின் வடிவத்தில். ஆகவே கலைஞரின் நலவிரும்பிகளாகிய நாம் காங்கிரஸ் கட்சியிடம் வைக்கும் கோரிக்கையெல்லாம் “தேர்தலுக்குப் பிந்தைய விளைவுகள் எத்தகையதாக இருந்தாலும், கலைஞருக்குத் தேர்தலுக்கு முன்பு கொடுத்த அதே மரியாதையைக் கொடுக்க வேண்டும்” என்பதுதான்.
திமுக அபிமானிகளே, பதிவை நன்றாகப் படியுங்கள். ஒரு இடத்தில் கூட கலைஞரைக் கருணாநிதி என்று குறிப்பிடவில்லை.
[தமிழீஷ்] | [தமிழ்மண ஆதரவு] | [தமிழ்மண எதிர்ப்பு] |
தொடர்புடைய பதிவுகள்:
1. குளோபன்: பிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி பேச்சுக்கு எனது பின்னூட்டங்கள்
2. வினவு: கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்!
3. குண்டுமணி: புலிகளும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அழிந்துவிட்டதா..?!
4. என்வழி: கருணாநிதியின் விஷமத்தனம் – பழ. நெடுமாறன்
தொடுப்புகளில் உள்ள பதிவுகளின் உள்ளடக்கங்கள் அவற்றை எழுதியவர்களில் சொந்தக் கருத்து.
மக்களே, தமிழக மக்களே
11:35 முப இல் ஏப்ரல் 10, 2009 | அங்கதம், அரசியல் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: தேர்தல், நான் அரசியல்வாதி, பாடல், பிச்சைப் பாத்திரம்
காங்கிரஸ் கட்சி “ஜெய் ஹோ” பாடலை தங்களது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தி வருகிறது. சளைக்காமல் பா.ஜ.க.வும் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு பிரச்சாரப் பாடலை உருவாக்கியுள்ளது. இவர்களில் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பவிருக்கும் மக்களுக்காக எந்த பாடலும் இல்லை. அந்த வேதைனையின் விளைவாய் உருவானதே இப்பாடல். அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் பாடல். ரீமிக்ஸ் எழுதியும் வெகுநாளாகிவிட்டதால், ரீமிக்ஸ் எழுதவும் என்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இப்பாடலை எழுதியுள்ளேன். எனக்கு இசையமைத்துத் தந்த இசைஞானிக்கு (?!) இந்த நேரத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!! இனி தொடர்வது பாடல்…
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே – நாங்கள்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே…
தேர்தலென்னும் செலவோடு செல்வாக்கும்
வசதியும் இணைத்தொரு பதவி தரும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே (2)
ஐந்தே ஆண்டுகளில் வந்ததே… – தேர்தல்
ஆணையம் தலைவலி தந்ததே… (2)
உண்மையை நீரறியாததால்… (2)
சிறுபொம்மையாய் உமையெண்ணி
உம்மிடம் உம்மிடம்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே (2)
அத்தனை கட்சியும் கூட்டணியில் – எனக்
கெத்தனை தொகுதிகள் தமிழகத்தில்… (2)
வெறும் நோட்டுகள் உள்ளது என்னிடத்தில்
வேண்டிய ஓட்டுகளோ அது உம்மிடத்தில்
ஒருமுறையா இருமுறையா
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
அலையவிட்டாய்
பணம் கொடுத்தேன்
பொருள் கொடுத்தேன்
பதவியில் எனைக் கொண்டு
அமரவைத்தாய்
செலவுக்குக் கணக்கு கேட்டு
தேர்தலாணையமும் துரத்துதே
தேர்தல் நிதி நிதி நிதி என்று
வசூலுக்கு சென்று மனம் சலித்ததே
கரண்சிகளை நீட்டுவோம் – ஓட்டு
எங்களுக்கே போடுவீர்
உம் திருக்கரம் எங்கள் சின்னம்
தொடுவதில் எதிர்காலம்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே
தேர்தலென்னும் செலவோடு செல்வாக்கும்
வசதியும் இணைத்தொரு பதவி தரும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே
சவுண்ட் மிக்சிங்கில் நல்ல ஞானமுள்ளவர்கள் யாராவது இப்பாடலை இசையுடன் இணைத்துத் தந்தால் மிக்க மகிழ்ச்சி. அவ்வாறு செய்தால் எனக்கும் ஒரு காப்பி அனுப்பி வைக்கவும். இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஓட்டளிக்க மறந்துவிடாதீர். 🙂 ஹி ஹி எல்லாம் ஒரு வெளம்பரந்தான்…
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.