கொலை வெறிக் கவிதைகள் – 6
6:32 பிப இல் ஓகஸ்ட் 2, 2009 | அனுபவங்கள், கவிதை, கவிதையைப் போல், படங்கள் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: குடை, பள்ளிக் காலம், பிரிவு, மழை
நல்ல மழை அன்று,
உன் பூப்போட்ட குடையுடன்
பள்ளியிலிருந்து புறப்பட்டாய்.
உன் குடைக்குள்
எனக்கும் ஒரு இடம் தேடி
கையிலிருந்த குடையை
சட்டைக்குள் பதுக்கினேன்.
வேண்டுமென்றே உனக்கு முன்னால்
நனைந்தபடியே ஓடியபோது,
எதிர்பார்த்தபடியே என்னை
விரல் சொடுக்கி அழைத்தாய்.
நீ குடையைப் பகிர்ந்துகொண்டாய்
நான் நனைதலைப் பகிர்ந்துகொண்டேன்,
குடைக்குள் மறையாத
நம் உடல் பாகங்களில் எல்லாம்
மேகங்கள் தூவிய அட்சதைகள்…
என்ன அது… சட்டைக்குள்?
அதுவா, அக்கவுண்ட்ஸ் நோட்.
பொய்யில் உடைந்தது அந்த
மழை நேர மௌனம்.
என் வீதித் திருப்பத்தில்
நம்மிருவர் வழியும் வேறானது…
வீதிக்குள் நுழைந்ததும்
மறைத்த குடையை
விரித்துப் பிடித்தேன்…
வீட்டை நெருங்கிய நொடிகளில்
தற்செயலாகத் திரும்பியபோது
விழியெல்லாம் நெருப்பாக நீ…
அப்பட்டமாய்ப் புரிந்தது
உன் விழிகளின் மொழி…
திருட்டுப் பயலே…
சொல்றா மணியா – 25/07/2009
5:03 பிப இல் ஜூலை 25, 2009 | அங்கதம், அனுபவங்கள், அரசியல், கருணாநிதி, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: அப்துல்கலாம், எடியூரப்பா, கருணாநிதி, காண்ட்டினெண்ட்டல், சர்வக்ஞர், திருவள்ளுவர்
திருவள்ளுவர் vs. சர்வக்ஞர்
பண்ட மாற்று முறையில் கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலையும் தமிழ்நாட்டில் சர்வக்ஞர் சிலையும் நிறுவப்பட உள்ளது. கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத் தேர்தலை முன்னிட்டு சிலை திறப்புத் தேதி உறுதியாகத் தெரியவில்லை. திருவள்ளுவரைக் குறித்து நமக்கு அறிமுகம் தேவையில்லை. சர்வக்ஞர் என்ற கன்னட கவிஞரைப் பற்றி எடியூரப்பா கோபாலபுரம் வந்து போன பிறகுதான் நமக்கெல்லாம் தெரிகிறது. அத்தினி, சித்தினி, பத்மினி போன்ற பெண் வருணனைகளையும், வீரசைவப் பெருமை பேசுகிற சுயசாதி பெருமைப் பாடல்களையும் எழுதிய பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் சர்வக்ஞர். திருவள்ளுவருக்கு எதிராக அறிவார்ந்த ஆளுமையாக முன்னிறுத்த கன்னடர்களுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. எடியூரப்பா இப்படி ஒரு கோரிக்கையை வைத்த பிறகு கோபாலபுரத்தார் என்ன கேட்டிருக்க வேண்டும்? “சரிப்பா, நீ சொல்ற படி சர்வக்ஞர் சிலையை தமிழ்நாட்டில வைக்கிறோம். திருவள்ளுவர் சிலையக் கூட திறக்க வேண்டாம், ஒரே ஒரு பெரியார் சிலைய நாங்க அல்சூர் ஏரிக்கரைல வச்சிக்கிறோம், டீல் ஓகேவா” என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். [கடைசிக் கட்ட செய்தி: ஆகஸ்ட் 9ம் தேதி சிலையைத் திறக்க தேர்தல் ஆணையம் அனுமதி.]
காண்டினெண்ட்டல் vs. கலாம்
காண்டினெண்ட்டல் நிறுவனம் அப்துல்கலாமை சோதனை செய்து விமானத்தில் அனுமதித்தது நாடாளுமன்றம் வரை எதிரொலித்திருக்கிறது. இந்தியத் தலைவர்களுக்கு இது புதிதல்ல, ஆனால் இந்தியாவிலேயே நடந்திருப்பதுதான் புதுமை. குடியரசுத் தலைவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தால் அதைப் பற்றிப் பாராட்டிப் பேசுகிறவர்கள், எல்லோரையும் போல பாதுகாப்புச் சோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் என்ன தவறு. சாதாரண மக்களுக்குச் செய்யப்படும் பாதுகாப்புச் சோதனைகள் ஒரு குடியரசுத் தலைவருக்குச் செய்யப்படும் போது அது அவமாணகரமானதாகக் கருதப்படுகிறது எனில் அதே சோதனை முறை கண்ணியமானதா என்ற கேள்வியல்லவா பிரதானமாகி இருக்க வேண்டும். ஸ்கேனர் கருவிகளைக் கொண்டு பயணி எதையாவது மறைத்து எடுத்துச் செல்கிறாரா என்று சோதிக்க முடிந்தாலும் ஆடைகளை எல்லாம் களைந்து சோதிக்கிற முறை கண்ணியமானதா? இப்படி ஒரு சோதனை ஒரு குடியரசுத் தலைவருக்கு நேர்வது மட்டுமா அவமானம்? இந்திய இறையாண்மை இந்தியர்களின் மானத்திற்கும் மரியாதைக்கும் முதலில் உத்திரவாதம் அளிக்கட்டும்? அதற்குப் பிறகு எதிர்த்துப் பேசுவோர் மிது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீட்டட்டும்.
ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா
டிவியப் போட்டா ஒரே களேபரம். எங்க பாத்தாலும் ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா? ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா? ன்னு. பண்றது சோப்பு வெளம்பரம். அதுக்கு எதுக்குடா ஸ்ரேயா எங்க வீட்டுக்கு வரனும். எட்டுதோ எட்டலியோ, என் முதுகுல என் கையாலதான் சோப்பு போடனும். அந்தப் புள்ளையா வந்து சோப்பு தேய்க்கப் போகுது. அவனவனுக்குப் போன கரண்ட்டு எப்போ வருமான்னே தெரியல, இதுல ஸ்ரேயா என் வீட்டுக்கு வந்தா என்ன வரலேன்னா என்ன? (இந்த லக்ஸ் விளம்பரம் தமிழ்நாட்டுல வருதான்னு தெரியலைங்கோ!!! நான் பாத்த தெலுங்கு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நிமிடத்துக்கு ஒரு முறை வருவாங்களா வருவாங்களான்னு கேட்டுக்கிட்டே இருக்கானுங்க.)
என்னமோ போடா மாதவா – 10/07/2009
9:38 பிப இல் ஜூலை 9, 2009 | அங்கதம், அனுபவங்கள், அரசியல், சோதனை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: ஆண்மைக் குறைவு, ஓரினச் சேர்க்கை, சானியா மிர்சா, சோதனை முயற்சி, தமிழ்மணம், லாலுபிரசாத்
தமிழ்மணக் கருவிப்பட்டை | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
லபூப்-ஈ-சகீர்
தமிழக அரசு நிறுவனமான டாம்ப்கால் ஆண்மைக் குறைவுக்கான மருந்து ஒன்றைத் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. அரைக் கிலோ மருந்துக்கு நூற்றைம்பது ரூபாய்க்கும் குறைவாக விலை நிர்ணயம் செய்துள்ளார்கள். சட்டமன்றக் கூட்டத் தொடர் நடப்பதால் அங்கே செய்தி சேகரிக்க வருகிற நிருபர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளில் லபூப்-ஈ-சாகரும் அடக்கம். யுனானி முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தாம். ஒரு அரசாங்கம் இது மாதிரி மருந்துகளைத் தயாரித்து விற்கலாமா என்றும் கேள்விகளும் எழுந்துள்ளன. அரசாங்கம் சாராயம் விற்பதைவிட மக்கள் ஏமாறாமல் இருப்பதற்காக ஆண்மைக் குறைவு மருந்து விற்பதில் தவறு ஒன்றும் இல்லை. தொன்னூறு வகையான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிற டாம்ப்கால் நிறுவனத்தின் லாபம் இந்த ஒரு பொருளால் இருமடங்காகப் பெருகியிருப்பது குறிப்பிடத் தக்கது. இனிமேலாவது ஒரு மாத மருந்து மூவாயிரம், மூண்று மாத மருந்து பத்தாயிரம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கிற மருத்துவர்கள் எல்லாத்தையும் மூடிக் கொண்டு சும்மா இருப்பார்களா பார்ப்போம்.
லாலுவின் பரந்த மனது
ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய லாலு ஒரு மிகப்பெரிய உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அமைச்சர்கள் யாராலும் சொன்னதைச் செய்ய முடியாது என்பதுதான் அந்த உண்மை. “கடந்த முறை நான் ரயில்வே அமைச்சராக இருந்த போது பாட்னா ரயில் நிலையத்தை முன்மாதிரி ரயில்நிலையமாக மாற்றுவேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அமைச்சராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அதை என்னால் செய்ய முடியவில்லை. ஆகவே அரசு வெளியிடுகிற எந்த அறிவிப்பையும் மக்கள் நம்ப வேண்டிய கட்டாயம் இல்லை” என்று தனது பேச்சின் போது குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையை மக்களுக்குக் கூறிய காரணத்துக்காகவே லாலுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சானியா நிச்சயதார்த்த வைபோகமே
எனக்காகப் பிறந்த சானியா இன்னொருவரை மணப்பதை என்னால் அனுமதிக்க முடியாது என்று சானியாவின் வீட்டுக்குள் புகுந்த பெங்களூர் இளைஞர் சமீபத்தில்தான் கைது செய்யப்பட்டார். இந்த லிஸ்ட்டில் இன்னொரு இளைஞரும் உண்டு, ஆனால் அவரைக் குறித்த தகவல்கள் தெரியவில்லை. இதனிடையே இன்று சானியாவின் திருமண நிச்சயம் ஹைதராபாத் “தாஜ் கிருஷ்னா” ஹோட்டலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சானியாவின் உடை நிறமென்ன, முக்கியஸ்தர்கள் யார் யார் இந்த விழாவுக்கு வருகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. காரணம் அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே ஹோட்டலுக்குள் நுழைய முடியும். பத்திரிகையாளர்களுக்குக் கூட அனுமதி இல்லையாம். மிகுந்த சிரமத்துக்குப் பிறகு “சானியா இவ்விழாவில் பச்சை நிற ஷரோரா அணிந்து வருவார்” என்று சாக்ஷி டிவியின் பெண் நிருபர் ப்ளாட்பாரத்தில் நின்றபடியே தொலைகாட்சியில் லைவாகப் சொல்லிக் கொண்டிருந்தார். நூற்றைம்பது உணவு வகைகள் பறிமாறப்பட உள்ளன. இவற்றுள் பிரியாணி மட்டும் பதினைந்து வகை. மாப்பிள்ளை ஹைதராபாதின் பிரபல ஹோட்டல் நிறுவன முதலாளியின் மகனாம்.
ஓரினச் சேர்க்கை
ஓரினச் சேர்க்கையைத் தண்டனைக்குறிய குற்றம் என்று கூறுகிற சட்டப்பிரிவை நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கிடையே குஜராத் அமைச்சர் ஒருவர் இந்தியா முழுவது ஓரினச் சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டாலும் குஜராத்தில் அதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். புரியாமல் பேசியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஓரினச் சேர்க்கை சரியா தவறா என்பதல்ல இப்போதைய விவாதம். அது தண்டனைக்குரிய குற்றமா இல்லையா என்பது மட்டுமே அலசப்பட்டு வருகிறது. அதற்குள் கலாச்சாரக் குண்டர்களுக்கும் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களுக்கும் முட்டல் ஆரம்பித்துவிட்டது. ஒரு முடிவு தெரியும் வரை நமக்குப் பொழுதுபோக்கிற்குப் பஞ்சமிருக்காது. ஸ்டார்ட் ம்யூஜிக்… டிஞ்சக்கு டிஞ்சக்கு டிஞ்சக்கு டிங் டிங்…
சோதனை முயற்சி
ஒரு சோதனை முயற்சியாக இந்தப் பதிவுடன் தமிழ்மணத்துக்கான கருவிப்பட்டை ஒன்றைத் தயாரித்து இணைத்திருக்கிறேன். இங்கே தமிழ்மணத்தின் முத்திரையுடன் தமிழ்மணம் வழங்கும் பதிவு சார்ந்த பிற சேவைகளுக்கான சுட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மென்நூல், வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் பதிவுகள் ஆகியவற்றுக்கு உங்கள் வலைப்பதிவு முகவரியே போதும். பதிவைத் தமிழ்மணத்தில் இணைக்க உங்கள் இடுகையின் முகவரியை ஹைப்பர்லிங்க் ஆகக் கொடுக்க வேண்டும். ஆதரவு மற்றும் எதிர் வாக்குகளுக்கு பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்த பிறகு அங்கே வழங்கப்படும் போஸ்ட் ஐடி எண்ணை அதற்குரிய இடத்தில் வழங்கவேண்டும். இருந்தும் ஒரே ஒரு குறை, உங்களுக்கு எத்தனை வாக்குகள் விழுந்தது என்பதை இந்தக் கருவிப்பட்டையைக் கொண்டு தெரிந்துகொள்ள முடியாது. உங்கள் இடுகைகள் சூடான இடுகையானால் தமிழ்மண முகப்பில் பார்த்துத் தெரிந்து கொள்ள இயலும்.
தமிழ்மணக் கருவிப்பட்டை | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
ஊடகப் பொறுப்பின்மை
4:02 முப இல் ஜூன் 17, 2009 | அனுபவங்கள், பகுக்கப்படாதது, படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: ஊடகம், குற்றம் நிகழ்ச்சி, பொறுப்பின்மை, விஜய் டிவி
விஜய் டிவியின் “குற்றம் – நடந்தது என்ன?” நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்க முடியாவிட்டாலும் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் முழுமையாகப் பார்ப்பதுண்டு. சமீபத்தில் குழந்தைகள் கடத்தி விற்கப்படுவது குறித்த செய்தித் தொகுப்பு ஒன்று அந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த கண்ணன்-சுசீலா தம்பதியரின் குழந்தையை தனமணி என்பவர் கடத்திச் செல்ல முற்பட்டும் அது தொடர்பிலான விசாரனையில், இது பெரிய அளவிலான குழந்தை வணிகமாக இயங்கி வருவதும் தெரியவந்தது. இதே செய்தி ஜூன்-14 தேதியிட்ட ஜூனியர் விகடன் செய்தி ஏட்டிலும் வெளிவந்திருந்தது.
இதில் தனமணி சந்தேகத்துக்கு இடமின்றி குற்றவாளிதான் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. தனமணியின் குற்றத்தை நியாயப்படுத்தும் நோக்கிலும் இப்பதிவு எழுதப்படவில்லை. தொடர்ந்து விஷயத்துக்குள் செல்வதற்கு முன் இதனைத் தெளிவுபடுத்துவது எனது கடமையாகிறது.
ஒருவர் குற்றவாளி என்பதாலேயே அவர் மீது எத்தகைய அவதூறை வேண்டுமானாலும் சொல்லிவிட முடியாது, சொல்லவும் கூடாது. ஆனால் தனமணி விஷயத்தில் விஜய் டிவி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது என்றுதான் எண்ண வேண்டியுள்ளது. திருச்சி லால்குடி அருகிலுள்ள பெருவளநல்லூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மனைவிதான் தனமணி. ராமச்சந்திரனின் மறைவுக்குப் பின் பிழைப்புத் தேடி தனமணி கோவைக்குச் சென்றுவிட்டார். அங்கே அபிராமன் என்பவரை இரண்டாவது கணவராகத் திருமணம் செய்து கொண்டார். ஜூனியர் விகடனில் இச்செய்தி விரிவாக வந்துள்ளது. இதே செய்தி விஜய் டிவியில் முற்றிலும் வித்தியாசமாக எப்படி வந்தது என்பதையும் பார்ப்போம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனமணியைக் குறித்துச் சொல்லும்போது, “இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர் தனமணி” என்று மட்டுமே தனமணியின் மணவாழ்க்கை குறித்துக் கூறப்பட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சியை மட்டுமே பார்க்கிறவர்கள், தனமணி முதல் கணவன் உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தவள், நடத்தை கெட்டவள் என்றுதான் எண்ண நேரும்.
செய்தியின் முக்கியப் பகுதி குழந்தைகள் கடத்தி விற்கப்பட்டதைக் குறித்த அலசல். அதில் தனமணி எத்தனை முறை திருமணம் செய்தவர் என்பது சொல்லத் தேவையில்லாத விஷயம். அப்படிச் சொல்லியே ஆகவேண்டும் என்று நினைத்திருந்தால், உண்மையான அல்லது முழுமையான விபரங்களை மக்களுக்கு அறியத் தந்திருக்க வேண்டும். விஜய் டிவி இந்த குறைந்தபட்ச நியாயத்தை, நாகரிகத்தைக் கூடக் கடைபிடிக்கவில்லை.
சந்தேகத்துக்கு இடமின்றி தனமணி குற்றமிழைத்தவர் என்பதாலேயே விஜய் டிவி அவர் மீது அவதூறு சுமத்தியது எவ்விதத்தில் நியாயம்? என் மனதிலிருக்கிற இந்தக் கேள்வியோடு இப்பதிவை முடிக்க விரும்பினாலும், இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் அல்லது தொகுப்பாளர் கோபி ஆகியோருடன் தொடர்பிலிருப்போர் இவ்விஷயத்தை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் அவர்களின் தரப்பையும் அறிய ஏதுவாகும். அவர்களிடமிருந்து பதில்கள் வந்தால் அவை யாதொரு திருத்தமுமின்றித் தனிப்பதிவாக வெளியிடப்படும்.
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.