கொலை வெறிக் கவிதைகள் – 6

6:32 பிப இல் ஓகஸ்ட் 2, 2009 | அனுபவங்கள், கவிதை, கவிதையைப் போல், படங்கள் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

நல்ல மழை அன்று,
உன் பூப்போட்ட குடையுடன்
பள்ளியிலிருந்து புறப்பட்டாய்.

உன் குடைக்குள்
எனக்கும் ஒரு இடம் தேடி
கையிலிருந்த குடையை
சட்டைக்குள் பதுக்கினேன்.

வேண்டுமென்றே உனக்கு முன்னால்
நனைந்தபடியே ஓடியபோது,
எதிர்பார்த்தபடியே என்னை
விரல் சொடுக்கி அழைத்தாய்.

நீ குடையைப் பகிர்ந்துகொண்டாய்
நான் நனைதலைப் பகிர்ந்துகொண்டேன்,
குடைக்குள் மறையாத
நம் உடல் பாகங்களில் எல்லாம்
மேகங்கள் தூவிய அட்சதைகள்…

என்ன அது… சட்டைக்குள்?
அதுவா, அக்கவுண்ட்ஸ் நோட்.
பொய்யில் உடைந்தது அந்த
மழை நேர மௌனம்.

என் வீதித் திருப்பத்தில்
நம்மிருவர் வழியும் வேறானது…

வீதிக்குள் நுழைந்ததும்
மறைத்த குடையை
விரித்துப் பிடித்தேன்…

வீட்டை நெருங்கிய நொடிகளில்
தற்செயலாகத் திரும்பியபோது
விழியெல்லாம் நெருப்பாக நீ…
அப்பட்டமாய்ப் புரிந்தது
உன் விழிகளின் மொழி…
திருட்டுப் பயலே…

கொலை வெறிக் கவிதைகள் 1754 – 5

1:18 முப இல் ஜூன் 17, 2009 | அங்கதம், கவிதை, கவிதையைப் போல், பகுக்கப்படாதது, படங்கள் இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

ஆட்டோகிராஃப்

image

மூண்றாம் வகுப்பில் அனிதா
நான்காம் வகுப்பில் சுமதி
ஐந்தாம் வகுப்பில் ரோசி
ஆறாம் வகுப்பில் தென்றல்
+1ல் திரிபுரசுந்தரி
கல்லூரியில் மாதங்கி
2003 ஜனவரி முதல் மே வரை வித்யா
மே முதல் நவம்பர்- பாரதி
பிறகு மணோன்மணி
மீண்டும் ஒரு அனிதா
அடுத்ததாய் மலர்விழி
பின்னர் 2007 மே முதல்
திருமணம் வரை அனுஷா!

இதில் யார் பெயரை வைப்பது
என் ஒரே மகளுக்கு!!!

[மகள் பிறந்த செய்தியை நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசியில் தெரிவித்துக் கொண்டிருந்தேன். அப்போது நீண்ட நாள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பன் தனக்கும் மகள் பிறந்த செய்தியைத் தெரிவித்தான். அவனது ஆட்டோகிராஃபை நினைவுபடுத்தி என்ன பெயர் வைத்தாய் என்று கேட்டு கேலி செய்தேன். அதுதான் இக்கவிதைக்கான ஊக்கி. இக்கவிதையை நண்பனின் அனுமதியைப் பெற்றே வெளியிடுகிறேன். நண்பனின் வேண்டுகோளுக்கினங்கி அவனது பெயரை மட்டும் சொல்லவில்லை.]

தமிழ்மண ஆதரவு வாக்களிக்க

தமிழ்மண எதிர் வாக்களிக்க

தமிழீஷில் வாக்களிக்க

கொலை வெறிக் கவிதைகள் 1754 – 4

2:23 முப இல் மே 27, 2009 | கவிதை, கவிதையைப் போல் இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , ,

ஹாய் விஜயகோபால்,

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். தமிழில் எனக்கிருக்கும் அறியாமையை உங்களிடம் காட்சிப்படுத்த எனக்கு விருப்பமில்லை. “பொன்னியின் செல்வனுக்கு” நன்றி. ஐந்தாம் பாகத்தை வேறு எங்கேயாவது தேடிப் படித்துக் கொள்கிறேன். தமிழ் மீதான எனது ஈடுபாட்டை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.

உங்கள் கனவுகள் மெய்ப்பட வேண்டும். அனைத்தும் சிறப்பாக அமைந்து, அனைவரிலும் சிறப்பானவராக வாழ வாழ்த்துகிறேன்.

______________________________________________________

Hai Vijayagopal,

Sorry for writing in English, but I’d not want to exhibit my Tamil ignorance to you. Thanks for “பொன்னியின் செல்வன்”. I’ll manage to get the fifth volume & read it. Thanks for reminding me of my liking for tamil.

All the best! Wishing to see Vijayagopal to be the “Best of all!”

Hope all your dreams come true.

தங்கள்,

XXXXX (நெஜப் பேர போட நான் என்ன மடையனா)

மேலே இருப்பது, என்னுடன் வேலை பார்த்த ஒரு தோழர் (பால் வேறுபாட்டை வலிந்து மறைக்கும் முயற்சி) ராஜினாமா செய்த பிறகு கடைசி நாளில் எனக்கு எழுதித் தந்த பிரிவு மடல் (ஆட்டோகிராப்). கீழே இருக்கும் கவிதை (கோவப் படாதீங்க, வேணும்னா கவித மாதிரீன்னு வச்சுக்குங்க) இதனோடு தொடர்புடையதே.

ஜனவரி பத்து,
நாம் ஒன்றாய்ப்
பணிபுரிந்த
கடைசி நாள்!

விடை பெறும் முன்பு
கையில் கிடைத்த
காகிதமொன்றில்
நீ எனக்காகக்
கிறுக்கித் தந்த வாசகங்களை
மனைவி பார்த்துவிடக்
கூடாதே என்ற பதைப்புடன்
ஒளித்து வைத்திருக்கிறேன்.

வேலையை விடுவதற்கு
முன்பொரு நாள்
என்னிடம்
“பொன்னியின் செல்வன்”
படிக்கக் கேட்டிருந்தாய்.
என்னிடம் இல்லாததை
நீ கேட்டும்
இல்லையென்று
சொல்ல,
மனம் வரவில்லை.
மாதக் கடைசியில்
புதிதொன்று வாங்கவும்
வழியில்லை.

“பத்து நாள்
பொறுப்பாயா?
ஊர் சென்று
எடுத்து வர
வேண்டும்”
பொய் சொன்னேன்.
சரியென்றாய்!

அடுத்த திங்கட் கிழமை
லேண்ட்மார்க்கில்
தேடி வாங்கிய
“பொன்னியின் செல்வனுடன்”
உன் இருக்கை
தேடி வந்தேன்.

ஐந்து பாகங்களையும்
ஒன்றாய்த் தரத்தான்
எண்ணியிருந்தேன்!
நூலின் எடையால்
நூலிடை நோகுமென்று
ஒவ்வொன்றாய்த்தான்
தந்தேன்.

அன்றுதான் ஒரு
விஷயம் தெரிந்தது,
நீயும் என்னைப் போல்
புதிய புத்தகத்தின்
பக்கங்களை விசிறி
வாசம் நுகர்வாய் என்று!
“அடப் பாவி,
நான் கேட்டதற்காகப்
புதியதாய்
வாங்கியிருக்கிறாய்தானே!”
பொய்க் கோபம் காட்டினாய்.

நான் வாசித்த
புத்தகம் என்று
சொன்ன பொய்யை
நிரூபிக்க,
பாகம் ஒன்றில்
வந்தியத் தேவனும்
குந்தவையும்
முதல் முறை
சந்திக்கும் காட்சியை
வரிக்கு வரி
அடிக்கோடு
போட்டிருந்ததைக்
காட்டினேன்.
ஒரு வழியாய்
சமாதானமடைந்தாய்.

ஒவ்வொரு பாகத்தையும்
படித்துத்
திருப்பித் தரும் நாளில்
அடுத்த பாகத்தைத்
தரவேண்டுமென்பது
நாம் எழுதிக்
கையொப்பமிடாத
ஒப்பந்தம்.

உன் மீதான
என் விருப்பத்தை
ஒரு காகிதத்தில்
எழுதி வைத்திருந்தேன்.
ஒவ்வொரு முறை
புத்தகம் மாற்றும்போதும்
அதை அடுத்த பாகத்தினுள்
மறைத்து வைத்துதான்
வீட்டிலிருந்து
கொண்டு வருவேன்.

புத்தகம்
உன்னைச்
சேரும்போது
கடிதம் என்
சட்டைப் பையில்
சிறைப்பட்டிருக்கும்.

எப்படியும்
கொடுத்துவிட
வேண்டுமென்ற
துணிச்சல்
ஐந்தாம்
பாகத்தில்தான்
வந்தது.

வேர்வையில் நைந்த
அக்கடிதத்தின்
உள்ளடக்கத்தை,
கடைசிப் பக்கத்தை
அடுத்த
வெள்ளைத் தாளில்
பென்சிலால்
எழுதியிருந்தேன்.

நீ விடைபெறும்
நாளும் வந்தது.
எனக்கான
பிரிவு மடலுடன்
கைப்பையிலிருந்த
ஐந்தாம் பாகத்தையும்
என்னிடம் தந்தாய்.

திருப்பித் தந்த போது
நூலின் ஒருசில
அத்தியாயங்களை
மட்டுமே
படித்திருந்தாய்.
காபி அருந்திய பின்
நீ எச்சில் தொட்டுப்
புரட்டிய பக்கங்கள்
காட்டிக்
கொடுத்து விட்டது.

“நான் சென்ற பிறகு
இரவல் தந்த நூல்
கிடைக்குமோ
கிடைக்காதோ என்று
நீங்கள் சங்கடப்
படக் கூடாதல்லவா?”
புன்னகையும் பதிலும்
ஒன்றாய் வந்தது.

கையும் மனதும்
கணக்க
பேருந்து
புறப்படும் வரை
உடனிருந்து
வழியனுப்பினேன்.

இதோ,
நாலு வருடங்கள்
கழித்து, அந்தப்
பென்சில் வரிகளை
ரப்பரால் அழித்துக்
கொண்டிருக்கிறேன்!

மனைவி அறிந்தால்
மண்டை உடையும்!

[இந்தக் கவிதையைப் படித்து என்னை அடிக்க வேண்டும் என்று கொலைவெறியோடு தேடுகிறவர்கள் என்னை அடிப்பதற்குப் பதில் நான் கைகாட்டுகிற நபரை அடிக்கத் தயாரா? ஆம் எனில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டியைச் சொடுக்கி அவரது வலைப்பூவுக்குச் செல்லுங்கள். வயது அறுபதானாலும் தன் வயதில் நான்கில் ஒரு பங்கே உடைய கதாநாயகியுடன் டூயட் பாடுகிற நடிகரைப் போல, பள்ளியில் படிக்கும் மகள் இருக்கும் போதும் கவிதைகளை எழுதிக் குவிக்கிற இவரால் உந்தப்பட்டுதான் நான் இப்படி எழுத நேர்ந்தது. மாமனாருக்குக் கடிதம் எழுதும்போது கூட கவிதை கவிதையாக எழுதுவார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தக் கவிதையை எழுதும்போது எழுத்துக்களை அடித்ததை விடவும் “எண்ட்டர்” விசையை அடித்தது தான் அதிகம். நீட்டி எழுதிட்டா பேராகிராப், ஒரே வரியை நான்கு அல்லது ஐந்தாகப் பிரித்துப் போட்டால் கவிதை என்ற அவதானத்துக்கு வந்ததற்கும் இவர் தான் காரணம். இதற்கும் சேர்த்து நன்கு கவனிக்கவும்.]

அவரது தள முகவரி. பின்னூட்டத்தப் போட்டுட்டுப் போனா போதும்.

உங்கள் கவனத்துக்கு: நகைச்சுவை, அல்லது கற்பனை போன்ற குறிச்சொற்கள் கொடுக்கப் படவில்லை. வெகு சமீபத்தில் கொலை வெறிக் கவுஜைகள் எதுவும் எழுதாததாலும், யாரையும் ஒரண்டை இழுக்காததாலும் இப்பதிவை நீங்கள் அன்புடன் அல்லது வெறுப்புடன் படித்தே ஆகவேண்டும்.

அளவிலா லந்துடன்,

விஜய்கோபால்சாமி

கொலைவெறிக் கவிதைகளின் முந்தைய பாகங்கள்: [பாகம் 1][பாகம் 2][பாகம்3]

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.