தேர இழுத்துத் தெருவுல உட்டுட்டாங்களே….

8:42 பிப இல் ஜூன் 7, 2009 | அரசியல், கடிதங்கள், பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 8 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

விஜய் என்பது பெற்றோர் இட்ட பெயர். பள்ளியில் விஜய்கோபால். தகப்பன் மீதுள்ள மரியாதையின் பேரில் எனக்கு நானே வைத்த பெயர் விஜய்கோபால்சாமி. இந்தப் பெயரை விரும்பி ஏற்பதை என் தகப்பனுக்குச் செய்யும் மரியாதையாகவே கருதுகிறேன்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

முதல் முறையாக என் மகளைக் கைகளில் ஏந்திக் கொண்டபோது. முன்னோர்களை நினைவுபடுத்தும் முகச்சாயலுடன் கண்களை உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அனிச்சைச் செயலாகக் கண்களில் நீர் திரண்டுவிட்டது.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

யாருடைய கையெழுத்தாக இருந்தாலும் படிக்கிறவர்களுக்கு புரியுமளவு இருந்தால் போதும் என்பது என்னுடைய அளவுகோல். அந்த வகையில் என்னுடைய கையெழுத்து எனக்குப் பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

தயிர்சாதமும் மிளகாய் ஊறுகாயும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

தங்கையின் திருமண நிச்சய நிகழ்வில் என் நண்பன் அண்ணாமலை உணவருந்திக் கொண்டிருந்தான். சம்பந்தி வீட்டார் சிலருக்கு உணவருந்த உடனே இடம் தேவையாயிருந்தது. சிறிதும் யோசிக்காமல் “அண்ணாமலை, ஏந்திரிடா” என்றேன். சம்பந்தி வீட்டாருக்கு என்னோடு அண்ணாமலையும் உணவு பரிமாறினான். அண்ணாமலையைப் போன்றவர்கள் எனக்கு நண்பர்களாகக் கிடைக்கிறார்கள். எத்தனை பேரிடம் நான் அண்ணாமலையின் நாகரிகத்துடன் நடந்துகொள்வேன் என்றுதான் தெரியவில்லை.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா….அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

சென்னை, மல்லை, திருச்செந்தூர், நாகை என்று பல ஊர்க் கடல்களில் குளித்தாகிவிட்டது. அருவிக் குளியலுக்கு இன்னும் வேளை வாய்க்கவில்லை. ஒரு முறை குளித்துப் பார்த்துவிட்டால் பதில் சொல்லிவிடலாம்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

சோர்வாக இருக்கிறாரா உற்சாகமாக இருக்கிறாரா என்று கவனிப்பேன். சோர்வாக இருந்தால் தேநீரிலிருந்து சாப்பாடு வரை உபசரிப்பு வேறுபடும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது “கிட்டாதாயின் வெட்டென மறப்பது”. பிடிக்காது “சிலவற்றை மறக்க முடியாமல் தவிப்பது”.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது “என் எழுத்துக்களை ஆராய்ந்து கேள்வி கேட்காதது”. பிடிக்காதது “ராத்திரி ரெண்டு மணியாகுதுல்ல. இன்னும் என்ன கம்ப்யூட்டர நோண்டிக்கிட்டு”. [வீட்டுக்கு வருவது ஒன்றேகால் மணிக்கு]

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அடுத்த ஆறு மாதங்களுக்கு மணைவியும் குழந்தையும் ஊரில் இருப்பார்கள் (நான் ஹைதராபாதில்). அதை எண்ணும் போது கொஞ்சம் வருத்தம்தான்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை நிற பனியன். சிறிதும் பெரிதுமாகக் கட்டம் போட்ட லுங்கி.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

ஜெமினி தொலைக்காட்சியில் “நீ மனசு நாக்கு தெலுசு” உன் மனதை நானறிவேன் என்பது நேரடிப் பொருள். [இதே படம் தமிழில் “எனக்கு இருபது உனக்குப் பதினெட்டு” என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. விவேக் வருகிற காட்சிகள் மட்டும் தமிழ்ப் படத்துக்காக ஒளிப்பதிவு செய்யப்பட்டது].

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

மர வண்ணத்தில் டெக்ஸ்சருடன் (texture) கூடிய பேணாவாக…

14. பிடித்த மணம்?

ஏலக்காய் மணக்கும் தேநீர் வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

சேவியர்: ஐயா, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கடிதம் வரைக என்றால் அதையும் கவிதை நடையிலேயே எழுதக் கூடியவர். சிறப்பு என்னவென்றால் அதுவும் அம்சமாக ரசிக்கும்படியாக இருந்துவிடும். நீரை விடுத்து பாலை மட்டுமே எடுத்துக் கொள்ளும் அன்னப் பறவை. சமகாலத்தைய சமய இலக்கியங்களில் இவருடைய பங்களிப்பைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இரண்டாம் கிருஷ்னப் பிள்ளை என்றே கூறலாம். இவரை அழைக்கக் காரணம் இந்தக் கேள்விகளில் ஒருசிலவற்றுக்கு நல்ல கவிதைகளே பதில்களாகக் கிடைக்கலாம்.

இந்தத் தொடரை எழுத பலரும் பலரையும் அழைத்திருக்கிறார்கள். யார் யார் இத்தொடரை எழுதினார்கள் என்று தெரியவில்லை. சேவியர் இதுவரை இத்தொடரை எழுதவில்லை என்று உறுதி செய்துகொண்டு இந்த அழைப்பை விடுக்கிறேன். நான் அழைக்க விரும்பும் இன்னொரு பதிவர் தம்பி விக்னேஸ்வரன். விக்னேஸ்வரன் இதுவரை எழுதியிராவிட்டால் இந்த அழைப்பை ஏற்று எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

“பண்டிதன் கடிதம்” என்ற பெயரில் தமிழ்ப் பாடலாசிரியர்களுக்கு இவர் எழுதிய பகிரங்கக் கடிதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. இதல்லாமல் வலைப்பதிவர்களுக்கு இவர் கூறுகிற வழிகாட்டுதல் தனிப்பட்ட முறையில் நான் இன்றளவும் பின்பற்றி வருவது. அவற்றையும் இங்கே தருகிறேன்.

அ. தமிழைப் பிழையில்லாமல் எழுதப் பழகுங்கள்.

ஆ. உங்கள் வட்டார வழக்கில் எழுதுங்கள்.

இ. குடும்பத்துக்கும் பார்க்கிற வேலை/தொழிலுக்கும் இடைஞ்சல் இல்லாதபடி எழுதுங்கள்.

ஈ. அலுவலகக் கணிப்பொறியைச் சொந்த உபயோகங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.

உ. உங்கள் நாட்குறிப்புகள் (பதிவுகள்) மற்றவர்களுக்கும் பிடித்திருந்தே தீரும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்.

ஊ. உங்கள் பங்களிப்பு உங்கள் குடும்பத்துக்குத்தான் முக்கியம் – பதிவுலகத்துக்கு அல்ல என்பதை உணருங்கள்.

எ. நீங்கள் பதிவெழுதுவதால் எதையும் சாதித்துவிட முடியும் என்றோ நீங்கள் பதிவெழுதாவிடில் உலகமே ஸ்தம்பித்துவிடும் எனவோ ஒருபோதும் நினைக்காதீர்கள்.

17. பிடித்த விளையாட்டு?

கபடி, சிலம்பம்.

18. கண்ணாடி அணிபவரா?

ஆம், கடந்த பதினெட்டு வருடங்களாக.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

விரும்பிப் பார்ப்பதில்லை, மற்றபடி நண்பர்களோ, தம்பி தங்கையரோ அழைத்தால் எத்தகைய அடாசு படத்தையும் பார்ப்பேன்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

இந்திரா (தெலுங்கு).

20. பிடித்த பருவ காலம் எது?

கார்காலம், பிரிந்திருக்கும் உயிரையெல்லாம் இணைத்து வைக்கும் கார்காலம்!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

நான் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை – வே. மதிமாறன்

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?

இரு காதல் குழந்தைகளின் படம். மாற்றுவதாக உத்தேசமில்லை.

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது குதிரை கணைக்கும் ஒலி. பிடிக்காதது வீடு அதிர ஒலிக்கவிடுகிற எந்த இசையாக இருந்தாலும்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?

வீட்டை விட்டு அதிக தொலைவு சென்றது இருக்கட்டும், என்னுடைய ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்குமே தூரம் அதிகம். அய்யய்யோ, தவறாக நினைக்காதீர்கள். மனைவியோடு நான் இருக்கிற ஹைதராபாத் விட்டுக்கும், அப்பா அம்மா இருக்கிற தஞ்சாவூர் வீட்டுக்குமே ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் தூரம். அதைச் சொன்னேன்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சிரித்த முகமாக இருந்தபடியே எதிரிலிருப்பவருக்குக் கொலை வெறி ஏற்றுவது. சமீபத்தில் மாட்டியவர் ஒரு டிராபிக் கான்ஸ்டெபிள்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

“நீ நல்லா இருக்கனும்னுதான் இதையெல்லாம் சொல்றேன்” என்று தெரிந்தே அடுத்தவர்களை நோகடிப்பதை.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

பழிவாங்கும் குணம். நண்பர்களை விட உறவினர்களை அதிகம் பதம் பார்த்திருக்கிறது.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மனித நடமாட்டம் குறைவாக இருக்கிற கடற்கரைகள். குறிப்பாக சென்னையில் திருவான்மியூர் மற்றும் சாந்தோம் தேவாலயம் பின்புறமுள்ள கடற்கரைப் பகுதிகள்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

எதிரி பொறாமைப்படும் படி.

31. கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

சொல்ல வெக்கமா இருக்கு. இருந்தாலும் சொல்றேன். முகச் சவரம். இப்பக் கூட ரத்தக் காயம் இல்லாம சரியா மழிக்கத் தெரியல. மனைவியின் கேலிக்குப் பயந்தே பரம ரகசியமாக முகச் சவரம் செய்து வருகிறேன்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

எவ்விதக் குற்ற உணர்ச்சியும் ஏற்படாத வகையில் வாழ்வதே வாழ்க்கை.

நன்றி: லதானந்த் மாம்ஸ் தனிப் பதிவு போட்டு அழைத்தமைக்கு.

கலை “மாமா”மணி

1:18 முப இல் பிப்ரவரி 26, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்

இந்த டைட்டிலை நான் துண்டைப் போட்டு ரிசர்வ் செய்கிறேன். வேறு யாரும் தலைப்பைப் பயன்படுத்தாதிருக்கும் பொருட்டே இந்த முன்பதிவு. பதிவு உரிய செய்திகளுடன் விரைவில் இற்றைப்படுத்தப்படும்.

image

அம்சா

10:43 பிப இல் பிப்ரவரி 15, 2009 | அரசியல், பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

image இங்கே ஏன் விசித்ரா படம் என்று தமிழ் கூறும் வலையுலகம் ஐயுறலாம். நடிகை விசித்திரா அறிமுகமான காலத்தில் நமிதாவுக்கு தற்போதுள்ள வரவேற்பு அவருக்கு இருந்தது. விசித்ரா என்ற அவருடைய நிஜப் பெயரே இரண்டொரு படங்களுக்குப் பிறகு தான் அனைவராலும் அறியப்பட்டது. “மடிப்பு அம்சா” என்ற பெயரில்தான் அவர் தமிழர்களுக்கு அறிமுகமானார். தற்சமயம் விசித்ரா என்ற பெயரை கூகுளில் தேடினால் இந்த ஒரு படம் மட்டுமே தென்படுகிறது.

இப்போது விசித்ராவை நினைவுகூர வேண்டிய அவசியம் என்ன? ஏன் இந்தப் படமும் பதிவும் என்று பலரும் ஐயுறலாம். ஐயன்மீர் பொறுமை காப்பீராக. இந்த அம்சாவை இன்னொரு அம்சா நினைவுபடுத்திவிட்டார். அவர்தான் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் அம்சா. இலங்கையில் நிகழ்ந்து வரும் படுகொலைகளைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டும், காலிட வேண்டும் என்ற குரல்கள் மட்டும்தான் இதுவரை எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் அதிருப்தியை வெளிக்காட்ட குறைந்தபட்சம் தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை இனிமேலாவது முன்னெடுக்க வேண்டாமா? தூதருக்கான பணிகளைக் கடந்து “நக்கீரன் பத்திரிகை மன்னிப்பு கேட்கவில்லையென்றால் வழக்குத் தொடருவேன்” என்று ராஜபக்‌ஷே கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் போல உறுமியிருக்கிறார். இந்த வேளையிலாவது இலங்கைத் தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவிட வேண்டும்.

இவ்வளவும் ஆரம்பமானது ராஜபக்‌ஷே தலை ஓட்டு மாலை அணிந்திருப்பது போன்ற படத்துடனும் “ராஜபக்‌ஷே நாசமா போவான்” என்ற சாப வாசகத்துடனும் வந்த அட்டைப் படம் காரணமாகத்தான். இந்த அட்டைப் படமும் சாப வாசகமும் இலங்கை அதிபரின் மாட்சிமையைக் குலைக்கிறதாம். இலங்கையின் அதிபர் எந்தத் தமிழினத்தை அழித்துவிடத் துடிக்கிறாரோ, எந்தத் தமிழினத்தின் மீது வன்மத்தோடு இருக்கிறாரோ அந்தத் தமிழினம் அவருடைய மாட்சிமையைக் குலைக்கக் கூடாதாம். அந்த மாட்சிமை குலையும் போது அதை தமிழர்களின் மண்ணிலே தன்னுடைய கைத்தடியை வைத்துத் தட்டிக் கேட்பாராம். என்ன கொடுமை சார்…

இதற்குப் பிறகாவது இந்தியா இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மாணம் முன்னெடுக்கப்படுமா? வலைப்பதிவு சமூகமே, சிந்திப்பீர்…

பின் குறிப்பு: நக்கீரன் பத்திரிகையும் கோபாலும் யோக்கியமா என்று கேட்க இருப்பவர்களே, இதே மாதிரி வேறு எங்காவது கவர்ச்சிப்படம் போட்டிருந்தால் பார்த்துவிட்டு பின்னூட்டிவிட்டு போய்க்கொண்டே இருங்கள். இது உங்களுக்கான இடம் அல்ல. இலங்கையில் இருக்கிற தமிழர்களைத் தான் ஆதரிக்கவில்லை, குறைந்தது இங்கிருக்கும் கோபாலையாவது ஆதரித்துத் தொலையுங்கள் (எனக்கும் நக்கீரனுடன் பல கருத்து முரண்கள் உண்டு. நக்கீரனையும் கோபாலையும் கேள்விகேட்க ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை உண்டெனினும் ஒரு சிங்களன் தமிழ் மண்ணில் இருந்துகொண்டு தமிழனை மன்னிப்புக் கேட்கச் சொல்வதை ஏற்பதற்கில்லை).

என்னமோ போடா மாதவா – 14/2/2009

10:09 பிப இல் பிப்ரவரி 14, 2009 | அரசியல், பகுக்கப்படாதது, படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 6 பின்னூட்டங்கள்

image

பதிமூணு வயசுப் பையனும் பதினைஞ்சு வயசு பொண்ணும் அப்பா அம்மாவா ஆகிட்டாங்களாம். அத ஒரு செய்தீன்னு குதியோ குதின்னு குதிக்கிறாங்க. பதினேழு வயசுல எங்க தாத்தா பதிமூணு வயசு இருந்த எங்க பாட்டிய கல்யாணம் பண்ணாரு. பாட்டிக்குப் பதினாலு வயசு (1956) இருந்தப்போ எங்க அப்பா பொறந்தாரு. இவனுங்க சொல்றாப்ல பாத்தா மிகக் குறைந்த வயசுல தாயாகி சாதனை படைச்சவங்க என் பாட்டி. இந்த ஒலக சாதனையப் பத்தி அப்போ இருந்த சுதேசமித்திரன், தினமணி உள்ளிட்ட எந்த பேப்பர்லயும் செய்தி போடல. வெள்ளத் தோல் இருக்கறவனுங்களுக்கு நடக்கறது தான் வரலாறுன்னு நெனச்சுட்டானுங்க போல இருக்கு.

image இன்னிக்கு மத்தியான செய்தியப் பாத்தா கேள்விப் படாத புதுப் புதுப் பேரா சொல்றாங்க. அனுமன் சேனாவாம், துர்கா சேனாவாம், தமிழ் மாநில சிவசேனாவாம், புதுசு புதுசா சொல்றானுங்க. போற போக்கப் பாத்தா போன பதிவுல அர டிக்கெட்டு போட்ட பின்னூட்டம் பொய்யாயிரும் போல இருக்கே. எல்லாத்துக்கும் மேல ரெண்டு நாய்களுக்கு கல்யாணம் வேற பண்ணி வச்சிருக்கானுங்க. “யாயும் யாயும் யாராகியரோன்னு” ரொம்ப வருஷத்துக்கு முன்னயே ஒரு தமிழன் எழுதி வச்சுட்டுப் போயிட்டான் காதலப்பத்தி. இவனுவ இப்பத்தான் நாயும் நாயும் கூடிக் குடும்பம் நடத்த ஏற்பாடு பண்றானுங்க. மாமா வேலையவே ஹைடெக்கா பண்றானுங்களோ!

image ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஐந்தாவது ரயில்வே பட்ஜெட் நேற்று சமர்பிக்கப்பட்டது. இந்த அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட போது நிதித்துறையில் ஒரு தமிழர் அமைச்சராக வந்ததை எண்ணி அனைவரும் மகிழ்ந்தோம். ஆனால் அவருடைய நிலைமை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. ஆனால் அனைவராலும் கேலி செய்யப்பட்ட லாலு பிரசாத் யாதவ் இந்த ஐந்தாண்டுகளில் சிறந்த நிர்வாகியாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்து அதிகரிக்கச் செய்தமை, ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட ரயில் கட்டணத்தை உயர்த்தாமை, என்று ரயில்வே துறையை முழுமையாகப் பயன்படுத்தியதன் மூலம் ரயில்வேயை லாபகரமான துறையாக மாற்றியுள்ளார் லாலு. மீண்டும் பல ரயில்வே பட்ஜெட்களை சமர்ப்பிக்க லாலுவுக்கு வாழ்த்துக்கள்.

நாங்க என்ன பாவம் பண்ணோம்... இந்தியாவில் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய குளிர்பானம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. பால் உற்பத்தியின் போது கிடைக்கக் கூடிய ஒரு உபபொருளிலிருந்து அந்தக் குளிர்பானம் தயாரிக்கப்பட உள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் அதனை நாடு முழுவதும் விநியோகிக்க இருக்கிறது. அப்படி ஒரு பானம் எதுன்னு கேக்குறீங்களா! பசு மூத்திரம். இதை எதிர்த்து எருமை மாடுகளும், காளை மாடுகளும் சேந்து போராட்டம் நடத்தப் போகுதாம். வேற எதுக்கு, அதுங்க மூத்திரத்தையும் சேக்கச் சொல்லிதான்.

image

சென்னை செம்பரம் பாக்கத்தைச் சேர்ந்த எழுபது வயது முதியவர் ஒருவர் பீடி நெருப்பு தாடியில் பற்றி பரிதாபமாக உயிரை விட்டிருக்கிறார். அதாவது தனக்கான கொள்ளியைத் தானே வைத்துக் கொண்டுள்ளார். இதிலிருந்து அறியவரும் நீதி: மொகத்த சுத்தமா செரைச்சுக்கோங்கப்பா!!!

பச்சை மனிதன் – நடந்தது என்ன?

3:03 பிப இல் பிப்ரவரி 8, 2009 | பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

ஹல்க் என்ற ஆங்கிலத் திரைப்படம் “பச்சை மனிதன்” என்ற பெயரில் தமிழில் வெளியாகியது. இப்பதிவு அதைப் பற்றியதல்ல. மக்களிடம் நிதி திரட்டி அதிலிருந்து “பச்சை மனிதன்” என்ற படத்தை எடுப்பதாக அறிவிக்கப்பட்ட படத்தைப் பற்றித்தான் இப்பதிவு பேச இருக்கிறது.

ஆண்டுதோறும் பூதாகரமாக உருவெடுக்கும் காவிரிப் பிரச்சினையை முன்னிறுத்தியே “பச்சை மனிதன்” என்ற படம் எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வந்தன. இயக்குனர் சேரனிடம் உதவி-இயக்குனராக இருந்த ஷரத் சூர்யா என்பவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, மக்களிடம் நிதி திரட்டுவதற்காக “பச்சை மனிதன் அறக்கட்டளை” என்ற அமைப்பும் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையில் இயக்குனர் சேரன், சமூக ஆர்வலர் எம்.எஸ். உதயமூர்த்தி, இயக்குனர் லிங்குசாமி மற்றும் பச்சை மனிதன் படத்தை இயக்க இருந்த ஷரத் சூர்யா (இவரது படம் கிடைக்கவில்லை) ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

image image image

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளிலிருந்து தொண்டுள்ளம் கொண்ட 16,000 மாணவர்களிடம் நிதி திரட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்றும், 110 டிக்கெட்டுகள் கொண்ட புத்தகம் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் என்றும், நூறு டிக்கெட்டுகான தொகையை அறக்கட்டளையினருக்கு வரைவோலையாக அனுப்பிவைக்கும் செலவுக்கு பத்து டிக்கெட்டுகளுக்கன ரூ.100ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த டிக்கெட்டுகளில் படத்தைப் பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டுகளாகவும் பயன்படும் என்று அச்சிடப்பட்டிருந்தது.

image

படத்தின் இயக்குனர் ஷரத் சூர்யா “பச்சை மனிதன்” என்ற தலைப்பில் ரூபாய் ஐம்பது மதிப்புள்ள புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

படத்துக்கான நிதி வசூலை ஜூன் 2004க்குள் முடித்து படத்தை ஏப்ரல் 14 2005 அன்று வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக ஆறாம் திணை தளத்தில் வெளியாகிய இக்கட்டுரையில் (போராட்ட ஆயுதமாய் ஒரு தமிழ் சினிமா) கூறப்பட்டுள்ளது. இன்று வரை படமும் வெளிவரவில்லை, ஏறக்குறைய 16,000 பேர் திரட்டித் தந்த தொகை என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை.

துணை இயக்குனராகும் கனவுடனிருந்த நண்பன் (கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவன்) ஒருவனுக்காக அறுபது டிக்கெட்டுகளை என் அலுவலக நண்பர்களிடம் விற்றுத் தந்தேன். மேலும் என்னுடைய பங்களிப்பாக இருபது டிக்கெட்டுகளையும் வாங்கிக்கொண்டேன். இந்த முயற்சிக்கு என் பொறுப்பில் ரூ. 800 திரட்டித் தரப்பட்டுள்ளதாலேயே இப்பதிவை எழுதுகிறேன். ஒரு நல்ல முயற்சியை நான் கொச்சைப்படுத்துவதாக யாரேனும் பின்னூட்டம் எழுத எத்தனித்தால் கீழ்க்கண்ட முகவரியிலோ அல்லது தொலைபேசியிலோ விசாரித்து திரட்டப்பட்ட நிதி என்னவாயிற்று என்று கேட்டுச் சொல்லலாம்.

அறக்கட்டளை இயங்கும்/இயங்கிய முகவரி மற்றும் தொலைபேசி எண்:

பச்சை மனிதன் அறக்கட்டளை
பதிவு எண் : 370/4/03
9-A, சிவசைலம் தெரு, ஹபிபுல்லா ரோடு
தி.நகர், சென்னை 600 017
போன்: 2834 4946, செல்: 98403 44474

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.