எழுத்து மாமா vs. சுசி கனேசன்
10:51 முப இல் செப்ரெம்பர் 28, 2009 | அங்கதம், அரசியல், சினிமா, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 6 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: எழுத்து மாமா, கந்தசாமி, சங்கரன், சுசி கனேசன்
டிஸ்கி: எழுத்து மாமா அல்லது சுசி கனேசன், இருவரில் ஒருவரை ஆதரிக்கும் நோக்கில் இப்பதிவு எழுதப்படவில்லை. நான் இன்னும் கந்தசாமி படம் பார்க்கவில்லை. டிவிடியில் தவிர்த்துத் திரையில் பார்க்கிற உத்தேசமும் இல்லை.
கடந்த வாரம் எழுத்து மாமாவிற்கு சுசி எழுதிய காரசாரமான எதிர் கடிதத்தைப் படிக்க நேர்ந்தது. சரி எழுத்து மாமா அப்படி என்ன தான் எழுதியிருப்பார் என்ற குறுகுறுப்பில் வீட்டிலிருந்து ஆறு கிலோ மீட்டருக்கு அப்பாலிருக்கும் புத்தகக் கடைக்குச் சென்று கடந்த வார குமுதத்தைத் தேடி வாங்கினேன். எழுத்து மாமா எப்போதுமே தன்னை ஒரு பல்துறை வித்தகராகக் காட்டிக் கொள்வதில் விருப்பமுடையவர். பத்திரிகையில் எழுதுகிற அரசியல் விமர்சகர்களில் முதன் முதலில் கணிணிப் பரிச்சயம் பெற்றது அவர்தான் என்று அவரே சொல்லிக் கொள்வார். அதே போல சினிமாக்களை விமர்சிக்கும் தகுதியும் தனக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ள சமீபகாலமாக சினிமா விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.
எழுத்துமாமா கடைசியாக எழுதிய சினிமா விமர்சனம் கந்தசாமி படத்தைப் பற்றியது. எழுத்து மாமா என்ன இழவை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும். அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எழுத்து மாமாவின் விமர்சன நேர்மையை அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆதாரம் குசேலன் படத்துக்கு அவர் எழுதிய விமர்சனம். அந்தப் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வாசகத்தை மீண்டும் ஒரு முறை உங்களுக்காக இங்கே பதிவு செய்கிறேன். “குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள்…”. சரி எழுத்து மாமா சங்கரனை தூக்கி ஓரமாகப் போடுங்கள். லெட் சுசி கனேசன் கம் டு த சீன்.
சுசி கனேசனின் கட்டுரையைப் படித்தபோது ஒரு நாராசமான குழாயடிச் சண்டையைப் பார்த்த உணர்வே ஏற்பட்டது. “என் குடத்தையாடி தூக்கிப் போட்டே, நீ கட்டைல போவே, காளியாயி வந்து உன்ன வாறிகிட்டுப் போக, ஒரே வாரத்துல உன் புருஷன் செத்து நீ தாலியறுப்பெடி” என்ற வசவுகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் இருந்தது கட்டுரை.
கந்தசாமி படத்தின் அதி முக்கியமான சிறப்பாக சுசி சொல்வது முப்பது கிராமங்களைத் தத்தெடுத்தது. முப்பது கிராமங்களைத் தத்தெடுத்தோம் என்று சொல்வதே மிகப் பெரிய மோசடி. முப்பது கிராமங்களுக்குத் தலா இரண்டு லட்சம் ரூபாய் செலவிலான ஒரு உதவியைச் செய்தார்கள் என்பது மட்டுமே உண்மை. கந்தசாமி இசை வெளியீட்டு விழாவைக் கவனமாகப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். தத்தெடுப்பது என்பது அந்தக் கிராமங்களை முழு அளவில் தன்னிறைவு பெறச் செய்வது. இவர்கள் தந்த இரண்டு லட்சத்தில் ஒரு கிராமத்தை அல்ல, ஒரு சந்தில் வசிக்கிற மக்களைக் கூட தன்னிறைவு பெற்றவர்களாக்க முடியாது.
பஞ்ச தந்திரம் படத்தில் ஜெயராம் ஒரு வசனம் சொல்வார் “குடுத்த காசுக்கு எப்படி புடிச்சா பாரு” என்று. இவர்களும் தாங்கள் எடுக்கிற சினிமா ஒரு “வர்ச்சுவல் விபச்சாரி”யாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ என்னவோ!
கந்தசாமி படத்துக்குச் சென்னை நகரத்தில் மட்டும் 1 கோடியே 73 லட்சம் ரூபாய் வசூல் என்று அபிராமி ராமநாதன் அறிவிக்கிறார். படத்தின் மொத்த வசூல் 37 கோடி ரூபாய் என்று சுசியும் படத்தின் தயாரிப்பாளர் தாணுவும் தெரிவிக்கிறார்கள். இது அத்தனையும் ஒரே வாரத்தில் ஈட்டிய வருமானம் என்பதை மிகப் பெரிய சாதனையாக ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்கள். இதற்கான பதிலை பதிவின் இறுதியில் சொல்கிறேன்.
வேர்வை சிந்தி உழைத்த உழைப்பைக் களங்கப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறார் சுசி. தன்னெஞ்சறிவது பொய்யற்க சுசி கனேசன். இந்த வெற்றி நீங்கள் வேர்வை சிந்தி உழைத்து ஈட்டியதா அல்லது மக்களின் பணத்தை அநியாயமாக உறிஞ்சி ஈட்டியதா என்பதை ஊரறியும்.
உங்கள் படத்தை மற்றவர்கள் குறை சொல்லுகிறார்கள் என்பதால் நாடோடிகள், சுப்ரமணியபுரம், பசங்க ஆகிய படங்களைப் பற்றி நீங்களும்தான் குறை சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்பைக் குறை சொன்னதற்காக வருந்துகிற நீங்கள், சமுத்திரக்கனி, சசி குமார், பாண்டிராஜ் ஆகிய இயக்குநர்களின் உழைப்பைக் குறை சொல்லியிருக்கிறீர்களே. குறைந்தபட்சம் இனியாவது ஒரு நாணயமான சினிமாகாரனாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
சுசியின் கண்டனம் வெளிவந்த குமுதத்தைப் படித்த அடுத்த நாளே முந்தைய பத்தி வரை எழுதி வரைவில் வைத்திருந்தேன். எழுத்து மாமா ஓட்டை போடுவதற்கென்று சில பக்கங்களைக் குமுதம் ஒதுக்குவதால் அவரது பதிலையும் தெரிந்துகொண்டு பதிப்பிக்கலாம் என்று கடந்த குமுதம் இதழ் வெளிவரும் வரை காத்திருந்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. சுசியின் கண்டனத்துக்கு பதில் சொல்வதாக எண்ணிக் கொண்டு தன்னைத் தானே அம்பலப்படுத்திப் கொள்கிறார் எழுத்து மாமா. அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளை ஆடவிட்டு சென்சார் போர்டை ஏமாற்றி யூ சான்றிதழ் வாங்கிவிட்டு வெட்கமில்லாமல் பேசுகிறார் என்று கூவுகிற எழுத்து மாமா, “குசேலன்” படம் அதே பாணியில் யூ சான்றிதழ் வாங்கியதைக் குறித்து ஒரு வார்த்தை கூடக் கண்டிக்கவில்லையே! எழுத்து மாமா யோக்கியனாக இருந்தால் அடுத்த வார குமுதத்தில் போடுகிற “ஓ” தான் கடைசி “ஓ”வாக இருக்க வேண்டும்.
இனி கந்தசாமியின் வசூல் குறித்துப் பார்ப்போம். முன்பெல்லாம் படங்களுக்கு பட்ஜெட் போடுகிறவர்கள் டிக்கெட்டின் அசல் விலையை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் போட்டு வந்தனர். இப்போது ப்ளாக்கில் விற்கிற விலையை அடிப்படையாகக் கொண்டுதான் பட்ஜெட்டே போடுகிறார்கள். ஒரு ஓட்டு எதிராக விழுந்தாலும் நான் படம் இயக்குவதை விட்டுவிடுகிறேன் என்று சொல்லுகிற சுசிகனேசன் ஒரு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் “கந்தசாமி” படத்துக்காக விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் சராசரி விலை என்ன என்று மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அத்தனை திரையரங்கிலும் ஒவ்வொரு டிக்கெட்டும் என்னென்ன விலைக்கு விற்கப்பட்டது என்று டினாமினேஷனுடன் சொல்ல வேண்டும். சொல்வாரா?
வசூலையே ஒரு சாதனையாகச் சொல்லுகிற இவர்கள் இந்த வசூலை அள்ள என்னென்ன மோசடி செய்திருக்க வேண்டும்! வெட்கமில்லாத இந்த பிறவிகளை எந்த இந்தியன் தாத்தா வந்து குத்துவான் அல்லது எந்த அந்நியன் இவர்களுக்கெல்லாம் “கும்பிபாக”மும் “கிருமி போஜன”மும் செய்வான்.
விடுப்புக்கு விளக்கம்: நீண்ட விடுப்புக்குப் பிறகு இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன். இதைக் குறித்து பின்னூட்டத்திலும், ஜி-டாக் உரையாடலிலும், தொலைபேசியிலும் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் இத்தறுவாயில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறிய விபத்தொன்றில் இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தனை நாளும் கணிணியில் எழுத இயலாத நிலையிலிருந்தேன். இப்போதுதான் சரியானது. இனி வாரம் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் பதிவுகளை எழுத இருக்கிறேன். இனி யாருக்கும் ஏமாற்றம் இருக்காது.
சொல்றா மணியா – 25/07/2009
5:03 பிப இல் ஜூலை 25, 2009 | அங்கதம், அனுபவங்கள், அரசியல், கருணாநிதி, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: அப்துல்கலாம், எடியூரப்பா, கருணாநிதி, காண்ட்டினெண்ட்டல், சர்வக்ஞர், திருவள்ளுவர்
திருவள்ளுவர் vs. சர்வக்ஞர்
பண்ட மாற்று முறையில் கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலையும் தமிழ்நாட்டில் சர்வக்ஞர் சிலையும் நிறுவப்பட உள்ளது. கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத் தேர்தலை முன்னிட்டு சிலை திறப்புத் தேதி உறுதியாகத் தெரியவில்லை. திருவள்ளுவரைக் குறித்து நமக்கு அறிமுகம் தேவையில்லை. சர்வக்ஞர் என்ற கன்னட கவிஞரைப் பற்றி எடியூரப்பா கோபாலபுரம் வந்து போன பிறகுதான் நமக்கெல்லாம் தெரிகிறது. அத்தினி, சித்தினி, பத்மினி போன்ற பெண் வருணனைகளையும், வீரசைவப் பெருமை பேசுகிற சுயசாதி பெருமைப் பாடல்களையும் எழுதிய பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் சர்வக்ஞர். திருவள்ளுவருக்கு எதிராக அறிவார்ந்த ஆளுமையாக முன்னிறுத்த கன்னடர்களுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. எடியூரப்பா இப்படி ஒரு கோரிக்கையை வைத்த பிறகு கோபாலபுரத்தார் என்ன கேட்டிருக்க வேண்டும்? “சரிப்பா, நீ சொல்ற படி சர்வக்ஞர் சிலையை தமிழ்நாட்டில வைக்கிறோம். திருவள்ளுவர் சிலையக் கூட திறக்க வேண்டாம், ஒரே ஒரு பெரியார் சிலைய நாங்க அல்சூர் ஏரிக்கரைல வச்சிக்கிறோம், டீல் ஓகேவா” என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். [கடைசிக் கட்ட செய்தி: ஆகஸ்ட் 9ம் தேதி சிலையைத் திறக்க தேர்தல் ஆணையம் அனுமதி.]
காண்டினெண்ட்டல் vs. கலாம்
காண்டினெண்ட்டல் நிறுவனம் அப்துல்கலாமை சோதனை செய்து விமானத்தில் அனுமதித்தது நாடாளுமன்றம் வரை எதிரொலித்திருக்கிறது. இந்தியத் தலைவர்களுக்கு இது புதிதல்ல, ஆனால் இந்தியாவிலேயே நடந்திருப்பதுதான் புதுமை. குடியரசுத் தலைவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தால் அதைப் பற்றிப் பாராட்டிப் பேசுகிறவர்கள், எல்லோரையும் போல பாதுகாப்புச் சோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் என்ன தவறு. சாதாரண மக்களுக்குச் செய்யப்படும் பாதுகாப்புச் சோதனைகள் ஒரு குடியரசுத் தலைவருக்குச் செய்யப்படும் போது அது அவமாணகரமானதாகக் கருதப்படுகிறது எனில் அதே சோதனை முறை கண்ணியமானதா என்ற கேள்வியல்லவா பிரதானமாகி இருக்க வேண்டும். ஸ்கேனர் கருவிகளைக் கொண்டு பயணி எதையாவது மறைத்து எடுத்துச் செல்கிறாரா என்று சோதிக்க முடிந்தாலும் ஆடைகளை எல்லாம் களைந்து சோதிக்கிற முறை கண்ணியமானதா? இப்படி ஒரு சோதனை ஒரு குடியரசுத் தலைவருக்கு நேர்வது மட்டுமா அவமானம்? இந்திய இறையாண்மை இந்தியர்களின் மானத்திற்கும் மரியாதைக்கும் முதலில் உத்திரவாதம் அளிக்கட்டும்? அதற்குப் பிறகு எதிர்த்துப் பேசுவோர் மிது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீட்டட்டும்.
ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா
டிவியப் போட்டா ஒரே களேபரம். எங்க பாத்தாலும் ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா? ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா? ன்னு. பண்றது சோப்பு வெளம்பரம். அதுக்கு எதுக்குடா ஸ்ரேயா எங்க வீட்டுக்கு வரனும். எட்டுதோ எட்டலியோ, என் முதுகுல என் கையாலதான் சோப்பு போடனும். அந்தப் புள்ளையா வந்து சோப்பு தேய்க்கப் போகுது. அவனவனுக்குப் போன கரண்ட்டு எப்போ வருமான்னே தெரியல, இதுல ஸ்ரேயா என் வீட்டுக்கு வந்தா என்ன வரலேன்னா என்ன? (இந்த லக்ஸ் விளம்பரம் தமிழ்நாட்டுல வருதான்னு தெரியலைங்கோ!!! நான் பாத்த தெலுங்கு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நிமிடத்துக்கு ஒரு முறை வருவாங்களா வருவாங்களான்னு கேட்டுக்கிட்டே இருக்கானுங்க.)
ஊடகப் பொறுப்பின்மை
4:02 முப இல் ஜூன் 17, 2009 | அனுபவங்கள், பகுக்கப்படாதது, படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: ஊடகம், குற்றம் நிகழ்ச்சி, பொறுப்பின்மை, விஜய் டிவி
விஜய் டிவியின் “குற்றம் – நடந்தது என்ன?” நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்க முடியாவிட்டாலும் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் முழுமையாகப் பார்ப்பதுண்டு. சமீபத்தில் குழந்தைகள் கடத்தி விற்கப்படுவது குறித்த செய்தித் தொகுப்பு ஒன்று அந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த கண்ணன்-சுசீலா தம்பதியரின் குழந்தையை தனமணி என்பவர் கடத்திச் செல்ல முற்பட்டும் அது தொடர்பிலான விசாரனையில், இது பெரிய அளவிலான குழந்தை வணிகமாக இயங்கி வருவதும் தெரியவந்தது. இதே செய்தி ஜூன்-14 தேதியிட்ட ஜூனியர் விகடன் செய்தி ஏட்டிலும் வெளிவந்திருந்தது.
இதில் தனமணி சந்தேகத்துக்கு இடமின்றி குற்றவாளிதான் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. தனமணியின் குற்றத்தை நியாயப்படுத்தும் நோக்கிலும் இப்பதிவு எழுதப்படவில்லை. தொடர்ந்து விஷயத்துக்குள் செல்வதற்கு முன் இதனைத் தெளிவுபடுத்துவது எனது கடமையாகிறது.
ஒருவர் குற்றவாளி என்பதாலேயே அவர் மீது எத்தகைய அவதூறை வேண்டுமானாலும் சொல்லிவிட முடியாது, சொல்லவும் கூடாது. ஆனால் தனமணி விஷயத்தில் விஜய் டிவி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது என்றுதான் எண்ண வேண்டியுள்ளது. திருச்சி லால்குடி அருகிலுள்ள பெருவளநல்லூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மனைவிதான் தனமணி. ராமச்சந்திரனின் மறைவுக்குப் பின் பிழைப்புத் தேடி தனமணி கோவைக்குச் சென்றுவிட்டார். அங்கே அபிராமன் என்பவரை இரண்டாவது கணவராகத் திருமணம் செய்து கொண்டார். ஜூனியர் விகடனில் இச்செய்தி விரிவாக வந்துள்ளது. இதே செய்தி விஜய் டிவியில் முற்றிலும் வித்தியாசமாக எப்படி வந்தது என்பதையும் பார்ப்போம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனமணியைக் குறித்துச் சொல்லும்போது, “இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர் தனமணி” என்று மட்டுமே தனமணியின் மணவாழ்க்கை குறித்துக் கூறப்பட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சியை மட்டுமே பார்க்கிறவர்கள், தனமணி முதல் கணவன் உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தவள், நடத்தை கெட்டவள் என்றுதான் எண்ண நேரும்.
செய்தியின் முக்கியப் பகுதி குழந்தைகள் கடத்தி விற்கப்பட்டதைக் குறித்த அலசல். அதில் தனமணி எத்தனை முறை திருமணம் செய்தவர் என்பது சொல்லத் தேவையில்லாத விஷயம். அப்படிச் சொல்லியே ஆகவேண்டும் என்று நினைத்திருந்தால், உண்மையான அல்லது முழுமையான விபரங்களை மக்களுக்கு அறியத் தந்திருக்க வேண்டும். விஜய் டிவி இந்த குறைந்தபட்ச நியாயத்தை, நாகரிகத்தைக் கூடக் கடைபிடிக்கவில்லை.
சந்தேகத்துக்கு இடமின்றி தனமணி குற்றமிழைத்தவர் என்பதாலேயே விஜய் டிவி அவர் மீது அவதூறு சுமத்தியது எவ்விதத்தில் நியாயம்? என் மனதிலிருக்கிற இந்தக் கேள்வியோடு இப்பதிவை முடிக்க விரும்பினாலும், இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் அல்லது தொகுப்பாளர் கோபி ஆகியோருடன் தொடர்பிலிருப்போர் இவ்விஷயத்தை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் அவர்களின் தரப்பையும் அறிய ஏதுவாகும். அவர்களிடமிருந்து பதில்கள் வந்தால் அவை யாதொரு திருத்தமுமின்றித் தனிப்பதிவாக வெளியிடப்படும்.
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க
என்னமோ போடா மாதவா – 13/06/2009
12:11 முப இல் ஜூன் 14, 2009 | அங்கதம், அரசியல், நகைச்சுவை, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: செய்தி ஊடகம், சோப்பு விளம்பரம், தமிழ்நாடு போலீஸ், மார்க்சிஸ்ட், மூட நம்பிக்கை
தமிழ்நாட்டுல ஏனய்யா காமெடி பண்றீங்க…
என்னமோப்பா, இந்த மார்க்சிஸ்ட் காரங்களுக்கு எதுக்கெடுத்தாலும் போராட்டம் நடத்தலைன்னா தூக்கமே வராது போல இருக்கு. நிலச் சிக்கல்னாலும் போராட்டம் நடத்துவாங்க, மலச்சிக்கல்னாலும் போராட்டம் நடத்துவாங்க. இன்னிக்கும் ஒரு போராட்டம் நடத்திருக்காங்க. கேரளா கவர்னர் கேரளா அமைச்சர் ஒருத்தர் மேல வழக்குத் தொடுக்கலாம்னு சிபிஐக்கு அனுமதி குடுத்தாராம். அது ஒரு குத்தமாம், தோழர்கள் குளத்துல… மன்னிக்கனும் களத்தில குதிச்சுட்டாங்க. ஏம்ப்பா, அவரு அனுமதிதானே குடுத்தாரு, தீர்ப்பா குடுத்துட்டாரு? நீ எப்படி அனுமதி குடுக்கலாம்னு இங்கேர்ந்தே போராடுனா, கேரளாவுல இருக்குற கவர்னருக்கு எப்படித் தெரியும், கேரளாவுலயே போய் போராடலாம்ல, அங்க உங்க கவர்மெண்ட்தானே நடக்குது. ஏன் தமிழ்நாட்டுல உக்காந்துக்கிட்டு காமெடி பண்றீங்க.
ஸ்ஸ்ஸப்பா… முடியலடா…
தமிழகத்தின் “நம்பர் ஒன்” தலைவலி சன் டிவியில உண்மைய அலசுற ஒரு நிகழ்ச்சியப் பாத்தேன். ஒரு கோயிலப் பத்தி விரிவா அலசிக்கிட்டிருந்தாங்க. அந்த கோயில்ல இருக்கற சாமி யார் கனவுலயாவது வந்து எனக்கு ஏகே-47 வச்சு பூசை பண்ணு, மண்ண வச்சு பூசை பண்ணு சாணிய வச்சு பூசை பண்ணுன்னு வித விதமா சொல்லுமாம். அதே மாதிரி அவுங்களும் வச்சு பூச பண்ணுவாங்களாம். அப்படிப் பண்ணுனா இந்திரா காந்தி கொலைலேந்து, சுனாமி வரைக்கும் ஹைலெவல்ல ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி நடக்குமாம். இந்தக் கோயில்ல ஏகே-47 வச்சு பூசை பண்ணுனதாலதான் இலங்கையில தமிழினம் பூண்டோடு அழிந்து வருகிறதாம். ஸ்ஸ்ஸப்பா… முடியலடா….
விட்டா வெளிக்குப் போறதக் கூடக் காட்டுவானுவ…
தொலைக்காட்சியில சென்னையில கடந்த வாரம் துண்டு துண்டா வெட்டப்பட்டு வெவ்வேற இடங்கள்ள வீசப்பட்டவரப் பத்திய செய்தி போயிக்கிட்டிருந்துச்சு. கேட்கும் போதே பகீர்னு இருக்கு. ஆனா தமிழ்நாட்டு செய்தி அலைவரிசை ஒன்னுல துண்டா வெட்டப்பட்ட அவருடைய கைகள காட்சியாவே காட்டினாங்க. இதல்லாம வாரமிருமுறை வற்ற புலணாய்வு ஏடு ஒன்றும் இடுப்புக்குக் கீழுள்ள அந்த சடலத்தின் பாககங்களைப் படமாக வெளியிட்டிருந்தது. இதுங்கள எல்லாம் என்ன சொல்லுறது.
டேய், நீ மயிருன்னா நான் ஆளு மயிரு
பயப்படாதீங்க. கடந்த வாரம் ஊர்ல இருந்தப்ப ஒன்வேல வந்த ஒருத்தரிடம் டிராபிக் கான்ஸ்டபிள் ஒருவர் சொன்ன பஞ்ச் டயலாக் இது. ஒன்வேல வந்தவர் வெளியூர் ஆள், வண்டி உறவினரிடம் இரவல் வாங்கியதாம். லைசென்சில் இருக்கிற தன்னுடைய முகவரியைக் காட்டியும் “ஆளு ம**” கேட்பதாக இல்லை. இத்தனைக்கும் அந்த வண்டி ஓட்டி செய்த தவறு வேறு ஒன்றுமில்லை. வண்டியை நிறுத்த சொன்னதும் நிறுத்தி சாவியை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார். “ஆளு ம**” கையில் சாவி கிடைத்திருந்தால் ராத்திரி கட்டிங்கிற்கு துட்டு தேறியிருக்கும். அது கிடைக்காத வயித்தெறிச்சலோ என்னவோ. முக்கியமான விஷயம் என்னன்னா “டேய், உன்னால என்ன புடுங்க முடியும். என் பேரு கண்ணன், நம்பர் 181” என்றும் கர்ஜித்தார். சம்பவம் நடந்த இடம் குடந்தை டைமண்ட் தியேட்டர் இறக்கம். இதையெல்லாம் கவனித்த எனக்கு ஆ.ம.வுக்கு அனஸ்தீசியா இல்லமலே குடும்பக் கட்டுப்பாடு பண்ணலாமா என்னுமளவுக்குக் கொலை வெறியாகிவிட்டது. உடனிருந்த என் தம்பி சமாதானம் செய்ததால் ஆ.ம. பிழைத்தது.
எல்லாம் ஒரு வெளம்பரந்தான்
ஒரு சோப்பு வெளம்பரம். அம்மா மகளக் கூப்பிட்டு சோப்பு வாங்கியாரச் சொல்றா. மகளும் போறா. திடீர்னு அம்மா பதட்டமாகிடுறா, என்ன சோப்பு வாங்கனும்னு சொல்லி உடலியாம். தெருவெல்லாம் தேடி அலைஞ்சு வீட்டுக்குத் திரும்பி வந்து பாத்தா, பொன்னு பாத்ரூம்ல குளிச்சிக்கிட்டிருக்கறா. “பவித்திரா” ன்னு சத்தமா கூப்புடுறா. ஹமாம் சோப்போட பவித்திராவோட கையும் முகமும் மட்டும் பாத்ரூம் கதவுக்கு வெளிய தெரியுது. அப்பத்தான் அம்மாகாரி வயித்தில பால் வார்த்த மாதிரி இருக்குது. அந்த அம்மாகாரிய நான் பாக்கனும், ஒரு முக்கியமான விஷயம் கேக்கனும். “அடிங் கொய்யாலே, அந்தப் பவித்திரா கிட்ட குளிக்கிற சோப்பா தொவைக்கிற சோப்பான்னு மொதல்ல சொல்லி உட்டியா? அதையே சொல்லாம, உனக்கு எதுக்கு இந்த பில்டப்பு?”
கொடுமை கொடுமைன்னு கும்பகோணத்துக்குப் போனா…
6:01 பிப இல் ஜூன் 11, 2009 | அங்கதம், அரசியல், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: காங்கிரஸ், கும்பகோணம், சேது சமுத்திரம், தஞ்சாவூர், வாசன்
[படத்தின் மேல் அழுத்தித் தனிச் சாளரத்தில் பெரிதாகப் பார்க்கலாம்]
கடல்வழிப் போக்குவரத்துத் துறையை காங்கிரசே வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதிலிருந்து ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போடுகிற முயற்சி ஆரம்பமாகிவிட்டது. பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இது இந்துத்துவ அமைப்புகளை சாந்தப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.
புள்ளியியல் துறையைக் கொடுத்த போது ஜி.கே. வாசன் என்ன செய்தார் என்று தெரியவில்லை. அந்தத் துறையைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று அவருக்கே தெரிந்திருக்குமோ தெரியாதோ, யானறியேன். மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டால் இவர் டி.ஆர். பாலு அளவுக்கு துணிச்சலாகப் பேசுவாரா என்பதும் சந்தேகமே.
அவர் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்று டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த போதுதான் இத்தனை கூத்துக்களும் அரங்கேறியது. பூர்வீக வீடு கபிஸ்தலத்தில் இருந்தாலும் குடந்தை நகரில் அவருக்கு ஒரு கெஸ்ட் ஹவுசும் இருக்கிறது. அந்த வீட்டிற்கு எதிரில்தான் காங்கிரஸ் காரர்கள் கைங்கரியத்தில் இந்த ஃப்ளெக்ஸ் போர்டு எழுந்து நிற்கிறது. இதல்லாமல் குடந்தையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை நெடுகிலும் இவரை வாழ்த்திப் பல்வேறு சுவரொட்டிகள். மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட மணிசங்கர ஐயருக்கு எதிராக தமிழமைப்புகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும் காணக் கிடைத்தது. ஓடுகிற பேருந்திலிருந்து அவற்றைப் படமெடுக்க முடியவில்லை.
மந்திரியாகப் பொறுப்பேற்று கோப்புகளைக் கூடப் பார்க்கவில்லை, அதற்குள் “சேது சமுத்திர நாயகனே”, “கப்பலோட்டிய தமிழனே” என்றெல்லாம் சுவரொட்டிகள் முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இவரது மாநிலங்களவைப் பதவி முடிய இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளது. கொடுத்த அசைன்மெண்ட்டை சரியாக முடித்துவிடுவாரோ என்பதுதான் நமக்கிருக்கிற பயமெல்லாம்.
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.