தேர இழுத்துத் தெருவுல உட்டுட்டாங்களே….

8:42 பிப இல் ஜூன் 7, 2009 | அரசியல், கடிதங்கள், பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 8 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

விஜய் என்பது பெற்றோர் இட்ட பெயர். பள்ளியில் விஜய்கோபால். தகப்பன் மீதுள்ள மரியாதையின் பேரில் எனக்கு நானே வைத்த பெயர் விஜய்கோபால்சாமி. இந்தப் பெயரை விரும்பி ஏற்பதை என் தகப்பனுக்குச் செய்யும் மரியாதையாகவே கருதுகிறேன்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

முதல் முறையாக என் மகளைக் கைகளில் ஏந்திக் கொண்டபோது. முன்னோர்களை நினைவுபடுத்தும் முகச்சாயலுடன் கண்களை உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அனிச்சைச் செயலாகக் கண்களில் நீர் திரண்டுவிட்டது.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

யாருடைய கையெழுத்தாக இருந்தாலும் படிக்கிறவர்களுக்கு புரியுமளவு இருந்தால் போதும் என்பது என்னுடைய அளவுகோல். அந்த வகையில் என்னுடைய கையெழுத்து எனக்குப் பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

தயிர்சாதமும் மிளகாய் ஊறுகாயும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

தங்கையின் திருமண நிச்சய நிகழ்வில் என் நண்பன் அண்ணாமலை உணவருந்திக் கொண்டிருந்தான். சம்பந்தி வீட்டார் சிலருக்கு உணவருந்த உடனே இடம் தேவையாயிருந்தது. சிறிதும் யோசிக்காமல் “அண்ணாமலை, ஏந்திரிடா” என்றேன். சம்பந்தி வீட்டாருக்கு என்னோடு அண்ணாமலையும் உணவு பரிமாறினான். அண்ணாமலையைப் போன்றவர்கள் எனக்கு நண்பர்களாகக் கிடைக்கிறார்கள். எத்தனை பேரிடம் நான் அண்ணாமலையின் நாகரிகத்துடன் நடந்துகொள்வேன் என்றுதான் தெரியவில்லை.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா….அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

சென்னை, மல்லை, திருச்செந்தூர், நாகை என்று பல ஊர்க் கடல்களில் குளித்தாகிவிட்டது. அருவிக் குளியலுக்கு இன்னும் வேளை வாய்க்கவில்லை. ஒரு முறை குளித்துப் பார்த்துவிட்டால் பதில் சொல்லிவிடலாம்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

சோர்வாக இருக்கிறாரா உற்சாகமாக இருக்கிறாரா என்று கவனிப்பேன். சோர்வாக இருந்தால் தேநீரிலிருந்து சாப்பாடு வரை உபசரிப்பு வேறுபடும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது “கிட்டாதாயின் வெட்டென மறப்பது”. பிடிக்காது “சிலவற்றை மறக்க முடியாமல் தவிப்பது”.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது “என் எழுத்துக்களை ஆராய்ந்து கேள்வி கேட்காதது”. பிடிக்காதது “ராத்திரி ரெண்டு மணியாகுதுல்ல. இன்னும் என்ன கம்ப்யூட்டர நோண்டிக்கிட்டு”. [வீட்டுக்கு வருவது ஒன்றேகால் மணிக்கு]

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அடுத்த ஆறு மாதங்களுக்கு மணைவியும் குழந்தையும் ஊரில் இருப்பார்கள் (நான் ஹைதராபாதில்). அதை எண்ணும் போது கொஞ்சம் வருத்தம்தான்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை நிற பனியன். சிறிதும் பெரிதுமாகக் கட்டம் போட்ட லுங்கி.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

ஜெமினி தொலைக்காட்சியில் “நீ மனசு நாக்கு தெலுசு” உன் மனதை நானறிவேன் என்பது நேரடிப் பொருள். [இதே படம் தமிழில் “எனக்கு இருபது உனக்குப் பதினெட்டு” என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. விவேக் வருகிற காட்சிகள் மட்டும் தமிழ்ப் படத்துக்காக ஒளிப்பதிவு செய்யப்பட்டது].

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

மர வண்ணத்தில் டெக்ஸ்சருடன் (texture) கூடிய பேணாவாக…

14. பிடித்த மணம்?

ஏலக்காய் மணக்கும் தேநீர் வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

சேவியர்: ஐயா, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கடிதம் வரைக என்றால் அதையும் கவிதை நடையிலேயே எழுதக் கூடியவர். சிறப்பு என்னவென்றால் அதுவும் அம்சமாக ரசிக்கும்படியாக இருந்துவிடும். நீரை விடுத்து பாலை மட்டுமே எடுத்துக் கொள்ளும் அன்னப் பறவை. சமகாலத்தைய சமய இலக்கியங்களில் இவருடைய பங்களிப்பைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இரண்டாம் கிருஷ்னப் பிள்ளை என்றே கூறலாம். இவரை அழைக்கக் காரணம் இந்தக் கேள்விகளில் ஒருசிலவற்றுக்கு நல்ல கவிதைகளே பதில்களாகக் கிடைக்கலாம்.

இந்தத் தொடரை எழுத பலரும் பலரையும் அழைத்திருக்கிறார்கள். யார் யார் இத்தொடரை எழுதினார்கள் என்று தெரியவில்லை. சேவியர் இதுவரை இத்தொடரை எழுதவில்லை என்று உறுதி செய்துகொண்டு இந்த அழைப்பை விடுக்கிறேன். நான் அழைக்க விரும்பும் இன்னொரு பதிவர் தம்பி விக்னேஸ்வரன். விக்னேஸ்வரன் இதுவரை எழுதியிராவிட்டால் இந்த அழைப்பை ஏற்று எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

“பண்டிதன் கடிதம்” என்ற பெயரில் தமிழ்ப் பாடலாசிரியர்களுக்கு இவர் எழுதிய பகிரங்கக் கடிதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. இதல்லாமல் வலைப்பதிவர்களுக்கு இவர் கூறுகிற வழிகாட்டுதல் தனிப்பட்ட முறையில் நான் இன்றளவும் பின்பற்றி வருவது. அவற்றையும் இங்கே தருகிறேன்.

அ. தமிழைப் பிழையில்லாமல் எழுதப் பழகுங்கள்.

ஆ. உங்கள் வட்டார வழக்கில் எழுதுங்கள்.

இ. குடும்பத்துக்கும் பார்க்கிற வேலை/தொழிலுக்கும் இடைஞ்சல் இல்லாதபடி எழுதுங்கள்.

ஈ. அலுவலகக் கணிப்பொறியைச் சொந்த உபயோகங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.

உ. உங்கள் நாட்குறிப்புகள் (பதிவுகள்) மற்றவர்களுக்கும் பிடித்திருந்தே தீரும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்.

ஊ. உங்கள் பங்களிப்பு உங்கள் குடும்பத்துக்குத்தான் முக்கியம் – பதிவுலகத்துக்கு அல்ல என்பதை உணருங்கள்.

எ. நீங்கள் பதிவெழுதுவதால் எதையும் சாதித்துவிட முடியும் என்றோ நீங்கள் பதிவெழுதாவிடில் உலகமே ஸ்தம்பித்துவிடும் எனவோ ஒருபோதும் நினைக்காதீர்கள்.

17. பிடித்த விளையாட்டு?

கபடி, சிலம்பம்.

18. கண்ணாடி அணிபவரா?

ஆம், கடந்த பதினெட்டு வருடங்களாக.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

விரும்பிப் பார்ப்பதில்லை, மற்றபடி நண்பர்களோ, தம்பி தங்கையரோ அழைத்தால் எத்தகைய அடாசு படத்தையும் பார்ப்பேன்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

இந்திரா (தெலுங்கு).

20. பிடித்த பருவ காலம் எது?

கார்காலம், பிரிந்திருக்கும் உயிரையெல்லாம் இணைத்து வைக்கும் கார்காலம்!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

நான் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை – வே. மதிமாறன்

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?

இரு காதல் குழந்தைகளின் படம். மாற்றுவதாக உத்தேசமில்லை.

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது குதிரை கணைக்கும் ஒலி. பிடிக்காதது வீடு அதிர ஒலிக்கவிடுகிற எந்த இசையாக இருந்தாலும்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?

வீட்டை விட்டு அதிக தொலைவு சென்றது இருக்கட்டும், என்னுடைய ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்குமே தூரம் அதிகம். அய்யய்யோ, தவறாக நினைக்காதீர்கள். மனைவியோடு நான் இருக்கிற ஹைதராபாத் விட்டுக்கும், அப்பா அம்மா இருக்கிற தஞ்சாவூர் வீட்டுக்குமே ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் தூரம். அதைச் சொன்னேன்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சிரித்த முகமாக இருந்தபடியே எதிரிலிருப்பவருக்குக் கொலை வெறி ஏற்றுவது. சமீபத்தில் மாட்டியவர் ஒரு டிராபிக் கான்ஸ்டெபிள்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

“நீ நல்லா இருக்கனும்னுதான் இதையெல்லாம் சொல்றேன்” என்று தெரிந்தே அடுத்தவர்களை நோகடிப்பதை.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

பழிவாங்கும் குணம். நண்பர்களை விட உறவினர்களை அதிகம் பதம் பார்த்திருக்கிறது.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மனித நடமாட்டம் குறைவாக இருக்கிற கடற்கரைகள். குறிப்பாக சென்னையில் திருவான்மியூர் மற்றும் சாந்தோம் தேவாலயம் பின்புறமுள்ள கடற்கரைப் பகுதிகள்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

எதிரி பொறாமைப்படும் படி.

31. கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

சொல்ல வெக்கமா இருக்கு. இருந்தாலும் சொல்றேன். முகச் சவரம். இப்பக் கூட ரத்தக் காயம் இல்லாம சரியா மழிக்கத் தெரியல. மனைவியின் கேலிக்குப் பயந்தே பரம ரகசியமாக முகச் சவரம் செய்து வருகிறேன்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

எவ்விதக் குற்ற உணர்ச்சியும் ஏற்படாத வகையில் வாழ்வதே வாழ்க்கை.

நன்றி: லதானந்த் மாம்ஸ் தனிப் பதிவு போட்டு அழைத்தமைக்கு.

நக்கீரன் vs. பதிவர்கள் – அட்டைப்பட சர்ச்சை

6:53 பிப இல் மே 24, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 15 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: ,

பதிவுலகின் மந்தை மனப்பான்மை தேர்தல் முடிவுகளைப் போலவே பிரபாகரன் கொல்லப்பட்டதாக வந்த பரப்புரையினாலும் அம்பலமாகியிருக்கிறது. இன்று என்ன பதிவு போடலாம் என்று தமிழ்மண முகப்பைப் பார்த்துத்தான் முடிவு செய்கிறார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

பிரபாகரன் சடலத்தைக் காட்டுகிற தொலைக்காட்சி செய்தியை அவரே பார்த்து சிரிப்பது போன்ற அட்டைப் படம்தான் தற்போது பதிவர்களால் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. என்னைக் கேட்டால் இதில் நக்கீரனின் தவறு என்று சொல்ல எதுவுமில்லை. தமிழகத்தின் ஏனைய புலனாய்வுப் பத்திரிகைகள் பலவற்றிலும் கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ போஸ் கொடுத்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நக்கீரன் பத்திரிகை உள்ளிருக்கக் கூடிய கட்டுரைக்குப் பொருத்தமான கருத்துப் படத்தையே அட்டைப் படமாக வெளியிட்டு வரும்.

உதாரனமாக 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா ஹிட்லர் மீசையுடன் இருப்பது போன்ற அட்டைப் படமும், கருணாநிதி புலிகேசி உடையில் வில்லில் அம்பு பொருத்தி நிற்பது போலவும் அட்டைப் படங்கள் வந்திருந்தன. வெகு சமீபத்தில் ராஜபக்‌ஷே மண்டை ஓட்டு மாலையுடன் போஸ் கொடுப்பது போன்ற படமும் நக்கீரனில் அட்டைப் படமாக வந்திருக்கிறது. பகுத்தறிந்து சிந்திப்பவர்கள் அறிவார்கள், ஜெயலலிதா மீசை ஒட்டிக் கொண்டும், கருணாநிதி புலிகேசி உடையிலும், ராஜபக்‌ஷே மண்டை ஓட்டு மாலை அணிந்தும் போஸ்கொடுத்து அதை நக்கீரன் புகைப்படமாக எடுத்து வெளியிடவில்லை என்று.

இம்முறையும் அதே போன்று பிரபாகரன், அன்றன் பாலசிங்கத்துடன் உரையாடுகிற படத்தில் சில மாற்றங்களைச் செய்து அட்டைப் படமாக வெளியிட்டது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்த பதிவர்கள் சிலர் இதை உண்மை என்று நம்பி பதிவு போட்டனர். இதில் நக்கீரன் செய்த பொறுக்கித்தனம் என்னவென்று எனக்குத் விளங்கவில்லை. மக்களின் உணர்ச்சியைக் காசாக்குகிறது நக்கீரன் என்று குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஐந்து மாதங்களுக்குள் தமிழில் வரும் பெரும்பாலான சஞ்சிகைகளிலும் இலங்கை அல்லது பிரபாகரன் அல்லது புலிகள் குறித்த ஏதாவது ஒரு தொடர் வெளியாகி வருகிறது. இலங்கை என்ற தீவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடலுக்குள்ளிருந்து முளைத்துவிடவில்லை, பிரபாகரனும் புலிகளும் இலங்கை அரசை எதிர்த்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இதற்கு முன்பு இதன் தொடர்பில் தொடர் எழுதாத சஞ்சிகைகள் இப்போது எழுதிவருவது மக்களின் உணர்ச்சிகளைக் காசாக்குகிற கயமை அல்லவா?

தமிழ்ப் புலனாய்வு ஏடுகளில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் நக்கீரன் தொடர்ந்து துணிச்சலுடன் எழுதி வருகிறது. அந்த வகையில் நக்கீரனோடு ஒப்பிட்டால் விலை போன அல்லது இருட்டடிப்பு செய்கிற பத்திரிகைகளின் செயல்களில்தான் ஊடகப் பொறுக்கித்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது.

என்னமோ போடா மாதவா – 16/05/2009

2:45 முப இல் மே 16, 2009 | அங்கதம், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

image

சொல்லுங்க எசமான், நான் செல்போன் திருடனா?

கடந்த வாரம் வேலையில் மும்முரமாக மூழ்கியிருந்த நேரத்தில் நண்பன் ஒருவனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்த பெண்மணி தெலுங்கில் பேசியதால் நண்பண் என்னிடம் தொலைபேசியைக் கொடுத்துப் பேசச் சொன்னான். உரையாடல் மொத்தமும் தெலுங்கில், உங்கள் வசதிக்காக தமிழில் பெயர்த்திருக்கிறேன். எதிர்முணை அம்மணி “புருஷோத்தமன் இருக்காரா” என்றார். “இல்லைம்மா, என் பேரு குமார்” என்றேன் (நண்பனின் தொலைபேசி என்பதால் அவன் பேசுவது போலவே பேசினேன்). “பொய் சொல்லாதீங்க, நீங்க புருஷோத்தமன் தானே!” என்று மறுபடியும் கேட்டாள் எ.மு. அம்மணி. கொஞ்சம் சுதாரித்து, “உனக்கு என்ன நம்பர்மா வேணும்” என்றேன். அப்போதும் “இந்த நம்பர் தான், நான் சரியாத்தான் போட்டேன்” என்றார். “இல்லையம்மா, நான் புருஷோத்தம் கெடையாது போன வை” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன்.

இரண்டே நிமிடத்தில் அதே எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு. குமார் இம்முறையும் என்னிடமே கொடுத்தான். பொத்தானை அழுத்திக் காதில் வைத்தால் “புருஷோத்தமன் சார், வெளையாடுறீங்க தானே” என்று அதே அம்மணி. “இல்லையம்மா, நீ தப்பான நம்பர் போட்டு பேசிக்கிட்டிருக்கே, போன வை” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன். போனைக் குமாரிடம் கொடுக்குமுன்பே மறுபடியும் அதே எண்ணிலிருந்து இன்னொரு அழைப்பு. “நம்பர் புருஷோத்தமனோடது தான், ஆனா அவரு போன நீங்க ஏன் வைச்சிருக்கீங்க” என்று போட்டாளே ஒரு போடு, உஷ்ணம் தலைகேறி “நோரு முயி (வாய மூடு). நேனு புருஷோத்தமன் காது, காது, காது…. ரெண்டு சாரி செப்பேனுகா… கட் ச்செய்…” என்று நான் கத்திய கத்தலில் சுற்றியிருந்த பத்துப் பதினைந்து பேரும் தங்கள் அலுவல் மறந்து சிரித்தனர். அதிலொருவர், “நம்பரக் குடு நயனா, வீட்ல தனியாதான் இருக்கேன்” என்றதும் மீண்டும் ஒருமுறை வெடிச் சிரிப்பு.

அவளாவது என்னை “செல்” திருடனாக்கினாள், இன்னொருவர் என்னை தரகனாகவே ஆக்க நினைத்துவிட்டார். சொல்லுங்க எசமான், நான் “செல் திருடனா”?

எஸ்.எம்.எஸ்.

நண்பர்களே, இது அந்தப் படத்தைக் குறித்த விஷயமல்ல. ஆந்திரத் தேர்தல் முடியும் வரை நான் அனுபவித்த கொடுமை. ஒவ்வொரு நாளும் ஆந்திராவின் முக்கியத் தலைவர்களிடமிருந்து என் தொலைபேசிக்கு ஓட்டுக் கேட்டுக் குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருந்தது (என்னைப் போல நெறைய பேருக்கு அனுப்புனாங்கன்னு தனியா வேற சொல்லனுமா…). “வேலையிழந்த இளைஞர்களே, (அடப் பாவி, என்ன இன்னும் வேலைய உட்டுத் தூக்கலடா) உங்கள் வேலைக்கு உத்திரவாதம் தரும் ஆட்சியை அமைக்க எனக்கு வாக்களியுங்கள் – உங்கள் சந்திரபாபு”, “வளாமான ஆந்திராவை உருவாக்க காங்கிரஸ் இயக்கத்துக்கு வாக்களியுங்கள் – உங்கள் ஒய்.எஸ்.ஆர்.”, “நான் விபத்திலிருந்து குணமாகி வர உங்கள் அனைவருடைய அன்பும் பிரார்த்தனைகளுமே காரணம். மிக்க நன்றி. – உங்கள் ஜூனியர் என்.டி.ஆர்”, தேர்தல் முடியும் வரை இவ்வாறாக நாளொன்றுக்கு நான்கைந்து குறுஞ்செய்திகள் வந்த வன்னமிருந்தன. இன்னைக்கு முடிவுகள் வெளியான பிறகு ஜெயிச்ச கட்சிக்காரனுங்க நன்றி சொல்லி வேற சாகடிப்பானுங்களே (சொல்லுவானுங்க?), நான் என்னாத்த செய்வேன்…. தமிழ்நாட்டு சொந்தங்களே, உங்களுக்கு இது மாதிரி எதுவும் வரலியா? ஈரோட்டுத் தாத்தா அப்பவே சொன்னாரு “ஓட்டுன்னா எத வேணாலும் தருவான். பொண்டாட்டியத் தவிற” அப்படீன்னு. எனக்கென்ன வருத்தம்னா அவரு சொன்னத இவனுங்க பொய்யாக்கிருவானுங்களோன்னு தான். அட, திருந்திட்டாப் பரவாயில்லீங்க, பொண்டாட்டியையும் குடுத்துட்டானுங்கன்னா?.

இதுவும் ரிசல்ட்டு மேட்டர்தான்

அரசியல்வாதிகளைப் போலவே ரிசல்ட்டுக்குக் காத்திருந்த இன்னொரு கூட்டம் மாணவர் கூட்டம். இவுங்க பதட்டம் ரெண்டு நாளைக்கு முன்னயே தணிஞ்சிருச்சு. முதலிடத்தில் மூன்று மாணவர்கள், ஒரு மாணவி. கேட்கவே மகிழ்ச்சியாயிருக்கிறது. தெனமும் ஒரு கிழம் (இதுக்கு மரியாத வேறயா) ராஜ் டிவில “சுய இன்பத்தால வீணாப் போகாதீங்கடா. தமிழ்நாட்ல ஒரு மாணவன் கூட ஏன் மொதலிடம் வரமுடியல? எல்லாரும் கைப்பழக்கத்தால வீணாப் போறானுங்க” என்று தினந்தோறும் ஒப்பாரி வைக்கும். என்னமோ தமிழ்நாட்டுல அத்தன பயலும் இருபத்திநாலு மணி நேரமும் கைல புடிச்சிக்கிட்டு அலையிற மாதிரி ஒரு பில்டப் குடுத்துக்கிட்டிருந்துச்சு. ஒருத்தனுக்கு மூணு பேரு மொதலிடத்துக்கு வந்திருக்காங்க. சேலம் வரைக்கும் போய் அது மூஞ்சில யாராவது கரியப் பூசிட்டு வாங்களேன்.

என்ன கூத்துடா இது?

இந்த ஜோசியக் காரணுங்க முன்னையெல்லாம் விதவிதமா தோஷத்துக்குப் பரிகாரம் சொல்லுவானுங்க. இப்போ இவனுங்களும் ரொம்ப ஹைடெக்கா மாறிக்கிட்டிருக்கானுங்க. முந்தாநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு விஜய் டிவியில ஒருத்தன் பரிகாரம் சொல்லிக்கிட்டிருந்தான் “ஆள் காட்டி வெரல்ல மச்சமிருக்கவனுக்கெலாம் அல்ப ஆயுசாம். அதுக்காகத் திருவண்ணாமலை கோயில்ல இருக்க சித்திரகுப்தன் செலைக்கு முன்னால ரெண்டு நோட்டும் ரெண்டு பேணாவும் வாங்கி வைங்கடாங்கறான். விட்டா ஒரு லேப்டாப்ப வாங்கி எனக்கு அனுப்பி வைங்கடான்னு சொன்னாலும் சொல்லுவானுங்க. ஆறு ஏழு மாசத்துக்கு முன்னால என் நண்பன் ஒருத்தன் ஏதோ ஒரு நாடி ஜோதிட வெப்சைட்டப் பாத்துட்டு கைய ஸ்கேனர்ல வச்சு படத்த அந்த நாடிஜோதிட கம்பெனிக்கு அனுப்பி வைச்சான். ரெண்டு நாள் கழிச்சு ஒரு ரிப்ளை வந்திருந்துச்சு “தங்களது நாடியை ஆராய்ந்து பார்த்ததில், நீங்கள் கோதானம் கொடுத்தால் தங்களது தோஷங்கள் விலகி இன்னல்கள் தீரும் என்று தெரிய வந்துள்ளது. மாட்டின் விலையான பன்னிரண்டாயிரத்தை டிடி எடுத்து அனுப்பினால் உங்கள் சார்பில் நாங்களே கோதானம் கொடுத்துவிடுவோம். மாட்டைப் பெற்றுக்கொள்ள நாங்களே ஆட்களை ஏற்பாடு செய்துகொள்வோம்” என்று ரிப்ளையில் கண்டிருந்தது. படித்துப் பார்த்த நண்பன் சத்தமாக “ஓ” போட்டான்… (__த்தா) அடைப்புக் குறிக்குள் கோடிட்ட இடத்தில்.

தமிழ்மண ஆதரவு வாக்கு | தமிழ்மண எதிர்வாக்கு

நான் தமிழன் – குமுதத்தின் கயமை

2:03 பிப இல் ஏப்ரல் 18, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

நேற்றைய தினம் “குமுதம் – சாக்கடை நதிகளின் மகாசங்கமம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை விரைவில் பதிவிடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தேன். கட்டுரைக்கு ஆதாரமாகப் பெரிதும் பயன்பட்டவை மதிமாறன் அவர்களின் கட்டுரைகள். ஆகவே வரைவை எழுதி முடித்து தோழர் மதிமாறன் அவர்களின் கருத்தை அறிவதற்காக மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன். அவருடைய தளத்திலேயே வெளியிட முடியுமா? என்று கேட்கும் எண்ணமும் இருந்தது. ஏற்கெனவே என்னுடைய ஒரு கட்டுரையை அவருடைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆகவே தொடர்ந்து இது போல் கோரிக்கை வைப்பது முறையாகாது என்ற காரணத்தால் இது குறித்து அவரிடம் கேட்கவில்லை.

இன்று காலை தொலைபேசியில் அழைத்து கட்டுரை சிறப்பாக வந்திருப்பதாகவும், இது பரவலாகப் பலபேரைச் சென்றடைய வேண்டுமென்றும் சொன்னார். தொடர்ந்து இக்கட்டுரையைத் தன்னுடைய தளத்தில் வெளியிடலாமா என்றும் கேட்டார். இருவரின் சிந்தனையும் ஒன்றுபோல் இருந்ததில் மிகவும் மகிழ்ந்தேன்.

மிகப் பொருத்தமான படத்துடன் கட்டுரையை இன்று காலையே பதிவேற்றமும் செய்திருக்கிறார். [குமுதத்தின் கயமை] இந்தத் தொடர்பைச் சொடுக்கினால் மதிமாறன் அவர்களின் தளத்திலுள்ள கட்டுரைக்குச் செல்லலாம். மீண்டும் ஒருமுறை தோழர் மதிமாறன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிவிப்பு…

9:43 பிப இல் ஏப்ரல் 17, 2009 | படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக
குறிச்சொற்கள்: ,

kumudam

[தமிழீஷில் வாக்களிக்க]

[தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க]

[தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க]

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.