சொல்றா மணியா – 25/07/2009

5:03 பிப இல் ஜூலை 25, 2009 | அங்கதம், அனுபவங்கள், அரசியல், கருணாநிதி, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,


திருவள்ளுவர் vs. சர்வக்ஞர்

பண்ட மாற்று முறையில் கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலையும் தமிழ்நாட்டில் சர்வக்ஞர் சிலையும் நிறுவப்பட உள்ளது. கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத் தேர்தலை முன்னிட்டு சிலை திறப்புத் தேதி உறுதியாகத் தெரியவில்லை. திருவள்ளுவரைக் குறித்து நமக்கு அறிமுகம் தேவையில்லை. சர்வக்ஞர் என்ற கன்னட கவிஞரைப் பற்றி எடியூரப்பா கோபாலபுரம் வந்து போன பிறகுதான் நமக்கெல்லாம் தெரிகிறது. அத்தினி, சித்தினி, பத்மினி போன்ற பெண் வருணனைகளையும், வீரசைவப் பெருமை பேசுகிற சுயசாதி பெருமைப் பாடல்களையும் எழுதிய பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் சர்வக்ஞர். திருவள்ளுவருக்கு எதிராக அறிவார்ந்த ஆளுமையாக முன்னிறுத்த கன்னடர்களுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. எடியூரப்பா இப்படி ஒரு கோரிக்கையை வைத்த பிறகு கோபாலபுரத்தார் என்ன கேட்டிருக்க வேண்டும்? “சரிப்பா, நீ சொல்ற படி சர்வக்ஞர் சிலையை தமிழ்நாட்டில வைக்கிறோம். திருவள்ளுவர் சிலையக் கூட திறக்க வேண்டாம், ஒரே ஒரு பெரியார் சிலைய நாங்க அல்சூர் ஏரிக்கரைல வச்சிக்கிறோம், டீல் ஓகேவா” என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். [கடைசிக் கட்ட செய்தி: ஆகஸ்ட் 9ம் தேதி சிலையைத் திறக்க தேர்தல் ஆணையம் அனுமதி.]


காண்டினெண்ட்டல் vs. கலாம்

காண்டினெண்ட்டல் நிறுவனம் அப்துல்கலாமை சோதனை செய்து விமானத்தில் அனுமதித்தது நாடாளுமன்றம் வரை எதிரொலித்திருக்கிறது. இந்தியத் தலைவர்களுக்கு இது புதிதல்ல, ஆனால் இந்தியாவிலேயே நடந்திருப்பதுதான் புதுமை. குடியரசுத் தலைவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தால் அதைப் பற்றிப் பாராட்டிப் பேசுகிறவர்கள், எல்லோரையும் போல பாதுகாப்புச் சோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் என்ன தவறு. சாதாரண மக்களுக்குச் செய்யப்படும் பாதுகாப்புச் சோதனைகள் ஒரு குடியரசுத் தலைவருக்குச் செய்யப்படும் போது அது அவமாணகரமானதாகக் கருதப்படுகிறது எனில் அதே சோதனை முறை கண்ணியமானதா என்ற கேள்வியல்லவா பிரதானமாகி இருக்க வேண்டும். ஸ்கேனர் கருவிகளைக் கொண்டு பயணி எதையாவது மறைத்து எடுத்துச் செல்கிறாரா என்று சோதிக்க முடிந்தாலும் ஆடைகளை எல்லாம் களைந்து சோதிக்கிற முறை கண்ணியமானதா? இப்படி ஒரு சோதனை ஒரு குடியரசுத் தலைவருக்கு நேர்வது மட்டுமா அவமானம்? இந்திய இறையாண்மை இந்தியர்களின் மானத்திற்கும் மரியாதைக்கும் முதலில் உத்திரவாதம் அளிக்கட்டும்? அதற்குப் பிறகு எதிர்த்துப் பேசுவோர் மிது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீட்டட்டும்.


ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா

டிவியப் போட்டா ஒரே களேபரம். எங்க பாத்தாலும் ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா? ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா? ன்னு. பண்றது சோப்பு வெளம்பரம். அதுக்கு எதுக்குடா ஸ்ரேயா எங்க வீட்டுக்கு வரனும். எட்டுதோ எட்டலியோ, என் முதுகுல என் கையாலதான் சோப்பு போடனும். அந்தப் புள்ளையா வந்து சோப்பு தேய்க்கப் போகுது. அவனவனுக்குப் போன கரண்ட்டு எப்போ வருமான்னே தெரியல, இதுல ஸ்ரேயா என் வீட்டுக்கு வந்தா என்ன வரலேன்னா என்ன? (இந்த லக்ஸ் விளம்பரம் தமிழ்நாட்டுல வருதான்னு தெரியலைங்கோ!!! நான் பாத்த தெலுங்கு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நிமிடத்துக்கு ஒரு முறை வருவாங்களா வருவாங்களான்னு கேட்டுக்கிட்டே இருக்கானுங்க.)



வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.