காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு – இறுதிப் பாகம்

7:42 பிப இல் மார்ச் 5, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: ,

1. செரீனா: குட்டைப் பாவாடையுடன் கால் மேல் காலிட்ட படி, ஒரு ஏர் ஹோஸ்டசுக்குரிய தோற்றத்துடன் உள்ள புகைப்படத்துக்குப் பக்கத்தில் “அழகி செரீனா கைது” என்று செய்தித் தாளில் சில ஆண்டுகள் முன்பு செய்தி வந்தது.  இவரது பெயர் செரீனா தானா என்பதிலேயே பெரும் குழப்பம். நக்கீரன் ஏடு மட்டும் இவரது பெயர் ஜனனி என்று தொடர்ந்து சொல்லி வந்தது. இவரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் இருந்த கொஞ்சம் நோட்டுகளின் சீரியல் நம்பர், ரிசர்வ் வங்கி சில ஆண்டுகள் கழித்து அச்சிடுவதற்காகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த சீரியல் நம்பர்கள் என்று செய்தி வெளியானது. பின்பு ரிசர்வ் வங்கி அந்தத் தகவலை மறுத்தது. தற்சமயம் மதுரையில் வசிப்பதாகக் கேள்வி.

2. டி.டி.வி. தினகரன்: பெரியகுளம் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அம்மாவின் கோபப் பார்வையால் பதவியை இழந்தவர்களுள் இவரும் ஒருவர். இவர் இழந்தது பொருளாளர் பதவியை. செல்வாக்கு மிக்க மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மீது ஃபெரா வழக்கு ஒன்று இருந்ததாக ஞாபகம். (தஞ்சையிலிருக்கும் புகழ்பெற்ற விநோதகன் மருத்துவமணையின் நிறுவனர் டாக்டர் வினோதகன் தினகரனின் தாய் மாமன்.)

3. குமரிஅனந்தன்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவர். பெரியவர் குமரிஅனந்தன் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜ் டிவியில் நீங்களும் பேச்சாளர் ஆகலாம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இவருடைய மகள் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார். திமுக, வாரியத் தலைவர் பதவிகளை காங்கிரசுடன் பகிர்ந்துகொண்ட போது இவருக்கு அடித்த ஜாக்பாட், பணை வாரியத்தின் தலைவர் பதவி. விசிட்டிங் கார்ட பணை ஓலையில அடிச்சு வச்சிருக்காறாம். கள்ளு இறக்க விடாம பணை தொழிலாளர்கள் வயித்திலயும் அடிச்சுக்கிட்டிருக்கார். இந்தப் பதவிய போயும் போயும் இவருக்கா கொடுக்கனும் என்று பணைத் தொழில் செய்துவரும் பலரும் அங்கலாய்க்கின்றனர்.

4. நடிகை ஜெயசித்ரா: பழம்பெரும் தமிழ் நடிகை என்றே சொல்லலாம். சென்னையில் வசித்த காலத்தில் மெரினா கடற்கரையில் மாலை நேரங்களில் நடைப்பயிற்சிக்கு வருவார், அப்போது பார்த்ததுதான். காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் சில மூவர்ண போஸ்டர்களில் இவருடைய பெயரையும் பார்க்கலாம். அம்மா அக்கா வேடங்களில் கூடத் தற்சமயம் தலைகாட்டுவதில்லை.

5. கார்த்திக் ராஜா: ராஜா வீட்டுக் கன்றானாலும் மூத்தது மோனை என்று காட்டிவிட்டார். ராஜாவின் வாரிசு என்ற எதிர்பார்ப்பை யுவன் நிறைவு செய்த அளவுக்கு கார்த்திக்கால் செய்ய இயலவில்லை. வளம் பெற வாழ்த்துக்கள்…

6. வழக்கறிஞர் ஜோதி: அம்மாவின் கோபப் பார்வையால் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டவர். இந்த மடம் போனால் சந்தைமடம் என்று அதிமுக வில் கட்டம் கட்டப்பட்ட ஒரு வாரத்துக்குள் திமுகவுக்கு வந்தவர். வழக்கறிஞர்கள் போராட்டம் பரபரப்பாக நிகழ்ந்துவரும் இந்த சமயத்திலும் இவரைப் பற்றிய தகவல் எங்கும் வருவதில்லை. ஜோதி என்றால் வெளிச்சம், திமுக வுக்கு வெளிச்சம் வந்திருக்கிறது என்றெல்லாம் புகழ்ந்துவிட்டு இவர் கையில் தந்ததென்னவோ மூண்று ரூபாய் அடையாள அட்டை மட்டுமே. கொடுத்தது அட்டையா அல்வாவா, தீனா மூனா கானாவுக்கே வெளிச்சம்.

7. பாடகர் மனோ: தற்சமயம் தமிழில் பாடல் வாய்ப்புகள் அதிகம் வருவதில்லை. கடைசியாக சிவாஜி படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ரஜினிக்கு டப்பிங் குரல் கொடுத்தார். சிங்காரவேலன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், பாலச்சந்தரின் “ஊஞ்சல்” தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். இவரது மகன் ஷகீர் இணையதளக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டது பரவலாக வெளியில் வராத விஷயம்.

8. எல். கனேசன்: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அவைத் தலைவர். இவருடைய மகன் எல்.ஜி. அண்ணா, தஞ்சாவூரில் எஸ்.என்.எம். உபயதுல்லாவை எதிர்த்துப் போட்டியிட்டு, எதிர்பார்த்த படியே வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர். தவில்னு சொன்னா நாயனமும் ஞாபகம் வற்ற மாதிரி இவர் பேர சொன்னா செஞ்சி ராமச்சந்திரன் பேரும் ஞாபகத்துக்கு வரும். ரெண்டு பேரும் திமுக வில் இணையப் போறோம், இணையப் போறோம்னு பல மாசமா சொல்லிக்கிட்டிருந்தாங்க. இணைஞ்சாங்களா தெரியல. (பதிவை எழுதி வரைவில் வைத்த இரண்டாவது நாள், “மார்ச் 17 போட்டி மதிமுக திமுகவில் இணையும்” என்று தொலைக்காட்சியில் செய்தி. ஏன்யா என் வயித்தெரிச்சல கெளப்புறீங்க. இந்த லட்சணத்துல ஒரு லட்சம் தொண்டர்களோட இணையுறாங்களாம். காமராஜர் அரங்கம் பத்தாதுங்கறதால இப்போதைக்கு ஆயிரம் பேரோட மட்டும் இணையுறாங்களாம்.)

9. பேராயர் எஸ்றா சற்குணம்: கலைஞரின் உற்ற நண்பர். சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஒரு நரை கூட இல்லாமலிருந்தவர் திடீரென தலையெல்லாம் நரையாகத் தொலைக்காட்சி செய்திகளில் முகம் காட்டத் தொடங்கினார். நண்பர்கள் சொல்லித்தான் தெரிந்தது தலைக்கு டை உபயோகிப்பதை நிறுத்திவிட்டாராம். பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் முன்பு போல் பொது நிகழ்ச்சிகளில் இவரைப் பார்க்க முடியவில்லை.

10. தீப்பொறி ஆறுமுகம்: கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக முகாமிலிருந்து அதிமுகவுக்குத் தாவினார். அதுவரை கலைஞர் என்றும் ஜெயலலிதா என்றும் சொல்லி வந்தவர் மிகுந்த சிரமத்துக்குப் பிறகு கருணாநிதி என்றும் அம்மா என்றும் சொல்லப் பழகிக்கொண்டாராம். சன்மானம் சரியில்லாததால் தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள அதிமுகவில் இணைவதாகச் சொல்லிச் சென்றார். ஆள் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

11. நடிகை மும்தாஜ்: டி.ராஜேந்தரின் அறிமுகம். மோனிஷா என் மோனோலிசா படத்தில் தொடங்கியது இவரது கலைச்சேவை. தெற்றுப் பல்லை சரி செய்துகொண்டு மலபார் போலீஸ் படத்தில் நடித்தார். எஸ்.ஜே. சூரியா தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்தது “கட்டிப்புடி கட்டிப்புடிடா” என்ற பாடல் மட்டுமல்ல, ______________. (கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள். எதையாவது எழுதினால் பெண்ணுரிமை ஆர்வலர்கள் என்னைக் கிழித்துத் தோரணம் கட்டிவிடுவார்கள்.)

12. ஆனந்தகீதன்: சன் டிவியின் அறிமுக காலத்தில் இவரும் ஒரு தொலைக்காட்சிப் பிரபலம். வார்த்தை விளையாட்டு, ஹீரோ ஹீரோயின் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியில் இவர் கேட்கும் ஏழு கேள்விகளுக்குள் இவரது மனதிலிருக்கிற பிரபலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இதே கான்செப்ட் பின்னர் கோடீஸ்வரன் நிகழ்ச்சியிலும் பயன்படுத்தப்பட்டது.

13. ஈ. மாலா: யார் பார்த்தாலும் “நம்ம வீட்டுப் பொண்ணு” என்று சொல்லக் கூடிய முகம். சன் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் குறித்து எதுவும் நினைவில் இல்லை. ஆனாலும் மறக்க முடியாத முகம். திரைப்பட இயக்குனர் ஒருவரை மணந்து இல்லத்தரசியாக இருக்கிறாராம்.

14. சுரேஷ் சக்ரவர்த்தி: இவரும் சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரே. “அழகன்” படத்தில் அதிராம்பட்டினம் சொக்குவாக (சீக்கு மாமா) வந்து சிரிக்க வைத்தவர். இவரது டிக் டிக் டிக் நிகழ்ச்சி நான் தவறாமல் பார்த்து வந்த நிகழ்ச்சி. ஒரெ செயலை ஒரு நிமிடத்துக்குள் எத்தனை முறை செய்வது என்பதுதான் சவால். ஒவ்வொரு வாரமும் புதிய புதிய சவால்களுடன் நிகழ்ச்சி களை கட்டும். சன் டிவியிலிருந்து விலகிய பின்பு சிறிது காலம் ஜெயா டிவியில் பணிபுரிந்தார். கே.எஸ். அதியமானின் “சொர்ணமுகி” படத்தில் நாயகன் ப்ரகாஷ்ராஜின் தோழனாகவும் நடித்தார். தற்சமயம் இவரைக் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

15. எம்.ஜே.ரெகோ: ஜோடிப் பொருத்தம் என்ற அசத்தலான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர். நிகழ்ச்சிக்காக பங்கேற்பவர்களை சென்னைக்கு வரவழைக்காமல் நிகழ்ச்சியே மக்களைத் தேடி ஊர் ஊராக வந்தது. அதிரடியாக இறுதிச் சுற்றில் வென்ற ஜோடிக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. உபயம் ஆர்.எம்.கே.வி. சன் டிவியிலிருந்து விலகிய பின்னர் இதே போன்ற நிகழ்ச்சி ஒன்றை ஜெ.ஜெ. டிவியில் தொகுத்தளித்து வந்தார். தற்சமயம் இவரைக் குறித்தும் தகவல்கள் இல்லை.

16. சந்திராசாமி: இவர் ஊருகாய் வியாபாரி லக்குபாய் பாதக் என்பவரை ஏமாற்றிய வழக்கு வெகுகாலம் செய்திகளில் ஊறுகாய் போல வந்துகொண்டிருந்தது. ஒத்த ரூவா பொட்டுக்காரி என்று திரையுலகில் ஹீரோயின்களை ஹீரோக்கள் பாடுவார்கள். அதைவிடப் பெரிய வட்டமாக பொட்டு வைத்திருப்பார். இவரது இயற்பெயர் நேமிசந்த் ஜெயின். இவர் மீது 12 ஃபெரா வழக்குகள் நிலுவையில் இருந்தன. மண்டையைப் போட்டுவிட்டார் என்று சில வருடங்களுக்கு முன் செய்திகளில் பார்த்ததாக ஞாபகம்.

17. நடிகை வினிதா: படிக்கிறவர்கள் என்னைத் தவறாக எண்ணக் கூடாது. நடந்த விவரங்களை மட்டுமே இங்கே எழுதுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு ஓராண்டு கழித்து காவல் துறை குற்றத்தை நிரூபிக்காததால் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார். சமீபத்தில் பிரபு மகன் திருமணத்தில் கலந்துகொண்டு அட்டகாசமாக போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார்.

18. பிரேமானந்தா: திருச்சி பாத்திமா நகரில் ஆசிரமம் வைத்திருந்த இவர் மீது தொண்ணூறுகளின் மத்தியில் சரமாரியாகக் குற்றச்சாட்டுகள் வந்த வன்னம் இருந்தது. கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட பல குற்றங்கள் இதில் அடக்கம். இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் சிறையில் இருக்கிறார். அவ்வப்போது பரோலில் ஆசிரமத்துக்கு வந்து பக்த கே… மன்னிக்கவும், கோடிகளுக்கு ஆசி வழங்கிச் செல்கிறார். சர்க்கரை நோயின் தீவிரத்தால் ஒரு கண்ணில் பார்வைக் குறைபாட்டுடன் கஷ்டப்படுவதாக பத்திரிகை செய்திகளில் கூட வந்தது. இவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்த பெண்கள் சிலரும் இதே பாத்திமா நகர் ஆசிரமத்தில் வசித்து வருவது குறிப்பிடத் தக்கது.

தற்செயலாகத் தோண்றிய சிந்தனையின் விளைவாக இதன் முதல் பதிவை எழுதினேன். வாசகர்களின் வரவேற்புக்கிணங்க இரண்டாவது பதிவையும் எழுதியாகிவிட்டது. இன்னொரு பாகம் எழுதக் கூடாது என்பதால் இரண்டுடன் முடிக்க வேண்டிய கட்டாயம். அதனாலேயே பதிவு சற்று நீண்டுவிட்டது. பொருத்தருள்வீர்.

முந்தைய பதிவுகள்:

சைதை தமிழரசி தாக்கப்பட்டார்…..

இரண்டு கைகள் நான்கானால்…

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

5:05 பிப இல் மார்ச் 1, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 15 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

1. ஆதிகேசவன்: வெறும் ஆதிகேசவன்னு சொன்னா தெரியாது, ஆல் இன் ஆல் ஆதிகேசவன்னு சொன்னாத்தான் எல்லாருக்கும் தெரியும். அய்யா அழுக்கு வேட்டியவே ஆகாயவிமானத்துல அனுப்பி டெல்லியில சலைவைக்குப் போடுவாராம். ஒரு தரவுக்காக கூகுள்ல இவரோட படத்தத் தேடின். ஒன்னு கூடக் கெடைக்கல. இவரு எங்க இருக்காரு, இவரு மேல இருந்த வழக்குகளின் நிலைமை என்ன, எதுவும் தெரியல. தெரிஞ்சவங்க தாராளமா சொல்லுங்க.

2. முத்துக்கருப்பன்: வராற்றுச் சிறப்பு மிக்க கலைஞர் கைதில் பங்கேற்ற அதே முத்துக்கருப்பன்தான். கொஞ்ச நாள் திருச்சி காவலர் பயிற்சிக் கல்லூரியின் தலைவரா இருந்தார். ஒரு முறை தற்கொலை முயற்சி செய்ததாகக் கூட சொல்லிக்கிட்டாங்க. தற்சமயம் என்ன செய்கிறாருன்னு தெரியவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முதல்வரை நேர்ல சந்திச்சு கோரிக்கை வைச்சதா பத்திரிகை செய்திகள் கூட வந்துச்சு. ஒன்னும் வேலைக்காகல.

3. ஸ்ரீ ஹரி பரணிதர ஸ்வாமிகள்: சேலத்துல, ஸ்கூல்ல படிச்சிட்டிருந்த பையன் அவனா சாமியாரானானோ, இல்லை வேற யாராவது ஆக்குனாங்களோ தெரியாது! கொஞ்ச நாள் காவித்துணியும் தண்டமுமா (தண்டமா) திரிஞ்ச பையன், இப்போ மறுபடியும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட்டதா கேள்வி. கொஞ்ச நாள் மதுரை ஆதினம் கூட இந்தப் பையன இளைய ஆதினமா நியமிக்கப் போறதா நம்மள வச்சு காமெடி பண்ணுனாரு. அதுக்காக ஏற்கெனவே அப்பாயிண்ட் பண்ண இளைய ஆதினத்த டிஸ்மிஸ் பண்ணி போஸ்ட்ட வேக்கெண்ட்டா வச்சிருந்தாரு. ஆனா பாருங்க எல்லாம் புஸ்வானமாயிருச்சு.

4. சிவகாசி ஜெயலட்சுமி: பல காக்கிங்க இந்த அம்மாவப் பாத்து ஒரு காலத்துல “சிவகாசி ரதியே” ன்னு பாடிக்கிட்டிருந்தாங்க. மாட்டினதும் சிவகாசி ரதி சிவகாசி வெடியாகிருச்சு. இவங்க பேரக் கேட்டால காக்கிப் பேண்ட் எல்லாம் ஈரப் பேண்ட் ஆனதெல்லாம் ஒரு காலம். இப்போ இவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல. அரெஸ்ட் ஆகறதுக்கு முன்னாடி மல்ட்டி லெவெல் மார்க்கெட்டிங்ல இவங்க பெரிய தில்லாலங்கடியாம்.

5. இவர் பேரு எனக்கு ஞாபகத்துலயே இல்லை. ஆனா இப்படி ஒரு மனுஷன் இருந்தாரே, போலீஸ்ல மாட்டுனாரே, தியாகராயநகர் தொழிலதிபர் ஒருத்தரோட மனைவியையும் மகளையும் தன்னோட கஸ்டடீல வச்சிருந்ததா கூட குற்றம் சாட்டுனாங்களேன்னு பல விஷயம் ஞாபகத்துக்கு வருதே ஒழிய இவரு பேரு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. கடைசியா காலைக் கடன செட்டில்பண்ணிக்கிட்டிருந்தப்போ இவரோட பேரு ஞாபகத்துக்கு வந்துச்சு. சதுர்வேதி சாமியார்.

6. ஜீவஜோதி: சரவணபவன் அண்ணாச்சிக்கு இந்தம்மா கனவுல வந்தா கூட பிரஷர் ஏறிக்கிட்டிருந்துச்சு. தஞ்சாவூர்ல “ஜீவ்ஸ்” டெய்லரிங்ன்னு ஒரு தையல்கூடம் வச்சிருந்தாங்க. அப்புறமா அதே தஞ்சாவூர்ல கந்தசரஸ் மஹால் திருமண மண்டபத்துல உறவுக்காரர் ஒருவரையே மறுமணம் செஞ்சுக்கிட்டாங்க. கல்யாணத்துல செய்தி சேகரிக்க வந்த பத்திரிகைக்காரங்க வாசல்லயே தடுத்துத் திருப்பி அனுப்பப்பட்டாங்க. அதனால அன்னைக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையே ரொம்ப கலவரமா இருந்துச்சு. ஜீவஜோதி இப்போ வெளிநாட்டுல இருக்கறதா கேள்வி. இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னா, நானும் அதே தஞ்சாவூர்க்காரன்தான்.

7.  ஜோஷ்வா ஸ்ரீதர்: “காதல்” படத்துக்கு இசை அமைச்ச இவரோட நிஜவாழ்வுக் காதலில் என்ன சிக்கலோ தெரியலை, கைது கஸ்டடீன்னு பல விதமா செய்திகள் வந்துகிட்டிருந்துச்சு. மீண்டும் கீபோர்டு ப்ளேயரா ஆகிட்டதா கேள்வி. இவரப்பத்தியும் ரொம்ப நாளா எந்த தகவலும் இல்ல.

8. ஜெயமாலா: சோழிய உருட்டிப் பாத்து ஐயப்பன் கோபமா இருக்காருன்னு உன்னிகிருஷ்ன பணிக்கர் சொன்னாரு, உடனே கொஞ்ச நாள் கழிச்சு இந்த அம்மா “ஆமாஞ்சாமி, நாந்தான் ஐயப்பன் செலையத் தொட்டுக் கும்புட்டேன்னு” சொன்னாங்க. விஷயம் கொஞ்ச நாள் எரிஞ்சுச்சு, கொஞ்ச நாள் பொகைஞ்சுச்சு. அதுக்கப்புறம் இந்த அம்மாவப் பத்தியும் ஒரு செய்தியும் இல்ல.

9. கிரகலக்‌ஷ்மி: நடிகர் ப்ரஷாந்தின் மனைவி. கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இடையே கிரகலக்‌ஷ்மிக்கும் இன்னொருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகிவிட்டது என்று ப்ரஷாந்த் தரப்பிலிருந்து கூறப்பட்டது. தற்சமயம் விவாகரத்து வழக்கு என்ன நிலையில் இருக்குன்னு தெரியல. இவங்களுக்கு ஒரு குழந்தையும் இருக்குது.

10. சிவசங்கர் பாபா: பத்துப் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இவரப்பத்தி யாருக்கும் தெரியாம இருந்துச்சு. என்னைக்கு இவரு யாகவா முனிவர் கையால துண்டடி வாங்குனாரோ அன்னைக்கு ஆரம்பிச்சுது இவருக்கு சுக்கிர தெசை. “சம்ரஷனா” அப்படீன்னு ஒரு அமைப்ப நடத்திக்கிட்டிருக்கறதா கேள்வி. முன்னையெல்லாம் அடிக்கடி டிவி சேனல்கள்ள பேட்டி குடுப்பார். இப்ப இவரு குடுக்கறதில்லையா இல்லை யாரும் இவர் கிட்ட பேட்டி கேக்கறதில்லையான்னு தெரியல.

11. ராமர் பிள்ளை: மூலிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளைன்னு கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு பரபரப்பான பேச்சிருந்துச்சு. ஆனா இவருடைய தயாரிப்பு ஆய்வுக்கூட சோதனையில தோல்வியடைஞ்சிருச்சு. “தமிழ் தேவி” மூலிகை எரிபொருள்ங்கற பேருல இவருடைய கண்டுபிடிப்பு சில காலம் விற்பனை செய்யப்பட்டது. இவருடைய கண்டுபிடிப்புக்கு சீனக் காப்புரிமை கோரி வின்னப்பித்திருந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இவருடைய தயாரிப்பை விநியோகம் செய்யப் போவதாகவும் சொன்னது. இவர் தனது மனைவியையும் மகளையும் பிரிந்திருப்பதாக வந்த செய்தியே பத்திரிகைகளில் கடைசியாக இவரைப்பற்றி வந்த செய்தி.

12. ___________________________.

பின்குறிப்பு: 12 ஆவது ஆள் யாருன்னு தெரிஞ்சுக்க நீங்க ரொம்ப ஆவலா காத்திருப்பீங்க. ஆனாலும் என்னால அவர இந்தப் பட்டியல்ல சேக்க முடியாது. இந்தப் பதிவைப் பத்தொன்பதாம் தேதிக்கு முன்பு எழுதியிருந்தால் அவரையும் இப்படியலில் சேர்த்திருப்பேன். ஆனால் அன்று தான் அவருக்கு ஹைக்கோர்ட்டில் முட்டையடி வைபவம் நடந்தது.

அறிவிப்பு…

2:10 பிப இல் நவம்பர் 25, 2008 | கடிதங்கள், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்
குறிச்சொற்கள்: ,

முந்தைய பதிவில் இடம்பெற்ற புகைப்படம் எனக்கு மின்னஞ்சலில் வந்தது. முன்பும் சில புகைப்படங்களுடன் என்னுடைய கமெண்ட்டையும் இணைத்துப் பதிவாக வெளியிட்டுள்ளேன். அதே போல இந்தப் புகைப்படத்தையும் எனது கமெண்ட்டுடன் வெளியிட்டிருந்தேன். ஆனால் புகைப்படத்தில் இருந்த குறிப்பிட்ட சாராரின் மனதைப் புண்படுத்தலாமோ என்ற எண்ணம் பதிவை வலையேற்றிய இரவே எனக்குத் தோண்றியது.

மறுநாள் காலையே அப்பதிவை நீக்கிவிடலாம் என்றும் அப்போதே முடிவு செய்தேன். “அப்துல்” என்ற பெயரில் வந்த அனானி கமெண்ட் வராதிருந்தால் அந்தப் பதிவு அப்போதே நீக்கப்பட்டிருக்கும். மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளுடன் வந்திருந்த அந்தப் பின்னூட்டம், பதிவை நீக்குகிற என்னுடைய முடிவை மாற்றிவிட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து கொண்டு இந்த அனானி பின்னூட்டத்தை அனுப்பியிருக்கிறார் அந்த அன்பர். அன்பரின் ஐபி முகவரியைக் கொண்டு அவரது தொலைபேசி எண்ணையும் கண்டுபிடித்தாகிவிட்டது. இனியொரு முறை அந்த அன்பரிடமிருந்து பின்னூட்டங்கள் வந்தால் அவருடைய தொலைபேசி எண் பதிவு மூலமாக பகிரங்கமாக வெளியிடப்படும். தற்சமயம் அவரது இல்ல முகவரியை கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிற்க. முக்கியமான செய்தி இனிமேல்தான் வர இருக்கிறது. நேற்று நண்பர் ஏ.எம்.ஜமால் அவர்களின் பின்னூட்டத்தைப் படித்த பிறகு, இவருக்காகவாவது அந்தப் பதிவை நீக்க வேண்டும் என்று தோண்றியது (பதிவை நீக்குங்கள் என்று அவர் கோராதபோதும்). பதிவு நீக்கப்பட்டால் அவருடைய பின்னூட்டமும் அதனுடன் அழிந்துவிடும் என்பதால் தனிப்பதிவில் அதனை வெளியிடுகிறேன். “பின்னே எதுக்குடா போட்டோ எடுக்குறீங்க” என்ற அந்தப் பதிவு கடவுச்சொல்லால் காக்கப்படுகிறது. இனி எவரும் அதனைப் படிக்க இயலாது. மோசமான வார்த்தைகளால் குட்டிக் காட்டாமல், சரியான வார்த்தைகளால் சுட்டிக் காட்டிய நண்பர் ஜமால் அவர்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன்

விஜய்கோபால்சாமி

நண்பர் ஜமால் அவர்களின் பின்னூட்டம்:

நீங்கள் சொல்ல வரும் செய்தியின் முக்கியத்துவம் மறைந்து, புகைப்படத்தை கிண்டல் செய்யும் என்னமே மேலோங்கி நிற்கிறது. உங்கள் மனசாட்சியை கேளுங்கள் – உண்மை புரியும்.சரியோ தவறோ – ஒரு சாராரை புண்படுத்தி என்ன செய்ய போகிறீர்கள்.

நண்பரின் தள முகவரி: http://adiraijamal.blogspot.com/

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.