பச்சை மனிதன் – நடந்தது என்ன?

3:03 பிப இல் பிப்ரவரி 8, 2009 | பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

ஹல்க் என்ற ஆங்கிலத் திரைப்படம் “பச்சை மனிதன்” என்ற பெயரில் தமிழில் வெளியாகியது. இப்பதிவு அதைப் பற்றியதல்ல. மக்களிடம் நிதி திரட்டி அதிலிருந்து “பச்சை மனிதன்” என்ற படத்தை எடுப்பதாக அறிவிக்கப்பட்ட படத்தைப் பற்றித்தான் இப்பதிவு பேச இருக்கிறது.

ஆண்டுதோறும் பூதாகரமாக உருவெடுக்கும் காவிரிப் பிரச்சினையை முன்னிறுத்தியே “பச்சை மனிதன்” என்ற படம் எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வந்தன. இயக்குனர் சேரனிடம் உதவி-இயக்குனராக இருந்த ஷரத் சூர்யா என்பவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, மக்களிடம் நிதி திரட்டுவதற்காக “பச்சை மனிதன் அறக்கட்டளை” என்ற அமைப்பும் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையில் இயக்குனர் சேரன், சமூக ஆர்வலர் எம்.எஸ். உதயமூர்த்தி, இயக்குனர் லிங்குசாமி மற்றும் பச்சை மனிதன் படத்தை இயக்க இருந்த ஷரத் சூர்யா (இவரது படம் கிடைக்கவில்லை) ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

image image image

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளிலிருந்து தொண்டுள்ளம் கொண்ட 16,000 மாணவர்களிடம் நிதி திரட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்றும், 110 டிக்கெட்டுகள் கொண்ட புத்தகம் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் என்றும், நூறு டிக்கெட்டுகான தொகையை அறக்கட்டளையினருக்கு வரைவோலையாக அனுப்பிவைக்கும் செலவுக்கு பத்து டிக்கெட்டுகளுக்கன ரூ.100ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த டிக்கெட்டுகளில் படத்தைப் பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டுகளாகவும் பயன்படும் என்று அச்சிடப்பட்டிருந்தது.

image

படத்தின் இயக்குனர் ஷரத் சூர்யா “பச்சை மனிதன்” என்ற தலைப்பில் ரூபாய் ஐம்பது மதிப்புள்ள புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

படத்துக்கான நிதி வசூலை ஜூன் 2004க்குள் முடித்து படத்தை ஏப்ரல் 14 2005 அன்று வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக ஆறாம் திணை தளத்தில் வெளியாகிய இக்கட்டுரையில் (போராட்ட ஆயுதமாய் ஒரு தமிழ் சினிமா) கூறப்பட்டுள்ளது. இன்று வரை படமும் வெளிவரவில்லை, ஏறக்குறைய 16,000 பேர் திரட்டித் தந்த தொகை என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை.

துணை இயக்குனராகும் கனவுடனிருந்த நண்பன் (கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவன்) ஒருவனுக்காக அறுபது டிக்கெட்டுகளை என் அலுவலக நண்பர்களிடம் விற்றுத் தந்தேன். மேலும் என்னுடைய பங்களிப்பாக இருபது டிக்கெட்டுகளையும் வாங்கிக்கொண்டேன். இந்த முயற்சிக்கு என் பொறுப்பில் ரூ. 800 திரட்டித் தரப்பட்டுள்ளதாலேயே இப்பதிவை எழுதுகிறேன். ஒரு நல்ல முயற்சியை நான் கொச்சைப்படுத்துவதாக யாரேனும் பின்னூட்டம் எழுத எத்தனித்தால் கீழ்க்கண்ட முகவரியிலோ அல்லது தொலைபேசியிலோ விசாரித்து திரட்டப்பட்ட நிதி என்னவாயிற்று என்று கேட்டுச் சொல்லலாம்.

அறக்கட்டளை இயங்கும்/இயங்கிய முகவரி மற்றும் தொலைபேசி எண்:

பச்சை மனிதன் அறக்கட்டளை
பதிவு எண் : 370/4/03
9-A, சிவசைலம் தெரு, ஹபிபுல்லா ரோடு
தி.நகர், சென்னை 600 017
போன்: 2834 4946, செல்: 98403 44474

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.