ஊடகப் பொறுப்பின்மை

4:02 முப இல் ஜூன் 17, 2009 | அனுபவங்கள், பகுக்கப்படாதது, படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

imageவிஜய் டிவியின் “குற்றம் – நடந்தது என்ன?” நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்க முடியாவிட்டாலும் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் முழுமையாகப் பார்ப்பதுண்டு. சமீபத்தில் குழந்தைகள் கடத்தி விற்கப்படுவது குறித்த செய்தித் தொகுப்பு ஒன்று அந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த கண்ணன்-சுசீலா தம்பதியரின் குழந்தையை தனமணி என்பவர் கடத்திச் செல்ல முற்பட்டும் அது தொடர்பிலான விசாரனையில், இது பெரிய அளவிலான குழந்தை வணிகமாக இயங்கி வருவதும் தெரியவந்தது. இதே செய்தி ஜூன்-14 தேதியிட்ட ஜூனியர் விகடன் செய்தி ஏட்டிலும் வெளிவந்திருந்தது.

இதில் தனமணி சந்தேகத்துக்கு இடமின்றி குற்றவாளிதான் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. தனமணியின் குற்றத்தை நியாயப்படுத்தும் நோக்கிலும் இப்பதிவு எழுதப்படவில்லை. தொடர்ந்து விஷயத்துக்குள் செல்வதற்கு முன் இதனைத் தெளிவுபடுத்துவது எனது கடமையாகிறது.

ஒருவர் குற்றவாளி என்பதாலேயே அவர் மீது எத்தகைய அவதூறை வேண்டுமானாலும் சொல்லிவிட முடியாது, சொல்லவும் கூடாது. ஆனால் தனமணி விஷயத்தில் விஜய் டிவி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது என்றுதான் எண்ண வேண்டியுள்ளது. திருச்சி லால்குடி அருகிலுள்ள பெருவளநல்லூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மனைவிதான் தனமணி. ராமச்சந்திரனின் மறைவுக்குப் பின் பிழைப்புத் தேடி தனமணி கோவைக்குச் சென்றுவிட்டார். அங்கே அபிராமன் என்பவரை இரண்டாவது கணவராகத் திருமணம் செய்து கொண்டார். ஜூனியர் விகடனில் இச்செய்தி விரிவாக வந்துள்ளது. இதே செய்தி விஜய் டிவியில் முற்றிலும் வித்தியாசமாக எப்படி வந்தது என்பதையும் பார்ப்போம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனமணியைக் குறித்துச் சொல்லும்போது, “இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர் தனமணி” என்று மட்டுமே தனமணியின் மணவாழ்க்கை குறித்துக் கூறப்பட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சியை மட்டுமே பார்க்கிறவர்கள், தனமணி முதல் கணவன் உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தவள், நடத்தை கெட்டவள் என்றுதான் எண்ண நேரும்.

செய்தியின் முக்கியப் பகுதி குழந்தைகள் கடத்தி விற்கப்பட்டதைக் குறித்த அலசல். அதில் தனமணி எத்தனை முறை திருமணம் செய்தவர் என்பது சொல்லத் தேவையில்லாத விஷயம். அப்படிச் சொல்லியே ஆகவேண்டும் என்று நினைத்திருந்தால், உண்மையான அல்லது முழுமையான விபரங்களை மக்களுக்கு அறியத் தந்திருக்க வேண்டும். விஜய் டிவி இந்த குறைந்தபட்ச நியாயத்தை, நாகரிகத்தைக் கூடக் கடைபிடிக்கவில்லை.

சந்தேகத்துக்கு இடமின்றி தனமணி குற்றமிழைத்தவர் என்பதாலேயே விஜய் டிவி அவர் மீது அவதூறு சுமத்தியது எவ்விதத்தில் நியாயம்? என் மனதிலிருக்கிற இந்தக் கேள்வியோடு இப்பதிவை முடிக்க விரும்பினாலும், இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் அல்லது தொகுப்பாளர் கோபி ஆகியோருடன் தொடர்பிலிருப்போர் இவ்விஷயத்தை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் அவர்களின் தரப்பையும் அறிய ஏதுவாகும். அவர்களிடமிருந்து பதில்கள் வந்தால் அவை யாதொரு திருத்தமுமின்றித் தனிப்பதிவாக வெளியிடப்படும்.

தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க

தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க

தமிழீஷில் வாக்களிக்க

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.