வாழ்க துட்டகேமுனு…
11:30 பிப இல் மே 28, 2009 | அங்கதம், அரசியல், ஈழம் இல் பதிவிடப்பட்டது | 13 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: எல்லாளன், சிங்களர், தமிழர், துட்டகேமுனு, ராஜபக்ஷே
[துட்டகேமுனு என்பது ஒரு சிங்கள மன்னனின் பெயர். சரியான உச்சரிப்பு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்துகொள்ள வசதியாயிருக்கும்.]
கவிக்கோ அப்துல் ரகுமான் ஆனந்த விகடனில் எழுதிய ஈழம் குறித்த தொடர் ஒன்றில் வழியாக இந்த ஆளுமை எனக்கு அறிமுகமானது. சிங்கள இதிகாசமான மஹாவம்சத்தின் நாயகன். ஒரு நாள் தனது மஞ்சத்தில் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறான். “கொஞ்சம் வசதியாகத்தான் படுத்துக் கொள்ளேன்” என்கிறாள் அவனது அன்னை விகாரமகாதேவி (விகார என்பது புத்த விகாரையைக் குறிக்கும் சொல் என்றே கருதுகிறேன்). மகன் பதில் சொல்கிறான் “தென்புறத்தில் கடலும், வட புறத்தில் சைவமும் தமிழும் நெரிக்கும் போது உடலைக் குறுக்கிக் கொண்டு இப்படித்தான் படுக்க முடியும்” என்கிறான்.
மேலே சொல்லப்பட்ட உரையாடல்தான் மஹாவம்ச நாயகனின் அறிமுகம். இந்தியாவில் குண்டு வெடிப்பில் செத்தவனெல்லாம் அடுத்த தலைமுறையின் பாடப் புத்தகத்தில் இடம்பெறுகிறனல்லவா, அதே போல தமிழர்களை எதிர்த்தவன் என்ற காரணத்தால் நமது கதையின் நாயகன் சிங்கள காப்பியத்துக்கே நாயகனாகிறான். மொத்த மகாவம்சமும் தனி ஒருவரால் எழுதப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாழ்ந்தவர்கள் நாயகனின் மேன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்ல தத்தமது கற்பனையையும் கதையில் நுழைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆக துட்டகேமுனுவின் நாயக பிம்பம் என்பது மற்றவர்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கிய “கைப்புள்ளையின் வீரம்” போன்றதுதான் என்றும் அவதானிக்க நேர்கிறது.
கதையின் நாயகன் செய்த உச்சபட்ச சாதனையாக இன்றளவும் சொல்லப்படுவது “எல்லாளன்” என்ற தமிழ் மன்னனைப் போரிட்டு வென்றதுதான். அதுவும் கூட படையுடன் படை பொருதிய யுத்தமல்ல. பாட்டன் வயதுள்ள எல்லாளனை துட்டகேமுனு “ஒண்டிக்கு ஒண்டி வற்றியா” என்று அழைக்க, அவரும் ஒப்புக்கொண்டு மோதினார். எதிர்பார்த்த மாதிரியே எல்லாளன் தோற்றுப் போனார். கள்ளியிலும் பாலிருப்பதைப் போன்று துட்டகேமுனுவின் மனதிலும் கொஞ்சம் ஈரம் இருந்தது. “முதுகு வலிக்கு இப்போதான் ஆப்ரேஷன் பண்ணேன். என்னால சண்டையெல்லாம் போட முடியாது” என்று சாக்குப் போக்கு சொல்லாமல் தன்னோடு மோதி உயிர் துறந்த எல்லாளனுக்கு மரியாதை செய்ய எண்ணி, அவரை அடக்கம் செய்த இடத்தை அனைவரும் வழிபாட்டுக்குரிய இடமாகக் கருத வேண்டும் என்று கட்டளையிடுகிறான். அநுராதபுரத்திலுள்ள அந்த இடம் இன்றளவும் சிங்களர்களின் வழிபாட்டுக்குரிய ஸ்தலமாக இருந்து வருகிறது. அறியாமையினால் சிங்களர்கள் அதை எல்லாளனின் சமாதியாகக் கருதாமல் துட்டகேமுனுவின் சமாதி என்று நினைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். எது எப்படியோ, தமிழனாக இருந்தாலும் எல்லாளனின் நேர்மையை மதித்துள்ளான் துட்டகேமுனு.
இவ்வாறான கதைகளால் மேலும் மேலும் ஊதிப் பெரிதாக்கப்பட்டு துட்டகேமுனுவுக்குப் பௌத்தக் காவலன் என்ற பிம்பமும் வந்து சேர்கிறது. இந்த பௌத்தக் காவலன் பிம்பத்தின் விளைவாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் துட்டகேமுனுவின் பெயர் பாடசாலைகளுக்குச் சூட்டப்படுகிறது. துட்டகேமுனுவின் பெயரால் “கேமுனு வாட்ச் (Kemunu Watch) என்ற படைப் பிரிவு சிங்கள ராணுவத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட்டில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் “பௌத்தத்தைக் காக்க அதிபர் ராஜபக்ஷே துட்டகேமுனு வழியில் போராட வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார். துட்டகேமுனு துதிபாடல் இத்துடன் நிற்க.
புலிகளின் வீழ்ச்சி தற்போது ராஜபக்ஷேவுக்கு இரண்டாம் துட்டகேமுனு என்ற பிம்பத்தைக் கொடுத்துள்ளது. “உட்டாலக்கடி செவத்ததோலுடா உத்துபாத்தா உள்ளே தெரியும் நாயுடுஹாலுடா” என்று பாட்டெழுதியவரை செருப்பாலடிக்க வேண்டும் என்று எல்லாருக்கும் தோண்றினாலும், “உன் கண்வீர்யம் தாங்கமல், சம்சார்யம் வாங்காமல் காம்பு வீங்குதே” என்று எழுதியவன் முன்னவரை நல்லவனாக்கிவிடுகிறனல்வா. இதையே துட்டகேமுனு ராஜபக்ஷே சம்பவத்தில் பொருத்துங்கள்.
இன்னுமொரு இருநூறு ஆண்டுகள் சென்று இரு சிங்களர்கள் இப்படிப் பேசினாலும் பேசிக் கொள்ளலாம் (சிங்களத்தில்). முதலாமவன்: “துட்டகேமுனு என்று ஒரு மகாராஜா இருந்தார் தெரியுமா? தமிழர்களை என்னமாய் ஒடுக்கினார்.” இரண்டாமவன்: “மடையா, ராஜபக்ஷே என்று ஒரு அதிபர் இருந்தார், அவரது கால் தூசுக்குப் பொற மாட்டான் இந்த துட்டகேமுனு.”
ஆம் நண்பர்களே, ராஜபக்ஷேவை இரண்டாம் துட்டகேமுனு என்று அழைப்பதை இன்றுடனாவது நிறுத்துங்கள். வேண்டுமானால் துட்டகேமுனுவை இரண்டாம் ராஜபக்ஷே என்று அழைத்துக் கொள்ளுங்கள். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், “துட்டகேமுனு நல்லவன்”. எங்கே, என்னோடு சேர்ந்து எல்லோரும் குரலெழுப்புங்கள்… “வாழ்க துட்டகேமுனு…”
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.