சொல்றா மணியா – 25/07/2009

5:03 பிப இல் ஜூலை 25, 2009 | அங்கதம், அனுபவங்கள், அரசியல், கருணாநிதி, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,


திருவள்ளுவர் vs. சர்வக்ஞர்

பண்ட மாற்று முறையில் கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலையும் தமிழ்நாட்டில் சர்வக்ஞர் சிலையும் நிறுவப்பட உள்ளது. கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத் தேர்தலை முன்னிட்டு சிலை திறப்புத் தேதி உறுதியாகத் தெரியவில்லை. திருவள்ளுவரைக் குறித்து நமக்கு அறிமுகம் தேவையில்லை. சர்வக்ஞர் என்ற கன்னட கவிஞரைப் பற்றி எடியூரப்பா கோபாலபுரம் வந்து போன பிறகுதான் நமக்கெல்லாம் தெரிகிறது. அத்தினி, சித்தினி, பத்மினி போன்ற பெண் வருணனைகளையும், வீரசைவப் பெருமை பேசுகிற சுயசாதி பெருமைப் பாடல்களையும் எழுதிய பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் சர்வக்ஞர். திருவள்ளுவருக்கு எதிராக அறிவார்ந்த ஆளுமையாக முன்னிறுத்த கன்னடர்களுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. எடியூரப்பா இப்படி ஒரு கோரிக்கையை வைத்த பிறகு கோபாலபுரத்தார் என்ன கேட்டிருக்க வேண்டும்? “சரிப்பா, நீ சொல்ற படி சர்வக்ஞர் சிலையை தமிழ்நாட்டில வைக்கிறோம். திருவள்ளுவர் சிலையக் கூட திறக்க வேண்டாம், ஒரே ஒரு பெரியார் சிலைய நாங்க அல்சூர் ஏரிக்கரைல வச்சிக்கிறோம், டீல் ஓகேவா” என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். [கடைசிக் கட்ட செய்தி: ஆகஸ்ட் 9ம் தேதி சிலையைத் திறக்க தேர்தல் ஆணையம் அனுமதி.]


காண்டினெண்ட்டல் vs. கலாம்

காண்டினெண்ட்டல் நிறுவனம் அப்துல்கலாமை சோதனை செய்து விமானத்தில் அனுமதித்தது நாடாளுமன்றம் வரை எதிரொலித்திருக்கிறது. இந்தியத் தலைவர்களுக்கு இது புதிதல்ல, ஆனால் இந்தியாவிலேயே நடந்திருப்பதுதான் புதுமை. குடியரசுத் தலைவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தால் அதைப் பற்றிப் பாராட்டிப் பேசுகிறவர்கள், எல்லோரையும் போல பாதுகாப்புச் சோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் என்ன தவறு. சாதாரண மக்களுக்குச் செய்யப்படும் பாதுகாப்புச் சோதனைகள் ஒரு குடியரசுத் தலைவருக்குச் செய்யப்படும் போது அது அவமாணகரமானதாகக் கருதப்படுகிறது எனில் அதே சோதனை முறை கண்ணியமானதா என்ற கேள்வியல்லவா பிரதானமாகி இருக்க வேண்டும். ஸ்கேனர் கருவிகளைக் கொண்டு பயணி எதையாவது மறைத்து எடுத்துச் செல்கிறாரா என்று சோதிக்க முடிந்தாலும் ஆடைகளை எல்லாம் களைந்து சோதிக்கிற முறை கண்ணியமானதா? இப்படி ஒரு சோதனை ஒரு குடியரசுத் தலைவருக்கு நேர்வது மட்டுமா அவமானம்? இந்திய இறையாண்மை இந்தியர்களின் மானத்திற்கும் மரியாதைக்கும் முதலில் உத்திரவாதம் அளிக்கட்டும்? அதற்குப் பிறகு எதிர்த்துப் பேசுவோர் மிது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீட்டட்டும்.


ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா

டிவியப் போட்டா ஒரே களேபரம். எங்க பாத்தாலும் ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா? ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா? ன்னு. பண்றது சோப்பு வெளம்பரம். அதுக்கு எதுக்குடா ஸ்ரேயா எங்க வீட்டுக்கு வரனும். எட்டுதோ எட்டலியோ, என் முதுகுல என் கையாலதான் சோப்பு போடனும். அந்தப் புள்ளையா வந்து சோப்பு தேய்க்கப் போகுது. அவனவனுக்குப் போன கரண்ட்டு எப்போ வருமான்னே தெரியல, இதுல ஸ்ரேயா என் வீட்டுக்கு வந்தா என்ன வரலேன்னா என்ன? (இந்த லக்ஸ் விளம்பரம் தமிழ்நாட்டுல வருதான்னு தெரியலைங்கோ!!! நான் பாத்த தெலுங்கு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நிமிடத்துக்கு ஒரு முறை வருவாங்களா வருவாங்களான்னு கேட்டுக்கிட்டே இருக்கானுங்க.)இரண்டு கைகள் நான்கானால்…

6:08 பிப இல் மார்ச் 2, 2009 | கருத்துப் படம் இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , ,

image

நல்லா பாத்துக்குங்கப்பா,  தட்டு ரெண்டும் நேரா இருக்கு, நேரா இருக்கு, நேரா இருக்கு…

ஓ பக்கங்களில் எழுத்து மாமா கேட்ட இந்த வாரக் கேள்வி:

பெரியார் திராவிடர் கழகத்தலைவரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளருமான கொளத்தூர் மணி ‘‘ ராஜீவ் காந்தி கொலை செய்யப்படவில்லை. அவருக்குத் தரப்ட்டது மரன தண்டனை. உண்மையில் நாட்டுப்பற்று உள்ள இந்தியன், சமூக நீதி கோரும் பிற்படுத்தப்பட்டவன் எவனாவது ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேன்டும். நாம் செய்யத்தவறியதை ஈழத்தமிழன் ஒருவன் செய்தபோது நாம் உண்மையில் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஏனென்றால் 6000 பேரைக் கொன்ற, 1000 பெண்களை பாலியல் வல்லாங்கு செய்த இந்திய அமைதிப்படையை ஈழத்துகு அனுப்பியவன் ராஜீவ் காந்தி. துடிக்காதா நெஞ்சம் ?  ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம். விடுதலைப்புலிகள் செய்திருக்காவிட்டால் அது குற்றம் செய்து இருந்தால் பாராட்டுகிறோம். இல்லையென்றால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும்’’ என்று பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

ராஜீவ் செய்த ‘குற்ற’த்துக்காக விடுதலைப் புலிகள் மரண தண்டனை வழங்கலாம் என்றால், அந்த ‘குற்ற’த்துக்கு தொடர்பே இல்லாத இன்னும் இருபது பேரையும் ஸ்ரீபெரும்புதூரில் கொன்றதற்காக விடுதலைப்புலிகளுக்கு மரண தண்டனை வழங்கலாமா? அந்த ‘அப்பாவிகள்’ தற்செயலாக செத்தது தவிர்க்க முடியாதது என்று சொல்வீர்களா? புலிகளுக்கும் ராஜபக்ஷே அரசுக்கும் நடக்கும் போரில் இடையில் சில அப்பாவித் தமிழர்கள் சாவது தவிர்க்கமுடியாதது என்று ஜெயலலிதா சொன்னதைப் போன்றதுதானே அது ?

குற்றத்துக்கு மரண தண்டனை வழங்குவது சரியென்றால் இந்திய சட்டபடி குற்றவாளிகளான ராஜீவ் கொலையாளிகளுக்கு விதித்த மரண தண்டனைக்கு எதிராக ஏன் கையெழுத்து இயக்கம் நடத்தினீர்கள் ? ஏன் கருணை மனுக்களை ஆதரிக்கிறீர்கள் ? சில மரண தண்டனைகள் மட்டும் அநியாயமானவை; மற்றவை இருக்கலாம் என்பதுதான் மனித நேயக் கையெழுத்து இயக்கமா?

அதிசயம் ஆனால் உண்மை, ஓ பக்கங்களில் முதல் முறையாக, கருந்தேள், நெருஞ்சி முள், நச்சுப் பாம்பு முதலியவை பதுக்கி வைக்கப்படாத பூச்செண்டை முதல்வர் கருணாநிதிக்கு வழங்கவிருக்கிறார் எழுத்து மாமா. ஏனெனில் எழுத்து மாமா போட்டுக் கொடுத்ததற்கினங்க “பெரியார் திராவிடர் கழக” தலைவர் கொளத்தூர் மணியைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர்!!!

என்னமோ போடா மாதவா… 22/02/2009

11:15 முப இல் பிப்ரவரி 25, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,

image-thumb.png ஈரான் எழுத்தாளரும் “சாத்தானின் வேதங்கள்” நூலை எழுதியவருமான சல்மான் ருஷ்டி மீது ஃபத்வா அறிவித்தார் அந்நாட்டு இஸ்லாமியத் தலைவர் அயத்துல்லா கொமைனி. அதே போல பல்லடத்தில் இந்து மக்கள் கட்சி ராஜபக்‌ஷேவின் தலைக்கு விலை வைத்து ஃபத்வா அறிவித்திருக்கிறது. கொஞ்சம் காஸ்ட்லியான தலைதான், விலை ஏழரை கோடி ரூபாய். ஏழரை கோடியை ஒவ்வொரு தமிழனும் தலைக்கு ஒரு ரூபாய் கொடுத்து திரட்ட வேண்டுமாம். தலைக்கு ஒரு ரூபாய் கொடுப்பதல்ல இங்கே பிரச்சனை, இந்த இயக்கம் எதற்காக இந்தியாவை இப்பிரச்சனையில் தலையிடச் சொல்கிறது என்று பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. கைவிட்டுப் போன கச்சத்தீவைப் போலவே இலங்கையும் இந்தியாவின் ஒரு அங்கம் என்ற அகண்டபாரத இந்துத்துவக் கனவின் வெளிப்பாடாகவே விளங்குகிறது இந்த ஃபத்வா. இதற்காக முப்பது பேர் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மீண்டும் மீண்டும் வளருகிற முடியைக் காணிக்கையாகக் (மொட்டை என்று சொன்னால் எனக்கும் ஃபத்வா விதித்துவிடுவார்களோ என்று பயமாயிருக்கிறது) கொடுத்திருக்கிறார்களாம். ஏழரையின் பாதிப்பு குறைவாக இருக்க வேண்டும் என்று திருமதி ராஜபக்‌ஷே சமீபத்தில் தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் வழிபாடு நடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் தீக்குளிப்புகள் பரவலான கவனத்தைப் பெற்றாலும்,  மக்களை சலிப்படையவே வைக்கின்றன. வருந்தத்தக்க நிகழ்வாகவே இருந்தாலும், முத்துக்குமரனின் மரணம் ஈழப் பிரச்சனையின் பக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பிரச்சனையின் தீவிரத்தை அனைவருக்கும் உணர்த்தியது. ஆனால், தொடர்ந்து நடைபெறும் தீக்குளிப்புகளும் தீக்குளிப்பு முயற்ச்சிகளும் போராட்டத்தை நீர்த்துப் போகவே செய்யும். இன்று எத்தனை பேர் பற்றவைத்துக்கொண்டார்கள் என்று தொலைக்காட்சி செய்திகளில் தேட நேரிடுகிற அபாயம் இருக்கிறது. நேற்றைய தினம் தீக்குளித்த திமுக தொண்டரின் செயல் ஈழத் தமிழர் மீதான அக்கறையை விட கலைஞர் மீதான களங்கத்தைப் போக்கும் முயற்சியாகவே சித்தரிக்கப்படும். நேற்றைய மரணம் திமுக-விலும் ஒருவர் தீக்குளித்துள்ளார் என்று சொல்லிக்கொள்ள வேண்டுமானால் பயன்படுமே ஒழிய ஈழ விடுதலையில் நம்முடைய நோக்கம் நிறைவேற ஒருபோதும் உதவாது.

image.pngஹெச்.டி.தேவேகௌடா, ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். பொது நிகழ்வுகளின்போது மேடைகளிலேயே தூங்கக்கூடியவர் என்று பெயரெடுத்தவர். வெகு சமீபத்தில் தூக்கம் கலைந்து எழுந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் மூண்றாவது அணியில்தான் இருக்கிறது” என்பதே அந்த அறிக்கையின் சாரம். மீண்டும் கண்விழித்து ஜெயலலிதா அம்மையார் காங்கிரசுக்கு கூட்டணி அழைப்பு விடுத்ததை அறிந்தால் மாரடைப்பில் மண்டையப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர் எழுந்த உடன் யாரவது பக்குவமாகச் சொல்லி சாந்தப்படுத்துங்கள்.

image-thumb.png கடந்த வாரம் சில எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதில் ஒருசிலரின் குடும்பத்தார் தெரிவித்த எதிர்ப்பின் பேரில் அவர்களுடைய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு சுந்தரராமசாமியைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அவருடைய எழுத்துக்களுடனும் பரிச்சயம் கிடையாது. ஆதலால் அவரைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.

எனக்குத் தெரிந்து கண்ணதாசனின் படைப்புகளில் இன்றும் ஓரளவுக்கு நன்றாக விற்பனையாவது எது என்றால் “அர்த்தமுள்ள இந்துமதம்” ஒன்றுதான். தகப்பனை மட்டுமே நம்பினால் கரையேற முடியாது என்று காந்தி கண்ணதாசனுக்கே தெரியும். அதனால் தான் வெளிநாட்டு சுயமுன்னேற்ற நூலாசிரியர்களின் நூல்களுக்கு மொழிபெயர்ப்பு வெளியிட்டு வருகிறார். அவரது எதிர்ப்பை ஏற்று கண்ணதாசன் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படாதது அரசுக்கு லாபமே. கண்ணதாசன் படைப்புகள் அடுத்த தலைமுறையை நோக்கிப் பயணிப்பது சாத்தியமில்லை. இன்னும் இருபது வருடங்கள் சென்று கண்ணதாசன் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கலாமா என்று பரிசீலிக்கக் கூட ஆளிருக்காது. அந்த வகையில் காந்தி கண்ணதாசனுக்கு இழப்புதான். (கண்ணதாசனைப் பற்றி எழுத உனக்கென்ன அருகதை இருக்கிறது என்று பின்னூட்ட விரும்புகிறவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அடுத்த தலைமுறை கண்ணதாசனின் எழுத்துக்களை விரும்புமா என்று மனசாட்சியோடு யோசித்துப் பாருங்கள். அதற்குப் பிறகு என்னைத் திட்டி பின்னூட்டம் எழுதலாம்.) கண்ணதாசனை அவரது எழுத்துக்களுக்காக ரசிபவர்களை விடவும் பாடல்களுக்காக ரசிப்பவர்களே அதிகம். அவர்களுக்கெல்லாம் பண்பலை வானொலிகளே போதுமானது.

தமிழில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆய்வுப்படிப்பு என்று அனைத்திற்கும் பயன்படுபவை புலியூர் கேசிகன் அவர்களின் எழுத்துக்கள். அவை நாட்டுடைமை ஆக்கப்பட்டது, உள்ளபடியே பாராட்டப்பட வேண்டிய செய்தி. இதனால் தமிழை மேற்கல்விக்காகத் தேர்ந்தெடுப்பவர்கள் மலிவு விலையில் புலியூர் கேசிகனாரின் நூல்களை வாங்க ஏதுவாகும். தமிழ்க் கல்வி பயிலும் மாணவர் சமுதாயம் இந்த ஒரு காரணத்துக்காக அரசுக்குத் தாராளமாக தங்களது நன்றியைத் தெரிவிக்கலாம்.

எனக்கு ஒரு சந்தேகம் கலைஞர் கருணாநிதியின் நூல்கள் இன்றளவும் பரவலாகப் பலரால் வாசிக்கப்படுபவை. அவற்றுள் வெகு சில நூல்களே முப்பது நாற்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. அவருடைய மாஸ்டர் பீஸ்களான நெஞ்சுக்கு நீதி, பாயும்புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம் உள்ளிட்ட எந்த நூலும் மலிவாகக் கிடைப்பதாகத் தெரியவில்லை. நூற்றைம்பது ரூபாய் முதல் ஐந்நூறு ரூபாய் வரை விலை வேறுபடுகிறது. ஆகவே பகுத்தறிவாளர்களே, கலைஞரின் எழுத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று கோரிக்கை வையுங்கள். பயந்து போய், நம்மை விட்டால் போதும் என்று பெரியார் நூல்களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கினாலும் ஆக்கிவிடுவார்!

[பதிவு எழுத “விண்டோஸ் லைவ் ரைட்டர்” கருவியைப் பயன்படுத்துவேன். அதில் இருந்த கோளாறு காரணமாக நேற்று முந்தினம் எழுதிய பதிவை உடனே பதிப்பிக்க முடியவில்லை. அதனால் “ரெண்டு நாள் லேட்டுடா மாதவா” என்று கூட சொல்லலாம். ஸ்லம்டாக் ஆஸ்கர் விருதுகள் குறித்து வேறொரு பதிவில் எழுதுகிறேன்.]

கொடிநாள் நிதியும் கருணாநிதியும்

3:37 பிப இல் திசெம்பர் 13, 2008 | அரசியல், பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

image

image

கொடிநாளுடனான எனது பழைய நினைவுகளை இந்தப் பதிவின் வாயிலாகப் பகிர்ந்து கொள்வது ஒன்றே பிரதான நோக்கம் (வேறு சில சில்லரை நோக்கங்களும் (சில்லரைத் தனமான நோக்கங்கள் அல்ல) உண்டு. அவற்றைப் பதிவின் போக்கிலே காணலாம்). ஆறு அல்லது ஏழாம் வகுப்பில் என்று நினைக்கிறேன், கருணாநிதி அவர்கள் முதல் முறை முதலமைச்சராக இருந்த போது நிகழ்த்திய கொடிநாள் வானொலி உரை பாடத்தில் வைக்கப்பட்டிருந்தது. படையினரின் சிறப்புகளும் கொடிநாளுக்கு நிதி வழங்குவதன் அவசியம் குறித்தும் கூறப்பட்டிருக்கும்.

ஒரு ரூபாய், பத்து ரூபாய், நூறு ரூபாய் என்று பல விலைகளில் பல்வேறு அளவுகளில் கொடிகள் பள்ளிக்கு வழங்கப்படும். மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஒரு ரூபாய் கொடி வாங்கியாக வேண்டும். ஆசிரியர்கள் விலை அதிகம் உள்ள பெரிய கொடிகளை வாங்க வேண்டும். காசு கொடுத்துக் கொடி வாங்கினாலும் அதையும் காசாக்குகிற வித்தை அறிந்த ஆசிரியர்களையும் பார்த்திருக்கிறேன். ஆண்டு இறுதியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் டி.சி. வாங்க வரும்போது அவர்களிடம் அந்தக் கொடிகள் விற்றுக் காசாக்கபடும். இதே உத்தி பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் பின்பற்றப்படுவதாகக் கேள்வி. (வாழிய பாரத moneyத் திருநாடு)

எனக்கு நினைவு தெரிந்து கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் தவிர்த்து வேறு யாரும் தமிழகத்தில் முதலமைச்சராக இருந்ததில்லை (ஐயோ… ஓ. பன்னீர்செல்வம்… அவரை மறந்துவிட்டேனே!) கொடிநாளன்று தொலைக்காட்சி செய்தியில் மேலே சொன்ன இருவரில் ஒருவர் தவறாமல் காட்டப்படுவார். அவர்கள் கொடி நாள் உண்டியலில் காசைப் போடுகிற காட்சி தவறாமல் காட்டப்படும். மார்கெட்டிங் உத்தி.

இந்த வரிசையில் கடைசியாக என் நினைவுக்கு வருவது இந்தக் கொடி நாளுக்கான கருணாநிதியின் அறிக்கை. முன்னாள் படை வீரர்களுக்கான மருத்துவமணைகள் தமிழகத்தில் பன்னிரண்டு இடங்களில் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். நல்லது. ஆனால், தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தமிழகம் கொடி நாள் நிதியளிப்பதில் முதலிடத்தில் இருப்பதாகப் பெருமிதம் தெரிவித்திருந்தார். அங்கே தான் கொஞ்சம் இடறுகிறது.

இந்தியா ஒரு ஏழை நாடு என்று நமக்கெல்லாம் பள்ளிகளில் சொல்லிக் கொடுத்த காலத்தில் இந்த கொடி நாள் வசூலை ஒப்புக்கொள்ளலாம். ஆண்டு வளர்ச்சி ஏழு சதவீதத்துக்கு மேல் இருக்கிறது, எட்டு சதவீதத்துக்கு மேல் இருக்கிறது என்று பாரத நிதியமைச்சர்கள் ஆண்டுதோறும் கூவிக்கொண்டிருக்கிற இந்தக் காலத்தில், தேவையா இந்தக் கொடி நாள் வசூல். பிறகு எதற்கு ராணுவத்துக்கென்று ஒரு பட்ஜெட்.

ராணுவத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கிற வடஇந்தியர்கள் ஏன் தமிழகத்தை மிஞ்சும் அளவுக்கு நிதி வழங்குவதில்லை? எந்த வடஇந்தியனாவது இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீன்வனுக்காகக் கண்டனம் தெரிவித்ததுண்டா? (அடக் கருமமே, அந்த மீனவனும் இந்தியன் தான்டா). வட இந்திய ஊடகங்கள் ஈழத் தமிழர்கள் குறித்து நடத்திய கருத்துக் கணிப்பில் பெருவாரியானவர்கள் இந்தியா தலையிடக்கூடாது என்று வாக்களித்தனர். (அப்புறம் என்னத்துக்குடா கப்பல எடுத்துக்கிட்டு சோமாலியா வரைக்கும் போய் கடல் கொள்ளைக்காரங்கள தாக்கி அழிச்சீங்க. சோறு திங்கிறவனுக்கு ஒரு நியாயாம், சப்பாத்தி திங்கிறவனுக்கு ஒரு நியாயமா?) தமிழன் சொரணையுள்ளவனாக இருந்தால் “என்னத்துக்குடா உண்டியலக் குலுக்கிக்கிட்டு எங்ககிட்ட வற்றீங்க”ன்னு கேக்கனுமா வேண்டாமா?

முதலமைச்சரவர்களே, வெட்கப்பட வேண்டிய விஷயத்தை பெருமைக்குரியதாக மக்களிடையே பிரச்சாரம் செய்யாதீர்கள். நீங்கள் கொடிநாளை ஆதரிப்பதையும், நிதி வழங்கப் பிரசாரம் செய்வதையும் கைவிட்டால், கோடி நன்றிகளைக் கூறுவோம் உங்களுக்கு.

image

நம் ஊரில் எப்போது?

2:10 முப இல் ஏப்ரல் 27, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,

சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில், ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. நம் ஊர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, எல்லாமே சிரிப்புதான் போன்ற நிகழ்ச்சி அது. பங்கேற்க வந்த ஒருவர் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியையும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் போல் குரலை மாற்றி நகைச்சுவை செய்து காட்டினார். அந்த நகைச்சுவை, இதோ உங்களுக்காக…

கௌன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிறார் திரு. சந்திரபாபு நாயுடு. அமிதாப்பச்சனுடன் பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்ட பிறகு போட்டி தொடங்குகிறது. பதிமூண்று கேள்விகளுக்கு நாயுடு சரியாக பதில் சொல்லிவிடுகிறார். பதினாலாவது கேள்வியில் கொஞ்சம் திணறுகிறார். கைவசம் இரண்டு லைப் லைன்கள், இரண்டு தவறான விடைகளை நீக்கலாம், நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் சரியான விடையை கேட்டுச் சொல்லலாம். கேள்வி என்ன என்றால் “1997ல் ஆந்திராவின் மக்கள் தொகை எவ்வளவு?” என்பதுதான். நான்கு விடைகளில் சரியானதைச் சொல்ல வேண்டும். ஏ. 2,15,00,000; பி. 12,42,00,000; சி. 45,00,00,000; டி. 7,10,00,000. நான்கில் ஒன்று சரியான விடை. ஆனால் நாயுடுவுக்கு அந்த விடை தெரியவில்லை. நாயுடு தவறான இரண்டு விடைகளை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறார். பி, சி, இரண்டும் நீக்கப் படுகிறது. மீதமுள்ள இரண்டு விடைகளிலும் நாயுடுவுக்கு உறுதியாக எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம்.

அமிதாப் பச்சன் யாரையாவது தொலைபேசியில் அழைத்து கேளுங்களேன் என்று ஆலோசனை கூறுகிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை அழைக்குமாறு கேட்கிறார். அமிதாப் பச்சன் மற்றும் பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி. நாயுடு கேட்டபடியே திரு ரெட்டி அவர்களை தொலைபேசியில் அழைக்கப்படுகிறார். அப்போது திரு ரெட்டி சட்டசபையிலிருக்கிறார். அமிதாப் பச்சனுடனான வழக்கமான அறிமுகத்துக்குப் பிறகு, கேள்வியும் பதில்களும் அவருக்கு சொல்லப்படுகிறது. திரு. ரெட்டி யோசனையுடன் “1997ம் வருடம் சந்திரபாபு ஆட்சியிலே, ஆந்திர மாநிலம் தொழில்துறை, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளிலே,” என்று தொடங்கி 20 விநாடிகளை காலி செய்கிறார். பதற்றமடைந்த திரு நாயுடு, விடையை சீக்கிரம் சொல்லுங்கள் என்று அவசரப் படுகிறார். கடுப்பான திரு ரெட்டி, ஏ. 2,15,00,000 என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டிக்கிறார்.

அமிதாப் பச்சன், “உங்கள் நண்பர் ஏ. 2,15,00,000 என்று கூறியிருக்கிறார் , நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் திரு நாயுடு? என்று கேட்கிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு டி. 7,10,00,000 என்று விடை சொல்லுகிறார். ரெட்டி கூறிய பதிலை விட்டுவிட்டு இவர் வேறு பதில் சொல்லுகிறாரே என்று அனைவருக்கும் ஆச்சரியம். அமிதாபின் வழக்கமான இழுத்தடிப்புக்குப் பிறகு நாயுடு சொன்னதுதான் சரியான விடை என்று தெரிய வருகிறது. மிஸ்டர் நாயுடு, உங்கள் நண்பர் சொன்ன விடை தவறானது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்என்று ஆச்சரியம் விலகாமல் கேட்கிறார் அமிதாப். அவர் எப்போதுமே வாய்க்கு வந்ததை சொல்லுவார், அவருக்கு எதையும் சொந்தமாக யோசிக்க வராது. அப்படியே சரியான விடை தெரிந்தாலும் எனக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறதே என்பதற்காக தவறான விடையைத்தான் சொல்லுவார். அதனால் தான் அவர் சொல்லாமல் விட்ட விடையை நான் சொன்னேன்என்று அந்த இளைஞர் நாயுடுவின் குரலில் சொல்லி முடித்த பிறகு அரங்கமே அதிர்கிறது. எனக்கும் சிரிப்பை அடக்க சில நிமிடங்கள் பிடித்தன.

இந்த நிகழ்ச்சி எனக்குள் சில கேள்விகளையும் எழுப்பிவிட்டுச் சென்றது. ஒரு முதலமைச்சரையும், வருங்காலத்தில் முதலமைச்சராக வரும் வாய்ப்புள்ள ஒருவரையும் கேலி செய்வது கூட ஆந்திராவில் இயல்பாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நம் ஊரிலும் கருணாநிதி ஜெயலலிதா போன்ற அரசியல் பிரபலங்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பகடி செய்யும் எந்த நிகழ்ச்சிகளும் ஏன் தமிழ் ஊடகங்களில் வெளிவருவதில்லை? விதி விலக்காக விகடன், மற்றும் குமுதத்தில் மட்டும் அரசியல், திரைப் பிரபலங்களைப் பற்றி நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் படக்கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. காட்சி ஊடகங்களில் மருந்துக்குக் கூட இதுபோன்ற நகைச்சுவைகளைக் காண முடிவதில்லை. மறைந்த திரு எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றியவை மட்டுமே காட்டப்படுகின்றன. அப்படிக் காட்டப்படுபவை கூட அரசியல் சார்ந்த நகைச்சுவையாக இல்லாமல் அவருடைய திரைப்படங்கள் சார்ந்தவையாகவே இருக்கின்றன.

நான் எதிர்பார்க்கிற கேலி என்பது, ஜெயமோகனின் சிவாஜி, எம்.ஜி.ஆர். கேலிகளைப் போன்றதல்ல. ஆபாசமில்லாத, தனி நபர் சாடல்களற்ற, நாகரிகமான கேலி அல்லது நகைச்சுவை. நம் ஊரில் எப்போது காணக்கிடைக்கும் இதுபோன்ற நகைச்சுவை?

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.