நம்முடைய கவலையெல்லாம்…

9:07 முப இல் ஏப்ரல் 12, 2009 | அங்கதம், அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

ஈழத் தமிழினத்தின் மீதான உண்மையான அக்கறையுடன் (?!) கலைஞரவர்கள் தற்போது பேசி வருகிறார். நம்முடைய கவலையெல்லாம் கலைஞரவர்களைக் குறித்தே சுற்றிவருகிறது. ஈழத்தில் இரண்டு விதமான விளைவுகளே நடக்க வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளார். ஈழம் அமைவது அல்லது விடுதலைப் புலிகள் வீழ்வது. இரண்டாவது விளைவு, அதாவது விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளபடியே வரவேற்கத்தக்க விஷயம்.

கலைஞரைப் பொறுத்த அளவிலே பிரபாகரன் கவலைக்குரிய கட்டத்தில் இருக்கிறார். ஆனால் நமக்கோ பிரபாகரனைவிடவும் கலைஞரே பெரிய கையறு நிலையிலிருப்பதாகத் தோன்றுகிறது. ஈழ விவகாரத்தில் இரண்டே விதமான விளைவுகளை அவதானிக்க முடிந்தவர்களால் கூடத் பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு எத்தனை விதமான விளைவுகள் ஏற்படும் என்று அவதானிக்க முடியாது. இருந்தாலுல் சில விதமான விளைவுகளின் போது அதைத் தொடர்ந்து என்ன நடைபெறலாம் என்று பார்க்கலாம்.

தேர்தலில் இந்தியா முழுவதும் (தமிழகம் உட்பட) காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான தொகுதிகளைப் பெறலாம். அவ்வாறாயின் கலைஞரின் நிலைமையில் யாதொரு மாற்றமும் இல்லை. செல்வாக்குள்ள அமைச்சர் பதவிகளைக் கேட்டுப் பெறுவார். இங்கே மீண்டும் “அமைச்சரவையில் காங்கிரசுக்குப் பங்கு” என்ற கோஷம் ஒலிக்கும். உடல்நிலையையும் கருத்தில் கொள்ளாமல் டெல்லிக்கு விமானம் ஏறுவார். சோனியாவைச் சந்தித்துத் திரும்புவார். இங்கே அமைச்சரவையில் பங்கு என்ற கோஷம் ஆறிப் போன பூரியாக அமுங்கிவிடும்.

அடுத்தபடியாக காங்கிரசுக்கு இந்தியா முழுவதும் பெருவாரியான இடங்கள் கிடைத்து தமிழகத்தில் திமுக பெருவாரியன இடங்களில் தோற்கலாம். அப்போது ஒன்று அல்லது இரண்டு அமைச்சர்களுடன் கலைஞர் அமைதியாகலாம். அந்த நேரத்தில் 2004ல் நாற்பதையும் வென்று தந்தவன் என்ற பழைய பெருமையெல்லாம் அப்போது வேலைக்காகாது. தமிழகத்திலும் “ஆட்சியில் பங்கு” கோஷம் மீண்டும் தலையெடுக்கும். டெல்லி மேலிடத்திலும் “கொடுதால்தான் என்ன” என்பார்கள். ஐந்து பதவிகள் என்ற பழைய கணக்கையெல்லாம் அப்போது சொல்ல முடியாது. பத்திலிருந்து பதினைந்து அமைச்சர்கள் வரை கொடுத்தே ஆக வேண்டும். அப்போதுதான் 2011 வரை கலைஞரின் நாற்காலியில் நாலு காலும் தரையிலிருக்கும்.

காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்ற முடியாமல் போகலாம். இலவச டிவி, ஒரு ரூபாய் அரிசி உள்ளிட்ட சாதனைகளைச் சொல்லித் தமிழகத்தில் திமுக பெரும்பாலான தொகுதிகளை வென்றிருக்கலாம். இப்போது கலைஞர் முன்பு இரண்டு வாய்ப்புகள். வசதியாக ஆட்சியமைக்கும் கூட்டணியிடம் சரணடையலாம். ஆட்சியமைப்பது பாஜக வாக இருந்தால், உடனடியாகத் தனது ஆதரவைக் கொடுத்துவிடவும் முடியாது. காங்கிரசுக்கு மாற்றாக திமுக வை ஆதரிக்க பிஜெபி யிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. அதனால் 2011 வரை பொறுமையாக இருக்க வேண்டும். டெல்லி ஆட்சிக்கு கலைஞரின் தயவு தேவையில்லை என்பதாலும் மீண்டும் “ஆட்சியில் பங்கு” என்ற கோஷம் ஒலிக்கும். இப்போது திமுக வின் குடுமி மட்டும்தான் காங்கிரஸ் வசம். கொடுத்துதான் ஆகவேண்டும், இன்னும் இரண்டாண்டு ஆட்சி மிச்சமிருக்கிறதே.

மூண்றாவது அணி ஆட்சியமைக்கலாம். அப்போதும் காங்கிரஸ் தரப்பிலிருந்து “ஆட்சியில் பங்கு” கோஷம் எழுப்பப்படலாம். காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்காவிட்டால் அப்போதும் சிக்கல்தான். அத்துடன் இன்னொரு சிக்கலையும் திமுக சந்திக்க வேண்டும். மூண்றாவது அணியில் செல்வாக்கு மிக்க அதிமுக தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க நிர்பந்திக்கலாம். ஆட்சிக் கலைப்புக் கோரிக்கைக்கு மூண்றாவது அணி ஆட்சி செவிசாய்த்தால் அப்போதும் கலைஞருக்கு சிக்கலே. திமுக வின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை இந்த நேரத்தில் முக்கியமாகிறது. அதிமுக வை விட அதிகமாக அல்லது சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருந்தால் மூண்றாவது அணிக்கு ஆதரவளித்துவிட்டு பாமக, மதிமுக ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு மாநில ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.

மேற் சொன்ன விளைவுகள் ஏதொன்று நடந்தாலும் கலைஞருக்குப் பெருத்த சங்கடமே காத்திருக்கிறது. அதுவும் காங்கிரஸ் கட்சியின் வடிவத்தில். ஆகவே கலைஞரின் நலவிரும்பிகளாகிய நாம் காங்கிரஸ் கட்சியிடம் வைக்கும் கோரிக்கையெல்லாம் “தேர்தலுக்குப் பிந்தைய விளைவுகள் எத்தகையதாக இருந்தாலும், கலைஞருக்குத் தேர்தலுக்கு முன்பு கொடுத்த அதே மரியாதையைக் கொடுக்க வேண்டும்” என்பதுதான்.

திமுக அபிமானிகளே, பதிவை நன்றாகப் படியுங்கள். ஒரு இடத்தில் கூட கலைஞரைக் கருணாநிதி என்று குறிப்பிடவில்லை.
[தமிழீஷ்] [தமிழ்மண ஆதரவு] [தமிழ்மண எதிர்ப்பு]
தொடர்புடைய பதிவுகள்:
1. குளோபன்: பிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி பேச்சுக்கு எனது பின்னூட்டங்கள்
2. வினவு: கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்!
3. குண்டுமணி: புலிகளும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அழிந்துவிட்டதா..?!
4. என்வழி: கருணாநிதியின் விஷமத்தனம் – பழ. நெடுமாறன்
தொடுப்புகளில் உள்ள பதிவுகளின் உள்ளடக்கங்கள் அவற்றை எழுதியவர்களில் சொந்தக் கருத்து.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.