சொல்றா மணியா (முன்னாள் மாதவா) – 18/07/2009
12:04 முப இல் ஜூலை 19, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: ஆடி மாசம், கருவிப்பட்டை, காங்கிரஸ், குலாம் நபி, சூப்பர் சிங்கர், சோதனை முயற்சி, தமிழீஷ், தமிழ்மணம், மிரட்டல் வசூல், விநாயக சதுர்த்தி
தானே உக்காந்த தானைத் தலைவர் குலாம் நபி ஆசாத்… வாழ்க…
சமீபத்துல காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் ஒரு கூட்டத்துல பேசுனாருங்க. மக்கள் தொகை குறித்த அக்கறையோட யாரும் யோசிக்காத கோணத்துல போச்சுங்க அவரோட பேச்சு. கிராமப்புறங்கள்ள கரண்ட் வசதி இல்லாத காரணத்தால பொழுது சாஞ்ச ஒடனேயுமே அல்லாரும் மக்கள் தொகையைக் கூட்டக் கெளம்பிற்றாங்களாம். கரண்ட் வசதி இருந்தா ஜனங்க டிவிய பாத்துக்கிட்டு ஏதாவது ஒரு சேனலுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங்க ஏத்திவிடுவாங்க, அதனால கிராமப்புறங்கள்ள கரண்ட் வசதி கொண்டு வர எங்க அரசாங்கம் வேண்டியதை எல்லாம் செய்யும்னு சொல்லிருக்காருங்க அந்தக் கூட்டத்துல. ஆக அம்பது வருஷமா இவுரு கட்சி ஆட்சியில இருந்தும் எல்லா கிராமத்துக்கும் கரண்ட் வசதி குடுக்க முடியலைங்கறத இவரே ஒத்துக்கிட்டாருங்க. ரொம்பப் பெரிய மனசு. தானே ஒக்காந்தாருன்னு சொன்னேன், எங்கேன்னு சொன்னேனா? எத்தனையோ பேரு காங்கிரசுக்கு ஆப்பு வைக்கோனும்னு காத்திருக்கும்போது, தனக்கான ஆப்பத் தானே தரையில குத்தி வச்சிட்டு தானே போய் உக்காந்தாரு பாருங்க, அங்க நிக்கிறாரு… மன்னிச்சுக்குங்க உக்காறாருங்க நம்ம குலாம் நபி… பட்டைய கெளப்புங்க.
செல்லக் குரலுக்கான இம்சைத் தேடல்
மனைவியுடன் தொலைபேசிக் கொண்டிருந்த போது விஜய் டிவி வைங்க… விஜய் டிவி வைங்க… என்று அவசரப் படுத்தினாள். விஜய் டிவிக்கு மாற்றினால் அங்கே செல்லக் குரலுக்கான தேடல் நிகழ்ச்சி. சரியாகப் பேசக் கூடத் தெரியாத ஒரு குழந்தையை அதன் தாயார் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தார். நடுவர் ஷாலினி குழந்தையின் பெயரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாகச் சொன்னதும் குழந்தைக்கு ஒரே அழுகை. தாயார், உண்டா இல்லையா என்று தெரிந்தால் நாங்கள் காத்திருக்கத் தேவையில்லை. இன்னுமொரு வாய்ப்புக் கொடுங்கள் என்றார். குழந்தை மீண்டும் பாடியது. அப்போதே நிராகரிக்கப்பட்டது. நிகழ்ச்சி நடத்துவோர் மீதான கோபத்தை விட இது போன்ற பெற்றோர்கள் மீதுதான் எனக்கு கோபம் அதிகம். தங்கள் குழந்தையின் நிலை நகைப்புக்கு இடமாகும் என்று தெரிந்தே அழைத்துவருகிற இவர்களை என்னவென்று சொல்வது?
அய்யய்யோ ஆடி மாசம்…
இவன் ஏண்டா ஆடி மாசத்துக்கு அலறுறான்னு யாரும் தப்பா நெனைக்க வேண்டாம். ஆடி மாசமானாலே அந்தக் காளிக்கு, இந்தக் காளிக்கு, தக்காளிக்கு, வக்காளிக்குன்னு கூழுத்த வசூலுக்குக் கெளம்பிருவானுங்க செல பேரு. பெரு நகரங்கள்ளயும் இந்த அடாவடிக்கு பஞ்சமில்ல. பெருநகரங்கள்ள ஆடி மாசத்த விட விநாயக சதுர்த்திக்குத்தான் இந்த அடாவடி அதிகம். வாடகை வீட்டில இருக்கவுங்களுக்கு ஒரு ரேட், சொந்த வீட்டுல இருக்கவுங்களுக்கு ஒரு ரேட்டுன்னு ரக ரகமா வசூல் நடக்கும். இங்க ஹைதராபாதிலையும் அப்படித்தான். கடந்த விநாயக சதுர்த்தியின் போது அறிய நேர்ந்த தகவல் சொந்த வீட்டுக்காரர்கள் ஐந்தாயிரமும் வாடகை வீட்டுக்காரர்கள் ஐந்நூறும் தந்தே ஆக வேண்டுமாம். இப்படி வசூலித்து என்னதான் செய்கிறார்கள் என்று பார்த்தால், தேவையற்ற அலங்காரங்களும், வீண் விரயங்களுமே காணக் கிடைக்கின்றன. ஒரே சந்தில் மூண்று விநாயகன் சிலைகள். ஏண்டா இப்படின்னு அங்கிருந்த நண்பனைக் கேட்டால் வசூல் ஜாஸ்தி, வேற என்ன பண்ணுவாங்க என்கிறான். இதைத்தான் எங்க ஊருல “சந்தனம் மிஞ்சுனா உக்காற்ற இடத்துல கூட பூசிக்குவாங்கன்னு” சொல்லுவாங்க. பழமொழிய கொஞ்சம் லைட்ட சொல்லிருக்கேன், ராவா சொன்னா கண்டனப் பதிவு போடறதுக்குன்னே லேப்டாப்ப கைல புடிச்சிக்கிட்டு அலையுற கூட்டம் என்னையும் கிழிச்சுத் தொங்க விட்டுடும். இவுங்களுக்கெல்லாம் பீய பீன்னு சொல்லக் கூடாதாம், மலம்னு சொல்லனுமாம். எதிலையும் பொலிட்டிகல் கரெக்ட்னஸ் இருக்கனுமாம். கெரகம்…
கொடுமை கொடுமைன்னு கும்பகோணத்துக்குப் போனா…
6:01 பிப இல் ஜூன் 11, 2009 | அங்கதம், அரசியல், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: காங்கிரஸ், கும்பகோணம், சேது சமுத்திரம், தஞ்சாவூர், வாசன்
[படத்தின் மேல் அழுத்தித் தனிச் சாளரத்தில் பெரிதாகப் பார்க்கலாம்]
கடல்வழிப் போக்குவரத்துத் துறையை காங்கிரசே வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதிலிருந்து ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போடுகிற முயற்சி ஆரம்பமாகிவிட்டது. பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இது இந்துத்துவ அமைப்புகளை சாந்தப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.
புள்ளியியல் துறையைக் கொடுத்த போது ஜி.கே. வாசன் என்ன செய்தார் என்று தெரியவில்லை. அந்தத் துறையைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று அவருக்கே தெரிந்திருக்குமோ தெரியாதோ, யானறியேன். மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டால் இவர் டி.ஆர். பாலு அளவுக்கு துணிச்சலாகப் பேசுவாரா என்பதும் சந்தேகமே.
அவர் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்று டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த போதுதான் இத்தனை கூத்துக்களும் அரங்கேறியது. பூர்வீக வீடு கபிஸ்தலத்தில் இருந்தாலும் குடந்தை நகரில் அவருக்கு ஒரு கெஸ்ட் ஹவுசும் இருக்கிறது. அந்த வீட்டிற்கு எதிரில்தான் காங்கிரஸ் காரர்கள் கைங்கரியத்தில் இந்த ஃப்ளெக்ஸ் போர்டு எழுந்து நிற்கிறது. இதல்லாமல் குடந்தையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை நெடுகிலும் இவரை வாழ்த்திப் பல்வேறு சுவரொட்டிகள். மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட மணிசங்கர ஐயருக்கு எதிராக தமிழமைப்புகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும் காணக் கிடைத்தது. ஓடுகிற பேருந்திலிருந்து அவற்றைப் படமெடுக்க முடியவில்லை.
மந்திரியாகப் பொறுப்பேற்று கோப்புகளைக் கூடப் பார்க்கவில்லை, அதற்குள் “சேது சமுத்திர நாயகனே”, “கப்பலோட்டிய தமிழனே” என்றெல்லாம் சுவரொட்டிகள் முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இவரது மாநிலங்களவைப் பதவி முடிய இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளது. கொடுத்த அசைன்மெண்ட்டை சரியாக முடித்துவிடுவாரோ என்பதுதான் நமக்கிருக்கிற பயமெல்லாம்.
என்னமோ போடா மாதவா – 03/04/2009
6:51 பிப இல் ஏப்ரல் 3, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: அதிமுக, கட்சிகள், கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ், காணாமல் போனோர், சுயேச்சைகள், திமுக, தே.மு.தி.க., பாமக, வாக்காளர்கள், வாக்குறுதிகள், விஜயகாந்த்
சொன்னதை மறந்தோர்:
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இருவரைக் குறித்த தகவல் இது. ஒருவர் தமிழ்நாட்டுக்காரர், ஆனால் தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே பிறவாதவர். இன்னொருவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இருவரும் பதவியேற்ற புதிதில் செய்த அறிவிப்பில் செய்யத் தவறியவை குறித்தே சொல்ல வருகிறேன்.
தி.மு.க. மேடைப் பேச்சாளர் ஒருவர் நம்முடைய முதல் பிரபலத்தைப் பார்த்து இப்படிச் சொன்னார், “நம்ம மணிசங்கரய்யர் லாகூரில் பிறந்தவர் என்று சொன்னார்கள், எனக்கென்னவோ நாகூரில் பிறந்தவர் என்றுதான் கேட்டது” என்று. அவர் லாகூர்காரரா நாகூர்காரரா என்பதல்ல இங்கே கேள்வி. காங்கிரஸ் அரசின் தொடக்க காலத்தில் பெட்ரோலியத் துறை மணிசங்கரய்யர் வசமிருந்தது. அப்போது, சமுதாய சமைற்கூடங்களை ஊர்தோறும் அமைக்க உள்ளதாக அறிவித்தார். சோதனைக் கட்டமாக மயிலாடுதுறையில் செயல்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். இந்த சமையற்கூடங்களில் ரூ. 4 செலுத்தி யார் வேண்டுமானாலும் அங்குள்ள எரிவாயு அடுப்பைப் பயன்படுத்தி சமைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இடையே அவரிடமிருந்து பெட்ரோலியத் துறையும் பறிக்கப்பட்டது. திட்டம் நிறைவேறியதா என்றும் தெரியவில்லை. குறைந்தபட்சம் மயிலாடுதுறை வாசிகள் இதைக் குறித்து மேலதிகத் தகவல்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்தவர் மாண்புமிகு இந்நாள் ரயில்வே அமைச்சர் லாலு. லாலு பதவியேற்ற புதிதில் “ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் இனி மண்பாண்டங்களில் மட்டுமே பாணங்கள் விற்கப்படும் என்று அறிவித்தார். அறிவித்தபடி சில நாள் விற்கப்பட்டதாக வடநாட்டு நண்பர்கள் சிலர் கூறினர். தன்னைச் சந்திக்க வந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்குக் கூட ஒருமுறை மண் குவளைகளில் அருந்தக் கொடுத்தார். குயவர்களின் நலனைக் கருதி இத்திட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாகக் கூறினார். ஆனால் தற்சமயம் அந்தத் திட்டம் செயல்படுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு அகல் விளக்கு செய்யத் தேவையான மூலப்பொருள்களைக் கொண்டு ஒரு தேநீர் குவளையைச் செய்யலாம். ஆகவே அடக்கவிலை ஒரு பிரச்சனையில்லை. ஆனால் திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்று தெரியவில்லை.
காணாமல் போனோர்:
காணாமல் போனவர்கள் பதிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரண்டு பகுதிகளுடன் முடித்துவிடலாம் என்று சொல்லியிருந்தேன். சிலர் தொடருமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் தனிப்பதிவாக இல்லாமல் இந்தத் தொடரில் ஒருவர் அல்லது இருவரைப் பற்றி எழுதுகிறேன்.
கண்ணதாசனின் மக்களில் அதிகப் பிரபல்யம் உடையவர் காந்தி கண்ணதாசன். அவரை அடுத்து நடிகை, கவிதாயினி, பேச்சாளர் விசாலி. கடைசியாக தியாகராய நகர் பகுதி மக்களுக்கு அங்கே உணவகம் நடத்திவரும் அவருடைய இன்னொரு மகளைப் பரவலாகத் தெரியும். மூவருள் விசாலி அவர்களைப் பற்றித்தான் சொல்ல இருக்கிறேன். பாலசந்தர் இயக்கத்தில் “வானமே எல்லை” என்ற படத்தில் இவருடைய திரையுலக அரங்கேற்றம் நிகழ்ந்தது. விசாலி கண்ணதாசன் திருமணத்திற்குப் பிறகு விசாலி மனோகரன் ஆனார். பேச்சாளராகி வாயை வாடகைக்கு விடுவதற்குத் தோதாக அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். கருணாநிதி குமரியில் வள்ளுவர் சிலையைத் திறந்துவைத்த பிறகு அதே மாவட்டத்தில் இவருடைய கூட்டமொன்று நடந்தது. அதில் இப்படிப் பேசினார், “வள்ளுவர் சிலை என்ன சிலுக்கு மாதிரி இடுப்ப வளைச்சிக்கிட்டு நிக்கிது”. கண்ணதாசன் மகளா இப்படி என்று அதிர்ந்தாலும் வனவாசம் என்ற பெயரில் வசைவாசம் எழுதியவரின் மகள்தானே என்று அனைவரும் சமாதானமாயினர். தற்சமயம் இவரைப் பற்றி யாதொரு தகவலும் இல்லை. தெரிந்தோர் கூறுக தொல்லுலகம் தெளிவுறவே…
அவரைத் தொடர்ந்து வரவிருப்பவர் ஜான் டேவிட். சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகனான நாவரசு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஜான் டேவிட். கடலூர் நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. ஜான் டேவிட் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, சாட்சிகள் திருப்திகாரமாக இல்லை என்று கூறி சந்தேகத்தின் பலன் ஜான் டேவிடுக்கு வழங்கப்பட்டது. காவல் துறை இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கின் நிலவரம் தெரியவில்லை. இதன் பின்னர் ஜான் டேவிட் கிறிஸ்தவ மத போதகராகிவிட்டதாகத் தகவல்கள் வந்தன. பத்திரிகைகளையும் கவனமாகத் தவிர்த்து வருகிறார்.
வாக்களிக்க இருப்போர்க்கு:
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று 49-ஓ வுக்கு ஓட்டுப் போட்டு உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள். 49-ஓ மீண்டும் நம் மீது ஒரு தேர்தலைத்தான் திணிக்கும். கட்சி என்ற அமைப்பு தனிமனிதர்களை மட்டுமே வளர்த்து விடுகிறது. ஆகவே அது தி.மு.க.வாக இருந்தாலும், அ.தி.மு.க.வாக இருந்தாலும், கேடு கெட்ட காங்கிரசாக இருந்தாலும், தே.மு.தி.க.வாக இருந்தாலும், மற்றவர்களை எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள் என்று சொல்லிக் கொண்டே அதே ஓட்டுப் பொறுக்கி வேலையைச் செய்யும் இரு கம்யூனிஸ்ட்டுகளானாலும், சேலை வேட்டி அண்டர்வேர் என்று சகலத்தையும் மாற்றி மாற்றித் துவைக்கும் பா.ம.க.வாக இருந்தாலும், கட்சிகளுக்கு ஓட்டுப் போடமாட்டோம் என்பதில் தெளிவாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் தொகுதிகளில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களில் நல்ல தகுதியுள்ளவர்களாகப் பார்த்து வாக்களியுங்கள். தகுதி என்று குறிப்பிடுவது பாராளுமன்றத்தில் தொகுதியின் தேவைகளை எடுத்துக் கூறுமளவுக்குக் ஆங்கில அல்லது ஹிந்தி மொழியறிவு, நிதி மேலாண்மை, மக்கள் தொடர்பு, அரசியலறிவு, உடல் ஆரோக்கியம் போன்றவையே. முக்கியமான விஷயம், கட்சியில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாக நிற்கும் வேட்பாளர்களைத் தயை கூர்ந்து நிராகரித்துவிடுங்கள். இவர்களில் பலர் அல்லது அனைவரும் ஜெயித்த பிறகு மீண்டும் தாய்க்கழகத்தில் இணைகிற அபாயம் இருக்கிறது.
அரசியலமைப்பில் எந்த இடத்திலும், பெரும்பாண்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படுபவரே முதலமைச்சர் அல்லது பிரதமர் ஆக முடியும் என்று கூறப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலோரால் தேர்வு செய்யப்படுபவரே முதல்வர் அல்லது பிரதமர் ஆகமுடியும் என்று தான் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே வாக்காளர்களே இம்முறை கட்சிகளைப் புறக்கணித்துப் பாருங்கள். சுயேச்சை உறுப்பினர்கள் கட்சிகளுக்கு விலை போய்விட மாட்டார்களா என்று கேட்கலாம். போகிறார்களா இல்லையா என்பது வாய்ப்பளித்தால்தானே தெரியும்? ஐந்து ஐந்து ஆண்டுகளாகப் பலமுறை ஏமாந்தாகிவிட்டது. இன்னொரு ஐந்தாண்டு பார்போமே.
ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன், இனி எல்லாம் உங்கள் கையில்…
தமிழீஷில் வாக்களிக்க இங்கே சொடுக்கவும்
என்னமோ போடா மாதவா 21/03/2009
12:23 முப இல் மார்ச் 22, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்குறிச்சொற்கள்: காங்கிரஸ், சிறை, ஜார்ஜ் பெர்ணாண்டஸ், தங்கபாலு, தேர்வுகள், பீகார், வருண்
இந்த ஆண்டு தமிழகத்தில் நூறு கைதிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்காக சென்னை புழல் சிறைச்சாலையில் தனியே ஒரு தேர்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இரவுகளில் நெடுநேரம் கண்விழித்துப் படிக்கும் கைதிகளை உற்சாகப்படுத்த தேநீர் மற்றும் சப்பாத்தி ஆகியவையும் வழங்குகின்றனர். சிறைச்சாலைகள் உருவானதன் நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருவது போல் தோன்றுகிறது. சல்யூட் நட்ராஜ் சார்.
பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு மூண்று இடங்கள் மட்டுமே தரப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் லாலு. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளிலும் தனது நிலையில் உறுதியாக இருந்து வருகிறார். கூட்டணியே முறிந்த போதும் முடிவில் உறுதியாக இருக்கிறார். பாராட்டுக்கள். மிரட்டல் சுயாட்சியாகவாவது மாநில சுயாட்சி அமைந்தாலும் பரவாயில்லை போலிருக்கிறது. லாலு பெருமளவு இடங்களைக் கைப்பற்றினால் அது நடந்தேவிடும். தமிழக நிலைமையைப் பொருத்திருந்து பார்ப்போம்.
வருண்காந்தி இந்திய அளவில் கடந்த வாரத்தின் சூடான இடுகை. மூளை (அவருக்கு இருக்குமா?) சூடாகிப் பேசிய விஷயங்களால் பல அரசியல் கட்சிகளிடமிருந்து சூடான கருத்துக்கள் வந்த வன்னமிருக்கின்றன. வருணின் உரை அடங்கிய வீடியோ காட்சி விஷயம் சூடான இருபத்தி நாலு மணிநேரத்தில் ஆறாயிரம் முறை பார்வையிடப் பட்டிருக்கிறது. சூடு ஆற இரண்டொரு நாட்களாலாம்.
இந்த விஷயம் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பிலே வர வேண்டியது. இரண்டே பகுதிகளுடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்ததால் இங்கே எழுதுகிறேன். இம்முறை இந்த அரசியல் பிரபலத்துக்கு அவருடைய கட்சி சீட் தரவில்லை. அதனால் கடந்த முறை போட்டியிட்ட முசாபர்பூர் (பீகார்) தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் முடிவில் இருக்கிறாராம். கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படத் தேவையில்லை. தனது அமெரிக்கப் பயணத்தின் போது ஆடைகளைக் களையச் செய்து சோதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்தான் நான் குறிப்பிடும் அரசியல் பிரபலம்.
தங்கபாலு எங்கே போட்டியிட்டாலும் தோற்கடிப்போம் என்று நாடார் பேரவை அறிவித்துள்ளது. கள் இறக்குவதை எதிர்த்து போராட்டம் நடத்திய தங்கபாலுவைக் கண்டிக்கும் விதமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். புதுவை மாநிலத்தில் சாராயத்தை மட்டுமே நம்பி ஆட்சியை நடத்திவரும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கேட்டுப் போராடுவது எத்தனை பெரிய கயமை.
பிட்டடித்துப் பிடிபட்ட மும்பை மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். வேதனைக்குரிய நினைவு என்றாலும் என்னுடைய பள்ளி நாட்களை நினைவுபடுத்தியது. பொதுத் தேர்வுக்கு முந்தைய கடைசி வேலை நாளில் தலைமை ஆசிரியர் மாணவர் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். முடிக்கும் போது “பரிட்சையில் உங்கள் திறமையைக் காட்டுங்கள். முறைகேடுகளில் ஈடுபட்டு, மாட்டிக் கொண்டு பள்ளியின் மானத்தை வாங்காதீர்கள்” என்றார். புரிய வேண்டிய விதத்தில் புரிந்துகொண்டவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று வெளியேறினர்.
ஏக்கமும் பெருமூச்சும்
5:30 பிப இல் பிப்ரவரி 7, 2009 | அரசியல், நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: இஸ்ரேல் தூதர், காங்கிரஸ், காமெடியன், சீன பிரதமர், செருப்பு, ஜார்ஜ் புஷ், தங்கபாலு, பத்திரிகை சந்திப்பு
ஈராக்குல ஜார்ஜ் புஷ்ஷ செருப்பால அடிச்சாகளாம்
லண்டன்ல சைனா பிரதமர செருப்பால அடிச்சாகளாம்
சுவீடன்ல இஸ்ரேல் தூதர செருப்பால அடிச்சாகளாம்
காமெடியன் தங்கபாலு கூட அப்பப்போ பத்திரிகைகாரங்கள சந்திக்கிறாரு. ஹூம்…
[நன்றி: குறுஞ்செய்தி அனுப்பிய நண்பன் ஆண்டனிக்கு]
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.