நான் தமிழன் – குமுதத்தின் கயமை

2:03 பிப இல் ஏப்ரல் 18, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

நேற்றைய தினம் “குமுதம் – சாக்கடை நதிகளின் மகாசங்கமம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை விரைவில் பதிவிடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தேன். கட்டுரைக்கு ஆதாரமாகப் பெரிதும் பயன்பட்டவை மதிமாறன் அவர்களின் கட்டுரைகள். ஆகவே வரைவை எழுதி முடித்து தோழர் மதிமாறன் அவர்களின் கருத்தை அறிவதற்காக மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன். அவருடைய தளத்திலேயே வெளியிட முடியுமா? என்று கேட்கும் எண்ணமும் இருந்தது. ஏற்கெனவே என்னுடைய ஒரு கட்டுரையை அவருடைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆகவே தொடர்ந்து இது போல் கோரிக்கை வைப்பது முறையாகாது என்ற காரணத்தால் இது குறித்து அவரிடம் கேட்கவில்லை.

இன்று காலை தொலைபேசியில் அழைத்து கட்டுரை சிறப்பாக வந்திருப்பதாகவும், இது பரவலாகப் பலபேரைச் சென்றடைய வேண்டுமென்றும் சொன்னார். தொடர்ந்து இக்கட்டுரையைத் தன்னுடைய தளத்தில் வெளியிடலாமா என்றும் கேட்டார். இருவரின் சிந்தனையும் ஒன்றுபோல் இருந்ததில் மிகவும் மகிழ்ந்தேன்.

மிகப் பொருத்தமான படத்துடன் கட்டுரையை இன்று காலையே பதிவேற்றமும் செய்திருக்கிறார். [குமுதத்தின் கயமை] இந்தத் தொடர்பைச் சொடுக்கினால் மதிமாறன் அவர்களின் தளத்திலுள்ள கட்டுரைக்குச் செல்லலாம். மீண்டும் ஒருமுறை தோழர் மதிமாறன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிவிப்பு…

9:43 பிப இல் ஏப்ரல் 17, 2009 | படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக
குறிச்சொற்கள்: ,

kumudam

[தமிழீஷில் வாக்களிக்க]

[தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க]

[தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க]

ஓ!!! “சங்கரன்”

11:33 முப இல் பிப்ரவரி 16, 2009 | விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 8 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , ,

ஊனமுற்றவர்களை வைத்துப் பிச்சை வியாபாரம் செய்யும் தன்னுடைய தாண்டவன் பாத்திரம் போல, தானும் உடல் ஊனமும் மனநலக் குறையும் உடையவர்களை வைத்துப் படம் எடுத்துக் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிப் பிழைப்பதற்காக அவர்களுடைய மனித உரிமைகளை மீறியிருக்கும் இயக்குநர் பாலாவுக்கும், இந்த அராஜகமான படத்தைக் குழந்தைகளும் பார்க்கலாம் என்று யூ ஏ சான்றிதழ் கொடுத்திருக்கும் தணிக்கைக் குழுவுக்கும் இந்த வாரக் குட்டு.

பிள்ளையாராவது தனக்கு முன்னால் மற்றவர்கள் தாங்களாகக் குட்டிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இங்கே ஒருவர் வாரம் ஒருவரைத் தானே குட்ட வேண்டும் என்ற வெறியுடன் குமுதத்தில் எழுதிவருகிறார். அவர் தான் சங்கரன். சங்கரனின் குட்டு வெறிக்கு இந்த வாரம் அகப்பட்டவர் இயக்குனர் பாலா. பாலாவைக் குட்டுகிறேன் என்று தன் குட்டுகளைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறார் திருவாளர் சங்கரன். அப்படி என்னென்ன குட்டுக்கள் வெளியே வருகிறது என்பதையும் பார்ப்போம்.

image “குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள்…” இந்த வரிகள் திருவாளர் சங்கரன் குசேலன் படத்துக்கு எழுதிய விமர்சனத்திலிருந்தவை. சங்கரன் சொல்லியிருப்பது போல குசேலனில் காமெடி அபத்தம், (காமெடி அபத்தம் என்று சேர்த்து எழுதிவிட்டார், என்னுடைய கருத்து காமெடிக்கும் அபத்தத்துக்கும் இடையில் ஒரு கமா வந்திருக்கவேண்டும். காமெடி ஆபாசம் அல்லது ஆபாசக் காமெடி என்று வேண்டுமானால் எழுதியிருக்கலாம்) ஆபாசம் ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் படத்தின் டைட்டில் மட்டுமே மிஞ்சும். சங்கரனைப் போன்ற திறமைசாலிகளுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இப்படித்தான் எழுதுவார்கள்.

ஏனென்றால், சங்கரன் நடத்திவரும் “சிங்கிள் ரீல்” திரைப்பட இயக்கத்தின் போஷக அல்லது புரவல ஸ்தாபனமானத்தின் புராடக்ட்தான் குசேலன். அதனால்தான் குசேலனுக்கு மயிலிறகால் அடி விழுகிறது. “யெஸ் சார்” குறும்பட விஷயத்தில் புரவல ஸ்தாபனத்துக்கும் திருவாளர் சங்கரனுக்கும் புட்டுக்கொண்டதாகக் கேள்வி… கேள்வி…

போகட்டும், சங்கரனின் வார்த்தைகளுக்கே வருவோம். பாலாவுக்கும் அவருடைய தாண்டவன் கதாபாத்திரத்துக்கும் வேறுபாடு இல்லை என்கிறார். இருந்துவிட்டுப் போகட்டும். படத்துக்கு வசனம் எழுதிய ‘சுய’மோகனைக் குறித்து ஒரு வார்த்தையும் வரக் காணோமே! ஒருவேளை தாண்டவனை வைத்து காசு சம்பாதிக்கிற மாதிரி கதாபாத்திரம் ஏதும் படத்தில் இல்லையோ என்னவோ. இருந்திருந்தால் சொல்லியிருப்பார், சங்கரன் “அம்புட்டு நல்லவராயிற்றே”.

பாலா உடல் இயலாமை உடையவர்களை, மனவளர்ச்சி குன்றியவர்களை வைத்து கோடி கோடியாக சம்பாதித்துவிட்டார் என்பதுதான் திருவாளர் சங்கரனின் குற்றச்சாட்டு. சங்கரனின் எழுத்து வியாபாரம் ஓடிக்கொண்டிருப்பதே ஒரு 85 வயது கிழவனை நம்பித்தான். வாரம் ஒரு முறையாவது அந்தக் கிழவனைக் குட்ட வேண்டும், அந்தக் கிழவனின் வேட்டி அவனுடைய மூத்திரத்தால் நனைந்தால் அதையும் எழுதிக் காசாக்கிவிட வேண்டும். ஐயகோ, “விபச்சாரம் செய்யாதவர்கள் இந்த வேசியின் மீது கல்லெறியுங்கள்” என்ற இயேசுநாதரின் பொன்மொழி இந்த நேரத்திலா என் நினைவுக்கு வந்து தொலைய வேண்டும்.

பாலா யாருடைய மனித உரிமையை மீறியதாகக் சங்கரன் கதறுகிறாரோ, அவர்களைக் கஷ்டப்படக் கூடாது என்பதால்தான் அளவு கடந்த காலவிரயம் மற்றும் பண விரயத்தைக் குறித்துக் கவலைப்படாமல் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இல்லையென்றால் படம் வெளியாகி இரண்டு தீபாவளி கடந்திருக்கும். ஒருவேளை “நான் கடவுள்” படமும் புரவல ஸ்தாபனத்தின் புராடக்ட்டாக இருந்திருந்தால் இந்த செருப்படி விழுந்திருக்காதோ என்னவோ!!!

திருவாளர் சங்கரன் சென்சார் போர்டைக் குட்டியதில் அவருக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ அதைவிட பன்மடங்கு சந்தோஷத்தை நான் எய்தினேன். பக்கா “ஏ” படமான குசேலனுக்கு ஒரு இடத்தில் கூட கத்திரி போடாமல் “யூ” சர்டிபிகேட் கொடுத்த காரணத்துக்காக சென்சார் போர்டை நானே குட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். யார் குட்டினால் என்ன? விழ வேண்டியவர்களுக்குக் குட்டு விழுந்ததா, நமக்கு அது தான் முக்கியம்.

மேல் விவரங்கள்:

1. பிரபலங்களைத் திட்டி எழுதி வலைப்பதிவுக்கு ஹிட் தேடுகிறான் என்று யாரும் சொல்லிவிடக் கூடாதல்லவா… அதற்காகவே இப்பதிவில் சங்கரனின் இயற்பெயரான சங்கரன் என்பதையே குறிப்பிட்டிருக்கிறேன் (அவருடைய ஆர்குட் குழுமத்தில் கூட தற்போதைய பெயருடன் சங்கரன் என்பதையும் சேர்த்தே போட்டிருந்தார். புதிதாகத் தொடங்கியிருக்கும் சொந்த வலைப்பதிவில் கூட தன்னுடைய இளம்வயது காலத்தைப் பற்றிய பதிவுக்கு ‘சின்ன’ சங்கரன் என்றே தலைப்பிட்டிருக்கிறார்)

2. தவிர்க்க முடியாமல் குமுதத்தின் பெயரை குமுதம் என்றே குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது. சும்மா இல்லை ரூ.12க்கு வாங்கிருக்கிறேன். வெளிமாநிலத்தில் வசிக்கும் பாவத்துக்கு எக்ஸ்ட்ரா ரூ.2, கண்டுக்காதீங்க)

3. திருவாளர் சங்கரனை காஞ்சிபுரத்தோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அந்தக் குற்றம் கம்பேனி பொறுப்பில் வராது

4. அஹம் ப்ரம்மாஸ்மி என்ற கருத்தியலில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் பாலா என்ற கலைஞனை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது

5. குட்ட வேண்டும் என்று நினைத்திருந்த சென்சார் போர்டை திருவாளர் சங்கரனே குட்டிவிட்டார். அதனால் இந்தப் பதிவுக்கான குட்டு எனக்கே. குட்டுக்கான காரணம் ‘மேல்’ விவரங்களைக் ‘கீழே’ கொடுத்ததற்காக

சரியா? தவறா?

1:22 முப இல் ஜூலை 12, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

கடந்த வாரம் சன் டிவி செய்திகளில் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி தம்பதியர் பற்றிய ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்தது. இவர்கள் இருவரும் பிரியப் போவதாக செய்தி ஏடுகளில் வந்த ஒரு செய்தி காரணமாகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குமுதம் நாளேடு புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் தந்தையாரிடம் பேட்டி கண்டு விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. கணவரின் குடும்பத்தினரை திருமதி அனிதா மதிப்பதில்லை என்றும் இதன் விளைவாக குப்புசாமி, அனிதா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. “இசைக் குடும்பத்தில் ஒரு அபஸ்வரம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த செய்திக்கு மறுப்பு அளிக்கும் விதமாகவே தம்பதியர் இருவரும் சன் டிவிக்கு பேட்டியளித்தனர்.

இந்த நிகழ்வில் கண்ணை உறுத்துகிற இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சம்பவம் ஒன்று, குமுதம் ஏடு குப்புசாமியின் தகப்பனார் சொன்ன அல்லது சொன்னதாகக் கூறப்படுகிற கருத்துக்களை மட்டும் வெளியிட்டது. குப்புசாமியின் தகப்பனாரைப் பேட்டி கண்டவுடன் இது குறித்துக் குப்புசாமியிடமும் கருத்து கேட்டிருக்கலாம். அவருடைய கருத்துக்களுடன் இந்தச் செய்தி வெளிவந்திருக்குமானால் செய்தியின் நம்பகத்தன்மை உறுதிப்பட்டிருக்கும்.

கண்ணை உறுத்தும் இரண்டாவது சம்பவம், குப்புசாமி தம்பதியர் சன் டிவியின் ஒளிப்பதிவுக் குழுவினரை படுக்கை அறை வரை அனுமதித்தது. குமுதத்தின் செய்தியை மறுக்க வேண்டும் என்பதற்காக குமுதம் செய்த அத்துமீறலுக்கு இணையான ஒரு அத்துமீறலை விரும்பி அனுமதித்தது தான் இந்த இரண்டாவது க.உ. சம்பவம். அந்த செய்திக் காட்சியில் இருவரும் இணைந்து பாடுவதற்கு ஒத்திகை செய்வது போலவும், சந்தோஷமாக உரையாடுவது போலவும் காட்சிகள் வந்தன. இவ்வளவும் அவர்கள் அறியாமல் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அல்ல. இருவரின் ஒப்புதலுடன் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் தான் அவை.குடும்பத்தில் இயல்பாய் நடக்கிற ஒரு சம்பவம் கூட கேமெராவுக்கு முன்னால் நிகழுமானால் அதையும் நடிப்பு என்று கருதுகிற அபாயம் இன்னும் இருக்கிறதல்லவா? சமூகத்தால் மதிக்கப்படுகிற ஒரு குடும்பத்திற்கு இது எப்படித் தெரியாமல் போனது?

குமுதம் வெளியிட்ட செய்தியில் திருமதி அனிதா தன் கணவரின் குடும்பத்தை மதிப்பதில்லை என்பதுதான் முக்கியமாகக் கூறப்பட்டிருந்தது. சன் டிவிக்கான செய்திப் பதிவில் தம்பதியர் இருவரும் இந்த விஷயத்தை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. இன்னும் சொல்வதானால் அதைப் பற்றி வாயே திறக்கவில்லை.

இன்று படுக்கை அறை வரை ஊடகத்தை அனுமதிக்கிற இவர்கள், நாளை ஊடகங்கள் இவர்களது அனுமதியில்லாமலே படுக்கை அறை வரை நுழைய முற்பட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வார்கள்?

நடந்தது சரியா, தவறா? படிக்கிற நீங்கள் தான் சொல்ல வேண்டும், பின்னூட்டங்கள் வாயிலாக.

புகைப்படம்: http://www.tamilonline.com

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.