கொடுமை கொடுமைன்னு கும்பகோணத்துக்குப் போனா…
6:01 பிப இல் ஜூன் 11, 2009 | அங்கதம், அரசியல், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: காங்கிரஸ், கும்பகோணம், சேது சமுத்திரம், தஞ்சாவூர், வாசன்
[படத்தின் மேல் அழுத்தித் தனிச் சாளரத்தில் பெரிதாகப் பார்க்கலாம்]
கடல்வழிப் போக்குவரத்துத் துறையை காங்கிரசே வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதிலிருந்து ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போடுகிற முயற்சி ஆரம்பமாகிவிட்டது. பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இது இந்துத்துவ அமைப்புகளை சாந்தப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.
புள்ளியியல் துறையைக் கொடுத்த போது ஜி.கே. வாசன் என்ன செய்தார் என்று தெரியவில்லை. அந்தத் துறையைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று அவருக்கே தெரிந்திருக்குமோ தெரியாதோ, யானறியேன். மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டால் இவர் டி.ஆர். பாலு அளவுக்கு துணிச்சலாகப் பேசுவாரா என்பதும் சந்தேகமே.
அவர் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்று டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த போதுதான் இத்தனை கூத்துக்களும் அரங்கேறியது. பூர்வீக வீடு கபிஸ்தலத்தில் இருந்தாலும் குடந்தை நகரில் அவருக்கு ஒரு கெஸ்ட் ஹவுசும் இருக்கிறது. அந்த வீட்டிற்கு எதிரில்தான் காங்கிரஸ் காரர்கள் கைங்கரியத்தில் இந்த ஃப்ளெக்ஸ் போர்டு எழுந்து நிற்கிறது. இதல்லாமல் குடந்தையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை நெடுகிலும் இவரை வாழ்த்திப் பல்வேறு சுவரொட்டிகள். மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட மணிசங்கர ஐயருக்கு எதிராக தமிழமைப்புகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும் காணக் கிடைத்தது. ஓடுகிற பேருந்திலிருந்து அவற்றைப் படமெடுக்க முடியவில்லை.
மந்திரியாகப் பொறுப்பேற்று கோப்புகளைக் கூடப் பார்க்கவில்லை, அதற்குள் “சேது சமுத்திர நாயகனே”, “கப்பலோட்டிய தமிழனே” என்றெல்லாம் சுவரொட்டிகள் முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இவரது மாநிலங்களவைப் பதவி முடிய இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளது. கொடுத்த அசைன்மெண்ட்டை சரியாக முடித்துவிடுவாரோ என்பதுதான் நமக்கிருக்கிற பயமெல்லாம்.
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.