கு(வெ)றுங்கதைகள் ஐந்து

7:54 பிப இல் செப்ரெம்பர் 22, 2008 | கதைகள் இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்:

1

வாசுதேவன் இன்னும் இரண்டு நாட்களில் அமெரிக்காவுக்குச் செல்கிறார், சியாட்டிலில் இருக்கும் மகன் வீட்டுக்கு. தினமும் இரண்டொருவர் இது குறித்து விசாரிக்க வாசுதேவனின் வீட்டுக்கு வருவதுண்டு. அன்று வாசுதேவனிடம் மாட்டியவர் மீனாட்சிசுந்தரம். மீனாட்சிசுந்தரத்திடம் ஏதோ அவர் தான் அமெரிக்காவின் அரசியல் சாசனத்தையே வடிவமைத்தது போல அளந்துகொண்டிருந்தார்.

“சார் போஸ்ட்”, சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தார் வாசுதேவன். “சார், ஸ்டாம்ப் ஒட்டாம வந்திருக்கு. எட்டு ரூவா குடுத்தீங்கன்னா லெட்டரக் குடுத்துட்டுப் போயிருவேன்” போஸ்ட்மேன் மிகவும் பணிவாகவே சொன்னார். எட்டு ரூபாய் என்று காதில் விழுந்தது தான் தாமதம், மிளகாய் அரைத்த அம்மியில் வெற்றுடம்புடன் உட்கார்ந்த மாதிரி எரிந்து விழ ஆரம்பித்தார். “ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்புற அளவுக்கு கேடு கெட்ட சொந்தக்காரனுங்க எவனும் எனக்கு இல்லை. எடுத்துக்கிட்டு கெளம்பு…” இது போதாதென்று “வந்துட்டானுங்க லெட்டர எடுத்துக்கிட்டு…” என்று முனகலுடன் வீட்டுக்குள் நடையைக் கட்டினார். அவருக்கு எங்கே தெரியும், உறைக்குள் இருப்பது முந்தாநாள் ஜெராக்ஸ் எடுக்கப் போன இடத்தில் அவரையும் அறியாமல் தொலைத்த அவரது பாஸ்போர்ட் என்று.

 

2

மன்னர் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் ஓய்வறையில் கு(வெ)றுங்கதை இரண்டின் நாயகன் வேலு காமர்ஸ் ஆசிரியர் உமாபதி முன் மிரள மிரள நின்றுகொண்டிருந்தான். பள்ளிக்கு வந்த பயிற்சி ஆசிரியை ஒருவரை கேலி செய்ததாய்க் குற்றம் சாட்டப்பட்டிருந்தான் நமது நாயகன். பிசிக்ஸ் ஆசிரியர் பாண்டியன் “சார், பாத்ரூம்ல ஹெச்.எம். பேரையும் லேப் அசிஸ்டண்ட் ரம்யா பேரையும் சேத்து எழுதி வச்சது கூட இவனாத்தான் சார் இருக்கும். மூஞ்சப் பாருங்க…” தன் பங்குக்குக் கோத்துவிட்டார். இரண்டாவது பாடவேளை முடிந்து திரும்பிய தமிழய்யா பூவராகன் (தசாவதார பூவராகனுக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது) “அய்யா, ஆங்கில ஆசிரியை மல்லிகா அம்மையாருக்குக் காதல் கடிதம் கொடுத்தது கூட இவனாகத் தான் இருக்க வேண்டும். முயல் பிடிக்கும் நாயை முகத்தைப் பார்த்தே கண்டறியலாம்,” எரிகிற நெருப்பில் நெய்யை அண்டாவோடு கவிழ்த்துவிட்டு அமர்ந்தார்.

சரமாரியாக அடி உதைகளை வாங்கிக்கொண்டு வகுப்புக்குத் திரும்புகிறான் பதினோறாம் வகுப்பு ‘ஏ’ பிரிவைச் சேர்ந்த நமது நாயகன். பாவம் வேலு, உதை வாங்க வேண்டியது அவனல்ல, பதினோறாம் வகுப்பு ‘ஊ’ பிரிவு ‘கதிர்’வேலு.

 

3

காட்டில் வேட்டையாடிக் களைத்துப் போன விகட தேசத்து மன்னன் துங்கதன் தூரத்தில் தெரிந்த பர்ணசாலையை நோக்கிக் குதிரையை விரட்டினான். அங்கே பர்ணசாலையின் வாயிலில் கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார் புருட மகரிஷி. மகரிஷியின் தவத்தைக் கலைக்க விரும்பாத துங்கதன் பர்ணசாலையின் உள்ளே தெரிந்த குடிலுக்குள் நுழைந்தான். அங்கே பேடியையும் மோகவசப்படுத்தும் பேரழகி ஒருத்தி உறங்கிக்கொண்டிருந்தாள். தன்வசமிழந்தான் துங்கதன், அவன் தொட்டதும் கண்விழித்தாள் காரிகை. இதற்காகவே காத்திருந்தது போல பூரண ஒத்துழைப்புத் தந்தாள். “போய் வருகிறேன் ரிஷி புத்திரி”, துங்கதனின் வார்த்தைகளைக் கேட்டதும் அவள் மூர்ச்சையானாள்.

விஷயம் புருட மகரிஷிக்குத் தெரிந்தால் அவரது சாபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதால் ஓசைபடாமல் குதிரையை பத்து யோஜனை தூரம் நடத்திக்கொண்டு சென்று அங்கிருந்து குதிரையில் ஏறித் தப்பினான். சில நாழிகை கழித்து குடிலுக்குள் வந்த மகரிஷி, அங்கே மூர்ச்சித்துக் கிடந்த தன் மனைவி அமுதகோசலையைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

 

4

இன்னும் இருபத்திநாலு மணிநேரத்தில் பாராளுமன்றத்தில் தனது பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் பிரதமர் குருமோஹன் சிங். ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்தால் சாயாவதி தலைமையில் தேர்தலைச் சந்திக்க முடிவெடுத்திருந்தனர் மூண்றாவது குழுவினர். கடைசி மூண்று மணிநேர நிலவரப்படி 252 எம்.பி.க்கள் பிரதமரை ஆதரித்துக் கடிதம் கொடுத்திருந்தனர். பெரும்பாண்மைக்கு இன்னும் பதினேழு எம்.பி.க்களின் ஆதரவு தேவை. பணம், அமைச்சர் பதவி என்று எத்தகைய ஆசை காட்டியும் எவரும் மசிவதாக இல்லை. எட்டு மணிநேரத்துக்கும் மேல் தொடர்ந்த விவாதம் குருமோஹன் சிங்கின் உரையுடன் முடிவுக்கு வந்தது. சபாநாயகர் வாக்கெடுப்பு தொடங்குவதாக அறிவித்தார். அப்போது எவரும் எதிர்பார்க்காத அந்த அதிசயம் நடந்தது. பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த இருபத்தி ஆறு எம்.பி.க்கள் பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

”கட்சி மாறி வாக்களித்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை உண்டு” பத்திரிகையாலர்களிடம் சொல்லிவிட்டு காரில் ஏறினார் எதிர்க்கட்சித் தலைவர் சத்வாரி. சத்துவாரியின் வீட்டில் தொழிலதிபர் ரொமேஷ் தத்தா நிம்மதியில்லாமல் காத்திருந்தார். காரை விட்டு இறங்கிய சத்வாரி ”கவலைப்படாதிங்க தத்தா, நாம பவருக்கு வந்தாலும் அந்த அக்ரிமெண்ட்ட சைன் பண்ணவேண்டியிருக்கும். அத அவங்களே சைன் பண்ணி ஜனங்களோட அதிருப்திய சம்பாதிச்சுக்கட்டுமேன்னு தான் நம்ம ஆளுங்களையே அவங்களுக்கு ஓட்டுப் போட வைச்சேன். மிஸ்டர் தத்தா, இது தான் அரசியல். அவங்க ஒவ்வொருத்தருக்கும் தலைக்கு 40 கோடி ரூபா அனுப்பி வைச்சிருங்க” என்று இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றார்.

 

5 

அசிஸ்டெண்ட் கமிஷனர் நெல்சன் வெகுநாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று அன்று கைகூட இருக்கிறது. தென் சென்னையைக் கதறடித்துக்கொண்டிருக்கும் தாதா டுமீங்குப்பம் ஜெயமணிக்கு நாள் குறித்துவிட்டது சென்னை காவல் துறை. ஜெயமணி என்கவுன்ட்டரை வழிநடத்தும் பொறுப்பு நெல்சனுக்கு வழங்கப்பட்டிருந்தது. என்கவுன்ட்டருக்காக நெல்சன் தேர்ந்தெடுத்திருந்த இடம் சாந்தோம்-கச்சேரி ரோடு சந்திப்பு. மஃப்டியில் நின்ற காவலர்களைக் கவனித்தபடியே கச்சேரி ரோடு தபால் நிலையத்தினுள் காத்திருந்த நெல்சனுக்கு ஜெயமணியின் வாகனம் வந்துகொண்டிருக்கும் தகவல் சொல்லப்பட்டது. துப்பாக்கியுடன் அவரும் மற்ற காவலர்களுடன் கலந்துகொண்டார். ஆறு குண்டுகள் பாய்ந்து ஜெயமணி கீழே சாய்ந்தான்.

டிஜிபி பழனிவேல் அன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் “பொதுமக்கள் இனிமே நிம்மதியா இருக்கலாம். ஜெயமணி சகாப்தத்துக்குக் காவல் துறை முற்றுப்புள்ளி வைச்சாச்சு. ஆனா நடந்த என்கவுன்ட்டர்ல துரதிருஷ்ட வசமா ஏசி நெல்சன இழந்துட்டோம். ரொம்ப நேர்மையான அதிகாரி. அவரோட மரணம் காவல் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரோட சடலத்தை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப் போயிட்டிருக்கேன். நாம இன்னொரு சந்தர்பத்தில சந்திக்கலாம், நன்றி” சொல்லி முடித்தவர் தன்னுடைய காரை நோக்கி நடந்தார்.

அன்றைய இரவு டிஜிபியின் அறையில் “வெல்டன் ரகுநாதன், நம்ம சைடுல உயிரிழப்பு இல்லைன்னா நாம பல பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருந்திருக்கும். இதுக்கு முன்னாடி பேசின்பிரிட்ஜ் ராஜா என்கவுன்டருக்காக ஹ்யூமன் ரைட்ஸ்காரங்க நமக்கு எவ்வளவு கொடைச்சல் குடுத்தாங்கன்னு உங்களுக்கே தெரியும். இந்த அசைன்மெண்ட்ட ரொம்ப சரியா செஞ்சு முடிச்சிட்டீங்க. உங்க ப்ரமோஷனுக்கு நான் பொறுப்பு,” சொல்லி முடித்த டிஜிபிக்கு விறைப்பான சல்யூட் ஒன்றைத் தந்துவிட்டு விடைபெற்றார் டெபுடி கமிஷனர் ரகு.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.