கொடிநாள் நிதியும் கருணாநிதியும்
3:37 பிப இல் திசெம்பர் 13, 2008 | அரசியல், பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: கருணாநிதி, கொடிநாள், வசூல்
கொடிநாளுடனான எனது பழைய நினைவுகளை இந்தப் பதிவின் வாயிலாகப் பகிர்ந்து கொள்வது ஒன்றே பிரதான நோக்கம் (வேறு சில சில்லரை நோக்கங்களும் (சில்லரைத் தனமான நோக்கங்கள் அல்ல) உண்டு. அவற்றைப் பதிவின் போக்கிலே காணலாம்). ஆறு அல்லது ஏழாம் வகுப்பில் என்று நினைக்கிறேன், கருணாநிதி அவர்கள் முதல் முறை முதலமைச்சராக இருந்த போது நிகழ்த்திய கொடிநாள் வானொலி உரை பாடத்தில் வைக்கப்பட்டிருந்தது. படையினரின் சிறப்புகளும் கொடிநாளுக்கு நிதி வழங்குவதன் அவசியம் குறித்தும் கூறப்பட்டிருக்கும்.
ஒரு ரூபாய், பத்து ரூபாய், நூறு ரூபாய் என்று பல விலைகளில் பல்வேறு அளவுகளில் கொடிகள் பள்ளிக்கு வழங்கப்படும். மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஒரு ரூபாய் கொடி வாங்கியாக வேண்டும். ஆசிரியர்கள் விலை அதிகம் உள்ள பெரிய கொடிகளை வாங்க வேண்டும். காசு கொடுத்துக் கொடி வாங்கினாலும் அதையும் காசாக்குகிற வித்தை அறிந்த ஆசிரியர்களையும் பார்த்திருக்கிறேன். ஆண்டு இறுதியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் டி.சி. வாங்க வரும்போது அவர்களிடம் அந்தக் கொடிகள் விற்றுக் காசாக்கபடும். இதே உத்தி பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் பின்பற்றப்படுவதாகக் கேள்வி. (வாழிய பாரத moneyத் திருநாடு)
எனக்கு நினைவு தெரிந்து கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் தவிர்த்து வேறு யாரும் தமிழகத்தில் முதலமைச்சராக இருந்ததில்லை (ஐயோ… ஓ. பன்னீர்செல்வம்… அவரை மறந்துவிட்டேனே!) கொடிநாளன்று தொலைக்காட்சி செய்தியில் மேலே சொன்ன இருவரில் ஒருவர் தவறாமல் காட்டப்படுவார். அவர்கள் கொடி நாள் உண்டியலில் காசைப் போடுகிற காட்சி தவறாமல் காட்டப்படும். மார்கெட்டிங் உத்தி.
இந்த வரிசையில் கடைசியாக என் நினைவுக்கு வருவது இந்தக் கொடி நாளுக்கான கருணாநிதியின் அறிக்கை. முன்னாள் படை வீரர்களுக்கான மருத்துவமணைகள் தமிழகத்தில் பன்னிரண்டு இடங்களில் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். நல்லது. ஆனால், தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தமிழகம் கொடி நாள் நிதியளிப்பதில் முதலிடத்தில் இருப்பதாகப் பெருமிதம் தெரிவித்திருந்தார். அங்கே தான் கொஞ்சம் இடறுகிறது.
இந்தியா ஒரு ஏழை நாடு என்று நமக்கெல்லாம் பள்ளிகளில் சொல்லிக் கொடுத்த காலத்தில் இந்த கொடி நாள் வசூலை ஒப்புக்கொள்ளலாம். ஆண்டு வளர்ச்சி ஏழு சதவீதத்துக்கு மேல் இருக்கிறது, எட்டு சதவீதத்துக்கு மேல் இருக்கிறது என்று பாரத நிதியமைச்சர்கள் ஆண்டுதோறும் கூவிக்கொண்டிருக்கிற இந்தக் காலத்தில், தேவையா இந்தக் கொடி நாள் வசூல். பிறகு எதற்கு ராணுவத்துக்கென்று ஒரு பட்ஜெட்.
ராணுவத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கிற வடஇந்தியர்கள் ஏன் தமிழகத்தை மிஞ்சும் அளவுக்கு நிதி வழங்குவதில்லை? எந்த வடஇந்தியனாவது இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீன்வனுக்காகக் கண்டனம் தெரிவித்ததுண்டா? (அடக் கருமமே, அந்த மீனவனும் இந்தியன் தான்டா). வட இந்திய ஊடகங்கள் ஈழத் தமிழர்கள் குறித்து நடத்திய கருத்துக் கணிப்பில் பெருவாரியானவர்கள் இந்தியா தலையிடக்கூடாது என்று வாக்களித்தனர். (அப்புறம் என்னத்துக்குடா கப்பல எடுத்துக்கிட்டு சோமாலியா வரைக்கும் போய் கடல் கொள்ளைக்காரங்கள தாக்கி அழிச்சீங்க. சோறு திங்கிறவனுக்கு ஒரு நியாயாம், சப்பாத்தி திங்கிறவனுக்கு ஒரு நியாயமா?) தமிழன் சொரணையுள்ளவனாக இருந்தால் “என்னத்துக்குடா உண்டியலக் குலுக்கிக்கிட்டு எங்ககிட்ட வற்றீங்க”ன்னு கேக்கனுமா வேண்டாமா?
முதலமைச்சரவர்களே, வெட்கப்பட வேண்டிய விஷயத்தை பெருமைக்குரியதாக மக்களிடையே பிரச்சாரம் செய்யாதீர்கள். நீங்கள் கொடிநாளை ஆதரிப்பதையும், நிதி வழங்கப் பிரசாரம் செய்வதையும் கைவிட்டால், கோடி நன்றிகளைக் கூறுவோம் உங்களுக்கு.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.