பொறுத்தது போதும்

5:50 முப இல் ஏப்ரல் 6, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , ,

தமிழன் அடிபட்டது மட்டுமே தலைப்பு செய்தியாய்ப் பார்த்துக் கொதித்துக் கொண்டிருந்த என் நெஞ்சு, தமிழன் திருப்பி அடித்ததைப் பார்த்து குளிர்ந்த்து போனது இப்போதுதான். நண்பர்கள் நேரிலும் தொலைபேசியிலும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

சங்கீதா குழும உணவகங்கள், டாடா உடுப்பி உணவகங்கள், கன்னட சங்கப் பள்ளிக்கூடம் ஆகியவை தாக்கப்பட்டதை அறிந்தபோது தமிழனுக்கு சொரணை வந்துவிட்டது என்று மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தவறுதான் ஆனாலும் தமிழன் எத்தனை காலம் தான் அடி வாங்கிக்கொண்டே இருப்பது. இப்படியாவது எதிர்வினை காட்ட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

இப்போது அடித்துவிடலாம், உதைத்துவிடலாம் என்று பேசி இருக்கிறார் கன்னடத்து சூப்பர் ஸ்டார். இதே சூப்பர் ஸ்டார் தமிழ்நாட்டில் விளையாடிய விளையாட்டுகளையும் மறந்த்துவிடக் கூடாதல்லவா.

உடுப்பி ஓட்டலில் விழுந்த அடி போயஸ் கார்டனில் இருந்த சூப்பர் ஸ்டாரை பேண்ட்டில் ஒன்னுக்கு இருக்க வைத்ததா இல்லையா? இல்லையென்றால் வந்திருப்பாரா உண்னாவிரதத்துக்கு? இதே போல திரை உலகம் நெய்வேலியில் போராடிய போது என்ன செய்தார் நமது கன்னடத்து சூப்பர் ஸ்டார். தனியாக சென்னையில் உண்னாவிரதம் இருக்கிறேன் என்று சில்லரை அரசியல் செய்தார்.

சூப்பர் ஸ்டாரின் தனி ஆவர்தனத்துக்கு எஸ்.எம். கிருஷ்னாவிடமிருந்து பாராட்டு மழை வந்தது. உண்மையாய் போராடிய சத்தியராஜ், பாரதிராஜா ஆகியோர் உயிரோடு இருந்த போதே தெவசம் நடத்தினார்கள். வாயைத் திறந்து ஒரு வார்தை கண்டித்தாரா இந்த சூப்பர் ஸ்டார்.

இப்போது பல பேரைப் புருவம் உயர்த்த வைக்கும் கேள்வி, எந்த தைரியத்தில் சூப்பர் ஸ்டார் இந்த உண்னாவிரதத்தில் கலந்து கொண்டார் என்பது தான். பதில் மிக எளிமையானது. இரண்டே விஷயங்கள் தான். ஒன்று, தியாகராய நகருக்கு கல்லையும் கட்டையையும் எடுத்துக் கொண்டு போனவர்கள் போயஸ் தோட்டத்துக்கும் வந்துவிடுவார்களோ என்ற பயம். இன்னொன்று, தான் தனியாக உண்னாவிரதம் இருந்த போது பாராட்டியதைப் போலவே, இப்போதும் போராட்டத்தில் கலந்து கொண்டாலும் கன்னடர்கள் தன்னைப் பாராட்டுவார்கள் என்று எண்ணியிருக்கலாம். அல்லது தன்னுடைய படங்களுக்கு லன்டன், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட அகில உலக மார்க்கெட் இருக்கும் போது கர்நாடகா மாநிலம் கைவிட்டுப் போனால் ஒன்றும் குடிமுழுகி விடாது என்ற வியாபாரக் கணக்காகக் கூட இருக்கலாம்.

இதற்கு சிவாஜி படத்தின் புள்ளி விபரங்களே சாட்சி. தமிழ் நாட்டை விடவும் ஆந்திராவுக்கு ஐந்து பிரிண்ட்டுகள் அதிகம். ஆங்கிலப் படங்களுடன் போட்டியிட்டு முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே தமிழ்த் திரைப்படம் சிவாஜி. நூறு கோடியை நெருங்கிய சிவாஜி படத்தின் வியாபாரம், ஆகியவை தந்த தெம்பு தான் சூப்பர் ஸ்டாரை உண்னாவிரத மேடை வரை அழைத்து வந்தது.

”அவ்வளவு உணர்ச்சி மயமாக பேசினாரே சூப்பர் ஸ்டார்” என்று கேட்கிற அப்பாவி ஜந்துக்களுக்கு ஒன்றே ஒன்றைச் சொல்லிக் கொள்ளுகிறேன், சூப்பர் ஸ்டார் ஒரு சிறந்த வியாபாரி, அதை விடவும் சிறந்த நடிகர். ஆறிலிருந்து அறுபது வரை, நல்லவனுக்கு நல்லவன் போன்ற ஒரு சில படங்களை மட்டுமே சூப்பர் ஸ்டாரின் சிறந்த நடிப்புக்கு உதாரணம் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்களே ஆனால், youtube மற்றும் google videosல் தேடிப் பாருங்கள். ஏப்ரல் நாலாம் தேதி சேப்பாகத்தில் பதிவு செய்யப்பட்ட அவருடைய சிறந்த நடிப்பு காணக் கிடைக்கும்.

சத்தியராஜ், வைரமுத்து போன்றவர்களின் பேச்சு கவனிக்கத் தக்கதாக அமைந்திருந்தது. சத்தியராஜின் பேச்சில் நகைச்சுவை இருந்தாலும், அங்கே அவரது வலியையும் உணர முடிந்தது. பெரியாராகவே நடித்தவர் பெரியாரைப் போலவே மற்றவர்கள் தொடப் பயப்படும் விஷயங்களையும் தைரியமாகவே தொட்டுப் பேசினார். வைரமுத்துவின் பேச்சு வரலாற்று ஆதாரங்களுடன் சமகால ஆதாரங்களையும் எடுத்துக் காட்டியாது. சூப்பர் ஸ்டாரை தூக்கிப் பிடிக்கிற வேலை உங்களுக்கு எதற்க்கு கவிஞரே. உறுத்துகிறது. சூப்பர் ஸ்டார் படத்தில் பாட்டெழுதினால் தான் உங்களை நாங்கள் மதிப்போமா? தாயாக, பாட்டியாக உணர்ச்சிமயமாக நடிக்கக் கூடிய மனோரமா அவர்கள் நடிப்பில்லாமல் பேசிவிட்டுப் போனார். பேச்சின் இடையே, கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழர்கள் அன்போடு அழைக்கும் சரோஜா தேவிக்கு நேர்ந்த அவமானத்தையும் கண்டித்தார். இது தான் தமிழனின் உள்ளம், தமிழச்சியின் உள்ளம் என்று அவர்களும் புரிந்து கொள்ளட்டும்.

”கம்யூனிஸ்ட்டுகளைப் போல் நீங்களும் போராட வேண்டிய காலம் வந்துவிட்டது” என்று கலைஞருக்கு சரத்குமார் விடுத்த அழைப்பு வரவேற்கத் தக்கது. ஏற்பதும் மறுப்பதும் கலைஞர் கையில். மனோரமா, சரத்குமார் போன்றோர் சூப்பர் ஸ்டாருக்கு அந்த “ஒரு கோடி” ஸ்டண்ட்டை நினைவுபடுத்தியதும் பாராட்டத் தக்கது.

தமிழ் நடிகர்களின் உண்னாவிரதத்திற்குப் போட்டியாக கன்னட நடிகர்களும் போராட்டம் அறிவித்திருந்த போதும் (போராட்டம் தோல்வியடைந்தது வேறு விஷயம்), கர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், முரளி, அர்ஜுன் போன்றோரும் இந்த உண்னாவிரத மேடைக்கு வந்திருந்தது பாராட்டத் தக்கது.

இதே தமிழ்த் திரைஉலகைக் குறித்து எனக்கு ஒரு கோபமும் உண்டு. மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் அங்கே கலை நிகழ்ச்சி நடத்தச் சென்றது தான் அது. இந்த போராட்டத்திற்காக அந்த முட்டாள்தனத்தை தமிழர்கள் மன்னிப்பார்களாக.

தமிழன் கர்நாடகாவில் அடிபட்டால் மட்டுமல்ல, இலங்கையில் அடிபட்டாலும், மலேசியாவில் அடிபட்டாலும், இதே போன்ற ஓற்றுமையைக் காட்ட வேண்டும். கன்னடர்கள் வாலாட்டும் ஒவ்வொரு முறையும் இதே ஒற்றுமை தொடர வேண்டும். இதுவரை நாம் பொறுத்தது போதும் . . .

இப்பதிவு சனிக்கிழமை மாலை பதிவேற்றம் செய்யப் பட்டது. திங்கட்கிழமை என் கருத்துக்கு வலுவூட்டும் விதமாக சூப்பர் ஸ்டாரே ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டார். அவருடைய படங்கள் கர்நாடகத்தில் ஓடவில்லையென்றால் அவருக்கு ஒரு நஷ்டமும் இல்லையாம்.

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.