எழுத்து மாமா vs. சுசி கனேசன்

10:51 முப இல் செப்ரெம்பர் 28, 2009 | அங்கதம், அரசியல், சினிமா, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 6 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

டிஸ்கி: எழுத்து மாமா அல்லது சுசி கனேசன், இருவரில் ஒருவரை ஆதரிக்கும் நோக்கில் இப்பதிவு எழுதப்படவில்லை. நான் இன்னும் கந்தசாமி படம் பார்க்கவில்லை. டிவிடியில் தவிர்த்துத் திரையில் பார்க்கிற உத்தேசமும் இல்லை.

கடந்த வாரம் எழுத்து மாமாவிற்கு சுசி எழுதிய காரசாரமான எதிர் கடிதத்தைப் படிக்க நேர்ந்தது. சரி எழுத்து மாமா அப்படி என்ன தான் எழுதியிருப்பார் என்ற குறுகுறுப்பில் வீட்டிலிருந்து ஆறு கிலோ மீட்டருக்கு அப்பாலிருக்கும் புத்தகக் கடைக்குச் சென்று கடந்த வார குமுதத்தைத் தேடி வாங்கினேன். எழுத்து மாமா எப்போதுமே தன்னை ஒரு பல்துறை வித்தகராகக் காட்டிக் கொள்வதில் விருப்பமுடையவர். பத்திரிகையில் எழுதுகிற அரசியல் விமர்சகர்களில் முதன் முதலில் கணிணிப் பரிச்சயம் பெற்றது அவர்தான் என்று அவரே சொல்லிக் கொள்வார். அதே போல சினிமாக்களை விமர்சிக்கும் தகுதியும் தனக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ள சமீபகாலமாக சினிமா விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.

எழுத்துமாமா கடைசியாக எழுதிய சினிமா விமர்சனம் கந்தசாமி படத்தைப் பற்றியது. எழுத்து மாமா என்ன இழவை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும். அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எழுத்து மாமாவின் விமர்சன நேர்மையை அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆதாரம் குசேலன் படத்துக்கு அவர் எழுதிய விமர்சனம். அந்தப் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வாசகத்தை மீண்டும் ஒரு முறை உங்களுக்காக இங்கே பதிவு செய்கிறேன். “குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள்…”. சரி எழுத்து மாமா சங்கரனை தூக்கி ஓரமாகப் போடுங்கள். லெட் சுசி கனேசன் கம் டு த சீன்.

சுசி கனேசனின் கட்டுரையைப் படித்தபோது ஒரு நாராசமான குழாயடிச் சண்டையைப் பார்த்த உணர்வே ஏற்பட்டது. “என் குடத்தையாடி தூக்கிப் போட்டே, நீ கட்டைல போவே, காளியாயி வந்து உன்ன வாறிகிட்டுப் போக, ஒரே வாரத்துல உன் புருஷன் செத்து நீ தாலியறுப்பெடி” என்ற வசவுகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் இருந்தது கட்டுரை.

கந்தசாமி படத்தின் அதி முக்கியமான சிறப்பாக சுசி சொல்வது முப்பது கிராமங்களைத் தத்தெடுத்தது. முப்பது கிராமங்களைத் தத்தெடுத்தோம் என்று சொல்வதே மிகப் பெரிய மோசடி. முப்பது கிராமங்களுக்குத் தலா இரண்டு லட்சம் ரூபாய் செலவிலான ஒரு உதவியைச் செய்தார்கள் என்பது மட்டுமே உண்மை. கந்தசாமி இசை வெளியீட்டு விழாவைக் கவனமாகப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். தத்தெடுப்பது என்பது அந்தக் கிராமங்களை முழு அளவில் தன்னிறைவு பெறச் செய்வது. இவர்கள் தந்த இரண்டு லட்சத்தில் ஒரு கிராமத்தை அல்ல, ஒரு சந்தில் வசிக்கிற மக்களைக் கூட தன்னிறைவு பெற்றவர்களாக்க முடியாது.

பஞ்ச தந்திரம் படத்தில் ஜெயராம் ஒரு வசனம் சொல்வார் “குடுத்த காசுக்கு எப்படி புடிச்சா பாரு” என்று. இவர்களும் தாங்கள் எடுக்கிற சினிமா ஒரு “வர்ச்சுவல் விபச்சாரி”யாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ என்னவோ!

கந்தசாமி படத்துக்குச் சென்னை நகரத்தில் மட்டும் 1 கோடியே 73 லட்சம் ரூபாய் வசூல் என்று அபிராமி ராமநாதன் அறிவிக்கிறார். படத்தின் மொத்த வசூல் 37 கோடி ரூபாய் என்று சுசியும் படத்தின் தயாரிப்பாளர் தாணுவும் தெரிவிக்கிறார்கள். இது அத்தனையும் ஒரே வாரத்தில் ஈட்டிய வருமானம் என்பதை மிகப் பெரிய சாதனையாக ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்கள். இதற்கான பதிலை பதிவின் இறுதியில் சொல்கிறேன்.

வேர்வை சிந்தி உழைத்த உழைப்பைக் களங்கப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறார் சுசி. தன்னெஞ்சறிவது பொய்யற்க சுசி கனேசன். இந்த வெற்றி நீங்கள் வேர்வை சிந்தி உழைத்து ஈட்டியதா அல்லது மக்களின் பணத்தை அநியாயமாக உறிஞ்சி ஈட்டியதா என்பதை ஊரறியும்.

உங்கள் படத்தை மற்றவர்கள் குறை சொல்லுகிறார்கள் என்பதால் நாடோடிகள், சுப்ரமணியபுரம், பசங்க ஆகிய படங்களைப் பற்றி நீங்களும்தான் குறை சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்பைக் குறை சொன்னதற்காக வருந்துகிற நீங்கள், சமுத்திரக்கனி, சசி குமார், பாண்டிராஜ் ஆகிய இயக்குநர்களின் உழைப்பைக் குறை சொல்லியிருக்கிறீர்களே. குறைந்தபட்சம் இனியாவது ஒரு நாணயமான சினிமாகாரனாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

சுசியின் கண்டனம் வெளிவந்த குமுதத்தைப் படித்த அடுத்த நாளே முந்தைய பத்தி வரை எழுதி வரைவில் வைத்திருந்தேன். எழுத்து மாமா ஓட்டை போடுவதற்கென்று சில பக்கங்களைக் குமுதம் ஒதுக்குவதால் அவரது பதிலையும் தெரிந்துகொண்டு பதிப்பிக்கலாம் என்று கடந்த குமுதம் இதழ் வெளிவரும் வரை காத்திருந்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. சுசியின் கண்டனத்துக்கு பதில் சொல்வதாக எண்ணிக் கொண்டு தன்னைத் தானே அம்பலப்படுத்திப் கொள்கிறார் எழுத்து மாமா. அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளை ஆடவிட்டு சென்சார் போர்டை ஏமாற்றி யூ சான்றிதழ் வாங்கிவிட்டு வெட்கமில்லாமல் பேசுகிறார் என்று கூவுகிற எழுத்து மாமா, “குசேலன்” படம் அதே பாணியில் யூ சான்றிதழ் வாங்கியதைக் குறித்து ஒரு வார்த்தை கூடக் கண்டிக்கவில்லையே! எழுத்து மாமா யோக்கியனாக இருந்தால் அடுத்த வார குமுதத்தில் போடுகிற “ஓ” தான் கடைசி “ஓ”வாக இருக்க வேண்டும்.

இனி கந்தசாமியின் வசூல் குறித்துப் பார்ப்போம். முன்பெல்லாம் படங்களுக்கு பட்ஜெட் போடுகிறவர்கள் டிக்கெட்டின் அசல் விலையை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் போட்டு வந்தனர். இப்போது ப்ளாக்கில் விற்கிற விலையை அடிப்படையாகக் கொண்டுதான் பட்ஜெட்டே போடுகிறார்கள். ஒரு ஓட்டு எதிராக விழுந்தாலும் நான் படம் இயக்குவதை விட்டுவிடுகிறேன் என்று சொல்லுகிற சுசிகனேசன் ஒரு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் “கந்தசாமி” படத்துக்காக விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் சராசரி விலை என்ன என்று மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அத்தனை திரையரங்கிலும் ஒவ்வொரு டிக்கெட்டும் என்னென்ன விலைக்கு விற்கப்பட்டது என்று டினாமினேஷனுடன் சொல்ல வேண்டும். சொல்வாரா?

வசூலையே ஒரு சாதனையாகச் சொல்லுகிற இவர்கள் இந்த வசூலை அள்ள என்னென்ன மோசடி செய்திருக்க வேண்டும்! வெட்கமில்லாத இந்த பிறவிகளை எந்த இந்தியன் தாத்தா வந்து குத்துவான் அல்லது எந்த அந்நியன் இவர்களுக்கெல்லாம் “கும்பிபாக”மும் “கிருமி போஜன”மும் செய்வான்.

விடுப்புக்கு விளக்கம்: நீண்ட விடுப்புக்குப் பிறகு இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன். இதைக் குறித்து பின்னூட்டத்திலும், ஜி-டாக் உரையாடலிலும், தொலைபேசியிலும் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் இத்தறுவாயில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறிய விபத்தொன்றில் இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தனை நாளும் கணிணியில் எழுத இயலாத நிலையிலிருந்தேன். இப்போதுதான் சரியானது. இனி வாரம் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் பதிவுகளை எழுத இருக்கிறேன். இனி யாருக்கும் ஏமாற்றம் இருக்காது.

ஓ!!! “சங்கரன்”

11:33 முப இல் பிப்ரவரி 16, 2009 | விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 8 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , ,

ஊனமுற்றவர்களை வைத்துப் பிச்சை வியாபாரம் செய்யும் தன்னுடைய தாண்டவன் பாத்திரம் போல, தானும் உடல் ஊனமும் மனநலக் குறையும் உடையவர்களை வைத்துப் படம் எடுத்துக் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிப் பிழைப்பதற்காக அவர்களுடைய மனித உரிமைகளை மீறியிருக்கும் இயக்குநர் பாலாவுக்கும், இந்த அராஜகமான படத்தைக் குழந்தைகளும் பார்க்கலாம் என்று யூ ஏ சான்றிதழ் கொடுத்திருக்கும் தணிக்கைக் குழுவுக்கும் இந்த வாரக் குட்டு.

பிள்ளையாராவது தனக்கு முன்னால் மற்றவர்கள் தாங்களாகக் குட்டிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இங்கே ஒருவர் வாரம் ஒருவரைத் தானே குட்ட வேண்டும் என்ற வெறியுடன் குமுதத்தில் எழுதிவருகிறார். அவர் தான் சங்கரன். சங்கரனின் குட்டு வெறிக்கு இந்த வாரம் அகப்பட்டவர் இயக்குனர் பாலா. பாலாவைக் குட்டுகிறேன் என்று தன் குட்டுகளைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறார் திருவாளர் சங்கரன். அப்படி என்னென்ன குட்டுக்கள் வெளியே வருகிறது என்பதையும் பார்ப்போம்.

image “குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள்…” இந்த வரிகள் திருவாளர் சங்கரன் குசேலன் படத்துக்கு எழுதிய விமர்சனத்திலிருந்தவை. சங்கரன் சொல்லியிருப்பது போல குசேலனில் காமெடி அபத்தம், (காமெடி அபத்தம் என்று சேர்த்து எழுதிவிட்டார், என்னுடைய கருத்து காமெடிக்கும் அபத்தத்துக்கும் இடையில் ஒரு கமா வந்திருக்கவேண்டும். காமெடி ஆபாசம் அல்லது ஆபாசக் காமெடி என்று வேண்டுமானால் எழுதியிருக்கலாம்) ஆபாசம் ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் படத்தின் டைட்டில் மட்டுமே மிஞ்சும். சங்கரனைப் போன்ற திறமைசாலிகளுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இப்படித்தான் எழுதுவார்கள்.

ஏனென்றால், சங்கரன் நடத்திவரும் “சிங்கிள் ரீல்” திரைப்பட இயக்கத்தின் போஷக அல்லது புரவல ஸ்தாபனமானத்தின் புராடக்ட்தான் குசேலன். அதனால்தான் குசேலனுக்கு மயிலிறகால் அடி விழுகிறது. “யெஸ் சார்” குறும்பட விஷயத்தில் புரவல ஸ்தாபனத்துக்கும் திருவாளர் சங்கரனுக்கும் புட்டுக்கொண்டதாகக் கேள்வி… கேள்வி…

போகட்டும், சங்கரனின் வார்த்தைகளுக்கே வருவோம். பாலாவுக்கும் அவருடைய தாண்டவன் கதாபாத்திரத்துக்கும் வேறுபாடு இல்லை என்கிறார். இருந்துவிட்டுப் போகட்டும். படத்துக்கு வசனம் எழுதிய ‘சுய’மோகனைக் குறித்து ஒரு வார்த்தையும் வரக் காணோமே! ஒருவேளை தாண்டவனை வைத்து காசு சம்பாதிக்கிற மாதிரி கதாபாத்திரம் ஏதும் படத்தில் இல்லையோ என்னவோ. இருந்திருந்தால் சொல்லியிருப்பார், சங்கரன் “அம்புட்டு நல்லவராயிற்றே”.

பாலா உடல் இயலாமை உடையவர்களை, மனவளர்ச்சி குன்றியவர்களை வைத்து கோடி கோடியாக சம்பாதித்துவிட்டார் என்பதுதான் திருவாளர் சங்கரனின் குற்றச்சாட்டு. சங்கரனின் எழுத்து வியாபாரம் ஓடிக்கொண்டிருப்பதே ஒரு 85 வயது கிழவனை நம்பித்தான். வாரம் ஒரு முறையாவது அந்தக் கிழவனைக் குட்ட வேண்டும், அந்தக் கிழவனின் வேட்டி அவனுடைய மூத்திரத்தால் நனைந்தால் அதையும் எழுதிக் காசாக்கிவிட வேண்டும். ஐயகோ, “விபச்சாரம் செய்யாதவர்கள் இந்த வேசியின் மீது கல்லெறியுங்கள்” என்ற இயேசுநாதரின் பொன்மொழி இந்த நேரத்திலா என் நினைவுக்கு வந்து தொலைய வேண்டும்.

பாலா யாருடைய மனித உரிமையை மீறியதாகக் சங்கரன் கதறுகிறாரோ, அவர்களைக் கஷ்டப்படக் கூடாது என்பதால்தான் அளவு கடந்த காலவிரயம் மற்றும் பண விரயத்தைக் குறித்துக் கவலைப்படாமல் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இல்லையென்றால் படம் வெளியாகி இரண்டு தீபாவளி கடந்திருக்கும். ஒருவேளை “நான் கடவுள்” படமும் புரவல ஸ்தாபனத்தின் புராடக்ட்டாக இருந்திருந்தால் இந்த செருப்படி விழுந்திருக்காதோ என்னவோ!!!

திருவாளர் சங்கரன் சென்சார் போர்டைக் குட்டியதில் அவருக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ அதைவிட பன்மடங்கு சந்தோஷத்தை நான் எய்தினேன். பக்கா “ஏ” படமான குசேலனுக்கு ஒரு இடத்தில் கூட கத்திரி போடாமல் “யூ” சர்டிபிகேட் கொடுத்த காரணத்துக்காக சென்சார் போர்டை நானே குட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். யார் குட்டினால் என்ன? விழ வேண்டியவர்களுக்குக் குட்டு விழுந்ததா, நமக்கு அது தான் முக்கியம்.

மேல் விவரங்கள்:

1. பிரபலங்களைத் திட்டி எழுதி வலைப்பதிவுக்கு ஹிட் தேடுகிறான் என்று யாரும் சொல்லிவிடக் கூடாதல்லவா… அதற்காகவே இப்பதிவில் சங்கரனின் இயற்பெயரான சங்கரன் என்பதையே குறிப்பிட்டிருக்கிறேன் (அவருடைய ஆர்குட் குழுமத்தில் கூட தற்போதைய பெயருடன் சங்கரன் என்பதையும் சேர்த்தே போட்டிருந்தார். புதிதாகத் தொடங்கியிருக்கும் சொந்த வலைப்பதிவில் கூட தன்னுடைய இளம்வயது காலத்தைப் பற்றிய பதிவுக்கு ‘சின்ன’ சங்கரன் என்றே தலைப்பிட்டிருக்கிறார்)

2. தவிர்க்க முடியாமல் குமுதத்தின் பெயரை குமுதம் என்றே குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது. சும்மா இல்லை ரூ.12க்கு வாங்கிருக்கிறேன். வெளிமாநிலத்தில் வசிக்கும் பாவத்துக்கு எக்ஸ்ட்ரா ரூ.2, கண்டுக்காதீங்க)

3. திருவாளர் சங்கரனை காஞ்சிபுரத்தோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அந்தக் குற்றம் கம்பேனி பொறுப்பில் வராது

4. அஹம் ப்ரம்மாஸ்மி என்ற கருத்தியலில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் பாலா என்ற கலைஞனை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது

5. குட்ட வேண்டும் என்று நினைத்திருந்த சென்சார் போர்டை திருவாளர் சங்கரனே குட்டிவிட்டார். அதனால் இந்தப் பதிவுக்கான குட்டு எனக்கே. குட்டுக்கான காரணம் ‘மேல்’ விவரங்களைக் ‘கீழே’ கொடுத்ததற்காக

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.