என்னமோ போடா மாதவா 21/03/2009

12:23 முப இல் மார்ச் 22, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்
குறிச்சொற்கள்: , , , , , ,

இந்த ஆண்டு தமிழகத்தில் நூறு கைதிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்காக சென்னை புழல் சிறைச்சாலையில் தனியே ஒரு தேர்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இரவுகளில் நெடுநேரம் கண்விழித்துப் படிக்கும் கைதிகளை உற்சாகப்படுத்த தேநீர் மற்றும் சப்பாத்தி ஆகியவையும் வழங்குகின்றனர். சிறைச்சாலைகள் உருவானதன் நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருவது போல் தோன்றுகிறது. சல்யூட் நட்ராஜ் சார்.

பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு மூண்று இடங்கள் மட்டுமே தரப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் லாலு. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளிலும் தனது நிலையில் உறுதியாக இருந்து வருகிறார். கூட்டணியே முறிந்த போதும் முடிவில் உறுதியாக இருக்கிறார். பாராட்டுக்கள். மிரட்டல் சுயாட்சியாகவாவது மாநில சுயாட்சி அமைந்தாலும் பரவாயில்லை போலிருக்கிறது. லாலு பெருமளவு இடங்களைக் கைப்பற்றினால் அது நடந்தேவிடும். தமிழக நிலைமையைப் பொருத்திருந்து பார்ப்போம்.

வருண்காந்தி இந்திய அளவில் கடந்த வாரத்தின் சூடான இடுகை. மூளை (அவருக்கு இருக்குமா?) சூடாகிப் பேசிய விஷயங்களால் பல அரசியல் கட்சிகளிடமிருந்து சூடான கருத்துக்கள் வந்த வன்னமிருக்கின்றன. வருணின் உரை அடங்கிய வீடியோ காட்சி விஷயம் சூடான இருபத்தி நாலு மணிநேரத்தில் ஆறாயிரம் முறை பார்வையிடப் பட்டிருக்கிறது. சூடு ஆற இரண்டொரு நாட்களாலாம்.

இந்த விஷயம் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பிலே வர வேண்டியது. இரண்டே பகுதிகளுடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்ததால் இங்கே எழுதுகிறேன். இம்முறை இந்த அரசியல் பிரபலத்துக்கு அவருடைய கட்சி சீட் தரவில்லை. அதனால் கடந்த முறை போட்டியிட்ட முசாபர்பூர் (பீகார்) தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் முடிவில் இருக்கிறாராம். கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படத் தேவையில்லை. தனது அமெரிக்கப் பயணத்தின் போது ஆடைகளைக் களையச் செய்து சோதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்தான் நான் குறிப்பிடும் அரசியல் பிரபலம்.

தங்கபாலு எங்கே போட்டியிட்டாலும் தோற்கடிப்போம் என்று நாடார் பேரவை அறிவித்துள்ளது. கள் இறக்குவதை எதிர்த்து போராட்டம் நடத்திய தங்கபாலுவைக் கண்டிக்கும் விதமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். புதுவை மாநிலத்தில் சாராயத்தை மட்டுமே நம்பி ஆட்சியை நடத்திவரும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கேட்டுப் போராடுவது எத்தனை பெரிய கயமை.

பிட்டடித்துப் பிடிபட்ட மும்பை மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். வேதனைக்குரிய நினைவு என்றாலும் என்னுடைய பள்ளி நாட்களை நினைவுபடுத்தியது. பொதுத் தேர்வுக்கு முந்தைய கடைசி வேலை நாளில் தலைமை ஆசிரியர் மாணவர் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். முடிக்கும் போது “பரிட்சையில் உங்கள் திறமையைக் காட்டுங்கள். முறைகேடுகளில் ஈடுபட்டு, மாட்டிக் கொண்டு பள்ளியின் மானத்தை வாங்காதீர்கள்” என்றார். புரிய வேண்டிய விதத்தில் புரிந்துகொண்டவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று வெளியேறினர்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.