என்னமோ போடா மாதவா – 03/04/2009

6:51 பிப இல் ஏப்ரல் 3, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

சொன்னதை மறந்தோர்:

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இருவரைக் குறித்த தகவல் இது. ஒருவர் தமிழ்நாட்டுக்காரர், ஆனால் தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே பிறவாதவர். இன்னொருவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இருவரும் பதவியேற்ற புதிதில் செய்த அறிவிப்பில் செய்யத் தவறியவை குறித்தே சொல்ல வருகிறேன்.

தி.மு.க. மேடைப் பேச்சாளர் ஒருவர் நம்முடைய முதல் பிரபலத்தைப் பார்த்து இப்படிச் சொன்னார், “நம்ம மணிசங்கரய்யர் லாகூரில் பிறந்தவர் என்று சொன்னார்கள், எனக்கென்னவோ நாகூரில் பிறந்தவர் என்றுதான் கேட்டது” என்று. அவர் லாகூர்காரரா நாகூர்காரரா என்பதல்ல இங்கே கேள்வி. காங்கிரஸ் அரசின் தொடக்க காலத்தில் பெட்ரோலியத் துறை மணிசங்கரய்யர் வசமிருந்தது. அப்போது, சமுதாய சமைற்கூடங்களை ஊர்தோறும் அமைக்க உள்ளதாக அறிவித்தார். சோதனைக் கட்டமாக மயிலாடுதுறையில் செயல்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். இந்த சமையற்கூடங்களில் ரூ. 4 செலுத்தி யார் வேண்டுமானாலும் அங்குள்ள எரிவாயு அடுப்பைப் பயன்படுத்தி சமைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இடையே அவரிடமிருந்து பெட்ரோலியத் துறையும் பறிக்கப்பட்டது. திட்டம் நிறைவேறியதா என்றும் தெரியவில்லை. குறைந்தபட்சம் மயிலாடுதுறை வாசிகள் இதைக் குறித்து மேலதிகத் தகவல்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்தவர் மாண்புமிகு இந்நாள் ரயில்வே அமைச்சர் லாலு. லாலு பதவியேற்ற புதிதில் “ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் இனி மண்பாண்டங்களில் மட்டுமே பாணங்கள் விற்கப்படும் என்று அறிவித்தார். அறிவித்தபடி சில நாள் விற்கப்பட்டதாக வடநாட்டு நண்பர்கள் சிலர் கூறினர். தன்னைச் சந்திக்க வந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்குக் கூட ஒருமுறை மண் குவளைகளில் அருந்தக் கொடுத்தார். குயவர்களின் நலனைக் கருதி இத்திட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாகக் கூறினார். ஆனால் தற்சமயம் அந்தத் திட்டம் செயல்படுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு அகல் விளக்கு செய்யத் தேவையான மூலப்பொருள்களைக் கொண்டு ஒரு தேநீர் குவளையைச் செய்யலாம். ஆகவே அடக்கவிலை ஒரு பிரச்சனையில்லை. ஆனால் திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்று தெரியவில்லை.

காணாமல் போனோர்:

காணாமல் போனவர்கள் பதிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரண்டு பகுதிகளுடன் முடித்துவிடலாம் என்று சொல்லியிருந்தேன். சிலர் தொடருமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் தனிப்பதிவாக இல்லாமல் இந்தத் தொடரில் ஒருவர் அல்லது இருவரைப் பற்றி எழுதுகிறேன்.

கண்ணதாசனின் மக்களில் அதிகப் பிரபல்யம் உடையவர் காந்தி கண்ணதாசன். அவரை அடுத்து நடிகை, கவிதாயினி, பேச்சாளர் விசாலி. கடைசியாக தியாகராய நகர் பகுதி மக்களுக்கு அங்கே உணவகம் நடத்திவரும் அவருடைய இன்னொரு மகளைப் பரவலாகத் தெரியும். மூவருள் விசாலி அவர்களைப் பற்றித்தான் சொல்ல இருக்கிறேன். பாலசந்தர் இயக்கத்தில் “வானமே எல்லை” என்ற படத்தில் இவருடைய திரையுலக அரங்கேற்றம் நிகழ்ந்தது. விசாலி கண்ணதாசன் திருமணத்திற்குப் பிறகு விசாலி மனோகரன் ஆனார். பேச்சாளராகி வாயை வாடகைக்கு விடுவதற்குத் தோதாக அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். கருணாநிதி குமரியில் வள்ளுவர் சிலையைத் திறந்துவைத்த பிறகு அதே மாவட்டத்தில் இவருடைய கூட்டமொன்று நடந்தது. அதில் இப்படிப் பேசினார், “வள்ளுவர் சிலை என்ன சிலுக்கு மாதிரி இடுப்ப வளைச்சிக்கிட்டு நிக்கிது”. கண்ணதாசன் மகளா இப்படி என்று அதிர்ந்தாலும் வனவாசம் என்ற பெயரில் வசைவாசம் எழுதியவரின் மகள்தானே என்று அனைவரும் சமாதானமாயினர். தற்சமயம் இவரைப் பற்றி யாதொரு தகவலும் இல்லை. தெரிந்தோர் கூறுக தொல்லுலகம் தெளிவுறவே…

அவரைத் தொடர்ந்து வரவிருப்பவர் ஜான் டேவிட். சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகனான நாவரசு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஜான் டேவிட். கடலூர் நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. ஜான் டேவிட் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, சாட்சிகள் திருப்திகாரமாக இல்லை என்று கூறி சந்தேகத்தின் பலன் ஜான் டேவிடுக்கு வழங்கப்பட்டது. காவல் துறை இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கின் நிலவரம் தெரியவில்லை. இதன் பின்னர் ஜான் டேவிட் கிறிஸ்தவ மத போதகராகிவிட்டதாகத் தகவல்கள் வந்தன. பத்திரிகைகளையும் கவனமாகத் தவிர்த்து வருகிறார்.

வாக்களிக்க இருப்போர்க்கு:

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று 49-ஓ வுக்கு ஓட்டுப் போட்டு உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள். 49-ஓ மீண்டும் நம் மீது ஒரு தேர்தலைத்தான் திணிக்கும். கட்சி என்ற அமைப்பு தனிமனிதர்களை மட்டுமே வளர்த்து விடுகிறது. ஆகவே அது தி.மு.க.வாக இருந்தாலும், அ.தி.மு.க.வாக இருந்தாலும், கேடு கெட்ட காங்கிரசாக இருந்தாலும், தே.மு.தி.க.வாக இருந்தாலும், மற்றவர்களை எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள் என்று சொல்லிக் கொண்டே அதே ஓட்டுப் பொறுக்கி வேலையைச் செய்யும் இரு கம்யூனிஸ்ட்டுகளானாலும், சேலை வேட்டி அண்டர்வேர் என்று சகலத்தையும் மாற்றி மாற்றித் துவைக்கும் பா.ம.க.வாக இருந்தாலும், கட்சிகளுக்கு ஓட்டுப் போடமாட்டோம் என்பதில் தெளிவாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் தொகுதிகளில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களில் நல்ல தகுதியுள்ளவர்களாகப் பார்த்து வாக்களியுங்கள். தகுதி என்று குறிப்பிடுவது பாராளுமன்றத்தில் தொகுதியின் தேவைகளை எடுத்துக் கூறுமளவுக்குக் ஆங்கில அல்லது ஹிந்தி மொழியறிவு, நிதி மேலாண்மை, மக்கள் தொடர்பு, அரசியலறிவு, உடல் ஆரோக்கியம் போன்றவையே. முக்கியமான விஷயம், கட்சியில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாக நிற்கும் வேட்பாளர்களைத் தயை கூர்ந்து நிராகரித்துவிடுங்கள். இவர்களில் பலர் அல்லது அனைவரும் ஜெயித்த பிறகு மீண்டும் தாய்க்கழகத்தில் இணைகிற அபாயம் இருக்கிறது.

அரசியலமைப்பில் எந்த இடத்திலும், பெரும்பாண்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படுபவரே முதலமைச்சர் அல்லது பிரதமர் ஆக முடியும் என்று கூறப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலோரால் தேர்வு செய்யப்படுபவரே முதல்வர் அல்லது பிரதமர் ஆகமுடியும் என்று தான் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே வாக்காளர்களே இம்முறை கட்சிகளைப் புறக்கணித்துப் பாருங்கள். சுயேச்சை உறுப்பினர்கள் கட்சிகளுக்கு விலை போய்விட மாட்டார்களா என்று கேட்கலாம். போகிறார்களா இல்லையா என்பது வாய்ப்பளித்தால்தானே தெரியும்? ஐந்து ஐந்து ஆண்டுகளாகப் பலமுறை ஏமாந்தாகிவிட்டது. இன்னொரு ஐந்தாண்டு பார்போமே.

ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன், இனி எல்லாம் உங்கள் கையில்…

தமிழீஷில் வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.