எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்…

5:27 பிப இல் மே 28, 2008 | நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்...

அனைவருக்கும் வணக்கம்,

என் பெயர் விஜய் மல்லையா. என்னுடைய அணி ஐ.பி.எல். போட்டிகளில் படு மோசமாகத் தோற்றுவிட்டது. அவர்களை நம்பி நான் செய்திருந்த 400 கோடி ரூபாய் முதலீடு முழுவதுமாக நஷ்டமாகிவிட்டது. இந்த 400 கோடி ரூபாய் நஷ்டத்தால் வெற்றிகரமான தொழிலதிபராக இருந்த நான் நடுத்தெருவுக்கு வரும் நிலைமைக்கு ஆளாகியுள்ளேன்.

இந்தப் பதிவைப் படிக்கிற நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனாலும் நீங்கள் நினைத்தால் எனக்கு உதவ முடியும். பொதுமக்கள் அனைவரையும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். காபி மற்றும் தேநீருக்குப் பதிலாக என்னுடைய நிறுவனம் தயாரிக்கிற ”கிங் ஃபிஷர்” பியர் அருந்துங்கள்.

இதை என்னுடைய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக மட்டும் சொல்லவில்லை, “கிங் ஃபிஷர்” பியர் உங்களுக்கு உற்சாகத்தையும் புதிய சிந்தனைகளையும் கொடுக்கும். உங்களுக்கு இதயம் இருந்தால் தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். இந்த பதிவை உங்கள் நண்பர்களையும் படிக்கச் சொல்லுங்கள்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது மட்டும்தான் தவறு. குடித்துவிட்டு தாராளமாக வேலை செய்யலாம்.

அன்புடன்,

விஜய் மல்லையா

நன்றி: இக்கடிதத்தின் ஆங்கில வடிவத்தை எனக்கு அனுப்பிய நண்பன் சசி குமாருக்கு.

டிஸ்கி: இப்பதிவின் நோக்கம் மதுப் பழக்கத்தைப் பிரச்சாரம் செய்வதல்ல. நகைச்சுவை, நகைச்சுவை, நகைச்சுவை மாத்திரமே.

எனக்கு மட்டும் ஏன் இப்படி… – 1

6:31 பிப இல் மே 26, 2008 | நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 19 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

என்னுடைய முந்தைய பதிவில் எழுதியதைப் போல சமுதாயம் மொத்தமும் ஒரு விதமாக சிந்தித்தாலும் என்னுடைய மூளை மட்டும் வேறு யோசிக்கிறது. அவ்வப்போது என்னை விவகாரமாகவே சிந்திக்க வைக்கிற சிந்தனைகளை ”எனக்கு மட்டும் ஏன் இப்படி” என்ற தலைப்பின் கீழ் எழுதலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

இப்போது நான் எழுதப் போகிற எ.ம.ஏ.இ நான் பார்த்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியால் வந்த விபரீத சிந்தனை. சன் குழுமத்தின் தெலுங்கு தொலைக்காட்சியான ஜெமினி டிவியில் ஜோடி நம்பர் ஒன் மாதிரி ஒரு நடனப் போட்டி போய்க்கொண்டிருந்தது. அடுத்து அடுத்து சேனலை மாற்றிக்கொண்டிருந்தபோது அந்த நிகழ்ச்சி கண்ணில் பட்டது. ஜோடி நம்பர் ஒன் போலல்லாது பிரபலமல்லாதோருக்கான நடன நிகழ்ச்சி அது.

ஆடிக்கொண்டிருந்த ஒரு ஜோடி ஆட்டத்தை முடித்து நடுவர்களின் தீர்ப்பை எதிர்பார்த்து நின்றது. திரையில் தோண்றிய நடுவர்களைக் கண்டவுடன் பேரதிர்ச்சி. அங்கே… மா… ள… வி… கா…..

மாளவிகா… இது எங்க இங்க வந்துச்சு? அதிர்ச்சி விலகாமல் மாளவிகாவுக்கு இந்தப் பக்கமிருந்த நடுவரைப் பார்த்தால் மாபெரும் அதிர்ச்சி. கவர்ச்சிக் கிழவி ஜோதிலட்சுமி. இதயம் கொஞ்சம் பலமாக இருந்ததால் வந்திருக்கவேண்டிய முதல் அட்டாக் நல்லவேளையாக வரவில்லை. கவர்ச்சிக் கிழவிக்கு அடுத்து ஒரு தெலுங்கு சினிமா நடன நாரீமணி, யாரென்று தெரியவில்லை. சன் டிவியை நாறடித்த அதே கூட்டணி (லலிதாமணி மட்டும் மிஸ்சிங்).

நிகழ்ச்சி முடிந்ததும் ”குச்சி குச்சி கூனம்மா பிள்ளலிவ்வு” என்ற தெலுங்கு பாட்டு ஓடியது (தமிழில் குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்”). இந்த பாட்டுக்கு மாளவிகாவைத் தவிர மற்ற இரண்டு நடுவர்களும் கெட்ட ஆட்டம் போட்டனர். எ.ம.ஏ.இ. – 1 க்கும் இந்த கெட்ட ஆட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிந்தனையை (வேறு விதமாக) வளர்க்காமல் தொடர்ந்து படியுங்கள்.

இதன் பிறகுதான் என்னுடைய விவகாரமான சிந்தனை வேலை செய்யத் தொடங்கியது. யாருக்குமே தோண்றாத விபரீத சிந்தனை. இந்த நடன நிகழ்ச்சியையும் நிஜ நீதிமன்றங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தது என்னுடைய விபரீத சிந்தனை.

யோசித்துப் பாருங்கள், நடன நிகழ்ச்சியின் நடுவர்களைப் போலவே நீதிமன்றத்திலிருக்கும் நீதிபதிகளும் நடந்துகொண்டால்… உதாரணத்துக்கு ஒரு நஷ்ட ஈடு வழக்கு நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதிலே பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு தீர்ப்பு வழங்கிவிட்டு நீதிபதி அந்த பாதிக்கப்பட்டவரின் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள அவரைக் கட்டிப்பிடித்து ஆடினால் எப்படி இருக்கும்?

அதே போல ஒருவருக்கு ஆயுள் தண்டனையோ தூக்கு தண்டனையோ வழங்கப்படுவதை, நடன நிகழ்ச்சிகளில் நிகழும் எலிமினேஷனுடன் ஒப்பிடலாம் அல்லவா? அவ்வாறு ஒரு தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, நீதிபதி, வக்கீல்கள், குறிப்பாக அந்தக் குற்றவாளியை எதிர்த்து வாதாடிய அரசுத் தரப்பு வக்கீல், கைது செய்து அழைத்துவந்த போலீசார், அனைவராலும் அந்த குற்றவாளியைக் கட்டி அணைத்து ஆறுதல் கூற முடியுமா? அப்படிக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லும்போது தண்டனை வழங்கிய நீதிபதியின் உயிருக்கும், தண்டனை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்த பப்ளிக் ப்ராசிக்யூட்டரின் உயிருக்கும் என்ன உத்திரவாதம்?

நடன நிகழ்ச்சியில் நடுவரை எதிர்த்துப் பேசினால் இனி நீ ஆட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவரை விடுவித்துவிடுகிறார்கள். நீதிமன்றத்தில் மட்டும் ஒருவர் நீதிபதியை எதிர்த்துக் கேள்வி கேட்டால் இனி நீ வழக்கு நடத்த வேண்டாம் வெளியே போ என்று ஏன் அந்த நபரை விடுவிப்பதில்லை? மாறாக நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி அவருடைய குற்றத்தை அதிகப்படுத்துவது ஏன்?

குப்புறப் படுத்து மெத்தையைப் பிறாண்டிக்கொண்டே நீண்ட நேரம் யோசித்ததில் அலாரம் வைக்காமல் தூங்கிவிட்டேன். வழக்கம் போல் நாலு மணிக்கு எழுந்திருக்க வேண்டியவன் கேப் டிரைவர் கொடுத்த மிஸ்டு கால் புண்ணியத்தில் நாலு ஐம்பதுக்கு எழ நேரிட்டது. அவசர அவசரமாக பல் துலக்கி, குளித்துவிட்டு ஐந்து பத்துக்கு கேபில் அமர்ந்த பிறகும் ராத்திரி யோசித்த அதே விஷயம் மூளைக்குள் சுற்றி சுற்றி வந்தது. தயவு செய்து சொல்லுங்கள், எனக்கு மட்டும் ஏன் இப்படி….

டிஸ்கி: இந்த பதிவுக்கு டிஸ்கியா என்று சிலர் வியப்படையலாம். ஆனாலும் டிஸ்கி போட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஜோதிலட்சுமியைக் கவர்ச்சிக் கிழவி என்று அழைத்ததற்கு பெண்ணுரிமை ஆர்வலர்களிடமிருந்து கண்டனம் வரலாம் என்று எதிர்பார்க்கிறேன். அதனால் இந்த பதிவிற்கு டிஸ்கி மிகவும் அவசியமாகிறது.

ஜோதிலட்சுமிக்கு ”கவர்ச்சிக் கிழவி” பட்டம் கொடுத்தது நானல்ல. கொடுத்தவர் அண்ணாமலை தொலைக்காட்சித் தொடரில் நடித்த பொண்வன்னன், புருஷன் ஆஃப் சரண்யா ஆண்ட்டி. கவர்ச்சிக் கிழவி குறித்த மேலதிக விவரங்களுக்கு அவரையே தொடர்புகொள்ளவும்.

தொடை பதிவுக்கு பின்னூட்டம் போட்ட குந்தவை அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நல்ல எண்ணம் இல்லையாம். குந்தவையோடு ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று கூடி செருப்பு, துடைப்பம், சாணக் கரைசல் இதை எல்லாம் எடுத்துக் கொண்டு சார்மினார் எக்ஸ்பிரசில் ஏறிவிடுவார்களோ என்ற பயமும் இந்த டிஸ்கி எழுதுவதற்கு முக்கிய காரணமாகும்.

வாயுத் தொல்லை

11:06 முப இல் மே 17, 2008 | நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , , ,

பொதுவாக வாயுத் தொல்லை என்றால் மக்களுக்கு ஞாபகம் வரக்கூடிய விஷயத்தைப் பற்றியதல்ல இப்பதிவு. ஆனாலும் வாயுத் தொல்லையால் அவதியுறுபவர்களுக்கும் என்னாலான ஆலோசணையை சொல்லிவிட்டு நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்வது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாயுத் தொல்லை யாருக்கு இருந்தாலும் அது மிகப் பெரிய தொல்லைதான். யாராலுமே சகித்துக் கொள்ள முடியாத சிரமம் இது. அவ்விதமான தொல்லை உங்களில் யாருக்காவது இருக்குமானால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். அது சமுதாயத்துக்கு நீங்கள் செய்கிற மிகப் பெரிய தொண்டாக இருக்கும். நல்ல மருத்துவராக பார்க்கலாம், அல்லது குறைந்த பட்சம் லேகிய வியாபாரிகளையாவது நாடலாம்.

தருமமிகு சென்னை மக்களுக்கு என் இதயத்தில் எப்போதுமே சிறப்பான இடம் உண்டு. அதனால் சென்னையில் லேகியம் கிடைக்கக் கூடிய ஒரு இடத்தை உயிரினும் மேலான சென்னை மக்களுக்காக சிபாரிசு செய்கிறேன். கச்சேரி ரோடு டப்பா செட்டிக் கடைஎன்று பரவலாக அறியப்பட்ட சித்த மருத்துவ பார்மசியில் அனைத்து விதமான உடல் பிணிகளுக்கும் சித்த மருந்துகள் கிடைக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆகவே வாயுத் தொல்லைக்கும் அங்கே மருந்து கிடைக்கலாம். வெறும் பதினைந்திலிருந்து இருபத்தைந்து ரூபாய் விலையில் நல்ல லேகியங்கள் கிடைப்பதாக பயனடைந்தவர்கள் சொல்லக் கேள்வி.

மயிலாப்பூர் கச்சேரி ரோடு தெரியாதவர்கள் சென்னை வாசிகளாக் இருக்கவே லாயக்கற்றவர்கள். அப்படிப் பட்டவர்களை ஊர் கடத்துமாறுமயிலை முண்டகக் கன்னியை வேண்டிக் கொள்கிறேன். கச்சேரி ரோடுக்கு செல்லும் சில பேருந்து வழித்தடங்களையும் சொல்கிறேன். தி.நகர், சைதாபேட்டை, சின்னமலை, கிண்டி, அடையாறு, மந்தைவெளி போன்ற இடங்களில் வசிப்பவர்கள் 5-பி யில் ஏறி, மயிலாப்பூர் குளம் நிறுத்தத்தில் இறங்கி வசதிக்குத் தக்கபடி கச்சேரி ரோட்டுக்கு செல்லலாம். காசுள்ளவர்கள் கால் டாக்சியில் செல்லலாம், செலவு செய்ய யோசிப்பவர்கள் காலே டாக்சி என்று நினைத்துக் கொண்டு நடையைக் கட்டலாம்.

கிழக்குக் கடற்கரை சாலையில் இருப்பவர்கள் பிபி-19ல் ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரி (சத்யா ஸ்டுடியோ) பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 5-பி யில் செல்லலாம். திருவான்மியூர் வாசிகளுக்கு இரண்டு பேருந்து மாறுகிற சிரமம் இல்லை. 1ம் எண் (வெள்ளை போர்டு) பேருந்தில் லஸ் முணை சந்திப்பில் இறங்கிக் கொள்ளலாம். தாம்பரம் பல்லாவரம் பகுதிகளில் இருப்பவர்கள் பிபி-21 ல் மந்தைவெளி வரை வந்து (தேவநாதன் தெரு சந்திப்பு பேருந்து நிறுத்தம்) அங்கிருந்து 5-பி யில் செல்லலாம்.

சென்னையின் மற்ற பகுதிகளில் எனக்கு வீடு இல்லாத காரணத்தாலும் (ஏண்டா, மந்தைவெளில மட்டும் சொந்த வீட்லயாடா இருந்தே), அந்த பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வரும் வாய்ப்பு இல்லாமல் போனதாலும் பேருந்து மார்க்கங்கள் சரியாகத் தெரியாது. மற்ற இடங்களில் இருப்பவர்கள் தி.நகர் வந்துவிட்டால் 5-பி யைப் பிடிக்கலாம்.

தொடர்ந்து வருவது நான் சொல்ல வந்த வாயுத் தொல்லை பற்றியவை. இந்த வாயுத் தொல்லைக்கு உருளைக் கிழங்கு, பட்டாணி, துவரம் பருப்பு போன்றவை காரணம் இல்லை என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. ஐ.ஓ.சி, பிரதமர் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் ஆகியோரின் கூட்டு சதி, பொறியல் சதி, இன்ன பிற வெஞ்சன (சைட் டிஷ்) சதிகள்தான் இந்த வாயுத் தொல்லைக்குக் காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

ஐ.ஓ.சி உள்ளிட்ட நாட்டுடைமை ஆக்கப்பட்ட எரிவாயுக் கம்பெனிகள் புதிய இணைப்புகள் வழங்கப் போவதில்லை என்ற முடிவை மத்திய அரசுக்குத் தெரியப் படுத்தியுள்ளன. மத்திய அரசு எண்ணை நிறுவனங்களின் பரிந்துரையை ஏற்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதனால் நாட்டுமக்களுக்கு சில பரிந்துரைகள் வழங்கப்பட உள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன.

பரிந்துரை 1: வயது நாற்பதை நெருங்கினாலும் திருமணம் செய்யும் முடிவைத் தள்ளிப் போட வேண்டுமாம்.

பரிந்துரை 2: அப்படியே திருமணம் செய்தாலும் தனிக்குடித்தனம் போகக் கூடாதாம்.

பரிந்துரை 3: அப்படியே போனாலும் மறு அறிவிப்பு வரும் வரை குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாதாம்.

பரிந்துரை 4: அப்படியே பெற்றுக் கொண்டாலும் குழந்தைகளுக்கு இலை, தழை, பச்சைக் காய்கறிகளை மட்டுமே உண்ணக் கொடுக்க வேண்டுமாம்.

பரிந்துரை 5: எரிவாயு, நெருப்பு உள்ளிட்ட வார்த்தைகளை சொல்லுவது தண்டணைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படுமாம். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாம்.

இது போல் மேலும் இருபது பரிந்துரைகள் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய அங்கமாக விளங்கும் தமிழக முதலமைச்சர் திரு. கருணாநிதி கடிதமெழுதியுள்ளார். கடிதத்தில் எண்ணை நிறுவனங்களின் இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்குமானால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவைக் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று எழுதியிருந்ததாகவும், அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்னசாமி மூலமாக அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் உங்களை விட அதிக எம்.பி க்களை வைத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் சொல்லியே நாங்கள் கேட்கவில்லை. வெறும் பதினைந்து எம்.பி க்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதில் தங்களுக்கு எந்த சிரமமும் இல்லைஎன்று தெரிவித்ததாகவும் புருடா டாட் காம் செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படக் கூடிய வருவாய் இழப்பை ஈடுகட்ட சிலிண்டர்களின் மீது விளம்பரங்கள் வெளியிடலாம் என்றும், தன்னுடைய இந்த ஆலோசனையை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் மக்கள் தொலைக்காட்சி மற்றும் பசுமைத் தாயகம் பத்திரிகையின் விளம்பரங்களை சிலிண்டர்களில் வெளியிட பா.ம.க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அரசின் இம்முடிவு வரைவு நிலையில் இருந்தாலும், அதை எதிர்த்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற வகையில் போராட்டம் நடத்துகிறவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்என்று அனல் தெறிக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். (தெறித்த அனலில் நிருபர்கள் சிலர் தம்பற்றவைத்துக் கொண்டதாக பத்திரிகை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.)

டிஸ்கி 1: லேகியம் இருபத்தி ஐந்து ரூபாய்க்கு மேல் விலையுள்ளதாக இருந்தாலும், டப்பா செட்டி கடை மருந்து பலனளிக்காமல் போனாலும் நான் அதற்கு பொறுப்பாக முடியாது. மேலதிக விபரங்களுக்கு காண்ட்டாக்ட் மயிலை முண்டகக் கன்னி”.

டிஸ்கி 2: மேற்சொன்ன பேருந்து வழித்தடங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் அதற்கும் நான் பொறுப்பல்ல. மே.அ. விபரங்களுக்கு காண்ட்டாக்ட் கே.என். நேரு, மாமா ஆஃப் மாவீரன் நெப்போலியன்.

டிஸ்கி 3: எண்ணை நிறுவனங்களின் இம்முடிவு மக்கள் விரோதமானது, வேதனை தருவது என்றாலும், நம்மை நாமே பகடி செய்து ஆற்றிக்கொள்ள வேண்டியிருப்பதால்தான் இந்த பதிவை எழுதியுள்ளேன். மே.அ.வி. வேண்டுமென்றால் பின்னூட்டம் போடவும். ப.சி, ம.மோ.சி ஆகியோருக்கு ரிப்ளை கார்டுடன் கடிதம் எழுதித் தெரியப்படுத்துவேன். மயிலை முண்டகக் கன்னி மேல் சத்தியமாக பதில் வந்தால் நிச்சயம் பதிவாக போடுவேன்.

டிஸ்கி 4: டிஸ்கி 3 இதய சுத்தியுடன் உன்மையாக எழுதியது. ஆமென்.

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.