எங்கே போகுது தமிழ் பேச்சு

10:40 முப இல் ஏப்ரல் 8, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சிக்கான அறிவிப்பைப் பார்த்தபோது, தமிழ்நாட்டு இளைஞர்களின் பேச்சாற்றலுக்கான மிகச்சிறந்த களமாக இருக்கும் என்று பலராலும் கருதப்பட்டது. ஆனால் இந்நிகழ்ச்சி இப்போது வெறும் இராமாயண உபன்யாசமாகவும் மாறிக்கொண்டிருக்கிறதோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது.

நிகழ்ச்சிக்கான இரண்டு நடுவர்களில் காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணனும் ஒருவர். நெல்லைக் கண்ணனின் தொடர் நடவடிக்கைகளால் பிறந்தது தான் மேற்கண்ட அச்சம்.

பட்டிமன்றங்களில் மட்டுமே சிறப்பாக எடுபடக் கூடிய நெல்லைக் கண்ணனின் பாணி இது போன்ற ரியாலிடி நிகழ்ச்சிகளுக்கு ஒத்தே வராது. நெல்லைக் கண்ணன் தன்னுடைய பாணியை மாற்றிக்கொண்டே ஆக வேண்டும். முடியாவிட்டால் கௌரவமாக நிகழ்ச்சியிலிருந்து விலகிவிடலாம். இல்லையெனில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சிம்புவுக்கும் பிருத்விராஜுக்கும் நிகழ்ந்தது போன்ற ரசாபாசம் இந்த நிகழ்ச்சியிலும் நடக்கலாம்.

பங்கேற்க வந்த பேச்சாளர்களை விடவும் நெல்லைக் கண்ணன் தான் அதிகமாகப் பேசுகிறார். பங்கேற்க வந்தவர்களைப் போலவே சகநடுவரையும் பேசவிடுவதில்லை. என்ன காரணமோ போன வாரம் நடுவராக வந்திருந்த கவிஞர் அறிவுமதியைக் காணவில்லை.

பங்கேற்க வந்த ஒரு இளைஞர் பாரதியாரின் “வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என்ற வரிகளை மேற்கோள் காட்டுகிறார், இவரோ சம்பந்தமே இல்லாமல் ரஷ்யப் புரட்சி பற்றிய பாரதியாரின் கவிதையை ஒப்பிக்கிறார். என்ன தான் சொல்ல வருகிறார் நெல்லைக் கண்ணன், பாரதியார் மேல சொன்ன வரிகளை எழுதவே இல்லை என்கிறாரா?

இன்னோரு இளைஞர் பெரியாரின் தொண்டர்களைப் பேசினால், நெல்லைக் கண்ணனுக்கு உடனே பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது. “பெரியாரின் தொண்டர்கள் எத்தனை பேர் அறங்காவலர் குழுவில் இருக்கிறார்கள் தெரியுமா,” என்கிறார். தேவையா இந்த விஷமம். நெல்லை கண்ணனுக்கு ஒரு செய்தி, பெரியாரே அறங்காவலராக இருந்தவர் தான். என்ன பதவியிலிருந்தார் என்பதல்ல முக்கியம், பதவியைக் கொண்டு என்ன செய்தார் என்பதுதான் முக்கியம்.

“பாரதியாரா, நான் தான் மொத்தக் குத்தகை, ராமாயணமா அதற்கும் நான் தான் மொத்தக் குத்தகை, ஆஸ்திகமா அதற்கும் நான் தான், என் முன்னால் பகுத்தறிவு, சுயமரியாதை பற்றியெல்லாம் பேசக்கூடாது. பேசினாயோ, தொலைந்தாய்” இப்படித்தான் இருக்கிறது நெல்லை கண்ணனின் நடவடிக்கை. முடிந்தால் யாராவது நெல்லை கண்ணனிடம் சொல்லுங்களேன், “இது நெல்லை கண்ணனின் பாண்டித்தியத்தைக் காட்டுகிற இடமல்ல. தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலைக் காட்ட வேண்டிய களம்,” என்று.

நெல்லை கண்ணன் அவர்களே அடக்கம் என்றால் என்ன என்பதை முதலில் கற்றுக் கொண்டு வாருங்கள். யாரிடம் கற்றுக் கொள்வது என்று தெரியாவிட்டால் நான் காட்டுகிறேன் ஒரு சரியான வாத்தியாரை. நீங்கள் இருக்கும் காங்கிரஸ் கட்சியிலே தான் அவரும் இருக்கிறார். பெயர் “தமிழருவி மணியன்”.

ஒருவேளை இதெல்லாம் விஜய் டிவி யின் விளம்பர ஸ்டண்ட்டாக இருக்குமோ என்று கூட அஞ்ச வேண்டியிருக்கிறது. காரணம் இப்போதெல்லாம் இது ஒரு பழக்கமாகவே மாறி வருகிறது. ரியாலிடி நிகழ்ச்சிகளின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஏற்றுவதற்கு இது ஒரு நிரூபிக்கப்பட்ட வெற்றி முறையாகவே கருதப்படுகிறது.

டி.ஆர்.பி. வெறி முத்திப் போய் மைக்கை எடுத்து அடித்துக் கொள்ளும் வரை போகாமல் இருந்தால் சரி.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.