என்னமோ போடா மாதவா – 03/04/2009

6:51 பிப இல் ஏப்ரல் 3, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

சொன்னதை மறந்தோர்:

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இருவரைக் குறித்த தகவல் இது. ஒருவர் தமிழ்நாட்டுக்காரர், ஆனால் தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே பிறவாதவர். இன்னொருவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இருவரும் பதவியேற்ற புதிதில் செய்த அறிவிப்பில் செய்யத் தவறியவை குறித்தே சொல்ல வருகிறேன்.

தி.மு.க. மேடைப் பேச்சாளர் ஒருவர் நம்முடைய முதல் பிரபலத்தைப் பார்த்து இப்படிச் சொன்னார், “நம்ம மணிசங்கரய்யர் லாகூரில் பிறந்தவர் என்று சொன்னார்கள், எனக்கென்னவோ நாகூரில் பிறந்தவர் என்றுதான் கேட்டது” என்று. அவர் லாகூர்காரரா நாகூர்காரரா என்பதல்ல இங்கே கேள்வி. காங்கிரஸ் அரசின் தொடக்க காலத்தில் பெட்ரோலியத் துறை மணிசங்கரய்யர் வசமிருந்தது. அப்போது, சமுதாய சமைற்கூடங்களை ஊர்தோறும் அமைக்க உள்ளதாக அறிவித்தார். சோதனைக் கட்டமாக மயிலாடுதுறையில் செயல்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். இந்த சமையற்கூடங்களில் ரூ. 4 செலுத்தி யார் வேண்டுமானாலும் அங்குள்ள எரிவாயு அடுப்பைப் பயன்படுத்தி சமைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இடையே அவரிடமிருந்து பெட்ரோலியத் துறையும் பறிக்கப்பட்டது. திட்டம் நிறைவேறியதா என்றும் தெரியவில்லை. குறைந்தபட்சம் மயிலாடுதுறை வாசிகள் இதைக் குறித்து மேலதிகத் தகவல்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்தவர் மாண்புமிகு இந்நாள் ரயில்வே அமைச்சர் லாலு. லாலு பதவியேற்ற புதிதில் “ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் இனி மண்பாண்டங்களில் மட்டுமே பாணங்கள் விற்கப்படும் என்று அறிவித்தார். அறிவித்தபடி சில நாள் விற்கப்பட்டதாக வடநாட்டு நண்பர்கள் சிலர் கூறினர். தன்னைச் சந்திக்க வந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்குக் கூட ஒருமுறை மண் குவளைகளில் அருந்தக் கொடுத்தார். குயவர்களின் நலனைக் கருதி இத்திட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாகக் கூறினார். ஆனால் தற்சமயம் அந்தத் திட்டம் செயல்படுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு அகல் விளக்கு செய்யத் தேவையான மூலப்பொருள்களைக் கொண்டு ஒரு தேநீர் குவளையைச் செய்யலாம். ஆகவே அடக்கவிலை ஒரு பிரச்சனையில்லை. ஆனால் திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்று தெரியவில்லை.

காணாமல் போனோர்:

காணாமல் போனவர்கள் பதிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரண்டு பகுதிகளுடன் முடித்துவிடலாம் என்று சொல்லியிருந்தேன். சிலர் தொடருமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் தனிப்பதிவாக இல்லாமல் இந்தத் தொடரில் ஒருவர் அல்லது இருவரைப் பற்றி எழுதுகிறேன்.

கண்ணதாசனின் மக்களில் அதிகப் பிரபல்யம் உடையவர் காந்தி கண்ணதாசன். அவரை அடுத்து நடிகை, கவிதாயினி, பேச்சாளர் விசாலி. கடைசியாக தியாகராய நகர் பகுதி மக்களுக்கு அங்கே உணவகம் நடத்திவரும் அவருடைய இன்னொரு மகளைப் பரவலாகத் தெரியும். மூவருள் விசாலி அவர்களைப் பற்றித்தான் சொல்ல இருக்கிறேன். பாலசந்தர் இயக்கத்தில் “வானமே எல்லை” என்ற படத்தில் இவருடைய திரையுலக அரங்கேற்றம் நிகழ்ந்தது. விசாலி கண்ணதாசன் திருமணத்திற்குப் பிறகு விசாலி மனோகரன் ஆனார். பேச்சாளராகி வாயை வாடகைக்கு விடுவதற்குத் தோதாக அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். கருணாநிதி குமரியில் வள்ளுவர் சிலையைத் திறந்துவைத்த பிறகு அதே மாவட்டத்தில் இவருடைய கூட்டமொன்று நடந்தது. அதில் இப்படிப் பேசினார், “வள்ளுவர் சிலை என்ன சிலுக்கு மாதிரி இடுப்ப வளைச்சிக்கிட்டு நிக்கிது”. கண்ணதாசன் மகளா இப்படி என்று அதிர்ந்தாலும் வனவாசம் என்ற பெயரில் வசைவாசம் எழுதியவரின் மகள்தானே என்று அனைவரும் சமாதானமாயினர். தற்சமயம் இவரைப் பற்றி யாதொரு தகவலும் இல்லை. தெரிந்தோர் கூறுக தொல்லுலகம் தெளிவுறவே…

அவரைத் தொடர்ந்து வரவிருப்பவர் ஜான் டேவிட். சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகனான நாவரசு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஜான் டேவிட். கடலூர் நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. ஜான் டேவிட் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, சாட்சிகள் திருப்திகாரமாக இல்லை என்று கூறி சந்தேகத்தின் பலன் ஜான் டேவிடுக்கு வழங்கப்பட்டது. காவல் துறை இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கின் நிலவரம் தெரியவில்லை. இதன் பின்னர் ஜான் டேவிட் கிறிஸ்தவ மத போதகராகிவிட்டதாகத் தகவல்கள் வந்தன. பத்திரிகைகளையும் கவனமாகத் தவிர்த்து வருகிறார்.

வாக்களிக்க இருப்போர்க்கு:

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று 49-ஓ வுக்கு ஓட்டுப் போட்டு உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள். 49-ஓ மீண்டும் நம் மீது ஒரு தேர்தலைத்தான் திணிக்கும். கட்சி என்ற அமைப்பு தனிமனிதர்களை மட்டுமே வளர்த்து விடுகிறது. ஆகவே அது தி.மு.க.வாக இருந்தாலும், அ.தி.மு.க.வாக இருந்தாலும், கேடு கெட்ட காங்கிரசாக இருந்தாலும், தே.மு.தி.க.வாக இருந்தாலும், மற்றவர்களை எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள் என்று சொல்லிக் கொண்டே அதே ஓட்டுப் பொறுக்கி வேலையைச் செய்யும் இரு கம்யூனிஸ்ட்டுகளானாலும், சேலை வேட்டி அண்டர்வேர் என்று சகலத்தையும் மாற்றி மாற்றித் துவைக்கும் பா.ம.க.வாக இருந்தாலும், கட்சிகளுக்கு ஓட்டுப் போடமாட்டோம் என்பதில் தெளிவாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் தொகுதிகளில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களில் நல்ல தகுதியுள்ளவர்களாகப் பார்த்து வாக்களியுங்கள். தகுதி என்று குறிப்பிடுவது பாராளுமன்றத்தில் தொகுதியின் தேவைகளை எடுத்துக் கூறுமளவுக்குக் ஆங்கில அல்லது ஹிந்தி மொழியறிவு, நிதி மேலாண்மை, மக்கள் தொடர்பு, அரசியலறிவு, உடல் ஆரோக்கியம் போன்றவையே. முக்கியமான விஷயம், கட்சியில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாக நிற்கும் வேட்பாளர்களைத் தயை கூர்ந்து நிராகரித்துவிடுங்கள். இவர்களில் பலர் அல்லது அனைவரும் ஜெயித்த பிறகு மீண்டும் தாய்க்கழகத்தில் இணைகிற அபாயம் இருக்கிறது.

அரசியலமைப்பில் எந்த இடத்திலும், பெரும்பாண்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படுபவரே முதலமைச்சர் அல்லது பிரதமர் ஆக முடியும் என்று கூறப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலோரால் தேர்வு செய்யப்படுபவரே முதல்வர் அல்லது பிரதமர் ஆகமுடியும் என்று தான் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே வாக்காளர்களே இம்முறை கட்சிகளைப் புறக்கணித்துப் பாருங்கள். சுயேச்சை உறுப்பினர்கள் கட்சிகளுக்கு விலை போய்விட மாட்டார்களா என்று கேட்கலாம். போகிறார்களா இல்லையா என்பது வாய்ப்பளித்தால்தானே தெரியும்? ஐந்து ஐந்து ஆண்டுகளாகப் பலமுறை ஏமாந்தாகிவிட்டது. இன்னொரு ஐந்தாண்டு பார்போமே.

ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன், இனி எல்லாம் உங்கள் கையில்…

தமிழீஷில் வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

என்னமோ போடா மாதவா… 22/02/2009

11:15 முப இல் பிப்ரவரி 25, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,

image-thumb.png ஈரான் எழுத்தாளரும் “சாத்தானின் வேதங்கள்” நூலை எழுதியவருமான சல்மான் ருஷ்டி மீது ஃபத்வா அறிவித்தார் அந்நாட்டு இஸ்லாமியத் தலைவர் அயத்துல்லா கொமைனி. அதே போல பல்லடத்தில் இந்து மக்கள் கட்சி ராஜபக்‌ஷேவின் தலைக்கு விலை வைத்து ஃபத்வா அறிவித்திருக்கிறது. கொஞ்சம் காஸ்ட்லியான தலைதான், விலை ஏழரை கோடி ரூபாய். ஏழரை கோடியை ஒவ்வொரு தமிழனும் தலைக்கு ஒரு ரூபாய் கொடுத்து திரட்ட வேண்டுமாம். தலைக்கு ஒரு ரூபாய் கொடுப்பதல்ல இங்கே பிரச்சனை, இந்த இயக்கம் எதற்காக இந்தியாவை இப்பிரச்சனையில் தலையிடச் சொல்கிறது என்று பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. கைவிட்டுப் போன கச்சத்தீவைப் போலவே இலங்கையும் இந்தியாவின் ஒரு அங்கம் என்ற அகண்டபாரத இந்துத்துவக் கனவின் வெளிப்பாடாகவே விளங்குகிறது இந்த ஃபத்வா. இதற்காக முப்பது பேர் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மீண்டும் மீண்டும் வளருகிற முடியைக் காணிக்கையாகக் (மொட்டை என்று சொன்னால் எனக்கும் ஃபத்வா விதித்துவிடுவார்களோ என்று பயமாயிருக்கிறது) கொடுத்திருக்கிறார்களாம். ஏழரையின் பாதிப்பு குறைவாக இருக்க வேண்டும் என்று திருமதி ராஜபக்‌ஷே சமீபத்தில் தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் வழிபாடு நடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் தீக்குளிப்புகள் பரவலான கவனத்தைப் பெற்றாலும்,  மக்களை சலிப்படையவே வைக்கின்றன. வருந்தத்தக்க நிகழ்வாகவே இருந்தாலும், முத்துக்குமரனின் மரணம் ஈழப் பிரச்சனையின் பக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பிரச்சனையின் தீவிரத்தை அனைவருக்கும் உணர்த்தியது. ஆனால், தொடர்ந்து நடைபெறும் தீக்குளிப்புகளும் தீக்குளிப்பு முயற்ச்சிகளும் போராட்டத்தை நீர்த்துப் போகவே செய்யும். இன்று எத்தனை பேர் பற்றவைத்துக்கொண்டார்கள் என்று தொலைக்காட்சி செய்திகளில் தேட நேரிடுகிற அபாயம் இருக்கிறது. நேற்றைய தினம் தீக்குளித்த திமுக தொண்டரின் செயல் ஈழத் தமிழர் மீதான அக்கறையை விட கலைஞர் மீதான களங்கத்தைப் போக்கும் முயற்சியாகவே சித்தரிக்கப்படும். நேற்றைய மரணம் திமுக-விலும் ஒருவர் தீக்குளித்துள்ளார் என்று சொல்லிக்கொள்ள வேண்டுமானால் பயன்படுமே ஒழிய ஈழ விடுதலையில் நம்முடைய நோக்கம் நிறைவேற ஒருபோதும் உதவாது.

image.pngஹெச்.டி.தேவேகௌடா, ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். பொது நிகழ்வுகளின்போது மேடைகளிலேயே தூங்கக்கூடியவர் என்று பெயரெடுத்தவர். வெகு சமீபத்தில் தூக்கம் கலைந்து எழுந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் மூண்றாவது அணியில்தான் இருக்கிறது” என்பதே அந்த அறிக்கையின் சாரம். மீண்டும் கண்விழித்து ஜெயலலிதா அம்மையார் காங்கிரசுக்கு கூட்டணி அழைப்பு விடுத்ததை அறிந்தால் மாரடைப்பில் மண்டையப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர் எழுந்த உடன் யாரவது பக்குவமாகச் சொல்லி சாந்தப்படுத்துங்கள்.

image-thumb.png கடந்த வாரம் சில எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதில் ஒருசிலரின் குடும்பத்தார் தெரிவித்த எதிர்ப்பின் பேரில் அவர்களுடைய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு சுந்தரராமசாமியைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அவருடைய எழுத்துக்களுடனும் பரிச்சயம் கிடையாது. ஆதலால் அவரைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.

எனக்குத் தெரிந்து கண்ணதாசனின் படைப்புகளில் இன்றும் ஓரளவுக்கு நன்றாக விற்பனையாவது எது என்றால் “அர்த்தமுள்ள இந்துமதம்” ஒன்றுதான். தகப்பனை மட்டுமே நம்பினால் கரையேற முடியாது என்று காந்தி கண்ணதாசனுக்கே தெரியும். அதனால் தான் வெளிநாட்டு சுயமுன்னேற்ற நூலாசிரியர்களின் நூல்களுக்கு மொழிபெயர்ப்பு வெளியிட்டு வருகிறார். அவரது எதிர்ப்பை ஏற்று கண்ணதாசன் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படாதது அரசுக்கு லாபமே. கண்ணதாசன் படைப்புகள் அடுத்த தலைமுறையை நோக்கிப் பயணிப்பது சாத்தியமில்லை. இன்னும் இருபது வருடங்கள் சென்று கண்ணதாசன் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கலாமா என்று பரிசீலிக்கக் கூட ஆளிருக்காது. அந்த வகையில் காந்தி கண்ணதாசனுக்கு இழப்புதான். (கண்ணதாசனைப் பற்றி எழுத உனக்கென்ன அருகதை இருக்கிறது என்று பின்னூட்ட விரும்புகிறவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அடுத்த தலைமுறை கண்ணதாசனின் எழுத்துக்களை விரும்புமா என்று மனசாட்சியோடு யோசித்துப் பாருங்கள். அதற்குப் பிறகு என்னைத் திட்டி பின்னூட்டம் எழுதலாம்.) கண்ணதாசனை அவரது எழுத்துக்களுக்காக ரசிபவர்களை விடவும் பாடல்களுக்காக ரசிப்பவர்களே அதிகம். அவர்களுக்கெல்லாம் பண்பலை வானொலிகளே போதுமானது.

தமிழில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆய்வுப்படிப்பு என்று அனைத்திற்கும் பயன்படுபவை புலியூர் கேசிகன் அவர்களின் எழுத்துக்கள். அவை நாட்டுடைமை ஆக்கப்பட்டது, உள்ளபடியே பாராட்டப்பட வேண்டிய செய்தி. இதனால் தமிழை மேற்கல்விக்காகத் தேர்ந்தெடுப்பவர்கள் மலிவு விலையில் புலியூர் கேசிகனாரின் நூல்களை வாங்க ஏதுவாகும். தமிழ்க் கல்வி பயிலும் மாணவர் சமுதாயம் இந்த ஒரு காரணத்துக்காக அரசுக்குத் தாராளமாக தங்களது நன்றியைத் தெரிவிக்கலாம்.

எனக்கு ஒரு சந்தேகம் கலைஞர் கருணாநிதியின் நூல்கள் இன்றளவும் பரவலாகப் பலரால் வாசிக்கப்படுபவை. அவற்றுள் வெகு சில நூல்களே முப்பது நாற்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. அவருடைய மாஸ்டர் பீஸ்களான நெஞ்சுக்கு நீதி, பாயும்புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம் உள்ளிட்ட எந்த நூலும் மலிவாகக் கிடைப்பதாகத் தெரியவில்லை. நூற்றைம்பது ரூபாய் முதல் ஐந்நூறு ரூபாய் வரை விலை வேறுபடுகிறது. ஆகவே பகுத்தறிவாளர்களே, கலைஞரின் எழுத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று கோரிக்கை வையுங்கள். பயந்து போய், நம்மை விட்டால் போதும் என்று பெரியார் நூல்களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கினாலும் ஆக்கிவிடுவார்!

[பதிவு எழுத “விண்டோஸ் லைவ் ரைட்டர்” கருவியைப் பயன்படுத்துவேன். அதில் இருந்த கோளாறு காரணமாக நேற்று முந்தினம் எழுதிய பதிவை உடனே பதிப்பிக்க முடியவில்லை. அதனால் “ரெண்டு நாள் லேட்டுடா மாதவா” என்று கூட சொல்லலாம். ஸ்லம்டாக் ஆஸ்கர் விருதுகள் குறித்து வேறொரு பதிவில் எழுதுகிறேன்.]

திமுக எப்படி இன்னும் காங்கிரஸ் கூட்டணியில்?

8:11 பிப இல் ஓகஸ்ட் 6, 2008 | அரசியல், நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,
பிருந்தா காரத்

பிருந்தா காரத்

சேது சமுத்திரத் திட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் காங்கிரசுடன் திமுக எப்படிக் கூட்டணியில் இருக்கலாம்?

பிருந்தா காரத் கேள்வி (சன் செய்திகள்)

ஏனம்மா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை? நீங்கள் இதைக் கிளறினால் காங்கிரஸ்காரர்கள் நீங்கள் (மேற்குவங்க மார்க்சிஸ்டுகள்) தமிழகத்துக்கு வரவிருந்த கடல்சார் பல்கலைக்கழகத்தைத் தடுத்தீர்களே, அதைக் கிளறுவார்கள். தேவையா இதெல்லாம்?

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.