பிரார்த்தனை

3:00 பிப இல் ஏப்ரல் 15, 2008 | கடிதங்கள் இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , ,

அன்பு சகோதரி,

என் கடிதத்திற்கு பதில் எழுத மாட்டாய் என்றும் தெரிந்தும் உனக்குக் கடிதம் எழுதுகிறேன்.

சையது பாத்திமாவாகத் தான் பிறக்கவேண்டும் என்று அல்லாவிடம் வரம் வாங்கியா பிறந்தாய். பிறகெதற்கு அந்தப் பெருங்கருணையாளன் உன்னை அழைத்துக் கொள்ளும் முன்பே மரணத்தைத் தேடிக் கொண்டாய். இறந்த உடலை எரியூட்டுவதைக் கூட அனுமதிக்காத இஸ்லாமிய மார்கத்தில் பிறந்த நீ உயிரோடிருக்கையிலேயே ஏன் உன்னை எரியூட்டிக் கொண்டாய்?

கறுப்பாய்ப் பிறந்த குற்றத்திற்காகவா? உனக்குள் விளைந்த தாழ்வு மனப்பாண்மையை யார் நீரூற்றி வளர்த்தது? பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் இருக்கும் நாடுகளுக்கெல்லாம் கறுப்பு தானே தேசிய நிறம். கறுப்பாய்ப் பிறப்பது குற்றமெனில் இங்கே நீ மட்டுமல்ல, பத்தில் ஆறு தமிழன் குற்றவாளி தான். அப்படியிருக்க உனக்கு மட்டும் ஏன் மரணதண்டனை.

இந்தியச் சந்தையில் கடைவிரிக்க வந்த வியாபாரிகளின் குற்றமல்லவா இது. சிகரெட் விளம்பரங்களைத் தடுத்ததற்கு முன்பு இந்த சிகப்பழகு விளம்பரங்களை அல்லவா தடுத்திருக்க வேண்டும். புற்றுநோயைக் காட்டிலும் கொடியதல்லவா தாழ்வு மனப்பான்மை. இந்த வியாபாரிகள் பாலும் பன்னீரும் வார்த்து வளர்த்து விடுவது இந்த தாழ்வு மனப்பான்மையைத் தானே.

கொண்டவன் உன்னை கறுப்பென்று குத்திக் காட்டினால் ‘தலாக்’ சொல்லித் தள்ளிவைத்திருக்கலாமே. உன்னை மட்டுமா கறுப்பென்று கேலி பேசினார்கள், பைந்தமிழ் மன்னன் பாரியின் மக்களையே (அங்கவை, சங்கவை) விட்டுவைக்கவில்லையே.

நீ புரிந்துகொள்ளாமல் போன ஒரு உன்மையும் இருக்கிறது. கறுப்பே அழகு, காந்தலே சுவை என்று கறுப்பைக் கொண்டாடியதல்லவா தமிழினம். அடி தமிழச்சி, என் சிகப்பு உன் காலுக்கு அடியில் இருக்கிறதடி, உன் கறுப்பு தானே என் தலைக்கு மேலிருக்கிறது.

இறைவா, உன்னிடத்தில் ஒரு பிரார்த்தனை உண்டு. இதே காரணத்துக்காக இன்னொரு ஜீவனுக்கு இரங்கல் கடிதம் எழுத வைத்துவிடாதே.

விஜய்கோபால்சாமி

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.