எனக்கு மட்டும் ஏன் இப்படி – II

1:41 முப இல் ஜூன் 17, 2008 | நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமா மற்றும் மெக்கெய்ன் ஆகியோரின் பெயரில் வந்த ஆணுறைகள் விற்பனையில் சக்கைபோடு போடுவதைக் குறித்து சேவியர் அவர்கள் ஒரு பதிவு எழுதியிருந்தார். இந்த தேர்தல் நேர நகைச்சுவையில் அவர் சொல்லாமல் விட்ட ஒரு சுவாரசியமான விஷயமும் உண்டு. அவரும் அதைக் குறித்து ஆர்வமாகக் கேட்டிருந்தார். அதற்காகவே இந்த பதிவு. கடந்த வாரம் தற்செயலாக சி.என்.என். ஐ.பி.என். செய்திகளைப் பார்த்தபோது இந்த சமாச்சாரம் தெரிய வந்தது.

விஷயம் வேறொன்றும் இல்லை. ஹிலாரி கிளிண்டன் வடிவத்தில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனையாகின்ற பாக்குவெட்டிகளைக் குறித்த செய்திதான் அது.

ஈகிள்வியூ என்ற அமெரிக்க நிறுவனம் இந்த பாக்குவெட்டியைத் தாயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. அந்நிறுவனம் இந்தப் பாக்கு வெட்டிக்கு காப்புரிமை கோரியும் விண்ணப்பித்துள்ளது. இந்தப் பாக்கு வெட்டிகளை விளம்பரப்படுத்த தனியாக ஒரு வலைத்தளத்தையும் அந்நிறுவனத்தினர் துவங்கியுள்ளனர்.

ஹிலாரி வடிவத்தில் செய்யப்பட்டுள்ள பாக்கு வெட்டியைப் பற்றி ஜார்ஜ் புஷ், அர்னால்ட், ஜான் மெக்கெய்ன், பாரக் ஒபாமா, பில் கிளிண்டன் உள்ளிட்ட அமெரிக்கப் பிரபலங்களின் கருத்துக்களையும் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளனர் (எல்லாம் தள நிர்வாகிகளின் கற்பனைதான்). வால் பேப்பர்கள் மற்றும் பாடல்களுடன் அமர்க்களப்படுத்துகிறது தளம். தளத்துக்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

நிற்க. இதை எதற்காக இவன் “எனக்கு மட்டும் ஏன் இப்படி – II” ஆக பதிவு செய்தான் என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம். முன்பே சொல்லியிருக்கிறேன் ஊரே ஒரு விதமாக சிந்தித்தாலும் என்னுடைய சிந்தனை வேறு விதமாக இருக்கும் என்று. அதை மனதில் வைத்துக்கொண்டு தொடர்ந்து படிக்கவும்.

இந்தப் பாக்குவெட்டியைக் கண்டவுடன் எனக்கு வந்த விவகாரமான சிந்தனையை சொன்னால் காரைக்குடிப் பக்கம் இந்த ஜென்மத்தில் நான் கால்வைக்க முடியாது. எனக்குப் பெண் கொடுக்கும் உறவுமுறையில் அங்கே யாரும் இல்லை என்பதால் துணிந்து சொல்கிறேன். நம் ஊர் பிரபலங்களில் யாரையாவது வைத்து இது போன்ற பாக்குவெட்டியைத் தயாரிக்க வேண்டுமென்றால் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற கோணத்தில் யோசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் நேற்றைய காலைச் செய்திகளில் கேட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டைப் பற்றிய ஒரு பிரபலத்தின் பேச்சு நினைவுக்கு வந்தது. அந்த பிரபலம் யார் என்பதை மேலே உள்ள தொடுப்பைச் சொடுக்கி நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

விவகாரமான சிந்தனை இதோடு முடிந்துவிடவில்லை. இன்னும் இருக்கிறது. வி.சி. ஒன்றைவிடவும் வி.சி. இரண்டினால் எனக்கு பெரிய ஆபத்துகள் ஏற்படலாம். இருந்தாலும் ஹைதராபாதில் இருப்பதாலும் மீண்டும் ஊருக்குச் செல்ல சில மாதங்கள் ஆகும் என்பதாலும் எனது பாதுகாப்புக்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்படாது என்றே நம்புகிறேன்.

வி.சி. இரண்டு இதோ உங்கள் பார்வைக்கு: ஹிலாரி அம்மாவாவது பேண்ட் போடுறவங்க. இவரு வேட்டிதானே கட்டுவாரு, அப்புறம் பாக்க எங்க வச்சு ஒடைக்கிறது?

நம் ஊரில் எப்போது?

2:10 முப இல் ஏப்ரல் 27, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,

சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில், ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. நம் ஊர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, எல்லாமே சிரிப்புதான் போன்ற நிகழ்ச்சி அது. பங்கேற்க வந்த ஒருவர் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியையும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் போல் குரலை மாற்றி நகைச்சுவை செய்து காட்டினார். அந்த நகைச்சுவை, இதோ உங்களுக்காக…

கௌன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிறார் திரு. சந்திரபாபு நாயுடு. அமிதாப்பச்சனுடன் பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்ட பிறகு போட்டி தொடங்குகிறது. பதிமூண்று கேள்விகளுக்கு நாயுடு சரியாக பதில் சொல்லிவிடுகிறார். பதினாலாவது கேள்வியில் கொஞ்சம் திணறுகிறார். கைவசம் இரண்டு லைப் லைன்கள், இரண்டு தவறான விடைகளை நீக்கலாம், நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் சரியான விடையை கேட்டுச் சொல்லலாம். கேள்வி என்ன என்றால் “1997ல் ஆந்திராவின் மக்கள் தொகை எவ்வளவு?” என்பதுதான். நான்கு விடைகளில் சரியானதைச் சொல்ல வேண்டும். ஏ. 2,15,00,000; பி. 12,42,00,000; சி. 45,00,00,000; டி. 7,10,00,000. நான்கில் ஒன்று சரியான விடை. ஆனால் நாயுடுவுக்கு அந்த விடை தெரியவில்லை. நாயுடு தவறான இரண்டு விடைகளை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறார். பி, சி, இரண்டும் நீக்கப் படுகிறது. மீதமுள்ள இரண்டு விடைகளிலும் நாயுடுவுக்கு உறுதியாக எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம்.

அமிதாப் பச்சன் யாரையாவது தொலைபேசியில் அழைத்து கேளுங்களேன் என்று ஆலோசனை கூறுகிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை அழைக்குமாறு கேட்கிறார். அமிதாப் பச்சன் மற்றும் பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி. நாயுடு கேட்டபடியே திரு ரெட்டி அவர்களை தொலைபேசியில் அழைக்கப்படுகிறார். அப்போது திரு ரெட்டி சட்டசபையிலிருக்கிறார். அமிதாப் பச்சனுடனான வழக்கமான அறிமுகத்துக்குப் பிறகு, கேள்வியும் பதில்களும் அவருக்கு சொல்லப்படுகிறது. திரு. ரெட்டி யோசனையுடன் “1997ம் வருடம் சந்திரபாபு ஆட்சியிலே, ஆந்திர மாநிலம் தொழில்துறை, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளிலே,” என்று தொடங்கி 20 விநாடிகளை காலி செய்கிறார். பதற்றமடைந்த திரு நாயுடு, விடையை சீக்கிரம் சொல்லுங்கள் என்று அவசரப் படுகிறார். கடுப்பான திரு ரெட்டி, ஏ. 2,15,00,000 என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டிக்கிறார்.

அமிதாப் பச்சன், “உங்கள் நண்பர் ஏ. 2,15,00,000 என்று கூறியிருக்கிறார் , நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் திரு நாயுடு? என்று கேட்கிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு டி. 7,10,00,000 என்று விடை சொல்லுகிறார். ரெட்டி கூறிய பதிலை விட்டுவிட்டு இவர் வேறு பதில் சொல்லுகிறாரே என்று அனைவருக்கும் ஆச்சரியம். அமிதாபின் வழக்கமான இழுத்தடிப்புக்குப் பிறகு நாயுடு சொன்னதுதான் சரியான விடை என்று தெரிய வருகிறது. மிஸ்டர் நாயுடு, உங்கள் நண்பர் சொன்ன விடை தவறானது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்என்று ஆச்சரியம் விலகாமல் கேட்கிறார் அமிதாப். அவர் எப்போதுமே வாய்க்கு வந்ததை சொல்லுவார், அவருக்கு எதையும் சொந்தமாக யோசிக்க வராது. அப்படியே சரியான விடை தெரிந்தாலும் எனக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறதே என்பதற்காக தவறான விடையைத்தான் சொல்லுவார். அதனால் தான் அவர் சொல்லாமல் விட்ட விடையை நான் சொன்னேன்என்று அந்த இளைஞர் நாயுடுவின் குரலில் சொல்லி முடித்த பிறகு அரங்கமே அதிர்கிறது. எனக்கும் சிரிப்பை அடக்க சில நிமிடங்கள் பிடித்தன.

இந்த நிகழ்ச்சி எனக்குள் சில கேள்விகளையும் எழுப்பிவிட்டுச் சென்றது. ஒரு முதலமைச்சரையும், வருங்காலத்தில் முதலமைச்சராக வரும் வாய்ப்புள்ள ஒருவரையும் கேலி செய்வது கூட ஆந்திராவில் இயல்பாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நம் ஊரிலும் கருணாநிதி ஜெயலலிதா போன்ற அரசியல் பிரபலங்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பகடி செய்யும் எந்த நிகழ்ச்சிகளும் ஏன் தமிழ் ஊடகங்களில் வெளிவருவதில்லை? விதி விலக்காக விகடன், மற்றும் குமுதத்தில் மட்டும் அரசியல், திரைப் பிரபலங்களைப் பற்றி நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் படக்கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. காட்சி ஊடகங்களில் மருந்துக்குக் கூட இதுபோன்ற நகைச்சுவைகளைக் காண முடிவதில்லை. மறைந்த திரு எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றியவை மட்டுமே காட்டப்படுகின்றன. அப்படிக் காட்டப்படுபவை கூட அரசியல் சார்ந்த நகைச்சுவையாக இல்லாமல் அவருடைய திரைப்படங்கள் சார்ந்தவையாகவே இருக்கின்றன.

நான் எதிர்பார்க்கிற கேலி என்பது, ஜெயமோகனின் சிவாஜி, எம்.ஜி.ஆர். கேலிகளைப் போன்றதல்ல. ஆபாசமில்லாத, தனி நபர் சாடல்களற்ற, நாகரிகமான கேலி அல்லது நகைச்சுவை. நம் ஊரில் எப்போது காணக்கிடைக்கும் இதுபோன்ற நகைச்சுவை?

அட ராமகோபாலா ‘மட’ ராமகோபாலா…

2:37 பிப இல் ஏப்ரல் 10, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்
குறிச்சொற்கள்: , ,

இந்துக்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்கு விரோதமாக நடிகர் சத்யராஜ் பேசியதற்கு இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடகத்தில் சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களை எதிர்த்து திரைஉலகத்தினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் சத்யராஜ், இந்துக்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்கு விரோதமாக பேசிய பேச்சை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தன்னை நாத்திகன் என்று கூறிக் கொள்ளும் இவர், தமிழ்நாட்டில் முருகன் இருக்கும் போது கேரளத்து ஐயப்பனையும், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உள்ள தெய்வங்களை ஏன் வழிபட வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

முருகன் புகழ்பாடும் சத்யராஜ் எத்தனை முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார்? முருகன் கடவுள் இருக்கிறார் என்பதை ஒத்துக் கொள்கிறாரா? கி.வீரமணியிடம் முருகன் புகழ்பாடுவாரா?

மற்ற மதங்களை பற்றி பேச தைரியமற்ற கோழை, இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்தி பேசுகிறார். நடிகர் சங்கம் இதை கண்டிக்க வேண்டும்.

“தமிழ் உணர்வு’ சத்யராஜ் தமிழ்நாட்டு பெண் நடிகைகளுடன் மட்டும் தான் நடிப்பேன். வேறு மாநில நடிகைகள் வேண்டாம் என்று சொல்வாரா?

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சீக்கிரம் நிறைவேற அரசை வற்புறுத்துகிறோம். மத மோதலை உருவாக்கும் சத்யராஜை வன்மையாக கண்டிக்கிறோம்.

நன்றி: idlyvadai.blogspot.com

இதப் படிக்கும் போது எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்திச்சுப்பா. நெஜமாத் தான்! இந்த மாமா என்ன சொல்றாரு பாரேன். சத்தியராஜ் என்ன புதுசாவா இந்து சாமிங்கள திட்டுறாரு. இந்த உண்னாவிரதத்துல அவரு எந்த சாமியையும் திட்டல. அந்த சாமிங்களுக்கு காசு வாங்காம பிரசாரம் தான் பண்ணாரு. ‘ராமகோ’ ஒரு விஷயத்த வசதியா மறந்திட்டாரு. சத்தியராஜ் முருகனப் பத்தி மட்டுந்தான் சொன்னாரா, சுடலைமாடன், முனுசாமி, கருப்பசாமி இப்படி பாமர சனங்க வழிபடற சிறு தெய்வங்களைப் பத்திக் கூட தான் சொன்னாரு. இதுக்கு எதுக்கு ‘ராமகோ’வுக்கு கோவம் பொத்துக்கிட்டு வருது. சாமி கும்பிடக் கூட இனிமே நம்ம ஊரவிட்டு போகாதடா, எனக்கு நம்பிக்கை இல்லாட்டியும் நம்புற நீ நம்ம ஊருல இருக்க சாமிங்கள கும்புடுன்னு சொன்னதில ராமகோ என்ன குத்தத்த கண்டாரோ.

சத்தியராஜ் நமிதா கூட ஆடுனா இவருக்கு என்ன வந்துச்சு? ஒருவேளை தன்னால நமிதா கூட ஆடமுடியலைங்கற ஆத்தாமையா?

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.