நக்கீரன் vs. பதிவர்கள் – அட்டைப்பட சர்ச்சை

6:53 பிப இல் மே 24, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 15 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: ,

பதிவுலகின் மந்தை மனப்பான்மை தேர்தல் முடிவுகளைப் போலவே பிரபாகரன் கொல்லப்பட்டதாக வந்த பரப்புரையினாலும் அம்பலமாகியிருக்கிறது. இன்று என்ன பதிவு போடலாம் என்று தமிழ்மண முகப்பைப் பார்த்துத்தான் முடிவு செய்கிறார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

பிரபாகரன் சடலத்தைக் காட்டுகிற தொலைக்காட்சி செய்தியை அவரே பார்த்து சிரிப்பது போன்ற அட்டைப் படம்தான் தற்போது பதிவர்களால் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. என்னைக் கேட்டால் இதில் நக்கீரனின் தவறு என்று சொல்ல எதுவுமில்லை. தமிழகத்தின் ஏனைய புலனாய்வுப் பத்திரிகைகள் பலவற்றிலும் கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ போஸ் கொடுத்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நக்கீரன் பத்திரிகை உள்ளிருக்கக் கூடிய கட்டுரைக்குப் பொருத்தமான கருத்துப் படத்தையே அட்டைப் படமாக வெளியிட்டு வரும்.

உதாரனமாக 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா ஹிட்லர் மீசையுடன் இருப்பது போன்ற அட்டைப் படமும், கருணாநிதி புலிகேசி உடையில் வில்லில் அம்பு பொருத்தி நிற்பது போலவும் அட்டைப் படங்கள் வந்திருந்தன. வெகு சமீபத்தில் ராஜபக்‌ஷே மண்டை ஓட்டு மாலையுடன் போஸ் கொடுப்பது போன்ற படமும் நக்கீரனில் அட்டைப் படமாக வந்திருக்கிறது. பகுத்தறிந்து சிந்திப்பவர்கள் அறிவார்கள், ஜெயலலிதா மீசை ஒட்டிக் கொண்டும், கருணாநிதி புலிகேசி உடையிலும், ராஜபக்‌ஷே மண்டை ஓட்டு மாலை அணிந்தும் போஸ்கொடுத்து அதை நக்கீரன் புகைப்படமாக எடுத்து வெளியிடவில்லை என்று.

இம்முறையும் அதே போன்று பிரபாகரன், அன்றன் பாலசிங்கத்துடன் உரையாடுகிற படத்தில் சில மாற்றங்களைச் செய்து அட்டைப் படமாக வெளியிட்டது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்த பதிவர்கள் சிலர் இதை உண்மை என்று நம்பி பதிவு போட்டனர். இதில் நக்கீரன் செய்த பொறுக்கித்தனம் என்னவென்று எனக்குத் விளங்கவில்லை. மக்களின் உணர்ச்சியைக் காசாக்குகிறது நக்கீரன் என்று குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஐந்து மாதங்களுக்குள் தமிழில் வரும் பெரும்பாலான சஞ்சிகைகளிலும் இலங்கை அல்லது பிரபாகரன் அல்லது புலிகள் குறித்த ஏதாவது ஒரு தொடர் வெளியாகி வருகிறது. இலங்கை என்ற தீவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடலுக்குள்ளிருந்து முளைத்துவிடவில்லை, பிரபாகரனும் புலிகளும் இலங்கை அரசை எதிர்த்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இதற்கு முன்பு இதன் தொடர்பில் தொடர் எழுதாத சஞ்சிகைகள் இப்போது எழுதிவருவது மக்களின் உணர்ச்சிகளைக் காசாக்குகிற கயமை அல்லவா?

தமிழ்ப் புலனாய்வு ஏடுகளில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் நக்கீரன் தொடர்ந்து துணிச்சலுடன் எழுதி வருகிறது. அந்த வகையில் நக்கீரனோடு ஒப்பிட்டால் விலை போன அல்லது இருட்டடிப்பு செய்கிற பத்திரிகைகளின் செயல்களில்தான் ஊடகப் பொறுக்கித்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது.

அம்சா

10:43 பிப இல் பிப்ரவரி 15, 2009 | அரசியல், பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

image இங்கே ஏன் விசித்ரா படம் என்று தமிழ் கூறும் வலையுலகம் ஐயுறலாம். நடிகை விசித்திரா அறிமுகமான காலத்தில் நமிதாவுக்கு தற்போதுள்ள வரவேற்பு அவருக்கு இருந்தது. விசித்ரா என்ற அவருடைய நிஜப் பெயரே இரண்டொரு படங்களுக்குப் பிறகு தான் அனைவராலும் அறியப்பட்டது. “மடிப்பு அம்சா” என்ற பெயரில்தான் அவர் தமிழர்களுக்கு அறிமுகமானார். தற்சமயம் விசித்ரா என்ற பெயரை கூகுளில் தேடினால் இந்த ஒரு படம் மட்டுமே தென்படுகிறது.

இப்போது விசித்ராவை நினைவுகூர வேண்டிய அவசியம் என்ன? ஏன் இந்தப் படமும் பதிவும் என்று பலரும் ஐயுறலாம். ஐயன்மீர் பொறுமை காப்பீராக. இந்த அம்சாவை இன்னொரு அம்சா நினைவுபடுத்திவிட்டார். அவர்தான் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் அம்சா. இலங்கையில் நிகழ்ந்து வரும் படுகொலைகளைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டும், காலிட வேண்டும் என்ற குரல்கள் மட்டும்தான் இதுவரை எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் அதிருப்தியை வெளிக்காட்ட குறைந்தபட்சம் தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை இனிமேலாவது முன்னெடுக்க வேண்டாமா? தூதருக்கான பணிகளைக் கடந்து “நக்கீரன் பத்திரிகை மன்னிப்பு கேட்கவில்லையென்றால் வழக்குத் தொடருவேன்” என்று ராஜபக்‌ஷே கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் போல உறுமியிருக்கிறார். இந்த வேளையிலாவது இலங்கைத் தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவிட வேண்டும்.

இவ்வளவும் ஆரம்பமானது ராஜபக்‌ஷே தலை ஓட்டு மாலை அணிந்திருப்பது போன்ற படத்துடனும் “ராஜபக்‌ஷே நாசமா போவான்” என்ற சாப வாசகத்துடனும் வந்த அட்டைப் படம் காரணமாகத்தான். இந்த அட்டைப் படமும் சாப வாசகமும் இலங்கை அதிபரின் மாட்சிமையைக் குலைக்கிறதாம். இலங்கையின் அதிபர் எந்தத் தமிழினத்தை அழித்துவிடத் துடிக்கிறாரோ, எந்தத் தமிழினத்தின் மீது வன்மத்தோடு இருக்கிறாரோ அந்தத் தமிழினம் அவருடைய மாட்சிமையைக் குலைக்கக் கூடாதாம். அந்த மாட்சிமை குலையும் போது அதை தமிழர்களின் மண்ணிலே தன்னுடைய கைத்தடியை வைத்துத் தட்டிக் கேட்பாராம். என்ன கொடுமை சார்…

இதற்குப் பிறகாவது இந்தியா இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மாணம் முன்னெடுக்கப்படுமா? வலைப்பதிவு சமூகமே, சிந்திப்பீர்…

பின் குறிப்பு: நக்கீரன் பத்திரிகையும் கோபாலும் யோக்கியமா என்று கேட்க இருப்பவர்களே, இதே மாதிரி வேறு எங்காவது கவர்ச்சிப்படம் போட்டிருந்தால் பார்த்துவிட்டு பின்னூட்டிவிட்டு போய்க்கொண்டே இருங்கள். இது உங்களுக்கான இடம் அல்ல. இலங்கையில் இருக்கிற தமிழர்களைத் தான் ஆதரிக்கவில்லை, குறைந்தது இங்கிருக்கும் கோபாலையாவது ஆதரித்துத் தொலையுங்கள் (எனக்கும் நக்கீரனுடன் பல கருத்து முரண்கள் உண்டு. நக்கீரனையும் கோபாலையும் கேள்விகேட்க ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை உண்டெனினும் ஒரு சிங்களன் தமிழ் மண்ணில் இருந்துகொண்டு தமிழனை மன்னிப்புக் கேட்கச் சொல்வதை ஏற்பதற்கில்லை).

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.