அன்பே வடிவான தமிழனைத்தான் நானும் கேட்கிறேன்…

2:29 பிப இல் ஏப்ரல் 26, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக
குறிச்சொற்கள்: , , , , , ,

அன்பே வடிவான தமிழா, பெரியண்ணாச்சி உனக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டார். கடிதம் மட்டுமா எழுதினார், அதற்கு முன்பு நான்கு பதிவுகளையும் எழுதியுள்ளார். அவற்றையெல்லாம் நீ படிக்கவேண்டும் என்றுதான் தொடுப்புகளையும் தந்துள்ளேன்.

1. பொல்லாங்கு

2. நலம் பயக்கும்

3. நண்பர் கடுகு அவுகளுக்கு

4. இனிய நண்பர் கடுகு அவர்களுக்கு

5. அன்பே வடிவான தமிழருக்கு

//அய்யா தமிழுக்கு எதிராக யார் கருத்துக்களைக் கூறிய போதும் உடன் அதனை எதிர்த்துக் கேட்டவன் நான்//

பெரியண்ணாச்சி பிறந்ததென்னவோ திருநெல்வேலியில்தான், ஆனால் முழம் முழமாக தஞ்சாவூர் கதம்பத்தை அல்லவா உன் காதுகளில் சுற்றுகிறார். தஞ்சாவூரிலிருந்து இறக்குமதி செய்கிறாரோ என்னவோ! பிரசன்னா பாரதியை மேற்கோள் காட்டியது எந்த வகையில் தமிழை எதிர்த்ததாகும்? எனது முந்தைய பதிவின் அடிநாதமான இந்த கேள்விக்கு அவர் எழுதிய எந்தப் பதிவிலும் பதில் இல்லை. சரி விடு, மற்றவர்களைப் போல அவரும்கூட நமக்கு சூடு சொரணை எதுவும் இல்லை என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. இவ்வளவுதான் அவருடைய சூடும் சொரணையும். இனி அவரிடமே பேசிக்கொள்கிறேன்.

//கண்ணகி பற்றி நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்கின்றேன். அது அதீத கற்பனை//

பெரியண்ணாச்சி இந்த வார்த்தைகளை எங்கோ கேட்டது போல் இருக்கிறதா? 20/9/2007 அன்று சோவுக்கு நீங்கள் எழுதிய கடித்தத்தில் உள்ள வார்தைகள்தான் இவை. கண்ணகியை யாரென்று நினைத்தீர்கள் அண்ணாச்சி? அவள் அதீத கற்பனையா? அவள் இந்த இனத்தின் போர்க்குணம். பிரசன்னா செய்யாத தவறை செய்ததாக உருவாக்கி பெர்ஃபார்மன்ஸ் காட்டுகிறீரே அண்ணாச்சி, கண்ணகி என்ற தமிழினத்தின் காப்பியக் கதாநாயகிமீது நீங்கள் நரகலைத் துப்பியபோது எவன் வந்து உங்கள் சட்டையைப் பிடித்தான்? அடுத்தவர்கள் சகிப்புத் தன்மையைப் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தி வருகிறீர்கள் பெரியண்ணாச்சி.

//மாற்றுக்கருத்துக்களால்தான் மனிதம் மேம்படுகின்றது.//

ஆஹா, பெரியண்ணாச்சியின் பொன்மொழியில் மெய் சிலிர்க்கிறது. பிரசன்னாவின் கருத்தை வெளியிடவே வாய்ப்பில்லாமல் செய்ததில் எந்த மனிதம், யாருடைய மனிதம் மேம்பட்டுவிட்டது என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

//தமிழ்ப்பேச்சு நிகழ்வில் நான் குறுக்கீடு செய்வதற்காவே நடுவராக உள்ளேன் அய்யா. அது பேச்சுக்கான பயிற்சிக் களமல்ல அய்யா.சிறந்த பேச்சாளர்களை தேர்வு செய்யும் களம் அய்யா.//

எதை எழுதுவதாயிருந்தாலும் சரியாக தெரிந்துகொண்டு எழுதுங்கள் பெரியண்ணாச்சி. எனது “எங்கே போகுது தமிழ் பேச்சு” என்ற பதிவில் தமிழ்நாட்டு இளைஞர்களின் பேச்சாற்றலுக்கு மிகச்சிறந்த களமாக இருக்கும் என்று தான் எழுதியிருந்தேன். “பேச்சுப் பயிற்சிக்கான களம்” என்று எழுதவில்லை.

//தமிழ்த் தொலைக் காட்சிகள் செய்ய வேண்டிய பணியினை விஜய் மல்லையா அவர்களின் தொலைக் காட்சி செய்கின்றது.அய்ந்து இலட்சம் பரிசு தருகின்றார்கள் அய்யா.//

அய்ந்து லட்சம் என்றவுடன் பெரியண்ணாச்சி மனதில் சாராய வியாபாரி மகாத்மா ஆகிவிட்டார். அய்ந்து லட்சம் தருவதுதான் பெரியண்ணாச்சி கண்ணுக்கு பெரியதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை நடத்தி ”விஜய் மல்லையாவின் தொலைகாட்சி” சம்பாதிக்க இருப்பது எவ்வளவு என்பது பெரியண்ணாச்சிக்கு தெரியாது, பாவம். நானாகவா நடுவராக இருக்கிறேன் என்று தேடித் தேடி வாய்ப்பு கேட்டேன்? என்கிறார். பிறகு எதற்கு அண்ணாச்சி ”விஜய் மல்லையாவின் தொலைக்காட்சிக்கு” அடிவருடுகிறார். அண்ணாச்சிக்கு அவ்வளவு நல்லவர்களாக தெரிகிற “விஜய் மல்லையாவின் தொலைக்காட்சி” நிர்வாகிகளிடம் விளம்பரமே இல்லாமல் நிகழ்ச்சி நடத்தச் சொல்ல வேண்டியதுதானே.

மேலும் அண்ணாச்சியின் கனிவான கவனத்துக்கு, விஜய் டிவி இப்போது விஜய் மல்லையாவின் தொலைக்காட்சி கிடையாது. ருபர்ட் முர்டாக் அவர்களுடையது. ருபர்ட் முர்டாக் யாரென்று அண்ணாச்சிக்குத் தெரியுமோ தெரியாதோ? அதையும் நானே சொல்லிவிடுகிறேன். ருபர்ட் முர்டாக் தான் ஸ்டார் குழும தொலைக்காட்சிகளின் தலைவர்.

//அந்த நிகழ்வில் கலந்து கொள்கின்ற இளைஞர்கள் தமிழர்கள் வீட்டுப் பிள்ளைகள்தானே அய்யா. அவர்கள் தவறாக நமது இலக்கியங்களைக் குறிப்பிடும் நேரம் சரி செய்வதற்காகத்தானே அய்யா நான் அமர்ந்திருக்கின்றேன்.//

அண்ணாச்சி மற்றவர்களைப் பேசவிட்டால் தானே சரியாக பேசுவதும் தவறாக பேசுவதும் வெளியே தெரியும்.

//மட்டைப் பந்து வீரர் தெண்டுல்கர் ஒரு நேர் காணலில் சொல்லியிருந்தார்.முதன்முதலாக பாகிசுதானுக்கு விளையாடப் போகும் நேரம் தனக்கு 17 வயதென்றும் அதற்காக இம்ரான்கான் ஒன்றும் பந்தை மெதுவாக வீசவில்லை என்றும் சொல்லி விட்டு போட்டிகளுக்கு வருவதென்றால் முழுத் தகுதியோடு வர வேண்டும் என்றார். ஆகவே எங்களுக்குப் பின்னால் தமிழ் பேச வரும் நமது பிள்லைகள் நன்கு தமிழ் கற்க வேண்டும் என்பதற்காகத்தான் குறுக்கீடு செய்கின்றேன்.//

இம்ரான்கான் பந்தை மெதுவாகவும் வீசவில்லை, அதே சமயம் தெண்டுல்கரின் முகத்தைக் குறிவைத்தும் வீசவில்லை. ஆனால் நமது பெரியண்ணாச்சி முகத்தை நோக்கித்தான் வீசுகிறார். பெரியண்ணாச்சி அவருக்குப் பின்னால் தமிழ் பேசவரும் பிள்ளைகள் நன்கு தமிழ் கற்க வேண்டும் என்பதற்காக குறுக்கீடு செய்கிறாராம். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் பெரியண்ணாச்சி, தங்களுக்கு இருக்கிற பேச்சாற்றலை நிரூபிக்கத்தான் ஒவ்வொருவரும் அந்த நிகழ்ச்சிக்கு வருகிறார்களே ஒழிய, பெரியண்ணாச்சியிடம் பேச்சுப் பயிற்சி எடுத்துக்கொள்வதற்காக அல்ல. அப்படி பயிற்சி கொடுப்பதுதான் பெரியண்ணாச்சியின் விருப்பம் என்றால், எந்த தொலைக்காட்சியிலாவது நேரம் வாங்கி சொந்தமாக நடத்தட்டும், பெரியவர் குமரி அனந்தன் நடத்தியதைப் போல. இப்படி அடுத்தவன் காசில் பொங்கல் வைத்தால் கேள்வி கேட்கத்தான் செய்வோம்.

எனக்கு பதில் சொல்ல, வரிந்துகட்டிக்கொண்டு ஐந்து பதிவுகளை எழுதுகிற பெரியண்ணாச்சியிடம் முடிந்தால் இவருக்கும் (வே. மதிமாறன்) பதில் சொல்லச் சொல்லுங்கள். அவர் மட்டும் பதில் சொல்லட்டும், நான் எழுதுகிறேன் பத்து பதிவு, எங்கள் பெரியண்ணாச்சிக்கும் முதுகெலும்பு இருக்கிறது என்று.

எங்கே போகுது தமிழ் பேச்சு

10:40 முப இல் ஏப்ரல் 8, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சிக்கான அறிவிப்பைப் பார்த்தபோது, தமிழ்நாட்டு இளைஞர்களின் பேச்சாற்றலுக்கான மிகச்சிறந்த களமாக இருக்கும் என்று பலராலும் கருதப்பட்டது. ஆனால் இந்நிகழ்ச்சி இப்போது வெறும் இராமாயண உபன்யாசமாகவும் மாறிக்கொண்டிருக்கிறதோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது.

நிகழ்ச்சிக்கான இரண்டு நடுவர்களில் காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணனும் ஒருவர். நெல்லைக் கண்ணனின் தொடர் நடவடிக்கைகளால் பிறந்தது தான் மேற்கண்ட அச்சம்.

பட்டிமன்றங்களில் மட்டுமே சிறப்பாக எடுபடக் கூடிய நெல்லைக் கண்ணனின் பாணி இது போன்ற ரியாலிடி நிகழ்ச்சிகளுக்கு ஒத்தே வராது. நெல்லைக் கண்ணன் தன்னுடைய பாணியை மாற்றிக்கொண்டே ஆக வேண்டும். முடியாவிட்டால் கௌரவமாக நிகழ்ச்சியிலிருந்து விலகிவிடலாம். இல்லையெனில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சிம்புவுக்கும் பிருத்விராஜுக்கும் நிகழ்ந்தது போன்ற ரசாபாசம் இந்த நிகழ்ச்சியிலும் நடக்கலாம்.

பங்கேற்க வந்த பேச்சாளர்களை விடவும் நெல்லைக் கண்ணன் தான் அதிகமாகப் பேசுகிறார். பங்கேற்க வந்தவர்களைப் போலவே சகநடுவரையும் பேசவிடுவதில்லை. என்ன காரணமோ போன வாரம் நடுவராக வந்திருந்த கவிஞர் அறிவுமதியைக் காணவில்லை.

பங்கேற்க வந்த ஒரு இளைஞர் பாரதியாரின் “வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என்ற வரிகளை மேற்கோள் காட்டுகிறார், இவரோ சம்பந்தமே இல்லாமல் ரஷ்யப் புரட்சி பற்றிய பாரதியாரின் கவிதையை ஒப்பிக்கிறார். என்ன தான் சொல்ல வருகிறார் நெல்லைக் கண்ணன், பாரதியார் மேல சொன்ன வரிகளை எழுதவே இல்லை என்கிறாரா?

இன்னோரு இளைஞர் பெரியாரின் தொண்டர்களைப் பேசினால், நெல்லைக் கண்ணனுக்கு உடனே பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது. “பெரியாரின் தொண்டர்கள் எத்தனை பேர் அறங்காவலர் குழுவில் இருக்கிறார்கள் தெரியுமா,” என்கிறார். தேவையா இந்த விஷமம். நெல்லை கண்ணனுக்கு ஒரு செய்தி, பெரியாரே அறங்காவலராக இருந்தவர் தான். என்ன பதவியிலிருந்தார் என்பதல்ல முக்கியம், பதவியைக் கொண்டு என்ன செய்தார் என்பதுதான் முக்கியம்.

“பாரதியாரா, நான் தான் மொத்தக் குத்தகை, ராமாயணமா அதற்கும் நான் தான் மொத்தக் குத்தகை, ஆஸ்திகமா அதற்கும் நான் தான், என் முன்னால் பகுத்தறிவு, சுயமரியாதை பற்றியெல்லாம் பேசக்கூடாது. பேசினாயோ, தொலைந்தாய்” இப்படித்தான் இருக்கிறது நெல்லை கண்ணனின் நடவடிக்கை. முடிந்தால் யாராவது நெல்லை கண்ணனிடம் சொல்லுங்களேன், “இது நெல்லை கண்ணனின் பாண்டித்தியத்தைக் காட்டுகிற இடமல்ல. தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலைக் காட்ட வேண்டிய களம்,” என்று.

நெல்லை கண்ணன் அவர்களே அடக்கம் என்றால் என்ன என்பதை முதலில் கற்றுக் கொண்டு வாருங்கள். யாரிடம் கற்றுக் கொள்வது என்று தெரியாவிட்டால் நான் காட்டுகிறேன் ஒரு சரியான வாத்தியாரை. நீங்கள் இருக்கும் காங்கிரஸ் கட்சியிலே தான் அவரும் இருக்கிறார். பெயர் “தமிழருவி மணியன்”.

ஒருவேளை இதெல்லாம் விஜய் டிவி யின் விளம்பர ஸ்டண்ட்டாக இருக்குமோ என்று கூட அஞ்ச வேண்டியிருக்கிறது. காரணம் இப்போதெல்லாம் இது ஒரு பழக்கமாகவே மாறி வருகிறது. ரியாலிடி நிகழ்ச்சிகளின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஏற்றுவதற்கு இது ஒரு நிரூபிக்கப்பட்ட வெற்றி முறையாகவே கருதப்படுகிறது.

டி.ஆர்.பி. வெறி முத்திப் போய் மைக்கை எடுத்து அடித்துக் கொள்ளும் வரை போகாமல் இருந்தால் சரி.

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.