வணக்கம் மக்களே

4:32 பிப இல் செப்ரெம்பர் 14, 2008 | கடிதங்கள், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

ஏறக்குறைய ஒரு மாதமாகக் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருந்து, இப்போது திரும்பி வந்திருக்கிறேன். இது வரை பிறந்தநாள் மட்டுமே எனக்கே எனக்கானதாக இருந்தது. வரும் ஆண்டு முதல் இன்னொரு நாளையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். எனது திருமண நாள்! ஹி ஹி

என்னுடைய சில கவனக்குறைவுகளால் என் திருமணத்தைக் குறித்து சகபதிவர்கள் பலருக்குத் தெரிவிக்க இயலாமல் போய் விட்டது. மதிமாறன், லதானந்த் அங்கிள், வெயிலான் ஆகியோரிடம் என்னுடைய திருமணத்தைக் குறித்து தொலைபேசியில் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்களுக்கு அழைப்பிதழை அனுப்புவதில் நேர்ந்த பிழை காரணமாக யாராலும் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. குறிப்பாக மதிமாறன் அவர்கள் என் திருமண வரவேற்பு நாளன்று மற்ற அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு வரத் தயாராக இருந்தார். ஆனாலும் அவருக்கு அழைப்பு அனுப்ப மறந்த காரணத்தால் அவராலும் கலந்து கொள்ள இயலவில்லை. இதற்காக எனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி விக்னேஸ்வரன் என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனாலும் தமிழ்நாட்டுக்குச் சென்ற உடன் எனது செல்பேசி எண்ணை மாற்றிக் கொண்டதால் என்னையும் அறியாமல் அனைவருடைய தொடர்பு எல்லைக்கும் வெளியே இருந்திருக்கிறேன். தொலைபேசியில் தொடர்புகொள்ள நினைத்து பதில் சொல்லி இயந்திரத்தின் தெலுங்கு வாக்கியங்களைக் கேட்டு கடுப்பானோருக்கும் எனது மன்னிப்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் திருமண அழைப்பிதழ் முழுவதும் தமிழிலேயே அச்சிடப்பட்டிருந்தது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்தாலும், அலுவலகத்தில் தமிழ் தெரியாத என்னுடைய மேலாளர், சகபணியாளர்கள் ஆகியோரால் அதனை வாசிக்க இயலாமல் போனது வருத்தத்திற்குரிய விஷயமாகிவிட்டது.

ஆகஸ்ட் இருபத்திஎட்டாம் நாள் குடந்தையில் திருமணம் இனிதே நிகழ்ந்தது. ஏறக்குறைய இதுவும் ஒரு காதல் திருமணம் தான். என்னுடைய (கவனிக்க, எங்களுடைய என்று எழுதவில்லை) காதலை என் குடும்பமும், திருமதியாரின் குடும்பமும், முக்கியமாக திருமதியாரும் ஏற்றுக்கொண்டு நிகழ்ந்த திருமணம் இது. பதினோரு வயது வரை கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து பிறகு தனிக்குடும்பமாக வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானவன் நான். திருமதியாரின் குடும்பம் இன்னும் கூட்டுக் குடும்பமாகவே இருந்து வருகிறது. அவர்களை விரும்பியதற்கான முதல் காரணமும் இது தான்.

திருமண புகைப்படங்களின் மென்-வடிவம் (சாஃப்ட் காப்பி) தயாரான உடன் அதற்கான சுட்டியை பதிவில் போடுகிறேன். பார்த்தருளுக.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.