தேர இழுத்துத் தெருவுல உட்டுட்டாங்களே….

8:42 பிப இல் ஜூன் 7, 2009 | அரசியல், கடிதங்கள், பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 8 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

விஜய் என்பது பெற்றோர் இட்ட பெயர். பள்ளியில் விஜய்கோபால். தகப்பன் மீதுள்ள மரியாதையின் பேரில் எனக்கு நானே வைத்த பெயர் விஜய்கோபால்சாமி. இந்தப் பெயரை விரும்பி ஏற்பதை என் தகப்பனுக்குச் செய்யும் மரியாதையாகவே கருதுகிறேன்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

முதல் முறையாக என் மகளைக் கைகளில் ஏந்திக் கொண்டபோது. முன்னோர்களை நினைவுபடுத்தும் முகச்சாயலுடன் கண்களை உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அனிச்சைச் செயலாகக் கண்களில் நீர் திரண்டுவிட்டது.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

யாருடைய கையெழுத்தாக இருந்தாலும் படிக்கிறவர்களுக்கு புரியுமளவு இருந்தால் போதும் என்பது என்னுடைய அளவுகோல். அந்த வகையில் என்னுடைய கையெழுத்து எனக்குப் பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

தயிர்சாதமும் மிளகாய் ஊறுகாயும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

தங்கையின் திருமண நிச்சய நிகழ்வில் என் நண்பன் அண்ணாமலை உணவருந்திக் கொண்டிருந்தான். சம்பந்தி வீட்டார் சிலருக்கு உணவருந்த உடனே இடம் தேவையாயிருந்தது. சிறிதும் யோசிக்காமல் “அண்ணாமலை, ஏந்திரிடா” என்றேன். சம்பந்தி வீட்டாருக்கு என்னோடு அண்ணாமலையும் உணவு பரிமாறினான். அண்ணாமலையைப் போன்றவர்கள் எனக்கு நண்பர்களாகக் கிடைக்கிறார்கள். எத்தனை பேரிடம் நான் அண்ணாமலையின் நாகரிகத்துடன் நடந்துகொள்வேன் என்றுதான் தெரியவில்லை.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா….அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

சென்னை, மல்லை, திருச்செந்தூர், நாகை என்று பல ஊர்க் கடல்களில் குளித்தாகிவிட்டது. அருவிக் குளியலுக்கு இன்னும் வேளை வாய்க்கவில்லை. ஒரு முறை குளித்துப் பார்த்துவிட்டால் பதில் சொல்லிவிடலாம்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

சோர்வாக இருக்கிறாரா உற்சாகமாக இருக்கிறாரா என்று கவனிப்பேன். சோர்வாக இருந்தால் தேநீரிலிருந்து சாப்பாடு வரை உபசரிப்பு வேறுபடும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது “கிட்டாதாயின் வெட்டென மறப்பது”. பிடிக்காது “சிலவற்றை மறக்க முடியாமல் தவிப்பது”.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது “என் எழுத்துக்களை ஆராய்ந்து கேள்வி கேட்காதது”. பிடிக்காதது “ராத்திரி ரெண்டு மணியாகுதுல்ல. இன்னும் என்ன கம்ப்யூட்டர நோண்டிக்கிட்டு”. [வீட்டுக்கு வருவது ஒன்றேகால் மணிக்கு]

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அடுத்த ஆறு மாதங்களுக்கு மணைவியும் குழந்தையும் ஊரில் இருப்பார்கள் (நான் ஹைதராபாதில்). அதை எண்ணும் போது கொஞ்சம் வருத்தம்தான்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை நிற பனியன். சிறிதும் பெரிதுமாகக் கட்டம் போட்ட லுங்கி.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

ஜெமினி தொலைக்காட்சியில் “நீ மனசு நாக்கு தெலுசு” உன் மனதை நானறிவேன் என்பது நேரடிப் பொருள். [இதே படம் தமிழில் “எனக்கு இருபது உனக்குப் பதினெட்டு” என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. விவேக் வருகிற காட்சிகள் மட்டும் தமிழ்ப் படத்துக்காக ஒளிப்பதிவு செய்யப்பட்டது].

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

மர வண்ணத்தில் டெக்ஸ்சருடன் (texture) கூடிய பேணாவாக…

14. பிடித்த மணம்?

ஏலக்காய் மணக்கும் தேநீர் வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

சேவியர்: ஐயா, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கடிதம் வரைக என்றால் அதையும் கவிதை நடையிலேயே எழுதக் கூடியவர். சிறப்பு என்னவென்றால் அதுவும் அம்சமாக ரசிக்கும்படியாக இருந்துவிடும். நீரை விடுத்து பாலை மட்டுமே எடுத்துக் கொள்ளும் அன்னப் பறவை. சமகாலத்தைய சமய இலக்கியங்களில் இவருடைய பங்களிப்பைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இரண்டாம் கிருஷ்னப் பிள்ளை என்றே கூறலாம். இவரை அழைக்கக் காரணம் இந்தக் கேள்விகளில் ஒருசிலவற்றுக்கு நல்ல கவிதைகளே பதில்களாகக் கிடைக்கலாம்.

இந்தத் தொடரை எழுத பலரும் பலரையும் அழைத்திருக்கிறார்கள். யார் யார் இத்தொடரை எழுதினார்கள் என்று தெரியவில்லை. சேவியர் இதுவரை இத்தொடரை எழுதவில்லை என்று உறுதி செய்துகொண்டு இந்த அழைப்பை விடுக்கிறேன். நான் அழைக்க விரும்பும் இன்னொரு பதிவர் தம்பி விக்னேஸ்வரன். விக்னேஸ்வரன் இதுவரை எழுதியிராவிட்டால் இந்த அழைப்பை ஏற்று எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

“பண்டிதன் கடிதம்” என்ற பெயரில் தமிழ்ப் பாடலாசிரியர்களுக்கு இவர் எழுதிய பகிரங்கக் கடிதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. இதல்லாமல் வலைப்பதிவர்களுக்கு இவர் கூறுகிற வழிகாட்டுதல் தனிப்பட்ட முறையில் நான் இன்றளவும் பின்பற்றி வருவது. அவற்றையும் இங்கே தருகிறேன்.

அ. தமிழைப் பிழையில்லாமல் எழுதப் பழகுங்கள்.

ஆ. உங்கள் வட்டார வழக்கில் எழுதுங்கள்.

இ. குடும்பத்துக்கும் பார்க்கிற வேலை/தொழிலுக்கும் இடைஞ்சல் இல்லாதபடி எழுதுங்கள்.

ஈ. அலுவலகக் கணிப்பொறியைச் சொந்த உபயோகங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.

உ. உங்கள் நாட்குறிப்புகள் (பதிவுகள்) மற்றவர்களுக்கும் பிடித்திருந்தே தீரும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்.

ஊ. உங்கள் பங்களிப்பு உங்கள் குடும்பத்துக்குத்தான் முக்கியம் – பதிவுலகத்துக்கு அல்ல என்பதை உணருங்கள்.

எ. நீங்கள் பதிவெழுதுவதால் எதையும் சாதித்துவிட முடியும் என்றோ நீங்கள் பதிவெழுதாவிடில் உலகமே ஸ்தம்பித்துவிடும் எனவோ ஒருபோதும் நினைக்காதீர்கள்.

17. பிடித்த விளையாட்டு?

கபடி, சிலம்பம்.

18. கண்ணாடி அணிபவரா?

ஆம், கடந்த பதினெட்டு வருடங்களாக.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

விரும்பிப் பார்ப்பதில்லை, மற்றபடி நண்பர்களோ, தம்பி தங்கையரோ அழைத்தால் எத்தகைய அடாசு படத்தையும் பார்ப்பேன்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

இந்திரா (தெலுங்கு).

20. பிடித்த பருவ காலம் எது?

கார்காலம், பிரிந்திருக்கும் உயிரையெல்லாம் இணைத்து வைக்கும் கார்காலம்!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

நான் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை – வே. மதிமாறன்

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?

இரு காதல் குழந்தைகளின் படம். மாற்றுவதாக உத்தேசமில்லை.

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது குதிரை கணைக்கும் ஒலி. பிடிக்காதது வீடு அதிர ஒலிக்கவிடுகிற எந்த இசையாக இருந்தாலும்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?

வீட்டை விட்டு அதிக தொலைவு சென்றது இருக்கட்டும், என்னுடைய ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்குமே தூரம் அதிகம். அய்யய்யோ, தவறாக நினைக்காதீர்கள். மனைவியோடு நான் இருக்கிற ஹைதராபாத் விட்டுக்கும், அப்பா அம்மா இருக்கிற தஞ்சாவூர் வீட்டுக்குமே ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் தூரம். அதைச் சொன்னேன்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சிரித்த முகமாக இருந்தபடியே எதிரிலிருப்பவருக்குக் கொலை வெறி ஏற்றுவது. சமீபத்தில் மாட்டியவர் ஒரு டிராபிக் கான்ஸ்டெபிள்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

“நீ நல்லா இருக்கனும்னுதான் இதையெல்லாம் சொல்றேன்” என்று தெரிந்தே அடுத்தவர்களை நோகடிப்பதை.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

பழிவாங்கும் குணம். நண்பர்களை விட உறவினர்களை அதிகம் பதம் பார்த்திருக்கிறது.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மனித நடமாட்டம் குறைவாக இருக்கிற கடற்கரைகள். குறிப்பாக சென்னையில் திருவான்மியூர் மற்றும் சாந்தோம் தேவாலயம் பின்புறமுள்ள கடற்கரைப் பகுதிகள்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

எதிரி பொறாமைப்படும் படி.

31. கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

சொல்ல வெக்கமா இருக்கு. இருந்தாலும் சொல்றேன். முகச் சவரம். இப்பக் கூட ரத்தக் காயம் இல்லாம சரியா மழிக்கத் தெரியல. மனைவியின் கேலிக்குப் பயந்தே பரம ரகசியமாக முகச் சவரம் செய்து வருகிறேன்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

எவ்விதக் குற்ற உணர்ச்சியும் ஏற்படாத வகையில் வாழ்வதே வாழ்க்கை.

நன்றி: லதானந்த் மாம்ஸ் தனிப் பதிவு போட்டு அழைத்தமைக்கு.

கதை விவாதம்…

11:48 முப இல் திசெம்பர் 7, 2008 | கதைகள், நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

image.png

இயக்குநர் பரிசல் அவர்களின் அடுத்த படத்துக்கான டிஸ்கஷன் சீரியசாகப் போய்க்கொண்டிருக்கிறது. இயக்குநருக்கு ஆக்‌ஷன் ஸ்டோரி எடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், தயாரிப்பாளர் வெயிலானின் விருப்பமோ லவ் சப்ஜெக்ட். கடைசியில் இயக்குநர் தயாரிப்பாளரின் வழிக்கு வருகிறார். லவ் சப்ஜெக்டை ஒரு ரொமேண்டிக்கான இடத்தில் காட்டவேண்டும் என்று படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை கவனிக்க உள்ள லக்கிலுக் கருத்துத் தெரிவிக்கிறார். உதகமண்டலம் சரியான ஸ்பாட் என்றும் சாங் மட்டும் ஸ்விட்சர்லாந்திலும், ஃப்ரான்சிலும் எடுக்கலாம் என்று ஒளிப்பதிவாளராகப் புதிய அவதாரம் எடுத்திருக்கும் கேபிள்ஷங்கர் தன் அபிப்ராயத்தைக் கூற, லேசாக ஜெர்க் ஆகிறார் தயாரிப்பாளர்.

லவ்வு சுவிஜர்லாந்துலயும், ஃப்ரான்சுலயும் தான் வருமா? ஏன், விருதுநகர்லயும், கோவில்பட்டிலயும் வராதா? என்று பட்ஜெட்டை நினைத்தபடி புதிய பாரதிராஜாவாகக் கர்ஜிக்கிறார் தயாரிப்பளர், அண்ணன் வெயிலான். இடையில் இயக்குனர் தலையிட்டு “ஓக்கே, கூல்… ஸ்டோரி ஊட்டில நடக்குது… சாங்ஸ் எல்லாம் பொள்ளாச்சிலயும், டாப் ஸ்லிப்புலயும்… நடுவுல ஒரு ப்ளாஷ்பேக் சீன் மட்டும் கோயமுத்தூர்ல” என்று கச்சிதமாக அனைவரையும் ஸ்டோரிக்குள் கொண்டு வருகிறார் இயக்குனர் பரிசல். என்ன இருந்தாலும் gap10 ஆஃப் த ஷிப் அல்லவா.

“சரி ஹீரோ ஹீரோயின் யாருன்னு சொல்லவே இல்லையே,” நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள விரும்பிய ஃபைனான்சியர் நந்து (நிலாவின் தகப்பனார்) அப்போது தான் ஆட்டைக்குள் வருகிறார். “என் மனசுல ஒரு ஹீரோ இருக்காரு… அவரு நடிக்க ஒத்துக்கிட்டா கிட்டத்தட்ட படம் 200 நாள் கியாரண்டியா ஓடும். நியூ ஃபேஸ் தான். ஆனாலும் அவரோட கண்ல ஒரு ஃபயர் தெரியுது,” என்று தொடர்ந்த இயக்குனரை மறித்து “ஹீரோயின் யாரு, அத மொதல்ல சொல்லுங்கப்பா…. தமண்ணாவ ஹீரோயினா போட்டா மினிமம் கியாரண்டில எல்லா ஏரியாவும் வித்துரும், தமண்ணா டேட்ஸ் கெடைக்கலேன்னா தெலுங்குல சோனியான்னு ஒரு புதுப் பொண்ணு வந்துருக்கு “ஆமே சூசி சூசி சச்சு போத்துன்னே உன்னானு, தெலுசா மீக்கு,” என்று எமோஷனலாக ஜோதியில் ஐக்கியமாகிறார் ஒளிப்பதிவாளர் கேபிள்.

“எவ்வளவு செலவு பண்ணி டிஸ்கஷனுக்கு ஏற்பாடு பண்ணிருக்கோம், சுச்சு வந்தா பாத்ரூமுக்கு போகவேண்டியது தானே சார்” என்று கேபிள் தெலுங்கில் சொன்னதன் மீனிங் தெரியாமல் வெயிலான் அக்கறையாக அட்வைஸ் பண்ணுகிறார். “சார், அது சுச்சு இல்ல சார், சச்சு, சச்சு, சொல்லுங்க சச்சு” என்று கேபிள் வெயிலானுக்கு தெலுங்கு வகுப்பெடுக்க, அது புரியாத வெயிலான் “வேணும்னா, சச்சுவ ஹீரோயினுக்கு பாட்டியா போட்டுக்கலாம், டைரக்டர் சார், இவரு ரொம்ப ஆசப்படுறாரு. ஹீரோயினுக்கு ஒரு பாட்டி கேரக்டர் வச்சுருங்க” என்று சொல்ல “அய்யோ” என்று ஹை டெசிபலில் அலறுகிறார் கேபிள்.

“ப்ளீஸ், எல்லாரும் கொஞ்சம் சீரியசா கவனிங்களேன். லவ் ஸ்டோரின்னாலும், இது முதல் மரியாதை மாதிரியான ஒரு சப்ஜெக்ட். அதுக்குத் தகுந்த மாதிரி நான் ஒரு ஹீரோவ யோசிச்சு வச்சுருக்கென் என்கிறார் இயக்குனர். “மனுஷன் அல்ட்ரா மார்டன் யூத் மாதிரியே இருப்பாரு,” தொடர்ந்து பரிசல் சொன்னதைக் கேட்ட வெயிலான் லேசாக ஜெர்க்காகிறார் “யூத்து மாதிரியா… அப்ப யூத்து இல்லியா?” “தப்பு தப்பு, கன்னத்துல போட்டுக்குங்க. நீங்க இப்படி சொன்னது தெரிஞ்சா அவரு நடிக்கவே ஒத்துக்க மாட்டாரு.” என்று மம்மியைக் கனவில் கண்ட ர.ர. மாதிரி அலறுகிறார் இயக்குநர்.

“சார், மொதல்ல சாங்சப் பத்தி டிசைட் பண்ணுங்க. அது தான் படத்தோட கேச்சியான போர்ஷன்,” ஒளிப்பதிவாளரின் ஐடியாவைக் கேட்டு குஜால் ஆகிறார் தயாரிப்பாளர். “பா. கஜய், கா. குத்துக்குமார், பூமறை இப்படி வழக்கமான ஆளுங்களையே போட்டு பாட்டெழுத வைக்கிறது எனக்கு இஷ்டமில்லை. நியூ பேஸ் யாரையாவது யூஸ் பண்ணனும். எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர், “அலசல்”னு ஒரு ப்ளாக் நடத்துறாரு, அவர பாட்டெழுத வைக்கலாம்னு யோசிக்கிறேன்” என்கிறார் இயக்குனர். இங்கே தான் மீண்டும் சீனுக்கு வருகிறார் லக்கி, “யப்பா, அவரு கவியரங்க ரேஞ்சுக்கு கவித எழுதுறவரு. அவரப் போயி படத்துக்கு பாட்டெழுத சொன்னா சரிவருமா? அதுவுமில்லாம அவராண்ட ஏற்கெனவே எவனோ ஒரு டுபாகூரு சினிமால பாட்டெழுதுறீங்களான்னு கேட்டு கலாசிட்டான். இனி நெஜமாவே யாராவது பாட்டெழுத வற்றீங்களான்னு கேட்டாலும், பாட்டில ஒடச்சு வவுத்துல சொருவிருவாரு ஜாக்கிரத,” என்கிறார்.

“இந்த மாதிரி வேலைக்கெல்லாம் ரிஷான் ஷெரிஃப்னு கத்தார்ல ஒருத்தர் இருக்காருபா, அவருதான் கரெக்ட். அவரு வேற ஏற்கெனவே ஒரு கும்பல் சேத்துக்கிட்டு “கொலை வெறிக் கவுஜைகள்”ன்ற பேர்ல கவிதை எழுதிக்கிட்டிருந்தாரு, என்ற நந்துவை (நிலாவின் தகப்பனார்) தடுத்தாட்கொள்கிறார் லக்கிலுக். “கத்தார்லாம் வேண்டாம், ஃப்ளைட் டிக்கெட்லாம் எடுக்க வேண்டியிருக்கும், நமக்குத் தெரிஞ்சு “விஜய் கோபால்சாமி”ன்னு ஒரு தம்பி ஹைதராபாத்ல இருக்காரு. ரீமிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட்டு. கேசினேனில (கேசினேனி பஸ்) நான் ஏசி டிக்கெட் எடுத்துக் குடுத்தா போதும், நீங்க இருக்கற எடத்துக்கே வந்து வேலைய முடிச்சுக் குடுத்துடுவாரு,” என்று சொல்ல காஸ்ட் எஃபெக்டிவாக இருப்பதால் தயாரிப்பாளர் தரப்பிலும் ஏற்கப்படுகிறது.

முதல் கட்டமாக தொலைபேசியில் கான்பெரன்ஸ் கால் போட்டு ஒரு பாடலுக்கான சூழல் விளக்கப்படுகிறது. இசையமைப்பாளர் என்று ஒருவரை போடுவதற்கு பட்ஜெட் அனுமதிக்காததால் தற்சமயம் பாப்புலராக இருக்கிற பாடல்களையே ரீமிக்ஸ் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. சூழல் இது தான், புகைப்படக் கலையில் (படம் எடுத்துக்கொள்கிற கலை) மிகுந்த ஈடுபாடு கொண்ட நாயகனுக்கு லவ் அட் ஃபாட்டிஎய்ட்த் சைட். அந்த சூழலில் ஒரு டூயட். இதற்கு சுப்ரமணியபுரம் கண்கள் இரண்டால் பாடலின் ட்யூன் வழங்கப்படுகிறது.

சி டிரைவ் மொத்தத்தையும் சல்லடை போட்டுத் தேடியும் விஜய் கோபால்சாமிக்குக் கண்கள் இரண்டால் பாடல் கிடைக்கவில்லை. ஒருவெப்சைட் டாட் காமிலிருந்து பாடலை பதிவிறக்கம் செய்து டெஸ்க் டாப்பில் சேவ் பண்ணுகிறார் வி.கோ. பின்னர் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாடலை வின் ஏம்ப் இல் ஓப்பன் செய்கிறார். பாடலைக் கேட்டபடியே அவர் எழுதியெ ரீமிக்ஸ் இதோ உங்கள் பார்வைக்கு. பாடலை எழுதிக்கொண்டிருந்தபோதே வி.கோ.வின் செல்லுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அனுப்பியவர் இயக்குனர். “சந்திப்பிழையோடு எழுதினால் ஹீரோ ஜமுக்காளத்தைப் போத்தி அடிப்பார். ஜாக்கிரதை” என்று இருந்தது. ஜமுக்காளத்தைப் போத்தி அடிப்பார் என்று இருந்ததே தவிற யாரை அடிப்பார் என்று சொல்லவில்லை. எதற்கும் இருக்கட்டுமே என்று சந்திப்பிழை இல்லாமல் எழுத முடிவு செய்கிறார் பாடலாசிரியர். சந்திப்பிழை என்றால் என்ன என்று தெரியாத வி.கோ. பல இடத்திலும் தேடிச் சலித்துப் போய் கடைசியில் சந்திப் பிழை பதிவு பார்த்துத் தெரிந்து கொள்கிறார்.

ஆண்:

கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்

பல ஃபிகர் மடித்தேன், மடித்தேன் போதாதென

கூட நிறுத்தி, தோளை தோளில் பொருத்தி

நூத்துக் கணக்கில் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தேன்… (2)

பெண்:

கவுக்க எண்ணி சில நாள்… அருகில்… வருவேன்…

உந்தன் பர்சு போது என நான்… நினைத்தே… நகர்ந்தேனே -வளைச்சு

போட்டோ எடுத்தாய் பல போட்டோ எடுத்தாய்

கேமெரா கதறக் கதறக் கதறக் கதற போட்டோ எடுத்தாய்….

ஆண்:

சரக்கும் இல்லாது உறக்கம் வராத

பொழுதுகள் உன்னோடு கழியுமா…

டாப் சிலிப் போவோமா, உதகைக்குப் போவோமா

அதுக்குன்னு கொஞ்ச நேரம் ஒழியுமா…

பெண்:

மணிப்பர்சின் தடிமனைப் பார்க்கிறேன்…

கொஞ்சம் கணமாய் இருந்தால் வருகிறேன்…

இதுவரை பல பேரை…

நான் போட்ட ஆட்டை…

ஆண்:

கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்

பல ஃபிகர் மடித்தேன், மடித்தேன் போதாதென

கூட நிறுத்தி, தோளை தோளில் பொருத்தி

நூத்துக் கணக்கில் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தேன்…

பெண்:

என் புருஷன் அறியாத உன் மனைவி தெரியாத

தூரத்துக்கு நாம் சென்று பழகுவோம்…

நமக்குள் இப்போது இருக்கிற கசமுசா

வெளிய தெரிஞ்சிருச்சுன்னா வெலகுவோம்….

ஆண்:

இதைப்போல் பெஸ்ட்டு ஐடியா இல்லை

அருகினில் என்னோட மனைவி இல்லை

தடை இல்லை சேர்ந்திடவே… உன்னோடு – தினம்

கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்

பல ஃபிகர் மடித்தேன், மடித்தேன் போதாதென

கூட நிறுத்தி, தோளை தோளில் பொருத்தி

நூத்துக் கணக்கில் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தேன்… (2)

அறிமுக பாடலாசிரியர் என்பதால் டைட்டில் கார்டில் மட்டும் பெயர் போடுவதாகவும், வேறு ரெமுனரேஷன் எதுவும் கிடையாது என்றும் தயாரிப்பாளர் தரப்பில் போடப்பட்ட கண்டிஷனையும் ஏற்றுக்கொண்டு விஜய் கோபால்சாமி எழுதிய பாடல் இது.

பாடலால் பெரிதும் கவரப்பட்ட இயக்குநர், தயாரிப்பாளர், ஃபைனான்சியர், ஒளிப்பதிவாளர் அண்டு கம்பெனி அடுத்து கதாநாயகனைத் தொடர்புகொள்ளலாம் என்று முடிவெடுக்கிறது. இம்முறை இயக்குனர் தனது செல்லில் கதாநாயகனின் எண்ணை பயபக்தியுடன் ஒத்தி, கால் பட்டனை அழுத்துகிறார். மறுமுனையில் போன் எடுக்கப்பட்ட உடன், விஷயத்தை சொல்லுகிறார். கொஞ்சம் நேரம் கழித்து ஐந்து விநாடிக்கு ஒரு முறை “சரிங்…” “சரிங்…” என்று பத்து இருபது முறையாவது சொல்லியிருப்பார்.

போனை வைத்துவிட்டு வந்த இயக்குநரிடம் அனைவரும் கோரசாக “ஹீரோ என்ன சொன்னாரு” என்று கேட்கிறார்கள். குரலில் இருந்த பக்தி விலகாமல் “சினேகாள ஹீரோயினா போட சொல்றாரு” என்றார் பரிசல்.

image.png

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.