மணிமேகலையும் ‘தண்ணி’மேகலைகளும்
3:21 முப இல் ஜனவரி 1, 2009 | விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: சூடான இடுகை, வரும் வழியில்
வருடத்தின் முதல் நாள் தொடங்கி ஒரு மணி நேரமே கடந்திருந்த நிலையில், வீடு திரும்பும் வழியில் கண்ட காட்சிகளின் தொகுப்பு இது.
ஹைடெக் சிட்டி சாலை சந்திப்பில் கருமமே கண்ணாக இருந்தனர் காவலர்கள். இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் வந்த வண்டிகள் நிறுத்தி வாகனப் பரிசோதனை செய்துகொண்டிருந்தனர். வழிநெடுக ஆங்காங்கே காவலர்கள் கண்ணில் பட்டனர்.
ஜூபிலி ஹில்சில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் உறங்கிக்கொண்டிருந்த இரவலர்களை (பிச்சைக்காரர்கள்) எழுப்பி, ஒரு வெளிநாட்டுப் பெண் கேக் கொடுத்துக்கொண்டிருந்தார். அதே சாலையில் இருநூறடிகள் தள்ளி ஒரு பப்பின் (pub) வாயிலில் இந்திய இளைஞர்களும், இளம்பெண்களும், புத்தாண்டை தன்னிலை மறந்த நிலையில் வரவேற்ற களைப்புடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பால் வேறுபாடின்றி சாலையைப் புகைமண்டலமாக்கிக் கொண்டிருந்த கூட்டத்தின் நடுவே நான் வந்த வாகனம் ஊர்ந்தபடியே வந்துகொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டியும் ஏராளமான வாகனப் போக்குவரத்து இருந்தது.
அதே சாலையில் செய்தி அலைவரிசையின் வாகனமொன்று, போதையுடன் வந்து போலிசில் சிக்கியவர்களை நேரலையாகப் பதிவு செய்துகொண்டிருந்தது.
சாலைத் திருப்பத்தில், உயரம் குறைவான ஸ்கர்ட்டும் அதைவிட உயரம் குறைவான டாப்சும் அணிந்தபடி ஆண் துணைவனின் வாகனத்தில், பின்னாலமர்ந்தபடி சென்றுகொண்டிருந்த பெண்னின் வயது பத்தொன்பதிற்கு மிகாது.
தொடர்ந்து பழைய விமான நிலையத்தின் எதிரிலிருக்கும் பாலத்தில், நண்பர்கள் இருவர், கைப்பிடிச் சுவரை ஒட்டித் தங்கள் காரை நிறுத்திவிட்டு, சுவரில் ஒரு காலும் காரின் மீது ஒரு காலுமாக நின்றபடி, பாலத்தின் அடியில் சென்றவர்களுக்குத் தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டிருந்தனர்.
மற்ற நாட்களில் அந்நேரத்தில் ஈக்கள் கூட பறக்காத எல்.பி. சாலையில், தேவாலயத்திலே நள்ளிரவுப் பிரார்த்தனையை முடித்துவிட்டுக் குடும்பம் குடும்பமாக மக்கள், பேருந்துக்காகக் காத்திருந்தனர். காருக்குள்ளிருந்து ஒரு குழந்தை கையசைத்து வாழ்த்து தெரிவித்தாள். புன்னகையுடன் நானும் கையசைத்தேன்.
சிறிது தூரம் கடந்து பேரேடு கிரவுண்டை ஒட்டி நான் வந்த வாகனம் திரும்பியது. ஒரு சுவரொட்டியில் நாகார்ஜுனா, திரிஷாவின் கழுத்துப் பகுதியை முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். சற்று முன்பு தன்னிலை மறந்து புத்தாண்டை வரவேற்ற நண்பர் ஒருவர், அந்த சுவரொட்டிக்கு (சிறு)நீர்ப்பாசனம் செய்துகொண்டிருந்தார். கிங் ஃபிஷர் அல்லது 5000 அல்லது ப்ளாக்நைட் அல்லது பட்வைசர் அல்லது ஃபோஸ்டர்ஸ், இவற்றில் ஒன்றோ அல்லது பலவோ அருந்தியிருக்கக் கூடும்.
பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இந்தப் புத்தாண்டு இரவில் கிடைத்திருக்கிறது. பதிவை வலையேற்றியதற்கும் சம்பவங்கள் நிகழ்ந்ததற்கும் இடையே இரண்டு மணிநேர இடைவெளி கூட இல்லாததால் ஒருவகையில் இதுவும் சூடான இடுகை என்றே கருதுகிறேன்.
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.