விடைபெறும் நேரம்

12:00 முப இல் ஜனவரி 21, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக
குறிச்சொற்கள்: , ,

image

என் இனிய வலையுலகமே…

உங்கள் பாசத்துக்குரிய

விஜய்கோபால்சாமியின்

மொக்கைகளை

பொறுமையாகச்

சகித்துக்கொண்ட

உங்கள் சகிப்புத் தன்மைக்கு

நன்றி சொல்லி

விடை பெறுகிறேன்

அப்படீன்னு சொல்லி விடை பெற்றுக்க இன்னும் ஐந்து நாட்கள் இருக்கிறது. அப்படியெல்லாம் நீங்கள் நிம்மதியாக இருக்குமளவுக்கு கவனக்குறைவாக இருந்துவிடமாட்டேன். என் தூக்கத்தைக் கெடுத்த பல பதிவர்களைக் குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

உஸ்மான் ரோடுல ஜோதி உதயமாகுதுன்னு ஒரு விளம்பரம். பரங்கிமலைலேந்து ஷிஃப்ட் பண்றாங்களோன்னு பயந்துட்டேன். பிறகு தான் தெரிந்சுது இது வேற ஜோதியாம். பீதிய கெளப்பி பேதியில கொண்டு போய் விடப் பாத்தானுங்க. சரி விஷயத்துக்கு வருவோம்.

தம்பி விக்னேஸ்வரன் சில சமயம் என்னுடன் ஜி-டாக்கில் உரையாடியபடியே பதிவுகளை எழுதி முடித்துவிடுவான். பொங்கல் நாளன்றும் அப்படித் தான். பொங்கல் சிறப்புக் கொசுறுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தான். திடீரென்று ஒரு கேள்வி “சித்தப்பு, மாவு பொங்குவதற்கு ஒரு பொடி போடுவார்களே, அதன் பெயர் என்ன?” என்று “மகனே, சோடா உப்பு போட்டால் மாவு பொங்கும். சந்தேகம் என்றால் தூயா அக்காவிடம் கேட்டுக்கொள்” (மேட்டரே தூயா அக்காவைக் கலாய்ப்பதுதான் என்பது வேறு விஷயம்) அக்கா என்று விநாடிக்கும் குறைவான நேரத்தில் பதில் சொன்னேன். ஆமாம், சமையல் கலை என்றாலே வலையுலக மக்களுக்கு விநாடிக்கும் குறைவான நேரத்தில் ஞாபகம் வருவது தூயா அக்காவின் பெயர் தான். அவர்களுடைய சிறுகதைகள் படித்த பல மணிநேரங்களுக்குப் பிறகும் மனதை என்னவோ செய்யக் கூடியவை. பானை சோற்றுக்கு ஒரு சோறாக இந்தக் கதை.

கவிதை, கதை, உலக நடப்புகள் என்று பல துறைகளில் கலக்கினாலும் ரிஷான் ஷெரிப் அவர்களின் படைப்புகளில் நான் பெரிதும் ரசித்தது சிறுகதைகள்தான். அவருடைய கதைகளில் என்னைப் பதம் பார்த்தவை சில (1, 2, 3).

வருங்கால முதலமைச்சர்களைப் போட்டுத் தாளித்திருக்கிறார் ஒருவர். “நாளைக்கு நீங்கள் ஒரு முதலையமச்சர் ஆகி ஆட்சி நடத்தும்போது உங்கள் பேரனோ பேத்தியோ, நீங்கள் தொப்புளில் பம்பரம் விட்ட காட்சியையோ…டபுள் ட்ரிபுள் மீனிங் பேசும் காட்சிகளையோ பார்க்க நேர்ந்தால்..?” என்று சட்டையைப் பிடித்து கேட்பது போல கேட்டிருக்கிறார். இதற்கு அந்த வருங்கால முதல்வர்கள் சொல்லக்கூடிய ஒரு பதிலை அவரே சொல்லவும் செய்திருக்கிறார். மிகக் குறைவாகவே எழுதுகிறார். கேட்டால் “பேசிக்கலி ஐயாம் எ சோம்பேறி” என்கிறார்.

கேபிள் ஷங்கர் அண்ணன் தற்சமயம் நிதர்சனக் கதைகள் என்ற தலைப்பில் சிறுகதைகள் எழுதிவருகிறார். ஆனாலும் சில மாதங்களுக்கு முன்பு படித்த இந்தக் (இப்போது வந்திருப்பது மீள்பதிவு) கதை இன்னும் மனதிலேயே இருக்கிறது. மறக்காமல் படித்துவிடுங்கள்.

லதானந்த் அங்கிளின் எச்சரிக்கையையும் மீறி செல்வேந்திரன் அவர்களின் இந்தப் பதிவைப் படித்தேன். தலைப்பு வெறும் அதிர்ச்சி மதிப்புகளுக்காக வைக்கப்பட்டதல்ல என்பது முழுவதுமாய்ப் படித்தால் உங்களுக்கே புரியும். இதே போல பல பகீர் ரகப் பதிவுகள் நிறைந்தது அவருடைய தளம்.

இளையராஜா வேலுச்சாமி, என் கல்லூரி சீனியர். தற்சமயம் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார். “உணர்ந்ததைச் சொல்லுகிறேன்” என்ற தன்னுடைய தளத்தில் எழுதிவருகிறார். இவருடைய எழுத்துக்களில் என்னைக் கவர்ந்தவை “காதல் வசனங்கள்” என்ற தலைப்பில் இவர் எழுதும் குறுங்கவிதைகள்.

பதிவர்களை அறிமுகப்படுத்துவதைப் போலவே, பலரும் அறியாத ஒரு திரைக்கலைஞரையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இவர் கலைஞர் கருணாநிதி, ராஜாத்தி அம்மாள் ஆகியோர் நாடகங்களில் நடித்த காலத்தில் அவர்களுடன் நடித்தவர். பல திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், அண்ணாமலை தொடரில் இவர் நடித்ததோடல்லாமல் சொந்தக் குரலில் பாடவும் செய்திருந்தார். அது தான் இவருடைய முதல் குரலிசை முயற்சி. “நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ” என்ற சீர்காழியாரின் பாடலை தன்னுடைய குரலில் பாடியிருப்பார். அதன் பிறகு விருமாண்டி படத்தில், “கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்” என்ற பாடலைப் பாடினார். நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போது பூ படத்தில் “சிவகாசி ரதியே” என்ற பாடலைப் பாடியுள்ளார். நாடக உலகிலிருந்து திரையுலகம், இசையுலகம் என்று தன் வாழ்நாளில் நீண்ட பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் “பெரியகருப்புத் தேவரை” உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி. கீழே பாடலையும் இணைத்துள்ளேன், நேரம் இருந்தால் தவறாமல் கேளுங்கள்.

நாளை சந்திப்போமா…

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.