சதன் எழுதும் மலபார் தேங்காய்…

10:51 பிப இல் திசெம்பர் 20, 2008 | அரசியல், கதைகள், நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,

விரைவில் ஆரம்பம், “சதன் எழுதும் மலபார் தேங்காய்…”. வரும் திங்கள் முதல் அடுத்த ஐந்து வாரங்கள் வெளிவர உள்ளது. தவறாமல் படியுங்கள், என்ற பீடிகைகள் ஏதுமின்றி இப்போதே தொடங்குகிறது “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” சிறுகதை. இக்கதையை ஐந்து வாரங்கள் தொடராக எழுதினால் உங்களில் பலபேர், மூலம், பௌத்திரம், குடலிறக்கம், மூட்டுவலி, சோரியாசிஸ், ஆஸ்துமா, சொறி, சிரங்கு, பக்கவாதம், மாரடைப்பு, கிட்னி ஃபெயிலியர், அல்சர், எய்ட்ஸ், இவற்றுள் ஒன்றோ அல்லது அத்தனையுமோ வரக் கடவது என்று என்னைச் சபிக்கலாம். அவற்றைத் தவிர்க்க கதையை இன்றே முடித்துக்கொள்கிறேன். நோ சாபம் ப்ளீஸ்.

ஹரிஹரசுதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட சதன் ஒரு எழுத்தாளன் மற்றும் மீடியா தொழிலதிபன். நீங்கள் நினைப்பதுபோல் அவன் ஒன்றும் இலக்கியவாதி இல்லை. அவன் எப்படி எழுத்தாளன் ஆனான், என்ன மாதிரி எழுத்தாளன் ஆனான் என்பதைச் சொல்வது தான் இந்த சிறுகதை. ஹ.ஹ.சு.வின் முழுப் பெயரையும் அடிக்கடி சொல்வது சாத்தியப்படாது என்பதால் இனி சதன் என்றே அழைப்போம்.

சாந்தோம் குயில்தோப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்தான் சதன் வழக்கமாக தம்மடிக்கும் பெட்டிக்கடை இருந்தது. சதனின் கல்லூரிப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் வீணாகக் கழிந்திருந்தது. ஒரு சனிக்கிழமை ராகுகாலத்தில், அதே கடையின் முன்பு, பில்டர் கோல்டு ஒன்றின் கடைசி இழுப்பில், தானும் ஒரு தொழிலதிபனாவது என்று முடிவெடுத்தான். அதைத் தொடர்ந்து என்ன தொழில் செய்வது என்று நண்பர்களுடன் விவாதம் தொடங்கியது. பட்டிணப்பாக்கம் டாஸ்மாக்கில் ஏறக்குறைய ஆறு மணிநேரத்துக்கு மேலாக ஆராய்ச்சி நடந்தது. அவனுடன் வந்திருந்த ஆறு நண்பர்களில் இருவர் ஆம்லேட் போட்டது தனிக்கதை. ஆம்லேட் போட்டவர்கள் போக மீதமிருந்த நண்பர்களுடன் ஆராய்ச்சி தொடர்ந்தது.

சதனுக்கு இயல்பிலேயே தமிழார்வம் அதிகம் என்பதால், எழுத்தாளனாகலாம் என்ற யோசனையை ஒரு நண்பன் முன்வைத்தான். பெரிய முதலீடு எதுவும் தேவைப்படாது என்பதால் சதனுக்கும் அந்த யோசனை சரியென்றே பட்டது. ஆனால் தமிழ்நாட்டின் மக்கள்தொகையை விட எழுத்தாளர்கள், கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம் என்று யாரோ ஒருவரின் மேடைப்பேச்சில் கேட்டது அவனைச் சற்றே கலவரப்படுத்தியது. அவனுக்கு ஏறியிருந்த போதையில் அந்த பயம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. எழுத்தாளனாவது என்று தீர்மானமாகவே முடிவெடுத்துவிட்டான்.

பேச்சு எதைப்பற்றி எழுதுவது என்ற திசையில் சென்றது. அதுவரை பதினெட்டு ரவுண்டுகள் போயிருந்ததால் அவர்கள் போதையில் இருந்தார்கள் என்று சொல்வதை விட ராஜ போதையில் இருந்தார்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும். அந்த ராஜ போதை அவர்கள் இருக்குமிடம் சூழல் முதலியவற்றை மறக்கடித்திருந்தது. இடுப்புக்கு மேலே உள்ள பிரச்சனைகளை எழுதப் பல பேர் இருப்பதாலும், இடுப்புக்குக் கீழே உள்ள விவகாரங்களை எழுதுவோர் குறைவாக இருப்பதாலும், முன்னதைத் தவிர்த்து பின்னதைத் தேர்ந்தெடுப்பதாக தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. இவை

எழுத்தாளனுக்குப் பேனாவை விட புணைப்பெயர் முக்கியம் என்ற அதி உன்னதமான கொள்கைப் பிடிப்பு சதனுக்கும் இருந்தது. என்ன தான் நாம் சதன் என்று அழைக்கத் தொடங்கிவிட்டாலும் கதையோட்டத்தில் நமது நாயகன் இன்னும் ஹ.ஹ.சு. தான். சிறிதளவு வாசிப்பனுபவம் உள்ள சதனுக்கு அகிலன் எழுத்துக்களில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. பல வருடம் முன்பே காலமான ஒரு எழுத்தாளரை அவமதிக்க விரும்பாத சதன், அகிலனைத் தவிர்த்து வேறு புணைப்பெயர்களை முயற்சி செய்யலாம் என்று முடிவை மாற்றிக்கொண்டான். எழுதப் போவது கிளுகிளுப்பு சமாச்சாரம் என்பதால் கிளுகிளுப்பு சாம்ராஜ்யத்தின் பேரரசி (ராதிகா அம்மையாரைச் சொல்லவில்லை, அவர் செந்தமிழ் அரசி) ஷகிலா அவனது நினைவைக் கடந்து செல்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது. அகிலனையும் ஷகிலாவையும் கோத்து ஷகிலன் என்று ஒரு பெயரை இறுதி செய்தான். நண்பர்களுக்கும் அதுவே பிடித்திருந்தது.

மற்ற விஷயங்களை நண்பர்களுடன் கலந்தாலோசித்தாலும், கதை குறித்து சதன் எவருடனும் விவாதிக்கவில்லை. சொந்த சிந்தனையிலேயே கதைகளை எழுத வேண்டும் என்பதே அவனது விருப்பம். பெங்களூர் சரோஜா தேவி, பருவம், தேன் சிட்டு, போன்ற புத்தகங்கள் தரவுகளாகப் பயண்பட்டது. எல்லா புத்தகங்களிலும் கதாபாத்திரங்கள் தங்களுடைய அனுபவங்களைச் சொல்வது போலவே இருந்தது. ஆனால் சதனின் கற்பனை வேறு விதமாக வேலை செய்தது. கதை எழுதுகின்றவனே ஒவ்வொரு கதையிலும் நாயகனாக இருப்பது போல எழுதினான். ஒரே ஆள், பல அனுபவங்கள். இது தான் அவனது கதை உத்தியாக இருந்தது. “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” என்று புத்தகத்துக்குப் பெயரும் வைத்துவிட்டான். ஒவ்வொரு கதையையும் தன்னையே நாயகனாகப் பாவித்து எழுதியிருந்தான். (இது தான் ஹ.ஹ.சு. சதன் ஆன கதை)

கதையை ஒவ்வொரு பத்திரிகைக்கும் அனுப்பிவிட்டு வருமா வராதா என்று ஏங்கி, வீங்கி அலைவதிலெல்லாம் சதனுக்கு இஷ்டமில்லை. அவனே ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்துவது தவிற வேறு வழியில்லை என்று எண்ணினான். ஏறக்குறைய ஒரே வாரத்தில் இருபது கதைகளுடன் தனது மேல்நிலைப் பள்ளித் தோழன் ஒருவன் நடத்தும் அச்சகத்துக்குச் சென்றான். பட்டிணப்பாக்கத்தில் சதனுடன் விவாதத்தில் கலந்துகொண்ட ஆறுபேரும் பார்ட்னராக இணைந்து பத்திரிகையைத் தொடங்கினர். அச்சக நண்பன் மட்டும் இந்த ஆட்டைக்கு வர இஷ்டமில்லாமல் ஒதுங்கியே இருந்தான். தன்னுடைய வேலைக்கும் பொருட்களுக்கும் உரிய தொகை வந்துவிட்டால் போதும் என்ற முடிவுடனிருந்தான் அவன்.

வெவ்வேறு வேலைகளில் இருந்த நண்பர்களின் மேன்சன் வாடகைப் பணம், கழுத்தில் கையில் கிடந்த சொற்ப தங்கம், எஸ்.எல்.ஆர். சைக்கிள், டி.வி.எஸ். சேம்ப் உள்ளிட்ட வாகனங்கள், அனைத்தையும் தின்று முதல் இஷ்யூ வெளிவந்தது. ஆயிரம் பிரதிகள். கடைக்கு இருபது என்று விநியோகிப்பது அவர்களுடைய மார்கெட்டிங் உத்தி. விற்ற பிறகு காசு கொடுத்தால் போதும் என்ற அறிமுகச் சலுகை வேறு. சதன் அவன் பங்குக்கு நூறு புத்தகங்களை எடுத்துக்கொண்டு சில கடைகளுக்குச் சென்றான். நீண்ட விவாதத்துக்குப் பிறகு கடைகாரர் புத்தகங்களை எடுத்துக்கொள்ளச் சம்மதித்தார். புத்தகங்களைக் கொடுத்துவிட்டு சற்று மறைவாக இருந்த டீக்கடையிலிருந்தபடி கடையை நோட்டமிட்டான். நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு பதுங்கிப் பதுங்கிப் பள்ளிச் சீருடையில் வந்த பையன் ஒருவன் கையை நீட்டிக் காட்டி மலபார் தேங்காயை வாங்கிச் சென்றான். சதனுக்கு நெஞ்சு கொள்ளாத பெருமிதம்.

மறுநாள் மீண்டும் அதே கடையை ரகசியமாகக் கண்காணித்தான். முதல் நாள் கொண்டு வந்து கொடுத்த இருபது புத்தகங்களில் எட்டு மட்டுமே மீதம் இருந்தது. கடைக்காரரிடம் சென்ற போது மறு பேச்சில்லாமல் பணத்தைக் கொடுத்து அனுப்பினார். மறக்காமல் அவனது விலாசத்தையும், அடுத்த இஷ்யூ எப்போது வரும் என்ற தகவலையும் வாங்கிக்கொண்டு அனுப்பினார். ஒரு மாதம் கழித்துக் கணக்குப் பார்த்தபோது நூற்றி இருபது பிரதிகள் மிஞ்சிய போதும் போட்ட காசுக்குப் பாதகமில்லாமல் ஓரளவு லாபமும் வந்திருந்தது.

ஒரே மாதத்தில் அடுத்த இஷ்யூவுக்கான கதைகள் ரெடியானது. இம்முறையும் ஆயிரம் பிரதிகள். கடந்த முறை மிஞ்சிய நூற்றி இருபது பிரதிகளுக்கும் இந்த இஷ்யூவின் அட்டையை ஒட்டி அவற்றையும் கடைகளுக்கு அனுப்பினான் சதன். புத்தகங்களை ஸ்டேப்லர் அடித்து அனுப்புவதாலும், வாங்குகிறவன் கடையிலேயே பிரித்துப் பார்த்து எடுத்துச் செல்ல மாட்டான் என்பதாலும் சதன் தைரியமாக இவ்வாறு செய்திருந்தான். இரண்டாவது இஷ்யூவிலேயே தேர்ந்த தொழிலதிபனாகிவிட்டான் சதன்.

இது நடந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சதன் தென்னிந்தியாவில் கவனிக்கத்தக்க ஊடகத் தொழிலதிபர். சதனின் செய்தி ஏடு பல எதிர்ப்புகளுக்கிடையில் தமிழகத்தில் மூண்றாவது இடத்தைப் பிடித்திருந்தது. சிறந்த தொழிலதிபருக்கான ஜனாதிபதி விருது வேறு வழங்கப்பட்டது. ஆளுங்கட்சி மத்திய அமைச்சர் ஒருவருடனான நெருக்கம் காரணமாக எஃப்.எம். ரேடியோ ஒன்றைத் துவக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தான். என்னதான் பெரிய தொழிலதிபராக மாறியிருந்தாலும், அவனுடைய அச்சகத்தில் “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” புத்தகம் ரகசியமாக அச்சிடப்பட்டு வெளிவருகிறது. இதற்கெனவே கதை இலாகா ஒன்றும் “ஷகிலனின்” (அதாவது சதனின்) தலைமையில் இயங்கிவருகிறது. “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” என்ற ஓர்குட் கம்யூனிட்டிக்கு மட்டும் பதினாறாயிரம் உறுப்பினர்கள் (வெவ்வேறு பெயர்களில் இந்தப் புத்தகத்துக்குப் பல கம்யூனிட்டிகள் இருக்கின்றன, பத்தாயிரத்துக்கும் குறையாத உறுப்பினர்களுடன்). எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இன்றளவும் கதைகளை மட்டும் சதனே தேர்ந்தெடுப்பதாகக் கேள்வி.

— முற்றும் —

பின்குறிப்பு: அந்தக்காலத்து ரோஜா முதல் இந்தக்காலத்து நரசிம்மா வரை (அதற்குப் பிறகும்) எல்லாப் படங்களிலும் தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்களாகக் காட்டப்படுவது எப்படித் தற்செயலானதோ, வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் ஓரினச்சேர்கையாளர்களுக்கு இளா, அமுதன் என்று தூய தமிழில் பெயர் வைத்தது எப்படித் தற்செயலானதோ, அப்படியே ஹரிஹரசுதன் என்ற வடமொழி மேட்டுக்குடிப் பெயரை இந்தக் கதையின் நாயகனுக்கு வைத்ததும் தற்செயலானதே.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.