பல்லேலக்கா பல்லேலக்கா – I

12:35 பிப இல் ஜூன் 9, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

பல்லேலக்கா என்ற தெலுங்குச் சொல்லுக்கு ”கிராமத்து மனிதன்” என்பதுதான் பொருள் என்று என் தெலுங்கு நண்பர் ஒருவர் சொன்னார். சொல்லப் போனால் நானும் ஒரு கிராமத்து மனிதன்தான். சென்னை நகரின் பரபரப்பு மிகுந்த திருவல்லிக்கேணி கோஷாஸ்பத்திரியில் முதன்முதலாக கண்விழித்திருந்தாலும் இருபது வருடங்களுக்கு மேல் வாழ்ந்ததெல்லாம் தஞ்சாவூரில்தான். தஞ்சையின் நகரப் பகுதியில் வாழ்ந்தாலும் அன்றாடம் கிராமத்து மனிதர்களை தினந்தோறும் சந்தித்திருக்கிறேன். அந்த வகையில் நானும் ஒரு பல்லேலக்கா. இனி நான் சென்று வந்த பயணத்தைக் குறித்து…

மொத்த பயண தூரம்: 2,850 (பயணத்தில் சில ஊர்களைத் தவிர்த்துவிட்டதால் தூரம் கொஞ்சம் குறைந்துவிட்டது.)

சந்தித்த/உரையாடிய பதிவர்கள்: தோழர் மதிமாறன் அவர்களை மட்டும்தான் நேரில் சந்திக்க முடிந்தது. சென்னையிலேயே அதிககாலம் வாழ்ந்தாலும் இதுவரை “அம்பேத்கர் நினைவில்லம்” செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை மதிமாறன் அவர்களுடன் சென்று பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து நான் வசித்த பட்டினப்பாக்கம் பகுதியில் ஒரு மணிநேரம் இணையத்தில் உலாவினோம். பின்னர் மெரீனா கடற்கரையில் சிறிது நேரம் உரையாடினோம். மழை குறுக்கிட்டதால் மிகவும் குறுகிய நேரத்திலேயெ சந்திப்பை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம். மூண்று மணிநேரத்திலேயே முடிந்துவிட்டது.

பின்னர் என் அன்பு மாமன் லதானந்த் அவர்களுடனும் திரு. சேவியர் அவர்களுடனும் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. எனது பயணத் திட்டத்தில் இருவரையும் சந்திக்க எண்ணியிருந்தபோதும் கடைசியில் அது முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான்.

வாங்கிய/சுட்ட/பரிசாக மற்றும் பண்டமாற்றில் பெற்ற புத்தகங்கள்: நல்ல புத்தகத்தை எங்கே பார்த்தாலும் அதை விட்டுவைக்கிற பழக்கம் எனக்கில்லை. முடிந்தால் அதை வைத்திருப்பவரிடம் கேட்டு வாங்கிவிடுவேன் இல்லையெனில் திருடிவிடுவேன். முதலில், வாங்கிய புத்தகங்களைப் பற்றி சொல்லுகிறேன். பாரதிய ஜனதா பார்ட்டி, வே. மதிமாறன் பதில்கள், சிரிப்பு டாக்டர் மற்றும் நடிகர் சிவகுமாரின் “இது ராஜபாட்டை அல்ல”. முதல் இரண்டு புத்தகங்களுக்கும் ஒரு சிறப்பு உண்டு, அவற்றை எழுதிய திரு. மதிமாறனிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொண்டதுதான் அந்த சிறப்பு. ”சிரிப்பு டாக்டர்” கலைவாணர் என்.எஸ். கிருஷ்னன் அவர்களைப் பற்றியது. இந்த புத்தகத்தை வாங்கியதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் இதை வாங்கியது தஞ்சாவூரில் உள்ள ஒரு வெற்றிலை பாக்குக் கடையில். ரூபாய் எழுபது மதிப்புள்ள இந்த புத்தகத்தை வெற்றிலை பாக்கு, மற்றும் சர்பத் விற்கும் ஒரு கடைகள் மூலமாகக் கூட விற்பனை செய்வது கிழக்கு பதிப்பகத்தின் நல்ல மார்கெட்டிங் உத்தி. ஊர் திரும்புவதற்காக சென்னை வந்த போது மயிலாப்பூர் அல்லையன்ஸ் பதிப்பகத்தில் வாங்கியது நடிகர் சிவகுமாரின் ”இது ராஜபாட்டை அல்ல” புத்தகம்.

சுட்ட புத்தகங்களின் வரிசையில் முதலில் வருவது என் தந்தையாரின் கலெக்‌ஷனிலிருந்து சுட்ட ஷிவ் கேரா அவர்களின் “You Can Win” நூலின் தமிழாக்கம். என் அத்தையின் கலெக்‌ஷனிலிருந்து சுட்டது சோம. வள்ளியப்பன் அவர்களின் ”இட்லியாக இருங்கள்” புத்தகம்.

அடுத்து வருவது பரிசாகப் பெற்ற புத்தகங்கள். சென்னையில் என்னுடைய நண்பன் கார்த்தி இரண்டு புத்தகங்களைப் பரிசாகத் தந்தான். அந்த இரண்டு புத்தகங்களின் பெயரையும் சொன்னால் என் மரியாதை டோட்டல் டேமேஜாகிவிடும் என்பதால் அதனைத் தவிர்த்துவிடுகிறேன்.

தொடர்ந்து வருவது பண்டமாற்றாகப் பெற்ற புத்தகம். பாரதிய ஜனதா பார்ட்டி புத்தகத்தை என்னுடைய பயணத்தின்போதே முழுவதுமாக படித்து முடித்துவிட்டதால் என் அத்தையிடம் அதற்கு பண்டமாற்றாகப் பெற்றுக்கொண்டது திராவிடக் கழக வெளியீடான “அசல் மனுதரும சாஸ்திரம்”. 1919ல் வெளிவந்த நூலில் திரு கி. வீரமணி அவர்களின் ஆய்வுரையுடன் கூடிய மறுபதிப்பு அது.

புத்தகங்களைப் பற்றி சொல்லும்போது இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். அல்லையன்ஸ் பதிப்பகத்தில் நான் வாங்க நினைத்த இரண்டு புத்தகங்கள் கிடைக்கவில்லை. துக்ளக் ஆசிரியர் சோவின் “யாருக்கும் வெட்கமில்லை” புத்தகத்தை ஐ.ஏ.எஸ். பாடத் திட்டத்தில் வைத்திருந்ததாகக் கேள்வி. அதில் அப்படி என்னதான் இருக்கிறது, வாங்கிப் பார்ப்போம் என்று நினைத்தேன். ஆனால் அந்த புத்தகம் ஸ்டாக் இல்லையாம். இன்னொன்று காண்டேகர் எழுதிய ஒரு நூல். பெயர் “க்ரௌஞ்ச வதம்” என்று நினைக்கிறேன். பல பிரபலங்கள் இந்த நூலைச் சிலாகித்துச் சொன்னதால் அதையும் வாங்கலாம் என்று நினைத்தேன். அதுவும் அங்கே கிடைக்கவில்லை.

சுற்றிய இடங்கள்: தஞ்சாவூருக்கு சென்று பெரிய கோயிலைப் பார்க்காமல் வரமுடியுமா? அங்கே சென்றதன் நினைவாக சில சிற்பங்களை புகைப்படம் எடுத்து வந்தேன். என்னை அழைத்துச் செல்வதாக சொன்ன நண்பன் அந்தி மசங்கிய பிறகு வந்து சேர்ந்ததால் சூரிய வெளிச்சம் போவதற்குள் சில படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் அங்கே விற்பனைக்கு வைத்திருந்த சில படங்களை வாங்கி வந்துள்ளேன்.

பாண்டிச்சேரியில் என் இரண்டு அத்தைகளின் குடும்பத்துடன் ”சுன்னாம்பாறு” கழிமுகத்துக்கும் சென்று வந்தேன். போய் வந்ததில் நான் கற்றுக் கொண்ட ஒரு பாடம், இது போன்ற இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லக் கூடாது என்பதுதான். ஏன் சொல்லுகிறேன் என்று பலருக்கும் புரிந்திருக்கும்.

மேற்சொன்ன இரு இடங்களிலும் எடுத்த படங்களை பல்லேலக்கா பல்லேலக்கா – II ல் பதிப்பிக்கிறேன். அதுவரை பொறுமை காக்கவும்.

கடைசியாக ஊர் திரும்புமுன் மூண்று மணிநேரம் நான் வசித்த மயிலாப்பூர் பட்டினப்பாக்கம் பகுதிகளில் சுற்றினேன். சில வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த இடங்களுக்கு சென்று வருவதென்றால் யாருக்குத்தான் கசக்கும்.

நதிகள்: எங்கள் ஊர் ஆறுகளுக்கு ஜூன் மாதம் என்பது திருவிழாக் காலம். ஜூன் 12ல் ஆண்டு தோறும் மேட்டூர் அணை திறக்கப் படும். 12ம் தேதியே திறக்கப் பட்டாலும் கடைமடைக்குப் பக்கத்தில் உள்ள எங்கள் ஊருக்கு தண்ணீர் வந்து சேர 16 தேதி ஆகிவிடும். 15ம் தேதியே நான் புறப்பட்டுவிட்டதால் நிறை பெருக்காக எங்கள் ஆறுகளைப் பார்க்க இயலவில்லை. ஆனாலும் பயணங்களின் போது கொள்ளிடத்தில் மற்ற ஆறுகளிலும் இரு கரையையும் தொட்டுத் தண்ணீர் ஓடியது கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது.

கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருந்த மற்ற சமாச்சாரங்களையும் புகைப்படங்களையும் இதன் தொடர்ச்சியில் பதிப்பிக்கிறேன். இப்போதைக்கு அப்பீட்டு, அடுத்த பாகத்தில ரிப்பீட்டு. வரட்டுமா….

11 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

 1. இன்னா தலைவா பதிலை காணோம்

 2. ஜெய் அண்ணா, பெர்சனல் கேள்விகள் மின்னஞ்சலில் கேட்கவும். பதில் விரைவில் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப் படும்.

 3. //அதுவரை பொறுமை காக்கவும்.//

  முடியாது

 4. //பல்லேலக்கா என்ற தெலுங்குச் சொல்லுக்கு ”கிராமத்து மனிதன்” என்பதுதான் பொருள் என்று என் தெலுங்கு நண்பர் ஒருவர் சொன்னார். //

  ஓ… பரவாயில்லையே.. இன்னும் ஒரு 2 வருசத்துல தெலுங்கு பதிவு ஆரம்பிச்சிடுவீங்க போல…

 5. //பின்னர் என் அன்பு மாமன் லதானந்த் அவர்களுடனும் திரு. சேவியர் அவர்களுடனும் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. எனது பயணத் திட்டத்தில் இருவரையும் சந்திக்க எண்ணியிருந்தபோதும் கடைசியில் அது முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான்.
  //

  அடடா சந்திச்சிருந்தா தொடர் அசத்தலான தகவலோடு இருந்திருக்கும் இல்லையா

 6. //நண்பன் கார்த்தி இரண்டு புத்தகங்களைப் பரிசாகத் தந்தான். அந்த இரண்டு புத்தகங்களின் பெயரையும் சொன்னால் என் மரியாதை டோட்டல் டேமேஜாகிவிடும் //

  மரியாதைய தூக்கி ஓரமா வச்சிட்டு இத பத்தி ஒரு பத்து பதிவு போடு…

 7. அடுத்த பதிவு எப்போ???

 8. ///
  ஓ… பரவாயில்லையே.. இன்னும் ஒரு 2 வருசத்துல தெலுங்கு பதிவு ஆரம்பிச்சிடுவீங்க போல…
  ///

  ஆமாம் மகனே, இப்போதான் தெலுங்கு பேச ஆரம்பிச்சிருக்கேன், எழுதறதுக்கு இன்னும் ஒரு வருஷமாவது ஆகும்

  ///
  அடடா சந்திச்சிருந்தா தொடர் அசத்தலான தகவலோடு இருந்திருக்கும் இல்லையா
  ///

  ஆமாம், சந்திச்சிருந்தா நல்லாதான் இருந்திருக்கும்

  ///
  மரியாதைய தூக்கி ஓரமா வச்சிட்டு இத பத்தி ஒரு பத்து பதிவு போடு…
  ///

  வைக்க முடியாது, அவ்வளவு இண்ட்ரஸ்டிங் ஆன புத்தகங்கள்…

  ///
  அடுத்த பதிவு எப்போ???
  ///

  நாளை மதியம்

 9. // அன்பு மாமன் லதானந்த் அவர்களுடனும் //

  கென்சியை கல்யானம் பண்ண போறீங்களா

  கென்சி–(ஜெர்மன் ஷப்பர்டு)
  லதானந்த் பொன்னு மாதிரி

 10. என் புக் ஏதும் வாங்கலையா… ம்ம்ம்… நேர்ல பாக்கும்போ தராம வுடமாட்டேன் 🙂

 11. ///
  என் புக் ஏதும் வாங்கலையா… ம்ம்ம்… நேர்ல பாக்கும்போ தராம வுடமாட்டேன் 🙂
  ///

  கொடுத்தால் வாங்காமல் விடமாட்டேன், புத்தகத்தின் விலையைக் கொடுக்காமலும் விடமாட்டேன்…. பரவாயில்லையா… 🙂


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: