தொடை

10:22 பிப இல் மே 20, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 19 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,

பதிவுலக நண்பர்களால் பெரிதும் பிறழ உணரப்பட்ட பதிவன் என்ற வேதனை என் இதயத்தை முள்ளாய்த் தைத்துக்கொண்டிருக்கிறது. சமூகத்தின் சிந்தனை ஓட்டம் ஒருவாறாக இருக்க எனக்கு மட்டும் வேறு விதமாகவே தோண்றுகிறது. இது இயல்பான ஒன்றா, குணப்படுத்த முடியாத மனநோயா, என்னவென்றே தெரியவில்லை. உண்மையான அக்கறை உள்ளவர்கள் நல்ல ஆலோசணைகளை பின்னூட்டங்களாக வழங்கலாம். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

என் அன்புக்குரிய உளவியலாளர் மருத்துவர் மாத்ருபூதம் அவர்களும் இறைவனடி சேர்ந்துவிட்டார். புதிரா புனிதமா என்று பிரித்து மேய்ந்து கொண்டிருந்த சகோதரி ஷர்மிளாவும் இப்போது தேன்மொழியாள் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கப் போய்விட்டார். யாராவது டாக்டர் ஷாலினியை சந்திக்க நேரம் வாங்கித் தந்தாலோ, கட்டணம் செலுத்த சில ஆயிரங்களை அள்ளி வழங்கினாலோ மிகப் பெரிய உபகாரம் என்று கருதுவேன்.

இந்த உபகாரங்களை எனக்குச் செய்துதரும் தகுதியுள்ள எவராவது இருந்தால் அவர்களது பெயரை பின்னூட்டம் வழியாகத் தெரிவிக்கவும். கஞ்சத்தனமாகச் சீட்டுக் கவியெழுதி அவர்களை அசிங்கப்படுத்த மாட்டேன், தாராளமாக ஒரு குயர் நோட்டுக் கவியே எழுதுவேன்.

சரி இப்போது எனது பிரச்சனைக்கு வருகிறேன். சாதாரணமாக ”தொடை” என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் யாருடைய ஞாபகம் வரும்? ”தொடை” என்று சொன்னால் நீங்களெல்லாம் உள்ளத்தை அள்ளிப் போகக் கூடிய அந்த நடிகையின் நினைவில் பரவச நிலையின் உச்சத்திற்கே போவீர்களில்லையா? ஆனால் அந்த நடிகை என் நினைவுக்கு வரவில்லை. சத்தியமா… நம்புங்க… அய்யோ, நம்புங்களேன்.

”யாரு நெனப்புதாண்டா வந்துச்சு உனக்கு” என்று நீங்கள் நற நறப்பது புரிகிறது. சொன்னால் தவறாகக் கருதிவிடக் கூடாது. பி.காம் முதலாண்டில் எனக்கு தமிழ்ப் பாடம் நடத்திய விரிவுரையாளர்தான் ஞாபகத்துக்கு வந்தார். அவர் ஆம்பளையாக இருந்திருந்தால் அடுத்த நாளே மறந்திருப்பேன். பெண் விரிவுரையாளர் என்பதுதான் பல நாட்கள் என்னை வெட்கத்தில் கூசிக் குறுக வைத்தது.

”அட நாயே, அப்படி என்னதாண்டா நடந்தது” என்று கேட்கிறீர்களா? உங்கள் நியாயமான அவசரம் புரிகிறது. நானும் அதைத்தான் சொல்ல வருகிறேன், பொறுமை, பொறுமை. தமிழ்த் திரைப்படங்கள் வழக்கமாக கையாளும் அதே கொசுவர்த்திச் சுருள் உத்தியைப் பயன்படுத்தி உங்களை எனது கல்லூரிக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறேன்.

அது தஞ்சாவூரின் பிரபலமான கல்லூரி. கல்லூரி என்றாலும் மானவர்களுக்கு வாராவாரம் தேர்வு நடத்திப் பள்ளிச் சூழலிலேயே மாணவர்களை வைத்திருக்கும் கல்லூரி அது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சுழற்ச்சி முறையில் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு நடத்தப்படும். அந்த சனிக்கிழமை சனியனை நினைத்தே தூக்கத்தைத் தொலைத்த வெள்ளிக்கிழமைகள் ஏராளம்.

பல்கலைக்கழகத் தேர்வுக்கு சில நாட்களே இருந்த நிலையில் வாராந்திரத் தேர்வுகளில் அதுவே கடைசித் தமிழ்த் தேர்வு. ஒரே ஒரு ஒரு-மதிப்பெண் வினாவால் ஐம்பதிற்கு நாற்பத்திமூன்று மதிப்பெண் எடுத்தும் எனது பெயர் கெட்டதுதான் மிச்சம். எனது நடத்தையை சந்தேகத்திற்குரியதாக மாற்றிய அந்த ஒரு கேள்வி நினைவுக்கு வரும் நாட்களில் இப்போதுகூட என்னால் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. இப்பதிவை எழுதி முடித்துவிட்டு உறங்கவேண்டும். அப்போதுதான் காலை ஐந்து மணிக்கு அலுவலகம் கிளம்ப முடியும். ஆனால் இன்று இரவு நான் உறங்குவது சந்தேகமே.

”அட சனியனே அந்த எளவெடுத்தக் கேள்வி என்னன்னு சொல்லித் தொலைடா” என்ற கொலைவெறிக் கூச்சல் காதுகளில் விழுகிறது. சொல்கிறேன் என் அவமான வரலாற்றை, கேளுங்கள். தொடை என்பது என்ன? என்பதுதான் அந்தக் கேள்வி. வணிகவியல் மாணவனிடம் எதற்க்கு விலங்கியல் பாடத்திலிருந்து கேள்வி கேட்டார்கள் அதுவும் தமிழ்த் தேர்வில் என்ற குழப்பம் என்னை சுழற்றியடித்தது. பக்கத்திலிருந்தவனிடமிருந்து கேள்வித் தாளைப் பிடுங்கிப் பார்த்தபோது அவனுக்கும் அதே கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஐயகோ.

மற்ற கேள்விகளுக்கு விடையளித்துவிட்டுக் கடைசிப் பத்து நிமிடத்தில் விடைத்தாளைச் சோதித்ததில் மீண்டும் தொடையிலேயே வந்து முட்டியது. நான் கேள்வியைச் சொன்னேன், மனவக்கிரமுள்ளவர்களின் கற்பனைக்கெல்லாம் பதில் சொல்வது எனது வேலையல்ல. தொடர்ந்து கேளுங்கள். மீண்டும் மீண்டும் யோசித்ததில் அது ஒரு உறுப்பு என்கிற தெளிவு பிறந்தது. அந்த தெளிவு அடுத்த கட்டத்தை நோக்கி நகர, உடலின் உறுப்பு என்று விடையெழுதி அறைக் கண்கானிப்பாளரிடம் விடைத்தாளை வழங்கினேன்.

சரியாக ஐந்தாவது நாள் விடைத்தாள்களுடன் அந்தப் பெண் விரிவுரையாளர் எங்கள் வகுப்புக்கு வந்தார். வரிசை எண் படி எனது விடைத்தாள்தான் முதலில் வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. எல்லாருடைய விடைத்தாளும் வழங்கப்பட்ட பிறகு எனது பெயர் அழைக்கப்பட்டது. ஒருவேளை நான் எல்லோரையும் விட அதிக மதிப்பெண்கள் வாங்கியதற்காக என்னை சிறப்பாக கவனிப்பார்களோ என்ற எதிர்பார்ப்புடன் எழுந்து நின்றேன்.

என் எதிர்பார்ப்பிலெல்லாம் மண்ணை அள்ளிப் போடுமளவுக்கு ஒரு புயலடித்தது. தொடை குறித்து நான் அளித்த விடை தவறு என்றும், ஒரு பெண்ணான அவரை இழிவுபடுத்தும் விதமாகவே நான் அவ்வாறு எழுதியதாகவும் என்னைத் தாளித்துப் பொறித்துவிட்டார். அந்தப் புயல் ஓய்ந்த போது தமிழ்ப் பாடவேளை முடிந்ததன் அறிகுறியாக மணியடித்தது. விடைத்தாளைப் புரட்டியபோது உடலின் உறுப்பு என்ற விடைக்கு அரை மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. ஆக இது தவறான விடையுமில்லை. பிறகு எதுதான் சரியான விடை கோணாரைப் புரட்டியபோது (நான் புரட்டியது கோணார் தமிழுரை. மறுபடியும் சொல்கிறேன், வக்கிரம் பிடித்தவர்களின் கற்பனைக்கு நான் பொறுப்பல்ல) அதே கேள்விக்கான விடையாக “செய்யுள் உறுப்பு” என்று இருந்தது.

அத்துடன் முதலாம் ஆண்டு முடிந்தது. இரண்டாம் ஆண்டில் எங்களுக்குத் தமிழ்ப் பாடம் நடத்தியவர் ஒரு ஆண் விரிவுரையாளர். மூண்றாம் ஆண்டில் மொழிப்பாடங்கள் கிடையாது. அதனால் அந்த பெண் விரிவுரையாளரை மீண்டும் சந்திக்க வாய்ப்புகள் இல்லை. இரண்டாமாண்டில் தமிழ் விரிவுரையாளரிடம் பந்தயம் கட்டி எண்பது மதிப்பெண்கள் எடுத்தது, தொடர்ந்து இரண்டு முறை தமிழில் எழுபத்தைந்து மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியது, இதெல்லாம் அந்த பெண் விரிவுரையாளருக்கு தெரியாமலே போய்விட்டது.

சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் இன்னும் அங்கே வேலை பார்ப்பதாகக் கேள்வி. அதனால் அங்கே செல்வதைத் தவிர்த்தே வருகிறேன். தவிர்க்க முடியாமல் பட்டமளிப்பு விழாவுக்காக மட்டும் அந்தக் கல்லூரிக்குள் மீண்டும் காலை வைத்தேன். நல்ல வேளை, அந்த விரிவுரையாளர் கண்ணில் படாமல் வீடுவந்து சேர்ந்தேன்.

எனது கல்லூரி மீது எனக்கு எப்போதுமே அபிமானம் உண்டு. அந்தக் கல்லூரியால் பல துன்பங்களுக்கு ஆளானபோதும், நான் ஆளானபோது படித்த கல்லூரியல்லவா…. இருக்காதா பின்னே…

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.