காதலில் விழுந்தேன்…

10:18 பிப இல் செப்ரெம்பர் 29, 2008 | அரசியல், நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

காதலில் விழுந்தேன் படத்தை மதுரையில் வெளியிட முடியாமல் இருப்பதற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கடும்(!) கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். மக்களின் அதி அத்தியாவசியத் தேவையான ”காதலில் விழுந்தேன்” படத்தைத் தடுப்பது எந்த வகையில் நியாயம் என்று நேற்று முளைத்த தலைவர்கள் முதல் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரை சன் டிவியில் ஒப்பாரி வைத்தாகிவிட்டது.

இதே போன்ற சிக்கலில் ”ஆவணித் திங்கள்”, “காற்றுக்கென்ன வேலி” உள்ளிட்ட திரைப்படங்களும் பாதிக்கப்பட்ட போது எங்கே போனார்கள் இந்தத் தலைவர்கள். அப்படியே இவர்கள் கண்டித்திருந்தாலும் அதையெல்லாம் நடுநிலையோடு ஒளிபரப்பியதா இந்த சன் டிவி?

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், என். வரதராஜன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்களின் உயிர் போகும் பிரச்சனையாக காதலில் விழுந்தேன் பட விவகாரம் உருவெடுத்திருக்கிறது. ”சோற்றுக்கு சிங்கியடிக்கும் சன் பிக்சர்சுக்கு” உதவ விரும்பினால் இவர்களேல்லாம் தங்களது கட்சித் தொன்டர்களுக்கு இத்திரைப்படத்தின் டிக்கெட்டுகளை (காசு கொடுத்து) வாங்கி விநியோகிக்கலாம்.

மதுரையில் ஏற்பட்ட நஷ்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் படத்தை வெற்றிகரமாக ஓடவைத்து ஈடுகட்ட இவர்களேல்லாம் சன் பிக்சர்சுக்கு உதவினால் ஒரு வேளை ப்ரைம் டைமில் இவர்களுக்கு நிகழ்ச்சி நடத்த ஸ்லாட் கிடைத்தாலும் கிடைக்கலாம் (சன் குழுமத்தின் குழந்தைகளுக்கான சேனலான சுட்டி டிவியில் கொடுப்பார்கள்… அய்யய்யோ அப்போ ஜாக்கிசான் அட்வென்ச்சர்ஸ் பாக்க முடியாதா? அழகிரி அங்கிள் இவுங்கள கொஞ்சம் என்னன்னு கேளுங்களேன்…).

இந்தத் தலைவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் சன் பிக்சர்சுக்கு இருக்கவே இருக்கிறது “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக….”

சமீபத்தில் எனக்கு வந்த ஆர்குட் ஸ்கிராப் இது. படத்தின் மேல் அழுத்திப் பெரியதாகப் பாருங்கள். 🙂

சரியா? தவறா?

1:22 முப இல் ஜூலை 12, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

கடந்த வாரம் சன் டிவி செய்திகளில் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி தம்பதியர் பற்றிய ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்தது. இவர்கள் இருவரும் பிரியப் போவதாக செய்தி ஏடுகளில் வந்த ஒரு செய்தி காரணமாகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குமுதம் நாளேடு புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் தந்தையாரிடம் பேட்டி கண்டு விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. கணவரின் குடும்பத்தினரை திருமதி அனிதா மதிப்பதில்லை என்றும் இதன் விளைவாக குப்புசாமி, அனிதா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. “இசைக் குடும்பத்தில் ஒரு அபஸ்வரம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த செய்திக்கு மறுப்பு அளிக்கும் விதமாகவே தம்பதியர் இருவரும் சன் டிவிக்கு பேட்டியளித்தனர்.

இந்த நிகழ்வில் கண்ணை உறுத்துகிற இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சம்பவம் ஒன்று, குமுதம் ஏடு குப்புசாமியின் தகப்பனார் சொன்ன அல்லது சொன்னதாகக் கூறப்படுகிற கருத்துக்களை மட்டும் வெளியிட்டது. குப்புசாமியின் தகப்பனாரைப் பேட்டி கண்டவுடன் இது குறித்துக் குப்புசாமியிடமும் கருத்து கேட்டிருக்கலாம். அவருடைய கருத்துக்களுடன் இந்தச் செய்தி வெளிவந்திருக்குமானால் செய்தியின் நம்பகத்தன்மை உறுதிப்பட்டிருக்கும்.

கண்ணை உறுத்தும் இரண்டாவது சம்பவம், குப்புசாமி தம்பதியர் சன் டிவியின் ஒளிப்பதிவுக் குழுவினரை படுக்கை அறை வரை அனுமதித்தது. குமுதத்தின் செய்தியை மறுக்க வேண்டும் என்பதற்காக குமுதம் செய்த அத்துமீறலுக்கு இணையான ஒரு அத்துமீறலை விரும்பி அனுமதித்தது தான் இந்த இரண்டாவது க.உ. சம்பவம். அந்த செய்திக் காட்சியில் இருவரும் இணைந்து பாடுவதற்கு ஒத்திகை செய்வது போலவும், சந்தோஷமாக உரையாடுவது போலவும் காட்சிகள் வந்தன. இவ்வளவும் அவர்கள் அறியாமல் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அல்ல. இருவரின் ஒப்புதலுடன் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் தான் அவை.குடும்பத்தில் இயல்பாய் நடக்கிற ஒரு சம்பவம் கூட கேமெராவுக்கு முன்னால் நிகழுமானால் அதையும் நடிப்பு என்று கருதுகிற அபாயம் இன்னும் இருக்கிறதல்லவா? சமூகத்தால் மதிக்கப்படுகிற ஒரு குடும்பத்திற்கு இது எப்படித் தெரியாமல் போனது?

குமுதம் வெளியிட்ட செய்தியில் திருமதி அனிதா தன் கணவரின் குடும்பத்தை மதிப்பதில்லை என்பதுதான் முக்கியமாகக் கூறப்பட்டிருந்தது. சன் டிவிக்கான செய்திப் பதிவில் தம்பதியர் இருவரும் இந்த விஷயத்தை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. இன்னும் சொல்வதானால் அதைப் பற்றி வாயே திறக்கவில்லை.

இன்று படுக்கை அறை வரை ஊடகத்தை அனுமதிக்கிற இவர்கள், நாளை ஊடகங்கள் இவர்களது அனுமதியில்லாமலே படுக்கை அறை வரை நுழைய முற்பட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வார்கள்?

நடந்தது சரியா, தவறா? படிக்கிற நீங்கள் தான் சொல்ல வேண்டும், பின்னூட்டங்கள் வாயிலாக.

புகைப்படம்: http://www.tamilonline.com

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.